நான் சின்னப்பையனாக இருந்த காலம். எங்களூரில் ஆரோன் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை. அதை நடத்தியவர்கள் வயதான தம்பதியினர். குழந்தைகள் இல்லை. அங்கே சிலேட்டு பலப்பம் முதல் ஐந்துக்கட்டை பேட்டரி வரை கிடைக்கும். ஆனால் ரிச்சர்ட் மிகமிக மெல்லத்தான் எடுத்துத் தருவார். காத்து நின்றிருக்கவேண்டும்.
அவர்கள் இருவருமே அதிதீவிர பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவை பிறகு பார்க்கலாம், சாத்தானை முதலில் ஒருவழிபண்ணுவோம் என்ற மாதிரியான அதிதீவிர நம்பிக்கை. அந்த அம்மாள் எந்நேரமும் பைபிளும் கையுமாக அமர்ந்திருப்பாள். கிழவருக்கு ஆன்மத்துணை. அவர் செய்யும் பிழைகளை எல்லாம் கடுமையாகச் சுட்டிக்காட்டி வசைபாடுவது என்பது அதன் பொருள்
நான் ஒருநாள் மளிகைக்கடையில் சென்று கற்பூரம் கேட்டேன். இல்லை. சரி என்று நேராகச் சென்று அமலோற்பவம் அம்மாளிடம் கேட்டுவிட்டேன். பைபிளில் இருந்து தலைதூக்கி என்னது என திகைத்து பார்த்தாள். கண்ணாடிக்குள் கண்கள் ததும்பி ஆடின. ‘என்ன வேணும்?’ நான் மேடையை சில்லறையால் தட்டி ‘சூடம்! கற்பூரம்! சாமிக்கு கொளுத்தணும்லா?’ என்றேன்
எரிமலை வெடித்தது. சீறி கைநீட்டி ‘சீ, அப்பாலே போ சாத்தானே. உனக்க தந்திரமெல்லாம் எனக்கறியலாம்!’ என்றாள். நான் திடுக்கிட்டு சிறுநீர் துளித்தேன். ரிச்சர்ட் கொஞ்சம் தன்மையாக ‘இல்ல தெரியாம கேட்டிருப்பான். சின்னப்பயல்லா?’ என்றார். உடனே கிழவி அவரை நோக்கித்திரும்பி ‘சீ, விலகிப்போ சாத்தானே, இப்ப இந்தால வாறியா?’ என்றாள்
அதி தீவிர மதநம்பிக்கை போல எல்லாவற்றுக்கும் பதிலாவது வேறில்லை. மார்க்ஸிய- லெனினிய- ஸ்டாலினிய-மாவோவிய- போல்பாட்டிய நம்பிக்கையும்தான். வினவு தளத்தில் இந்தக்கட்டுரையை வாசித்தபோது ஒருகணம் ஏங்கித்தான் போனேன். இந்த அளவு எளிய விடைகளுடன் வாழவும் ஒரு கொடுப்பினை வேண்டும்