அன்புள்ள ஜெ
நேற்று இரவுதான் நீங்கள் காஷ்மீர் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்தேன். இன்றுகாலையே தி இந்து அளித்திருந்த தலைப்புச்செய்தியை வாசித்து திகைத்தேன். இந்து எதை எழுதும் என்று முன்னரே ஊகித்து எழுதியதுபோல இருந்தது . எல்லாவகையிலும் தந்திரமான செய்தி. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு மழுங்கலான ரிப்போர்ட் மாதிரி இருந்தது. ஆனால் உள்ளடக்கம் மூன்று. ஒன்று காஷ்மீரில் உண்மையில் ரிலீஃப் நடவடிக்கை ஏதும் பெரிதாக இல்லை. இரண்டு, அந்த மக்கள் அரசாங்கம் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். மூன்று ராணுவம் ஏதோ கொஞ்சம் பால்பவுடர்களை போட்டிருக்கிறது. ஐந்து அதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி அவர்களை ஊதிக்காட்டுகின்றன. ஆறு அங்குள்ள மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே செய்தியில் எத்தனை தந்திரமான பொய்கள். எத்தனை அவதூறுகள். உண்மையிலேயே கேட்கிறேன், இதை ஏன் வெளியிடுகிறார்கள்? அங்கே ராணுவம் எத்தனை பேரை மீட்டிருக்கிறது, எவ்வளவு பணிசெய்திருக்கிறது என்பதெல்லாம் சர்வதேச ஊடகங்களே பதிவுசெய்த ஆவணப்படுத்தப்பட்ட உண்மை. இவர்கள் என்னதான் நினைத்திருக்கிறார்கள்?
நாராயண
அன்புள்ள நாராயணன்,
தி இந்து செய்திகள் இந்தியாவில் வாசிப்பதற்காக எழுதப்படுபவை அல்ல. பெய்ஜிங்கில் வாசிக்கப்படுவதற்காக எழுதப்படுபவை.
நான் சுனாமி மீட்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தவன். அப்போது கண்ட ஒன்றுண்டு. இயற்கைப்பேரிடர்களின்போது ஒரு ஒட்டுமொத்தமான நிர்வாகக் குழப்பமும், மேலோட்டமான செயலின்மையும் தெரியும்.
பல காரணங்கள். ஒன்று நிர்வாக அமைப்பு சீர்குலைந்திருக்கும். ஏனென்றால் இத்தகைய பேரிடர்களை முன்னால்கண்டு அந்த நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டிருக்காது. அதற்கான நெறிமுறைகளும் இருக்காது. அரசு என்பது முழுக்கமுழுக்க சம்பிரதாயமான ஓர் அமைப்பு
ஆகவே நெருக்கடி நிலைகளில் எங்கிருந்து உத்தரவு பெறுவது எவர் நடவடிக்கை எடுப்பது என்பதெல்லாமே தெளிவற்றதாக சிக்கலாக இருக்கும். சாதாரணநிலையில் சம்பிரதாயமாக வேலைசெய்து பழக்கப்பட்ட அதிகாரிகள் செயலற்று போவார்கள். அந்த இக்கட்டில் சிலர் தங்கள் சொந்த ஆற்றலால் மேலெழுந்து வந்து முன்னால் நின்று பணியாற்றுவார்கள். அவர்களைத் தொடந்து பிறர் செல்வார்கள்.
இந்த குழப்பநிலை தனக்கான செயல்முறையை தானாகவே கண்டுபிடிப்பதைக் காணமுடியும். ஆகவே மேலோட்டமான செயலின்மைக்கு உள்ளே நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அச்செயல்பாடு வலுவாகும். அதுதான் சாத்தியம். அமெரிக்காவின் கத்ரினா போன்ற புயல்களில் கூட நிகழ்ந்தது அதுவே. [சொல்லப்போனால் இங்கை விட மோசம்]
இச்சூழல்களில் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலைகளை கவனித்திருக்கிறேன். இலக்கற்ற ஒரு ஆங்காரமும் கோபமும் அவர்களிடம் பெருகி நிற்கும். சுனாமி முகாம்களில் நிவாரணசேவைக்கு வந்த தன்னார்வலர்களை வசைபாடுவதையும் அடிக்கவருவதையும் கண்டேன். அதிகாரிகளைக் கண்டதுமே உக்கிரமான சினத்துடன் பாய்ந்து வருவார்கள். தாங்கள் ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டிருப்பதாகவே அவர்கள் சொல்வார்கள். அந்த மனநிலையை உளவியல் மொழியில் ‘டிப்ரஷன்’ எனலாம். அந்த மனச்சோர்வை அவர்கள் பேசிப்பேசி பெருக்கிக்கொள்வார்கள்.
இச்சூழலை ஊடகங்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது எளிது. சுனாமி நிவாரணம் ஜெயலலிதா அரசால் வியக்கத்தக்க வகையில் மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக அளவிலேயே அது ஒரு பெரும் முன்னுதாரணம். ஆனால் அன்று இங்குள்ள தி.மு.க ஊடகங்கள் ‘அரசாங்கம் ஒண்ணுமே பண்ணலீங்க’ என்ற குரலை மீள மீள ஒலிக்கவைத்துக்கொண்டே இருந்தன. [அவர்கள் எப்படி அதைச்செய்தார்கள் என்பதை அன்றே நான் பதிவுசெய்திருக்கிறேன்] அதை எவரும் செய்யலாம்.
காஷ்மீரின் ராணுவமும் அரசும் மிகச்சிறப்பாகவே செயல்பட்டுள்ளன என்பது சர்வதேச ஊடகங்களை நோக்கினாலே தெரியும். காஷ்மீர் போன்ற சிக்கலான நில அமைப்புள்ள ஓர் இடத்தில் மீட்பு மற்றும் தங்கவைப்பதற்கான இடர்கள் மிக அதிகம். கண்டிப்பாக சேவைக்குளறுபடிகள் இருக்கும். நிர்வாகத் தேக்கம் இருக்கும். பற்றாக்குறைகள் மிக அதிகமாக இருக்கும். ஆனால் சென்ற உத்தரகண்ட் வெள்ளத்தை நோக்க இப்போதைய பணி மேம்பட்டதாக உள்ளது என்பதே நான் அறிந்தது
ஆனால் இப்போதே தீவிரவாதிகளும் அவர்களுக்கு சாதகமான ஊடகங்களும் பாதிக்கப்பட்டவர்களின் அந்த மனச்சோர்வை, ஏமாற்றத்தை ஊதிப்பெருக்கி காட்டி தங்கள் அரசியலை ஆரம்பித்துவிட்டிருக்கிறார்கள். அதை இந்திய எதிர்ப்பு பிரிவினைவாத அரசியலை நோக்கிக் கொண்டுவருவார்கள். நிவாரணத்துக்கோ சேவைக்கோ ஒரு துரும்பைக்கூட நகர்த்தாதவர்கள் இவர்கள் என்பதை மெல்லமெல்ல அம்மக்களும் மறப்பார்கள். அவர்களை தங்களுக்காக வாதிடுபவர்கள் என மயங்குவர்கள். அதுவே மானுட இயல்பு.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சேவை செய்யும் நம் ஊடகங்கள் எதையும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். காஷ்மீர் மக்கள் இன்னும் நாலைந்து நாட்கள் கழித்து இந்து வகையறாக்களின் இக்குரலை மட்டுமே கேட்கும்படிச் செய்யவைக்கப்படுவார்கள். நம் தேசத்தின் பெரும்சாபம் இவர்கள்
ஜெ