அ.கா.பெருமாள் தமிழின் முன்னணி நாட்டாரியல், இலக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். நெடுங்கால களப்பணி அனுபவம் கொண்டவர். இப்போது விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறார்.அ.கா.பெருமாளின் நூல்கள் தொடர்ச்சியாக தமிழினி வெளியீடாக வந்து வாசகர்களிடம் கவனம் பெற்றுக் கொண்டிருக்கின்றன
எழுதப்பட்ட வரலாறு என்பது ஒருவகை மைய வரலாறு. மக்கள் வரலாறு என்பது எழுதப் படாமல் அவர்களின் வாய்மொழியாகவே புழங்குவது. அந்த மாற்று வரலாற்றை நாட்டாரியல் ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்து பதிவுசெய்பவர் என்று அ.கா.பெருமாள் அவர்களைக் குறிப்பிடலாம்
தமிழில் நமக்குக் கிடைக்கும் பெருவரலாறு ஒரு பொது வரைபடம். அந்த வரைபடத்தின் நுண் தகவல்களை, ஆலய வரலாறுகள், ஊர் வரலாறுகளில் இருந்து எடுத்து இட்டு நிரப்பி முழுமை செய்பவை அ.கா.பெருமாள் எழுதும் ஆலய வரலாறுகள். அவ்வகையில் அவை ஒரு நுண் வரலாற்று உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றன என்று சொல்லலாம்
இவ்வருடம் தமிழினி அ.கா.பெருமாளின் மூன்று நூல்களை பிரசுரித்திருக்கிறது
தமிழறிஞர்கள் — அ.கா.பெருமாள்
தமிழுக்குப் பணிசெய்து இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரியாமல் போன முன்னோடி ஆய்வாளர்களை அ.கா.பெருமாள் அறிமுகம் செய்கிறார்
காலம் தோறும் தொன்மங்கள் — அ.கா.பெருமாள்
நாட்டாரியலாளரான அ.கா.பெருமாள் எழுதிய தொன்மங்களைப் பற்றிய ஆய்வுநூல். தொன்மங்கள் பண்பாட்டு மாறுதலுக்கு ஏற்ப அடையும் மாறுதல்களை இந்நூலில் சித்தரிக்கிறார்
சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம்
தொன்மங்களாலும், சிற்பங்களாலும், ஏராளமான கல்வெட்டுகளாலும், ஆசாரங்களாலும் ஒரு முழுமையான வரலாற்றுக் களஞ்சியமாக திகழ்வது சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம். அதைப்பற்றி கே.கே.பிள்ளை எழுதிய பிரம்மாண்டமான ஆங்கில நூல் இவ்வகை ஆய்வுகளுக்கே வழிகாட்டியாக அமைந்தது. அந்நூலில் இருந்து முன்னே சென்று இன்றைய புதிய தகவல்களின் அடிப்படையில் தன் நூலை ஆக்கியிருக்கிறார் பெருமாள். நாட்டாரியல் தரவுகளையும், சமூகவியல் தரவுகளையும் கூடுதலாக அளித்திருக்கிறார். வரலாற்றாய்வாளர்களுக்குரிய ஒரு ஆய்வுக் களஞ்சியம் இது. பொது வாசகர்கள் ஆர்வத்துடன் வாசிக்க வேண்டிய கையேடும் கூட.
திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு