வடக்குமுகம் ( நாடகம் ) 2

பீஷ்மர்: யாரங்கே.

காரியக்காரன்: பிரபு.

பீஷ்மர்: இளவரசி அவள் விரும்பிய இடத்திற்குச் செல்ல ஆவன செய்யுங்கள்.

விசித்திர வீரியர்: என்னை அம்மா பார்க்க வேண்டும் என்றார்கள். இப்போது இந்தத் தகவலை அவர்களிடம்….

பீஷ்மர்: அவர்கள் அழைத்ததே இதற்காகத்தான் செல். (பெரூமூச்சுடன்) என் வணக்கத்தை கூறுக.

(விசித்திர வீரியர் செல்கிறார்.)

பீஷ்மர்: யாரங்கே ?

ஒரு வீரன்: (வந்து வணங்கி) பிரபு யாரை அழைப்பது ?

பீஷ்மர்: வேண்டாம். நீ எனக்கு சற்று மது கொண்டுவா. நில். சற்று கடுமையான மது…

அமாத்யர்: நான் விடைபெறுகிறேன் பிதாமகரே.

பீஷ்மர்: உம் (எழுந்து அமைதியிழந்து நடை பயில்கிறார். மது வருகிறது. அருந்துகிறார். மீண்டு அருந்துகிறார்.)

பீஷ்மர்: மனித நாடகம்! (கோபம் கொண்டு) பைத்தியக்காரப் பெண்… அறியாமையும் அகரங்காரமும் சேர்ந்து (மீண்டும் உலவி, மெல்ல தணிந்து) பரிதாபத்திற்குரியவள். பேதை…

(அரங்கு ஒளி மாறுபடுகிறது. ஒரு நிழல் பீஷ்மரை நெருங்கி மெல்ல பேச முற்படுகிறது.)

நிழல்: பீஷ்மரே, உங்கள் மனம் ஏன் அமைதியிழந்திருக்கிறது ?

இன்னொரு நிழல்: மிக அழகான ஒரு புண். தீக்காயம் போல எரியும் ரணம்…

பீஷ்மர்: (நின்று) என்ன ? (சுற்றி வந்து) யாருமில்லை. ஆனால் எவராலோ கவனிக்கப்படுவது போலிருக்கிறது. விசித்திரமான மனப் பிம்பங்கள். (மதுக்கிண்ணத்தை தூக்கிப் பார்த்து] பாதாளத்து நிழல்கள் கரைந்திருக்கும் இந்தத் திரவம்

முதல் நிழல்: பீஷ்மரே, அவள் அவனைக் காதலிக்கிறாள்.

இரண்டாம் நிழல்: ஒரு வேளை அவன் அவளை ஏற்றுக் கொள்ளக் கூடும்.

முதல் நிழல்: ஒரு போதுமில்லை. அவன் என்ன மூடனா.

இரண்டாம் நிழல்: ஆனால் காதல் எல்லா நியதிகளுக்கும் அப்பாற்பட்டது.

முதல் நிழல்: அவள் அவனை விரும்புகிறாள் அவள் அவனை விரும்புகிறாள்.

பீஷ்மர்: சே! (கிண்ணத்தை வீசுகிறார்)

ஒரு வீரன்: (ஓடி வந்து) பிரபு அழைத்தீர்களா ?

பீஷ்மர்: இல்லை. நீ போகலாம். (அறையை பார்க்கிறார் அசைவற்ற தூண்கள்) ஆம் இந்த மதுதான் காரணம். விசித்திரமான ஒரு பிரமை.

நிழல்களால் சூழப்பட்ட ஒரு போர்க்களத்தில் அம்புகள் மீது படுத்திருக்கும் ஒருவன். பிணங்கள் அழுகும் வீச்சம். மீண்டும் மீண்டும் வரும் கனவு. மிக அருகே இருக்கிறது அக்கனவு. சற்று கால் தடுக்கினால் நான் அதற்குள் விழுந்து விடுவேன் என்று படுகிறது.

(தளர்ந்து நடந்து மறைகிறார். ஒளிமாறுபட அரங்கில் உருவங்கள் கலைகின்றன. ஒரு அரண்மனைக்குரிய ஒலிகள் எழுகின்றன. வாசல் காவலர்கள். சேவகர்கள். நிமித்திகன் முன்வந்து சங்கு ஊதுகிறான்.)

நிமித்திகன்: செளபால நாட்டு அதிபன் மகாபலன் சால்வ மன்னர் வருகை.

(வாழ்த்தொலிகள்)

சால்வன்: (காயங்களுக்கு கட்டு போட்ட உடலுடன் வந்தபடியே) ஆம் அமாத்யரே ஒரு வகையில் அது நல்லது தான். நான் பீஷ்மரை எதிர்த்தேன் என்பது நிறுவப்பட்டாயிற்று. அது போதும் எனக்கு. ஆனால் அஸ்தினபுரியின் படைபலத்தை எப்படி எதிர் கொண்டிருக்க முடியும் ?

அமாத்யர்: (கூட நடந்தபடி) ஒரு போர் தவிர்க்கப்பட்டிருக்கிறது. நாமும் கோழைகளல்ல. ஆனால் போர் உக்கிரமாகும்தோறும் அழிவு அதிகம்.

சால்வன்: ஆம். விதி இம்முறை கருணையுடனிருக்கிறது.

(உள்ளிருந்து ஒரு வீரன் வருகிறான்)

வீரன்: ஜய விஜயீபவ.

சால்வன்: என்ன ?

வீரன்: காசி நாட்டு இளவரசி தங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள்.

அல்லன்: (குழம்பி) யார் ?

வீரன்: அம்பாதேவி

சால்வன்: தனியாகவா ?

வீரன்: அஸ்தினபுர அமாத்யர் மற்றும் வீரர்களுடன்.

சால்வன்: வரச் சொல்.

(வீரன் போகிறான்)

அமாத்யர்: மன்னரே இது ஒரு சோதனை. மன்னனுக்கு அரச கடமைகளுக்கு அப்பால் எந்த உறவுகளும் இல்லை என்பதை நினைவு கூருங்கள்.

(அம்பை உள்ளே வருகிறாள்)

சால்வன்: (அவளை கூர்ந்து பார்த்து) இளவரசியார் மேலும் அழகு பெற்றிருக்கிறீர்கள்.

அம்பை: (அவனுடைய கேலியை உடனே புரிந்து கொண்டு) தங்கள் பேச்சு புரியவில்லை.

சால்வன்: அஸ்தினபுரியில் மிதமான தட்பவெப்பநிலை என்பார்கள்.

அம்பை: நான் அங்கே தங்கவில்லை. உங்களை பார்க்க வந்தேன்.

சால்வன்: தங்கள் நோக்கம். ?

அம்பை: நான் இருக்க வேண்டிய இடம் இது என்று தான்.

சால்வன்: எப்படி ? நீங்கள் பீஷ்மரால் கவரப்பட்டவர். விசித்திர வீரியருக்காக உறுதி செய்யப்பட்டவர்.

அம்பை: கவர்வதற்கு நான் எவருடைய சொத்துமல்ல. ஏன் ஆத்மாவும் முழுமையும் சுதந்திரமும் கொண்டதுதான்.

சால்வன்: ஆனால் ஆத்மா உறவுகளில் மரபுகளில் சிக்கியிருக்கிறதே. ஆறு கரைகளுக்கு கட்டுப்படுவது போல.

அம்பை: நான் பேச வரவில்லை. நான் தங்களை மட்டுமே எண்ணினேன். தங்களை மட்டுமே என்னால் ஏற்க முடியும்.

சால்வன்: ஆனால் நீங்கள் கைப்பற்றப்பட்டவர் பிறருடைய உடைமை.

அம்பை: அப்படியானால் நான் என்ன செய்வது ?

சால்வன்: பீஷ்மருடைய உடைமை நீங்கள். அவரிடமே திரும்புங்கள். உங்களை அவரிடமிருந்து கைப்பற்றும் வல்லமை எனக்கில்லை.

அம்பை: உங்கள்மீது என் உள்ளம் கொண்ட காதலை உதறுகிறீர்களா ?

சால்வன்: நான் சுயம்வரத்துக்கு வந்தேன். ஆனால் விதி நம்மை சேர்த்து வைக்கவில்லை . . .

அம்பை: (குரோதத்துடன்) விதியல்ல, உங்கள் கோழைத்தனம்.

சால்வன்: (கோபம் கொண்டு) ஆமாம். கோழைத்தனம்தான். பீஷ்மரின் அம்பால் மரணமடைய நான் மூடனில்லை.

அம்பை: (கசப்புடன்) மிகப்பெரிய புத்திசாலி.

சால்வன்: உன் குறிப்பு எனக்குப் புரியாமலில்லை பெண்ணே. (சட்டென்று சிரித்து) நீ மிகப்பெரிய முட்டாள். காசி மன்னன் மகளாக உன்னை ஏற்க மாமன்னர்கள் வரிசையில் நிற்பார்கள். பீஷ்மரின் பிச்சையாக உன்னை யார் ஏற்க முன் வருவார் ?

அம்பை: (அதிர்ச்சியுடன்) சால்வ மன்னரே. அப்படியானால் நீங்கள் என்னிடம் கண்டது என் தந்தையின் செல்வமும் படைபலமும் மட்டும் தானா ?

சால்வன்: இதில் என்ன ஐயம் ? உன்னைவிட பத்து மடங்கு பெரிய அழகிகள் என் அந்தபுரத்தில் நிரம்பியிருக்கிறார்கள். (குரலை தணித்து) காசி மன்னன் மகளாக அன்றி, பட்டத்தரசி பட்டம் இன்றி, நீ என் அந்தபுரத்தில் வாழ முடியுமென்றால் . . .

அம்பை: சீ, நீ ஓர் ஆண் மகனா ? உன் மீதா என் காதலை வைத்தேன் ?.

சால்வன்: கன்னியருக்கு காதல்கள் கை வளைகள்போல. ஒன்று உடைந்தால் இன்னொன்று .உடல் வளர வளர வேறு வேறு – என்றான் என் அரசவைக் கவிஞன் ஒருவன்.

அம்பை: எத்தனை குருடியாக இருந்திருக்கிறேன். உன் உடலும் மனமும் கூசுகின்றன. இந்தக் கணமே என் உடல் எரிந்து சாம்பலாகி விடலாகாதா என ஏங்குகிறேன்.

சால்வன்: கற்பெனும் தீ! நல்ல கற்பனை. நான் மருத்துவரைப் பார்க்கும் நேரம் இது. நீ என் அந்தபுரத்தையோ பீஷ்மரையோ தேர்வு செய்யலாம். (சிரித்து) சாபச் சொற்களால் செளபாலத்தை எரித்துவிடாதே . . .

(போகிறான். அமாத்யரும் தொடர்கிறார். அம்பை தனியாக நிற்கிளாள். அவளைச் சுற்றி நிழல்கள் மெல்ல அசைகின்றன. நிழல்களின் நடனம் அதிகரிக்கிறது. வேகம் கொள்கிறது. வெறி கொண்டு சுழன்றாடும் நிழல்கள். அம்பைக்கு தலை சுழல்கிறது. கால்கள் தள்ளாடுகின்றன. தடுமாறி விழுகிறாள். நிழல்கள் நிலைகொள்கின்றன.ஒளி குவிய நிழல்கள் கூடி இணைந்து நான்குமரங்கள்கொண்ட தேவைதை ஆகின்றன]

தேவதை: அம்பை!

அம்பை :யார் நீ ?

தேவதை: நான் உன்னை பிரியும் நேரம் வந்துவிட்டது . இத்தனை நாள் உன்னுடன் இருந்தவள்.

அம்பை: உன்னை நான் பார்த்திருக்கிறேன் நீ . . .

தேவதை: நான் கன்னிமையின் அதி தேவதை. ஐந்து வருடம் முன்பு நீ பருவமடைந்த நாளில் உன்னிடம் வந்தேன்.

அம்பை: (முகம் மலந்து) ஆம். நினைவிருக்கிறது.

தேவதை: உன் உடலிலும் உள்ளத்திலும் எத்தனை மொட்டுகளை மலர வைத்தேன் இல்லையா ? நீ பார்த்த மலர்களிளல்லாம் ஒளியை நிரப்பினேன். உன் தனிமையில் தொலைதூரத்து இசையானேன். நிலவு பொழிந்த இரவின் குளிரில் வினோதமான நறுமணமாக வந்து உன் ஆத்மாவிடம் உரையாடினேன்.

அம்பை: (குதூகலத்துடன்) ஆம். கனவும் இனிமையும் நிரம்பிய வருடங்கள்,

தேவதை: இது வாழ்வில் வசந்தம் அம்பை. பருவங்களிலேயே குறுகியது. வானவில் போல தோன்றும்போதே அழிந்து கொண்டிருப்பது. நான் உனக்களித்த இனிமைகள் உன் நினைவில் இறுதிக்கணம் வரை இருக்கும். முதிர்ந்து உதிரும் பருவத்திலும் என்னை நினைக்கும்போது உன் மனம் ஏங்கி கண்களில் நீர் துளிர்க்கும்.

அம்பை: நீ ஏன் என்னை விட்டுப் போக வேண்டும் ? ஏன் என்னுடன் இருக்கக் கூடாது ?

தேவதை: நான் விட்டுச் சென்றாக வேண்டும். அதுதான் இந்த நாடகத்தின் கதையின் விதி. பலர் வாழ்வில் நான் மெளனமாக அவர்களே அறியாமல் விடைபெற்று கொள்வேன். சிலருக்கு அப்படி ஆவதில்லை. ஓர் அதிர்ச்சி, ஓர் அவமானம், நெஞ்சில் எப்போதும் கரையாமல் கிடக்கும் ஒரு கடும் கசப்பு …அந்தஒரு கணத்தில் என்னுடனான உறவு அறுபட்டு விடுகிறது.

அம்பை: ஆம். நான் இப்போது உணர்வதுபோல அற்பமானவளாக என்னை என்றுமே உணர்ந்ததில்லை. என் உடலும் உயிரும் இத்தனை கனமாக என்றுமே இருந்ததில்லை.

தேவதை: இனி உன்னால் துள்ளி குதித்து ஓட முடியாது. இனிமேல் நீ கூவிச் சிரிக்க முடியாது. இனி உன்னால் எவரையுமே முழு மனதுடன் நம்ப முடியாது.

அம்பை: ஆம். சிறகுகள் உதிர்ந்துவிட்டன.

தேவதை: வருகிறேன் அம்பை. உன் மகிழ்ச்சிக்காக என் அழகுகள் இனிமைகள் அனைத்தையுமே அளித்திருக்கிறேன். உன் நினைவுகளில் என்றுமிருப்பேன்.

அம்பை: (கண்ணீருடன்) ஆம். உன் நினைவுகள் மட்டுமே எனக்குள் எஞ்சியிருக்கும்.

(தேவதை கலைந்து மறைகிறது. அம்பை குனிந்து அமர்ந்து விசும்புகிறாள். மறுபக்கம் இன்னொரு தேவதை மெல்ல உருக் கொள்கிறது. நான்கு கரங்கள். கனிகளினாலான மாலை அணிந்திருக்கிறது.)

தேவதை: அம்பை. அழாதே விழித்துக்கொள். உன் நாட்கள் இனிமேல்தான் துவங்குகின்றன.

அம்பை: (திடுக்கிட்டு) யார் ?

தேவதை: என்னை நீ அறியமாட்டாய். சற்று முன் உன்னிடம் விடைபெற்றாளே அவளுடைய தமக்கை நான். என்னை பெண்மையின் அதிதேவதை என்பார்கள். அவள் விடைபெற்ற கணமே நான் உன்னருகே வந்துவிட்டேன். இதுவும் இயற்கையின் நியதிதான்.

அம்பை: (பெருமூச்சுடன்) நியதி ! அதற்கு அடிபணிவதன்றி வேறு வழியில்லை.

தேவதை: சென்ற ஐந்து வருடங்களாக நீ ஒரு பொய்யான உலகில் வாழ்ந்தாய். என் தங்கைதான் பிரம்மன் இவ்வுலகுக்கு அனுப்பிய தேவதைகளிலேயே மிகப் பெரிய ஜாலக்காரி. அவளுடைய விளையாட்டுகளுக்கு எல்லையேயில்லை.உன் குழந்தை நாட்களில் உன் தந்தைக்கு காணிக்கை வந்த பாண்டிநாட்டு செம்பவள பளிங்கு வழியாக பார்த்து அக்காட்சியின் விசித்திரத்தில் நீ குதூகலித்ததுண்டல்லவா ?

அம்பை:ஆம்.ஒவ்வொரு காட்சியும் செம்பிழம்பாக எரிந்தும் குழைந்தும் ததும்பிக்கொண்டிருந்தது…

தேவதை: அதுபோன்ற ஒரு மாயமே நீ சென்ற ஐந்து வருடங்களாக கண்டவை அனைத்துமே…

அம்பை: அந்த அழகிய மலர்கள் ?

தேவதை: அவை ஒளிவிடுவது காயாகி கனியாகி விதைகளை உதிர்த்து நெற்றாக மாறுவதற்காகவே.அதை நீ காணவில்லை.

அம்பை[ ஆதுரத்துடன்] இசை ? அந்த இசை ?

தேவதை: கோடானுகோடி ஒலிகளினாலானது இப்பிரபஞ்சம் .ஒலிகள் உன் உணர்வுகளுடன் ஒத்திசைவுகொள்ளும் சில கணங்களை மட்டுமே நீ இசை என அறிகிறாய். ..

அம்பை [தளர்ந்து] உண்மை. இப்போது அது தெளிவாக தெரிகிறது

தேவதை: மிகத்துல்லியமாக சமன் செய்யப்பட்ட ஒன்று இப்பிரபஞ்சம். அழகு குரூரத்தால். இனிமை கசப்பால். நன்மை தீமையால். பகல் இரவால். தர்மம் அதர்மத்தால். வாழ்வு மரணத்தால்

அம்பை: மிகக் குரூரமாக…

தேவதை: (சிரித்து) துல்லியம் என்பது குரூரத்தாலேயே சாத்தியமாவது.

அம்பை: இந்த அற்பனை நான் ஆண்களில் முதல்வனாக எண்ணியதும் இந்த மனமயக்கத்தால்தான் போலும்.

தேவதை: நிச்சயமாக. முதற்காதலே மனித வாழவின் மிகப்பெரிய அசட்டுத்தனம். அதைப் பெறாதவர்கள் உண்மையான காதலின் அழுத்தத்தை ஒருபோதும் உணர்வதில்லை. பெற்று இழந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள். இனியவலியாக அந்நினைவு அவர்களிடம் தங்கிவிடும். வசந்தம் விட்டுச்சென்ற நறுமணம் போல.

அம்பை: ஆயினும்… எத்தகைய அற்பன். எத்தகைய மூடன். அந்தத் திரை கிழிபட்டு அவளைக் காணநேர்ந்த கணங்கள்… என் உடல் கூசுகிறது.

தேவதை: அந்தத் திரை மிக மிக விந்தையானது. அது நீ விரும்பாததை விரும்புவதாகச் சொன்னது. விரும்புவதை மறைத்தது.

அம்பை: விரும்புவதையா ?

தேவதை: ஆம். வீரத்தை. தன் புஜங்கள் மீது நம்பிக்கைக் கொண்ட ஆண்மகனை. நீ அவனை விரும்புகிறாய்.

அம்பை: யாரை ?

தேவதை: பீஷ்மரை.

அம்பை: (சீறி எழுந்து) சீ! நீயும் பசப்புக்காரிதானா ?

தேவதை: (யோசித்துப்பார்) தான் விரும்பியதை தயக்கமின்றி சென்று கைப்பற்றுபவனை பெண்கள் விரும்புவது இயற்கை.

அம்பை: ஒரு வேட்டைமிருகம் போல என்னை கைப்பற்றியவன்; இழுத்துச் சென்றவன்…

தேவதை: ஆம். அது உண்மை . அவன் உன்னை அவமதித்தான். உன் ஆத்மாவை அவன் பொருட்படுத்தவேயில்லை. ஆயினும் நீ அவனை விரும்புகிறாய். அவ்விருப்பத்தைக் கண்டு அஞ்சுகிறாய். அதை எண்ணி அருவருப்பும் கொள்கிறாய். ஆயினும் விரும்புகிறாய். விரும்பாமலிருக்க உன்னால் முடியவில்லை.

அம்பை: நான் அத்தனை இழிந்தவளா? பிறவியிலேயே அடிமைத்தனம் கொண்டவளா?

தேவதை: இல்லை. ஆனால் பெண். அவரை விரும்புவது உன் கருப்பை.

அம்பை: (கோபத்துடன்) இல்லை.

தேவதை: உனக்குத் தெரியும். கருப்பையின் தாபம் வேறு வகையானது. அது வலிமைக்காக ஏங்குகிறது. வலிமையை மட்டுமே அது பொருட்படுத்துகிறது. உடல் வலிமை, உள்ளத்தின் வலிமை, ஆத்மாவின் வலிமை.

அம்பை: என் கருப்பையை சுமப்பதுதான் ஆத்மாவின் கடமையா ?

தேவதை: இல்லை ஆத்மாவையும் கருப்பைதான் சுமக்கிறதா ? யாரறிவார் ? ஆத்மா கண்ணுக்குத் தெரியாத எஜமானன் ஒருவனின் வளர்ப்பு நாய். அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

அம்பை: (மெல்ல தணிந்து) ஆனால் நான் தோற்க விரும்பவில்லை. என்னை நானே…

தேவதை: உண்மையில் இந்த ஆட்டத்தில் தோற்பது யார் என்று யாரும் கூற முடியாது. நீ அவரை உண்ணப் போகிறாய். அவரை வெறும் விதையாக மாற்றிவிடுகிறாய். அந்த விதை முளைத்து பேருருவம் கொள்கையில் இவர் உதிர்ந்து நெற்றாகி மறைவதைக் காண்பாய். அப்போது நீ அந்த வலிமையை உன் மடியில் கட்டி வைத்திருப்பவளாக இருப்பாய்…

அம்பை: இதே நாடகம்தான். மீண்டும் மீண்டும்.

தேவதை: ஆம் மீண்டும் மீண்டும். சலிப்பே இன்றி. ஓய்வேயின்றி. (சிரிக்கிறது)

அம்பை: நான் எப்படி பீஷ்மரிடம் திரும்ப முடியும், எந்த அடிப்படையில் ?

தேவதை: ஏனெனில் அவர் உன்னை விரும்புகிறார்.

அம்பை: அவரா ? அவரிடம் வெறுப்பல்லவா கொதித்தது ?

தேவதை: அன்பை வேறு எப்படி மறைக்க முடியும். ஆனால் கண்களுக்கு திரை போட மனிதனால் முடியாது.

அம்பை: நான் கவனிக்கவில்லை.

தேவதை: உன் மனம் கவனிக்கவில்லை. உன் ஆத்மா கவனித்தது. எந்தப் பெண்ணின் ஆத்மாவும் அதை தவறவிடாது.

அம்பை: ஆம். (வெட்கி முகம் மலர்கிறாள்) ‘

தேவதை: எழுந்துகொள். கண்களை துடை. நான் உன்னுடன் இருப்பேன்.

(தேவதை மறைகிறது. அம்பை எழுந்து புடவையை திருத்திக்கொண்டு வெளியே செல்கிறாள். வெளியே புரவிகள் கனைத்து சகட ஒலியுடன் ரதங்கள் கிளம்புகின்றன. அரங்கு மெல்ல ஒளியும் அசைவும் மாறி அஸ்தினபுரியின் அரண்மனையாகிறது.)

 [மேலும்]

முந்தைய கட்டுரைவடக்குமுகம் ( நாடகம் ) – 1
அடுத்த கட்டுரைமுதற்கடிதம்