ராதையின் உள்ளம்

radhabee

 

அன்புள்ள ஜெமோ,

ராதையின் உள்ளத்தை நீங்கள் நுட்பமாக எழுதியிருந்ததை பலமுறை வாசித்துத்தான் பொருள் கொள்ள முடிந்தது. உவமைகள் வர்ணனைகள் போன்றவை ஓரிரு சொற்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் சிலமுறை வாசிக்காமல் பிடிகிடைப்பதில்லை. பெண்களின் உள்ளத்துக்குள் சென்று எழுதியதுபோல உள்ளது. இத்தனை உணர்ச்சிபூர்வமாக சமீபத்தில் வாசித்ததில்லை.

சிவராஜ்

அன்புள்ள சிவராஜ்,
இது ராதையின் பிரேமை நிலை. இதற்கும் பெண்களின் உளவியலுக்கும் சம்பந்தம் இல்லை. பெண்கள் இந்தப் பிரேமை நிலையில் எல்லாம் அனேகமாக இருப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் யதார்த்தமானவர்கள். நடைமுறைவாழ்க்கை சார்ந்தவர்கள். உலகியல் உணர்ச்சிகள் மேலோங்கியவர்கள். இதுவே என் அவதானிப்பு.

பெண்கள் எழுதவந்தபோது அவர்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையைச் சார்ந்தே எழுதியிருப்பதைக் காணலாம். உலகமெங்கும் பெண்களின் எழுத்துக்களில் உடல் இடம்பெற்ற அளவு உள்ளம் இடம்பெற்றதில்லை. உலகம் இடம்பெற்ற அளவு ஆன்மிகம் இடம்பெற்றதில்லை.

ஆகவே மிகப்பெரும்பாலான பெண்களால் உண்மையில் ராதை அடையும் இந்த அக எழுச்சியை உணர முடியாது என்பதே என் எண்ணம். இவ்வெழுச்சியையே எளிய காதலாகவோ காமமாகவோ அவர்கள் எண்ணிக்கொள்ளவே வாய்ப்பதிகம். எதற்கும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் எப்போதாவது ஒரு பெண் இந்த மன எழுச்சியின் விளிம்பை அடைந்தால் நம்பமுடியாதவனாகவே இருக்கிறேன்.

ராதை என்ற இந்த நிலை பெரும்பாலும் ஆண்களால் கற்பனை மூலம் உருவாக்கித் திரட்டப்பட்டு நம் பண்பாட்டில் நிறுத்தப்பட்ட ஒரு பெரும்படிமம். அழகு என்ற வடிவில் தன்னை வெளிப்படுத்தும் பரம்பொருள் மேல் ஆன்மா கொள்ளும் பெரும்பித்து இதன் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. பின்னர் யோக குறியீடாக இது மாறியது.

இதை உருவாக்கி வளர்த்தெடுத்தவர்கள் என நாமறியும் பெரும்பாலானவர்கள் ஆண்கள். நம்மாழ்வார், பெரியாழ்வார் முதல் ஜெயதேவர், சைதன்யர், வல்லபர் வரை. நம் காலகட்டத்திலேயே ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் ஆத்மானந்தர் வரை.

எத்தனை ஞானியர்! பிரேமையால் ராமகிருஷ்ணருக்கு முலை எழுந்தது என்கிறார்கள். ஆத்மானந்தர் பெண்ணாகவே வாழ்ந்தார் என்கிறார்கள் அப்பெருநிலை கூடிய பெண்கள் மிகமிகச் சிலரே..விதிவிலக்காகவே இருவர் – ஆண்டாளும் மீராவும்.

ராதை என்னும் இவ்வுருவகம் கொள்ளும் அகப்பொங்குதல் எவ்வகையிலும் உலகம் சார்ந்தது அல்ல. அது அழகின், இனிமையின், முழுமையின் ஒற்றை வடிவு ஒன்றை கண்டு அதே நினைவாக வாழ்வது. அனைத்து உலகியல் தளைகளையும் உதறி அதைநோக்கிச் செல்வது.

அது ஒரு தீராத ஏக்கம், ஒவ்வொரு கணமும் நிறையும் பெரும் கனிவு. அனைத்தையும் சிருஷ்டித்துக்கொள்ளும் கனவு. தன் மதுவை தான் அருந்தி அடையும் நிறைவு.

பெண்களின் உள்ளத்தை அறியவோ சொல்லவோ நீலம் முயலவில்லை. ஆத்மானந்தர் போன்ற ஒரு ஞானியின் பிரேமை நிலையை சற்றேனும் மொழியால் சென்று தொடமுடியுமா, அதை வாசகனில் நிகழ்த்திவிடமுடியுமா என்றுதான் முயல்கிறது.

அதற்காகவே அதன் மொழி பொருள் உடையதாகவும் பொருளற்றதாகவும் மாறுகிறது. ஒத்திசைவுள்ளதாகவும் கலைந்து சிதறுவதாகவும் ஆகிறது. இந்நூலில் சொல்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஒன்றுமே இல்லை. உணர்வதற்கு மட்டுமே உள்ளது.

ஜெ

 

மறுபிரசுரம் /Sep 14, 2014 

வெண்முரசு விவாதங்கள்

அலைகள் என்பவை

ஆத்மானந்தர்

முந்தைய கட்டுரைஆலயம் அமைத்தல்
அடுத்த கட்டுரைபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்