தினக்குரல் பேட்டி

இலங்கையில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழின் ஞாயிறு இணைப்பான மஞ்சரி மலரில்  3- 1-2010ல் வெளியான பேட்டி இது. அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எடுத்தது.  

 

 ஒரு நல்ல இலக்கியம் என்றால் என்ன அது சமூகத்துக்கு எவ்வகையான பயனைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பண்பாடு என்கிறோம், நாகரீகம் என்கிறோம் இதெல்லாம் என்ன? ஒரு சமூகத்தில் உள்ளோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தியலையே அபப்டிச் சொல்கிறோம்.  எந்த ஒரு சமூகத்திலும் ஒரு சமூகம் இப்படி இருக்கவேண்டும், தனிமனிதன் இப்படி இருக்க வேண்டும், இது சரி இது தவறு என்ற ஒரு புரிதல் உள்ளது.

உண்மைதான், இந்தப்புரிதல் திட்டவட்டமானதாக இருப்பதில்லை. தெளிவாக தெரிவதும் இல்லை. ஆனால் அது இருக்கிறது. அதனால்தான் அந்தச் சமூகம் செயல்படுகிறது, வளர்கிறது.

இந்தக்கருத்தியல் சமூகத்தில் எந்த ஒரு தருணத்திலும் ஒரு விவாதமாகவே இருந்துகொண்டிருக்கிறது. பல்வேறு தரப்புகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன இல்லையா? நடைமுறையில் எதைபப்ற்றியாவது ஒரு நிலைபாடு தேவை என்றால் அவற்றுக்கு நடுவே ஒரு சமரசமாகத்தான் அதை உருவாக்கிக் கொள்கிறோம். ஏன், நம்முடைய மனதிலேயேகூட எந்த ஒரு விஷயமும் மாறுபட்ட தரப்புகள் நடுவே ஒரு விவாதமாகத்தான் இருக்கிறது இல்லையா?

இந்த மிகப்பெரிய சமூகவிவாதத்தின் ஒரு பகுதிதான் இலக்கியம் என்பது… செய்திகள், அரசியல்கட்டுரைகள், பள்ளிக்கூடப் பாடங்கள், மேடைப்பேச்சுகள், தொலைக்காட்சி உரையாடல்கள் எல்லாமே இந்த விவாதத்தின் பகுதிகள்தான். ஒரு பெரிய ஆறு பல நீரோடைகள் கலந்து ஓடுவதுபோல அது சென்றுகொண்டிருக்கிறது….

இந்த விவாதம் சுதந்திரமாகவும் ஆக்கபூர்வமாகவும் நடக்கக்கூடிய சமூகம் தன்னைத்தானே பரிசீலனைசெய்துகொண்டு தன் குறைகளை திருத்திக்கொண்டு மேலே செல்லும்… இது ஏதேனும் ஒரு காரணத்தால் தடுக்கப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அந்தச்சமூகம் தேங்கிப்போய் அழியும்..

நல்ல இலக்கியம் என்றால் என்ன என்றால் இந்த கருத்தியல் விவாதத்தில் எது சிறந்த விளைவை உருவாக்க முயல்கிறதோ அதுதான்… நல்ல இலக்கியம் அந்தச்சமூகத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவேண்டும். அந்தச் சமூகத்தின் பண்பாட்டுச்சிக்கல்களையும் அறச்சிக்கல்களையும் உளவியல் சிக்கல்களையும் தெளிவுபடுத்த வேண்டும்….எல்லாவற்றையும்விட மேலாக அச்சமூகத்திற்கு பெரிய இலட்சியக்கனவுகளை உருவாக்கி அளிக்கவேண்டும்…

அப்படியானால் இலக்கியத்திற்கும் மற்ற கருத்தியல் செயல்பாடுகளுக்கும் இடையே என்ன வேறுபாடு?

மற்ற கருத்தியல் செயல்பாடுகள் சமூகத்தின் விழிப்புநிலையை அதாவது பிரக்ஞையை நோக்கிச் செய்யப்படுகின்றன. அதை கவனிப்பவர்கள் தங்கள் புத்தியால் அதனுடன் விவாதிக்கிறார்கள். ஆனால் நம்முடைய பண்பாடு என்பதில் கொஞ்சம்தான் நம்முடைய மேல்மனம் சார்ந்தது. மிச்சமெல்லாம் நம் ஆழ்மனத்தில் உள்ளது. குறியீடுகளாகவும் மனப்பழக்கங்களாகவும் நம்பிக்கைகளாகவும் எல்லாம் உள்ளது. இலக்கியம்  அந்த ஆழ்மனத்துடன் உரையாட முயல்கிறது. அதை மாற்றியமைக்க முயல்கிறது…

ஏனென்றால் இலக்கியம் என்பது அறிவுத்துறை மட்டுமல்ல ஒரு கலையும்கூட. எல்லா கலைகளும் குறியீடுகளைப் பயன்படுத்தி நம் ஆழ்மனத்துடன் உரையாடக்கூடியவைதான்… இலக்கியம் ஒரேசமயம் ஒர் அறிவுத்துறையாகவும் கலையாகவும் இருக்கிறது…அறிவார்ந்த பாதிப்புகளை கற்பனையை தூண்டுவதன் வழியாக அது அளிக்கிறது…

என்னைப்பொறுத்தவரை நல்ல இலக்கியம் வாசகனின் கற்பனையை தூண்டும். அவன் ஆழ்மனதை தொட்டு அவன் சிந்தனைகளை மாற்றியமைக்கும். அவ்வகையில் அது சமூகத்தின் கருத்தியலை முன்னே கொண்டுசெல்லும்.

 வெறுமன ஒரு நாவலோ அல்லது சிறுகதையோ எழுதுவது ஒரு தூய இலக்கியம் என்றும் திரைப்படத்துக்கோ அல்லது நாடகத்துக்கோ வசனம் எழுதுவது ஒரு பிரயோக இலக்கியம் என்றும் அழகாக வகைப்படுத்துகிறீர்கள். அப்படிப் பிரயோக இலக்கியம் எழுதும் போது கிடைக்கும் திருப்தி, ஏமாற்றம் என்பன பற்றிச் சொல்லமுடியுமா?

பிரயோக இலக்கியம் அல்லது எடுத்தாள்கை இலக்கியம் ஏன் தேவைப்படுகிறது? இலக்கியம் பிற கலைகளுடன் உறவாடுவதற்காகத்தான். கவிதை தன்னளவிலேயே முழுமையானது. ஆனால் இசையுடன் இணையும்போது அது இசைப்பாடலாக ஆகிறது. கவிதையை ரசிக்க முடியாதவர்களுக்குக் கூட இசைவழியாக அது சென்று சேர்கிறது. ஆனால் அது இசைக்காக சமரசம்செய்துகொள்ளவும் வேண்டும். அதேபோல நாடகமாக, திரைப்படமாக ஆகும்போது இலக்கியம் இன்னொரு கலைமீது ஆரோகணிக்கிறது. அதை வாகனமாகக் கொள்கிறது. அந்நிலையில் அந்தக்கலைக்காக இலக்கியம் சற்று வளைந்துதான் ஆகவேண்டும். தன்னை கொஞ்சம் விட்டுக்கொடுத்தாகவேண்டும்.

கன்னடத்தில் இன்னமும் நாடகக்கலை மிக வீரியமாக உள்ளது. நல்ல எழுத்தாளர்கள் மேடை நாடகங்கள் எழுதுகிறார்கள். என் நண்பர் விவேக் ஷன்பேக் எழுதிய சக்கரக்கோம்பே என்ற நாடகம் கர்நாடகத்தின் 60 நகரங்களில் 700 முறை மேடையேறியது. நான் அவரிடம் அதன் நிறைகுறைகளைப் பற்றிக் கேட்டேன். வாசிக்கும் பழக்கமில்லாதவர்கள்கூட நாடகத்தைப் பார்த்தார்கள், அதன்மூலம் அந்த நாடகத்தை நாவலாக எழுதியிருந்தால் அதை வாசித்திருக்கக் கூடியவர்களைவிட நூறுமடங்கு அதிகமானவர்கள் அதைப் பார்த்தார்கள் என்றார். குறை என்றால் நாடகத்தை அவர் எழுதியிருந்தாலும் கடைசியில் மேடையில் மக்களிடம் சென்று சேர்ந்த வடிவம் முழுமையாக அவருடையது அல்ல. அதில் இயக்குநர் நடிகர்கள் பாடகர்கள் அனைவருமே பங்காற்றினார்கள். அனைவருடனும் சேர்ந்து அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. ஓர் ஆசிரியராக அவருக்கு இது இழப்புதான்.

இதைத்தான் நான் சினிமாவுக்கும் சொல்வேன்

   எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்பட வசனகர்த்தா, பேச்சாளர், விமர்சகர் , கட்டுரையாளர் எனப் பலதரப்பட்ட பரிமாணங்களைக் கொண்ட உங்களுக்கு மனநிறைவைத் தரும் செயற்பாடு என்று எதைக் கருதுகிறீர்கள் ? எது  குறிப்பிடத்தக்க அளவில் சமூகத்தில்  மாற்றத்தைச் செய்ததாக நீங்கள் கருதுகிறீர்கள்? 

அடிப்படையில் நான் நாவலாசிரியன். ஒரு நாவல்கூட எழுதாதபோதே இதை எழுதியிருக்கிறேன். நாவல்தான் என்னுடைய கலை.

ஓர் எழுத்தாளன் சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்பு என்பது வெளிப்படையானது அல்ல.  அவன் சமூகத்தில் உள்ள பெரும்பாலானவர்களிடம் பேசுபவன் அல்ல. சமூகத்தின் அறிவியக்கத்தின் மையமாக உள்ள சிலரிடம் மட்டுமே பேசக்கூடியவன். அவர்களிடம் ஆழமான கருத்தியல் மாற்றத்தை அவன் உருவாக்குவான். அவர்கள் அடுத்தகட்ட மாற்றத்தை உருவாக்குவார்கள். நீரில் விழுந்த கல்லின் அதிர்வு வளையங்களாக பரவி விரிவது போன்றது இது. எழுத்தாளனை வாசிப்பவர்கள் இதழாளர்களாக பேச்சளர்களாக ஆசிரியர்களாக எவ்வளவோ தளங்களில் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே மையத்தில் எழுத்தாளன் உருவாக்கும் அதிர்வின் அழுத்தமும் தீவிரமும்தான் அவனுடைய பங்களிப்பை தீர்மானிக்கின்றன. அவனுடைய பாதிப்பு என்பது நீண்டகால அளவில் வரலாற்றை திரும்பிப்பார்க்கும்போது மட்டுமே மதிப்பிடமுடியக்கூடிய ஒன்று.

அவ்வகையில் தமிழ் எழுத்தாளர்களில் பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோருக்குப் பின்னர் ஒட்டுமொத்தமான தீவிரமான பாதிப்பை உருவாக்கிய எழுத்தாளன் நான்தான் என்றே எண்ணுகிறேன்.

 

 உங்களுடைய நாவல்கள் வெவ்வேறு விதமான மொழி நடை கொண்டவையாகக் கூட உள்ளன. விஷ்ணுபுரம் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்ற நாவல்.  பெருமளவில் வாசகர்களை உங்களை நோக்கித் திரும்ப வைத்த நாவல் என்று எதை குறிப்பிடுவீர்கள்?

ஒரு நாவலை எழுதிய பின்னர் அதை உருவாக்க கையாண்ட எல்லா கருவிகளையும் கைவிட்டுவிட்டு முன்னே செல்வது என் வழக்கம். என் நடையை மாற்றிக்கொள்ள எப்போதும் கடுமையான முயற்சிகளை எடுப்பேன். அதற்கான பல பயிற்சிகள் உள்ளன. ஒன்று வேறு வகையான புனைகதைகளை வாசித்தல். இரண்டு, சிறுகதைகளை வேறுநடைகளில் எழுதிப்பார்த்தல்.

என்னுடைய நாவல்களில் விஷ்ணுபுரம்தான் அதிகமான வாசகர்களை கவர்ந்தது.இப்போதும் தமிழில் தொடர்ச்சியாகப் பேசபப்டக்கூடிய நாவல் அது. எங்கோ எவரோ அதைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அதன் கதைக்கரு ஒவ்வொரு தமிழ் மனதுடனும் சம்பந்தப்பட்டது என்பதே. பெரும்பாலான ஊர்களில் மாபெரும் கோயில்கள் எழுந்து நிற்கின்றன. சென்றகாலத்தின் தூல வடிவங்களைப்போல. அவற்றை எப்படி புரிந்துகொள்வது எப்படி உள்வாங்குவது என்ற திகைப்பு எல்லாருக்குமே உள்ளது. அங்கே ஆரம்பிக்கிறது விஷ்ணுபுரத்தின் பிரச்சினை

ஆனால் விஷ்ணுபுரமளவுக்கே காடு நாவலும் ஏழாம் உலகமும் வாசிக்கப்பட்டுள்ளன. காடு ஓர் இனிமையான கனவு. இயற்கையின் சித்திரத்தால் அது வாசகர்களைக் கவர்ந்தது என்றால் ஏழாம் உலகம் அது அளிக்கும் உண்மையின் அதிர்ச்சியினால்

என்னைப்பொறுத்தவரை வெளிவந்தவற்றில் சிறந்த நாவல் கொற்றவைதான். ஆனால் அது அனைவருக்கும் உரியதல்ல. ஏற்கனவே காப்பிய அறிமுகம் உடையவர்களால் மட்டுமே அதன் நுட்பங்களை முழுமையாக உள்வாங்க முடியும். அவ்வகையில் அது தமிழகத்தில் பெற்ற வாசிப்பும் ஆச்சரியத்திற்குரியதே.

   பேட்டி காண்பவர்களுக்கு முன்பே தயாரித்து வைத்திருந்த மாதிரி கோர்வையாக, மிக அழகாக,  விரிவாக நீங்கள் பதில் சொல்லும் விதம் நீங்கள் ஒரு நல்ல வாசகன் என்பதை தெளிவாகச் சொல்கிறது. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றிச் சொல்லுங்களேன்.

எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும் எவருக்கும் ஒரு பதிலைச் சொல்ல புதிதாகச் சிந்திக்க வேண்டியதில்லை. நான் ஒரு நிரந்தர வாசகன். ஒரு நாளில் சராசரியாக ஐந்து மணிநேரம் வாசிக்கிறேன். தமிழ் ஆங்கிலம் மலையாளம் மூன்றுமொழிகளிலும். என்னுடைய பிரியத்திற்குரிய துறைகள் இலக்கியம் தவிர இந்திய தத்துவம், இந்திய வரலாறு. பிடித்த நூல்களை ஒரு பெரும்பட்டியல்தான் போடமுடியும். கடந்த இருபது வருடங்களில் எப்படியும் ஆயிரம் நூல்களைப்பற்றி பேசியிருப்பேன் இல்லையா?

   உங்கள் பேட்டிகளைத் தொகுப்பாக வெளிவிடும் எண்ணம் உண்டா?

என்னுடைய பேட்டிகள் தொகுப்பாக வெளிவந்ததில்லை…நான் எடுத்த பிறரது பேட்டிகள் இலக்கிய உரையாடல்கள் என்ற பேரில் எனி இண்டியன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. பேட்டிகளை தொகுத்தால் அவற்றில் மீள மீள ஒரே விஷயம் வரும் என நினைக்கிறேன்.

மரத்தடி இணையதளத்தில் நான் அளித்த வினாவிடைகள் ‘எதிர்முகம்’ என்றபேரில் ஒரு நூலாக தமிழினி வெளியீடாக வந்துள்ளது. அது ஒரு நீண்ட பேட்டிதான்

   இந்தியாவிலோ அல்லது அயல் நாடுகளிலோ வெளிவரும் சஞ்சிகைகளில் தீவிர இலக்கிய சஞ்சிகை என்று நீங்கள் கருதும் சஞசிகை யாது?

இதழ்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளம் சார்ந்தவை. உயிர்மை,தீராநதி, காலச்சுவடு போன்றவை நடுத்தர வாசகர்களுக்காக நடத்தப்படுகின்றன. தமிழினி போன்றவை தேர்ந்த இலக்கிய வாசகர்களுக்காக நடத்தப்படுகின்றன. புலம்பெயர்ந்த இதழ்களில் கனடாவில் இருந்து வெளிவரும் காலம் நான் கவனித்து வாசிக்கும் இதழ். ஈழத்தில் இருந்து வெளிவரும் இதழ்களில் ஞானம், மல்லிகை போன்றவற்றை அங்குள்ள எழுத்துக்களை அறிவதற்காக வாசிக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உள்ளது

   உங்களுடைய எழுத்துக்களில் எல்லாராலும் உணரப்படும் அல்லது பலரது வாழ்வின் ஒரு பகுதியாக அமையும் நிகழ்வுகளை விட அதிகம் மிகை கற்பனை கொண்ட தத்துவ விசாரணை கொண்ட கருக்களே அதிகமாக இருக்கின்றன.  தத்துவம், வரலாறு என பல்வேறு விடயங்களைத் தொட்டுச் செல்லும் உங்கள் நாவலகள் மூலம் முக்கியமாக நீங்கள் அடைய நினைக்கும்  விடயம் என்ன என்று சொல்ல முடியுமா?

என்னுடைய நாவல்களைப்பற்றி அப்படி பொதுவாகச் சொல்லிவிடமுடியாது என்றே நினைக்கிறேன். ‘விஷ்ணுபுரமு’ம் ‘கொற்றவை’யும் நீங்கள் சொல்வதுபோல தத்துவமும் கற்பனையும் மேலோங்கிய ஆக்கங்கள். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் குமரிமாவட்டத்து தொழிற்சங்கத்தளத்தில் நடந்த கொந்தளிப்புகளைப் பற்றியது. ரப்பர் குமரிமாவட்டத்தில் ரபப்ரின் வருகை உருவாக்கிய சமூக மாற்றங்களைப் பற்றியது. கன்யாகுமரி காடு போன்றவை சாதாரண நடுத்தர வற்க மக்களின் வாழ்க்கையைப்பற்றியவை. ஏழாம் உலகம் அடித்தள மக்களின் வாழ்க்கையைப் பற்றியது. ஓர் எழுத்தாளனாக நான் எந்த எல்லைக்குள்ளும்  என்னை நிறுத்திக்கொள்பவனல்ல

ஆனால் அன்றாட விஷயங்களை சாதாரணமாகச் சொல்லி முடித்துவிட நான் முனைவதில்லை. அது இலக்கியத்தின் பணி அல்ல. எதற்கும் ஆழம் வரைச் சென்று பார்ப்பதே இலக்கியத்தின் சவாலாகும்.

என் நாவல் மூலம் நான் அடைய நினைக்கும் விஷயம் என்ன? பெரும்பாலும் எல்லா தமிழ்க் காவியங்களும் ‘உலகம்’ என்ற வருணனையிலேயே ஆரம்பிக்கின்றன. உலகெலாம் என்று ஆரம்பிக்கிறது பெரியபுராணம். உலகம் யாவையும் என ஆரம்பிக்கிறது கம்பராமாயணம்.  மூலா முதலா உலகம் என ஆரம்பிக்கிறது சீவகசிந்தாமணி.  உலகை முழுக்கச் சொல்லிவிடவேண்டும் என்னும் அவாவே காவியகர்த்தனின் உந்துவிசை. அதாவது முழுமை நோக்கு. வாழ்க்கையின் அத்தனை தளங்களையும் கருத்தில்கொண்டு பேசவேண்டும் என்ற துடிப்பு. அது மானுடசாத்தியம் அல்ல. ஆனாலும் அதுதான் கவிஞனின் கனவு.

நாவலாசிரியனும் ஒருவகை காவிய ஆசிரியனே. என் நாவல்கள் வழியாக எதற்கு முயல்கிறேன்? வரலாற்றை, தொன்மங்களை, தத்துவத்தை, ஆன்மீகத்தை, அன்றாட வாழ்க்கையை எல்லாம் ஒட்டுமொத்தமாக புனைவுலகில் அள்ளிவிட முடியுமா என எத்தனிக்கிறேன். அந்த முழுமைநோக்கின்மூலம் வாழ்க்கையைப்பற்றி எந்த தரிசனத்தை அடைய முடியும் என்று பார்க்கிறேன்.

   சாதரண வாசகர்கள் எனக்குத் தேவையில்லை, தன்னைத் தானே தயார் நிலை செய்து கொண்டு படிக்கும் வாசகர்கள் போதும் என நீங்கள் கருதினாலும் உங்களுடைய முதற்கதை  நதி அனைவரது உள்ளுணர்வையும் தொடக்கூடியது. சோகத்தை மனதில் நிறைத்து விடும் சொற்களும் எழுத்தோட்டமும் கொண்ட அற்புதமான கதை  அது. அது எழுதக் காரணமான சம்பவம் அல்லது துண்டுதல் பற்றச் சொல்லமுடியுமா ?

என் முதற்கதையாக நான் கருதும் நதி என் அம்மாவின் மரணத்தைப் பற்றியது. கிட்டத்தட்ட சுயசரிதை. ஆகவே அதில் தீவிரமான உணர்ச்சிகள் உள்ளன. ஆனாலும் அது சாதாரண வாசகர்களுக்கு உரியதல்ல. அந்தக் கதையில் கதை முழுக்க ‘ஆறு’ என்றே இருக்கும்.  அம்மாவுக்கு பலிதர்ப்பணம் செய்து நீரில் மூழ்கி எழுந்து திரும்பிப்பார்க்கும்போதுதான்  ‘நதி’  ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படும் . ஆறு நதியாக ஆகும் அந்த நுண்மையான சொற்பரிணாமம்தான் அந்தக் கதையே. அதை எத்தனைபேர் கவனித்திருப்பார்கள்?

 உங்களின் இணையம் உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்குமிடையில் நல்லதொரு உறவை வளர்க்க உதவுகிறது. அபிமான எழுத்தாளர்கள் எட்டாத உயரத்தில் இல்லாமல் இப்படிக் கிட்டவாக இருப்பது வாசகர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் தான். அவ்வகையில் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அனுபவம் பற்றிச் சொல்லமுடியுமா?

இணையம் எனக்கு ஒரு  அந்தரங்க ஊடகமாக இருக்கிறது. இல்லையேல் ஒரு கருத்தைச் சொல்ல நான் பிறரை நம்ப வேண்டும். அச்சில் இதழ் உருவாகும் வரை காத்திருக்க வேண்டும். சிலரை என் இலக்கியம் நோக்கி இதன்வழியாக என்னால் ஈர்க்க முடிகிறது.ரானால் இணையவாசகர்களில் இலக்கியத்துக்கு வரக்கூடியவர்கள் மிகச்சிலர்தான்.

மறக்கமுடியாத நிகழ்ச்சி என்றால் இணையத்தில் நான் சிவாஜி எம்ஜிஆர் இருவரைப்பற்றியும் எழுதிய சாதாரணமான அங்கதக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழ் ஒரு பெரிய வம்பாக ஆக்கியதைத்தான் சொல்லவேண்டும். அவற்றின் சில பகுதிகளை வெட்டி எடுத்துப்போட்டு இலக்கியப்பரிச்சயம் இல்லாத வாசகர்களை எனக்கு எதிராக வன்முறைக்குத் தூண்டிவிடும்படி குறிப்பும் எழுதியது அது.

தமிழகத்தில் பாமரர்கள் நடுவே மனிதர்களை தெய்வத்துக்கு நிகராக ஆக்கி கும்பிடும் வெறிகொண்ட மனநிலை எப்போதும் உண்டு. இந்நிலையில் இத்தகைய போக்கு எத்தனை ஆபத்தானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நான் கொஞ்சநாள் தலைமறைவாகவே இருக்க நேரிட்டது. அதிருஷ்டவசமாகவே தப்பவும் முடிந்தது.

இன்று யோசிக்கும்போது விகடனில் வெளிவந்த அந்தக்குறிப்பு மிகவும் முக்கியத்துவம் உள்ளது என்று படுகிறது. அப்பட்டமாக அது கேட்டது இதைத்தான், ‘சமூகத்தை விமரிசிக்க எழுத்தாளன் யார்? அவன் ஒரு சின்ன மனிதன். பணமும் புகழும் கொண்ட பெரிய மனிதர்களை அவன் எப்படி விமரிசிக்கலாம்?’ அந்த விவாதத்தில் இணையத்திலும் அச்சிலும் சமூகத்தின் பல தளங்களில் வாழ்ந்த பலநூறுபேர் மீண்டும் அதைத்தான் கேட்டார்கள் ” அந்த பெரிய பிம்பங்களை விமரிசிக்க இவன் யார்?”

நம் சமூகத்தின் ஆழ்மனத்தில் எழுத்தாளன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பதற்கான ஆதாரம் இது. எழுத்தாளன் என்றால் இவர்களின் கண்ணில் பெரிய மனிதர்களை நயந்து, பாராட்டி, கூழைக்கும்பிடு போட்டு பரிசில் பெற்று வாழவேண்டியவன். அப்படி நாளெல்லாம் மேடையில் குழைபவர்களைப்பற்றி அவர்களுக்கு எந்த மனக்குறையும் இல்லை. ஆனால் ஒரு விமரிசனத்தை அவன் சொன்னால் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்படுகிறது.

கவிதையை மட்டுமே ஆயுதமாகவும் தகுதியாகவும் கொண்டு சமூகத்தை விமரிசித்த பாரதி தோன்றி நூற்றாண்டு தாண்டியும் இன்னமும் நம் சமூக மனம் அவ்வகையில் எழுத்தாளனை உருவகித்துக்கொள்ளவில்லை.

 

நிறைவாக ஈழத்து இலக்கிய வளர்ச்சி, புலம் பெயர் இலங்கைத் தமிழரின் இலக்கிய முயற்ற்சிகள் பற்றிய உங்கள் பார்வையை எப்படி உள்ளது?

புலம்பெயர்ந்த ஈழ இலக்கியம் ஆழமான ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன். சொல்லப்போனால் அது தொடங்கவே இல்லை. புலம்பெயர்ந்தபோது உருவான கடந்தகால ஏக்கம் புதிய இடத்தை புரிந்துகொள்வதற்கான தத்தளிப்பு ஆகியவற்றை சிலர் எழுத ஆரம்பித்தார்கள். அத்துடன் ஒருவருக்கொருவர் அரசியல் சண்டைகள்.  அதெல்லாம் இன்று பொய்யாய் பழங்கதையாய் போய்விட்டன. அன்று அதற்காக சில இதழ்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இன்று நின்றுவிட்டன.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி இருவரும் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் என நினைக்கிறேன். பொ.கருணாகரமூர்த்தி, ஆசி.கந்தராசா, விமல் குழந்தைவேல், மெலிஞ்சிமுத்தன், அ.இரவி, நோயல் நடேசன் போன்று பலர் குறிப்பிடும்படி எழுதிவருகிறார்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த எழுத்துக்கு என்ன  எதிர்காலம் என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை தமிழ்நாட்டுத்தமிழர்களிலும் சரி ஈழத்தமிழர்களிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த தலைமுறைக்கு தமிழ் தெரியவில்லை. தமிழ்மீது பெரிய ஆர்வமும் இல்லை. அவர்கள் அந்தந்த பண்பாடுகளுடன் இணைந்து வளர்வார்கள், அதுவே இயல்பானதும்கூட. அவர்களுக்கு நிறம் சார்ந்தும் இனம் சார்ந்தும் பழக்கவழக்கங்கள் சார்ந்தும் மதம் சார்ந்தும் ஒரு தனியடையாளம் இருக்கும். அதுதான் அவர்களின் தமிழ்த்தன்மை. அவர்களில் சிலர் எழுதவந்தால் அந்த நாடுகளின் மொழிகளில் அந்த தமிழ்த்தன்மையை  வெளிப்படுத்துவார்கள். அது ஒரு தனி இலக்கிய அடையாளமாக அந்தந்த மொழிகளில் நீடிக்கும். மற்றபடி அதற்கும் தமிழிலக்கியத்திற்கும் சம்பந்தமே இல்லை

டீனா படையாச்சி என்று ஓர் தென் ஆப்ரிக்க எழுத்தாளர் உண்டு. அவரது பெயரொட்டை வைத்துப்பார்த்தால் அவர் தமிழ்நாட்டு வன்னியர். ஆனால் புலம்பெயர்ந்து 150 வருடங்கள் ஆகின்றன. அவருக்கு அவரது முன்னோர் இந்தியாவில் எங்கிருந்தோ வந்தவர்கள் என்று தெரியும், அவ்வளவுதான். அவரது எழுத்தில் அவரது இனப்பின்னணியின் மெல்லிய தனித்தன்மை தெரியும். அது தமிழ்பண்பாட்டுச்சாயல் கொண்டது. அந்த அளவுக்கே புலம்பெயர்ந்த தமிழிலக்கியமும் நீடிக்கமுடியும்.

முந்தைய கட்டுரைப.சிங்காரம்,ஒருகடிதம்
அடுத்த கட்டுரைசிறுகதை, கவிதைப் போட்டி