அரங்கு:
வெண்திரைப் பின்னணியும் அமர்வதற்கான ஓரிரு வெண்ணிறத் திண்டுகளும் கொண்ட மேடை. திண்டுகள் நகர்த்தக் கூடியவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும். வேறு எவ்விதமான பின்னணியும் அரங்கப் பொருட்களும் இல்லை.
மேடையில் எப்போதுமிருப்பவர்கள் பத்துப் பின்னணி பொது நடிகர்கள். நடனம் போன்ற அசைவுகள் கொண்டவர்கள். ஒரே போல இறுக்கமான, தனித்தன்மை ஏதும் இல்லாத உடையணிந்தவர்கள் இவர்கள். [தேவையென்றால் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம். ] அரங்கின் அனைத்து தேவைகளையும் இவர்கள் தங்கள் உடல்மூலம் நிரப்ப வேண்டும். போர்களத்துப் பிணங்கள், ஓநாய்கள், புரவிகள், யானைகள், திடீரெனத் தோன்றும் தெய்வங்கள், நினைவுகளில் ஓடும் பிம்பங்கள், கோட்டைச் சுவர்கள் வாசல்கள், அரண்மனைத் தூண்கள் திரைச்சீலைகள் அனைத்துமே இவர்களுடைய அசைவுகள் மூலம் உருவாகி வருபவை. அசைவுகள் நடனத்தன்மை கொண்டவை. இதில் முடிந்தவரை கற்பனைக்கு இடமுண்டு. இவர்களுடைய நிழல்களும் இந்நாடகத்தில் பங்கு வகிக்கலாம். உதிரிக் கதாபாத்திரங்களும் இவர்களே. அக்கதாபாத்திரங்களின் தேவைக்கு ஏற்ப இவர்கள் சில ஆடைகள், அணிகளை பயன்படுத்தலாம். அவற்றை மேடையிலேயே அணிந்துகொண்டு அக்கதாபாத்திரங்களாக மாறியும், கழற்றித் திரும்பிவந்தும், நடிக்கலாம். தெய்வங்கள் மிருகங்கள் போன்றவற்றின் வேடங்களுக்கு மெல்லிய முகமூடிகளையும் இவ்விதம் பயன்படுத்தலாம்.
***
காட்சி துவக்கம்
திரை விலகுவதற்கு முன்னரே உக்கிரமான போர்க்கள ஒலிகள் துவங்கி விடுகின்றன. மரணக் கதறல்கள், குதிரைகளின் கனைப்புகள், ரத சக்கர ஓசைகள், யானைப் பிளிறல்கள், ஆயுதங்களின் உலோக ஒலிகள். ஒலிகள் உச்சத்துக்கு சென்று மெல்ல மெல்ல தணிந்து இரவின் ஒலிகள் ஆக மாறுகின்றன.
கூகைகளும் நரிகளும் ஓநாய் கூட்டங்களும் கழுதைப் புலிகளும் போடும் ஒலிகளின் கலவை பிறகு ஓங்குகிறது. செத்துக் கொண்டிருக்கும் பல்லாயிரம் மனிதர்களின் முனகல்கள், கதறல்கள், மன்றாடல்கள்…
திரை விலகித் தெரிவது குருஷேத்ர ரண களத்தின் ஓர் இரவுக் காட்சி. ஆங்காங்கே தீப்பந்தங்கள் எரிகின்றன. தொலைவில் ஒரு குரல் ‘அம்மா!’ என்று வீரிடுகிறது. ஒரு பிணத்தைக் கடித்துக் கொண்டிருந்த நரி ஒன்று பதறி விலகி, உறுமுகிறது.
அரங்கின் தரையில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு பிணத்தின் கால் மட்டும் மெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது.
கழுதைப்புலி ஒன்று எச்சரிக்கையுடன் முகர்ந்தபடி ஓரத்திலிருந்து வருகிறது. அரங்க ஒளியைக் கண்டு அரண்டு சட்டென்று பின்வாங்கி மீண்டும் மூக்கை நீட்டுகிறது. பதுங்கி முன்னகர்ந்து வந்து முகர்ந்து பார்க்கிறது. காலின் அசைவை கண்டு திடுக்கிட்டு பின்னகர்ந்து ‘ஹிஹ்ஹி ஹிஹி’ என்று ஒலியெழுப்புகிறது. அவ்வொலியை வேறு பல இடங்களில் வேறு கழுதைப்புலிகள் திருப்பி எழுப்புகின்றன. நரி வெருண்டு ‘கீ’ ஒலி எழுப்புகிறது. தலையைத்தாழ்த்தி முனகியபடி பின்வாங்குகிறது.
கழுதைப்புலி அந்த அசையும் காலை பாய்ந்து கவ்வுகிறது. குதறி இழுத்து, வாலாட்டி, துள்ளுகிறது. கடிபட்டவன் வலியில் நினைவு பெற்று அலறுகிறான். சட்டென்று எழுந்து உட்கார்ந்து விடுகிறான். கடும் பயத்தில் உடல் துடிக்க ‘உதவி! உதவி! காப்பாற்றுங்கள்!’ என்று கூவுகிறான். கழுதைப்புலி அவன் கைகளை பாய்ந்து கவ்வுகிறது. இரு உடல்களும் சேர்ந்து துடித்துப் புரள்கின்றன.
கடிபட்டவன் மேலும் கத்துகிறான். ‘காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!’ அவன் கையில் ஒரு வேல் கிடைத்துவிடுகிறது. அதை எடுத்து கழுதைப் புலியை அடித்துத் துரத்துகிறான். அது ‘உய்ய்’ என்று வேதனை ஒலி எழுப்பி விலகுகிறது. வேலை வீசுகிறான். ஊளையிட்டபடி கழுதைப்புலி பாய்ந்து மறைகிறது.
கடிபட்டு காயமடைந்த வீரன் ரத்தம் வழிய எழ முயல்கிறான். அவனுக்கு ஒரு கால் இல்லை. ஒரு கையில் விரல்கள் அறுபட்டு போய்விட்டன. வலியில் முனகியபடி, அவ்வப்போது வாய்விட்டு அரற்றியபடி, எழுந்தும் விழுந்தும், எதிர்த்திசை நோக்கிச் செல்கிறான்.
சட்டென்று அதிர்ந்து நின்று விடுகிறான். அவன் முன் வேறுஒரு கழுதைப் புலி செவிகளை விடைத்தபடி, தலையை மண்ணுக்குத் தாழ்த்தி விரைப்பாக நிற்கிறது. அவன் வீணாக ‘போ, போ’ என்கிறான். பின்னால் திரும்பிப் பார்க்கிறான். அங்கே இன்னொரு கழுதைப் புலி. அதற்கு பின்னால் இன்னொன்று.
அவன் பிரமை பிடித்து உறைந்து நிற்கிறான். அசைவுகளே இல்லாத உக்கிரமான கணங்கள். நீண்டு நீண்டு செல்கின்றன அவை.
ஒரு கணம். மூன்று கழுதைப் புலிகளும் ஒரே அசைவாகப் பாய்ந்து அவன்மீது படிகின்றன. அவனுடைய மரணக்கூச்சல் அரங்கைப் பிளக்கிறது. சதையை பிய்த்துக் குதறி இழுக்கும் மிருகங்களின் உக்கிரமான உறுமல்கள் கூடவே முழங்குகின்றன.
சற்றுத் தள்ளிக் குவிந்த அம்புகள்மீது மல்லாந்து படுத்திருக்கும் வெண்தாடி நீண்ட வயோதிகர் திடுக்கிட்டெழுகிறார். ஒருசில கணங்கள் ஒன்றும் புரியாமல் தடுமாறுகிறார்.
வயோதிகர்: என்ன? (விழித்துக் கொண்டு) கழுதைப்புலிகள்…(தன் உடலில் தைத்திருந்த அம்புகளை பிடுங்கி வீசுகிறார். அவருக்கு குறிதவறுவதில்லை. வள்ள் என்ற ஒலியுடன் ஒரு கழுதைப்புலி விழுந்து துடிதுடித்து மடிகிறது வாயில் ரத்தம் சொட்டும் குடலுடன் இன்னொன்று தலைநிமிர்ந்து பார்க்கிறது. அடுத்த அம்பில் அதுவும் அடிபட்டு விழுந்து பாய்ந்தோடி விழுந்து துடித்து மடிகிறது. மூன்றாவது கழுதைப்புலி தப்பியோடுகிறது. ]
முதியவர்: கொடுமை!
(குடல் சரிந்து தொங்க, ரத்தம் வடியும் உருவமாக அந்த வீரன் எழுந்து அமர்கிறான். )
வீரன்: நன்றி பிதாமகரே. மிகவும் நன்றி. தங்களுக்குத்தான் எத்தனை வீரம், எவ்வளவு கருணை!
முதியவர்: நீ யார்?
வீரன்: ஒரு பிணம். குருஷேத்ரப் போரிலே லட்சோப லட்சம் பேர் மாண்டார்கள். மாளவிருக்கிறார்கள். மிகச் சிலருக்கு மட்டும்தான் பெயர் இருக்கிறது. தங்கள் கருணைக்கு நன்றி. தாங்கள் மகிழலாம். இந்த ரணபூமியில் இப்போது பல்லாயிரம் பிணங்களை நாய்நரிகள் கடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றன. தாங்கள் சற்று சமாளித்துக் கொண்டு எழ முடிந்தால் வெகுதூரம் வரை தங்கள் கருணையின் எல்லையை விரித்துச் செல்ல வாய்ப்பு உள்ளது.
முதியவர்: நீ யார்?
வீரன்: எனக்குப் பெயரில்லை. துரதிர்ஷடவசமாக என்மீது பாய்ந்த அம்புகளிலும் உயர்குல வீரர்களின் பெயர்கள் இல்லை. எனக்கு சரித்திரத்தின் இருண்ட நரகம் காத்திருக்கிறது. சூதர்களின் சொற்கள் அந்த ஆழம்வரை வந்து சேர்வதில்லை.
முதியவர் : யார் நீ? எந்த படை?
வீரன்: உங்கள் உடலில் தைத்திருப்பவை உயர்தர வெள்ளிப்பூச்சுள்ள அம்புகள். செங்கழுகின் இறகு பதிக்கப்பட்டவை. நீங்கள் அரசகுலத்தவர் அல்லவா? உங்கள் தாடியைக் காணும்போது…. பெருமைக்குரியவரான பீஷ்ம பிதாமகர் நீங்கள்தான் என்று எண்ணுகிறேன்…
பீஷ்மர்: ஆம். (வலியுடன் முனகி) உன் பேச்சு என்னை பயமுறுத்துகிறது. (மெதுவாக அசைந்து) யார் நீ?
வீரன்: தெரியவில்லையா? (எழுகிறான்) என்னைத் தெரியவில்லை?
பீஷ்மர்: யார்?
வீரன்: உற்று பாருங்கள். என்னைத் தெரியாதவர்கள் உண்டா என்ன?
(பிணங்கள் மிக மெல்ல நிழல்களுடன் சேர்ந்து எழுகின்றன. அவற்றின் பார்வைகள் வெறித்திருக்கின்றன. )
பிணங்கள்: (சேர்ந்து) தெரியவில்லையா? இவ்வுலகில் எங்களை தெரியாதவர் யார்?
பீஷ்மர்: மரணம்!
(பிணங்கள் மெல்ல கூடி இணைந்து ஒரு வடிவமாகின்றன. கீழே வெறித்த வாயுடன் சிம்மம். அதன்மீது நான்கு முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட தேவதை)
பீஷ்மர்: (உரக்க) மிருத்யூ தேவி! (கைநீட்டி) தாயே என் நேரம் வந்து விட்டதா?
மரணதேவி: இல்லை குழந்தை. உனக்கு இன்னமும் கேள்விகள் மிஞ்சியிருக்கின்றன.
பீஷ்மர்: அம்மா என்னால் தாங்க முடியவில்லை. என் உடம்பெங்கும் கடும்வலி நிரம்பியிருக்கிறது. ஒவ்வொரு அசைவும் வலிக்கிறது. ஒவ்வொரு எண்ணமும் வலிக்கிறது. ஒவ்வொரு கணமும் வலியால் ஆனதாக உள்ளது.
மரணதேவி: வலி என் துணைவி. என் தூது.
பீஷ்மர்: போதும், நான் தயாராக இருக்கிறேன்.
மரணதேவி: நான் காத்திருக்கிறேன். இன்றும் சில நாட்களுக்கு குருஷேத்ரமே என் ஆடரங்கம்.
பீஷ்மர்: அன்னையே உன்னுடைய பசிக்கு எல்லையேயில்லை என்று சாத்திரங்கள் கூறுகின்றன. ஊழித்தீ பட்டபோது பிரம்மனின் நிழல் மண்ணில்விழ அதிலிருந்து பிறந்தவள். சிருஷ்டியைப் போலவே மகத்தானவள். என்றுமே உன்னை நான் வெறுத்ததில்லை. என் தியானத்தில் கண்களை மூடிக்கொள்ளும்போது தெரியும் முதல் தரிசனமே உனது புன்னகைதான். என்றோ நான் என்னை உனக்கு ஒப்படைத்து விட்டேன்.
மரணதேவி: (கலைந்து பெண்ணாகி, மெல்ல அருகே வந்து, பீஷ்மரின் நெற்றியைத் தொட்டு) காத்திரு குழந்தை. நீ என்றுமே என் பிரியத்திற்குரியவன்.
பீஷ்மர்: உன் கரங்கள் குளிர்ந்திருக்கின்றன. மார்கழிக் காலையில் தளிரிலைகள் போல. இன்னும் எத்தனை நாள் நான் காத்திருக்க வேண்டும்?
மரணதேவி: இந்தப் போர் முடிவது வரை. உனது மரணம் தட்சிணாயனம் தாண்டி உத்தராயணத்தில்தான்…
பீஷ்மர்: அதுவரை இந்த வலி…அதைவிட இந்த பிணங்கள் மத்தியில் அரைப்பிணமாக கிடத்தல்…
மரணதேவி: நீ பிறருக்குச் சொல்வதற்கு சில சொற்கள் உள்ளன குழந்தை. அதைச் சொல்வதற்கு முன் நீ இறக்க முடியாது.
பீஷ்மர்: தாயே, நான் எப்போதுமே எவரிடமும் வாதிட்டதில்லை. உபதேசம் செய்ததுமில்லை.
மரணதேவி: (சிரித்து) ஆயுதமே உனது வழி இல்லையா?
பீஷ்மர்: ஆம் நான் ஷத்ரியன்.
மரணதேவி: இக்கணம் வரை நீ அப்படியே உன்னை உணர்ந்திருக்கிறாய். ஏனெனில் உன் உடலின் ஊற்றுக்கள் திறக்கவேயில்லை. உன்னிலிருந்து எதுவும் முளைக்கவில்லை. எனவே நீ உனக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்டாய்.
பீஷ்மர்: (பெருமூச்சுடன்) ஆம்.
மரணதேவி: உன் பொறுப்புகளை முழுக்க நீ உணர வேண்டும். இந்த ரணகளத்தில், தழல்கதிர்கள் போல உன்னை எரிக்கும் அம்புக் படுக்கையில்…
பீஷ்மர்: என் மனம் வெறுமையாக இருக்கிறது தேவி.
மரணதேவி: நேற்றுவரை அதில் நிரம்பிக் கனத்து வழிந்தது உன் தன்னகங்காரம். அது முழுக்க ஒழுகி மறையட்டும். அப்போது உனக்கான சொற்கள் ஊறும். அதைச் சொல்ல உன் உதிரத்தின் மறு நுனியைத் தேடி உன் மனம் பதைக்கும் …
பீஷ்மர்: என் உதிரமா?
(மரணதேவி நகைக்கிறாள்)
பீஷ்மர்: என்ன சொல்கிறாய் தேவி?
மரணதேவி: நீ சொல்ல வேண்டியவற்றையெல்லாம் சொன்னபின் உனக்கும் சில சொல்லப்படும்…
பீஷ்மர்: யார்? என்ன?
மரணதேவி: நான் எப்படி அதைச் சொல்லமுடியும்? (சிரித்தபடி) ஆனால் எனக்கு எல்லாமே தெரியும். எல்லாவற்றையும் முடித்து வைப்பவள் நான். முடிவில்தான் எல்லா அர்த்தங்களும் உருவாகின்றன.
பீஷ்மர்: எனக்குத் தெரியும் அது யாரென. அவன் அருகே செல்லும் போதெல்லாம் என் ஆத்மா இனிய நறுமணமொன்றை உணந்தது. தாயருகே செல்லும் குழந்தை போல் ஒரு குதூகலத்தை அது உணர்ந்தது. அவன்தான். அவன்தானே?
மரணதேவி: நான் எப்படிச் சொல்ல முடியும்? இருவேறு அரங்குகளுக்கு நடுவே தொங்கவிடப்பட்ட கரியதிரை என்பார்கள் என்னை.
பீஷ்மர்: ஆம், அவன்தான். அவன் வேடம் போடுகிறான். விளையாடுகிறான். இங்கே காமகுரோத மோகம் கொண்டு ரத்தம் சிந்தும் லட்சோப லட்சம் எளிய ஆத்மாக்களைக் கண்டு சிரிக்கிறான். தர்மத்தையும் அதர்மத்தையும் இரு சக்கரங்களாகக் கொண்டு ஓட்டும் சாரதி…அவன்தான். நான் நன்றாகவே அறிவேன்…
மரணதேவி: பதற்றம் கொள்ளாதே…காத்திரு.
பீஷ்மர்: ஆ! எத்தனை எளிய உண்மை. எத்தனை பக்கத்தில் அது இருந்திருக்கிறது அகங்காரத்தின் மெல்லிய திரைக்கு அப்பால்…
(பயங்கரமான ஊளைகள். கழுதைப்புலி குரைப்புகள். மரணதேவி சிதைந்து மறைந்து பிணங்களாகிறாள். )
பீஷ்மர்: (பெருமூச்சுடன் வானத்தைப் பார்க்கிறார்) எத்தனை கோடி விண்மீன்கள். முடிவற்ற விழியசைவுகள். அவை மூதாதையர் பார்வைகள் என்பார்கள். இமைகள் துடிதுடிக்க அவர்கள் குனிந்து எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். (காற்று ஒன்று மெல்லிய ஒலியுடன் கடந்து செல்கிறது) அவர்களுடைய பெருமூச்சுகள் போல இளம் காற்றுக்கள். என்ன நினைக்கிறார்கள் அவர்கள்? முடிவற்ற காலத்தில் நின்றபடி பார்க்கும்போது இந்த மரணவெளி அவர்களுக்கு எப்படிப் பொருள்படுகிறது? காமம் குரோதம் மோகம். அர்த்தமில்லாத வேகங்கள். ஆம், ரத்தம் உடலில் இருந்து வழிய வழிய அனைத்துமே அர்த்தமிழக்க ஆரம்பிக்கின்றன. எல்லாம் வெறும் ரத்தம்தான். இந்தக் குருஷேத்ர பூமியில் இப்போது எவ்வளவு ரத்தம் கொட்டிப் பெருகி உலந்து கொண்டிருக்கிறது. உடல்களிலிருந்தபோது அது உணர்ச்சி வேகங்களாக இருந்தது. ஆசை வெறியாகவும், தீராத குரோத வெம்மையாகவும், முடிவேயற்ற தர்க்க நியாயங்களாகவும், நுரைத்துச் சுழித்தது. மனிதர்கள் சிறிது ரத்தத்தை அவ்வப்போது இழப்பது மிகவும் நல்லது. அவர்களுக்குள் குமுறும் அழுத்தம் சற்று குறையும்.
(வெகுதூரத்தில் ஒரு குரல் ‘யார்?’ ‘யார்?’ பின்பு அலறல். ‘நீயா?’ பிறகு விம்மி அழும் ஓசை. அடங்கிய குரலில் அவன் கூவுகிறான் ‘தாயே! நீ தானா? சீக்கிரம் வா.’ ஒரே மெல்லிய பெண்குரல் சிரிப்பு. பிறகு அமைதி. ஒரு நரி ஊளையிடுகிறது. )
பீஷ்மர்: மரணம். எவ்வளவு இனிமையானது. பாலைவனத்துக் கோடையில் மழை பொழிவதுபோல அவளுடைய குளிர்ந்த வருகை. அம்மா! (வலியுடன்) அம்மா!
(மயங்குகிறார். தூரத்தில் காலடியோசைகள். பேச்சுக் குரல்கள். நரிகள் பயந்து போய் குழறும் ஒலிகள்)
பீஷ்மர்: யார்?
(பந்தங்கள் ஒளிர நிழல்கள் ஆட மூவர் வருகின்றனர். உடலில் விழுப்புண்களுடன் வெற்றுத் தோள்களுடன் துரியோதனன். அவனுக்குப் பின்னால் துச்சாதனன். சற்று தயங்கியவனாக கர்ணன்)
துரியோதனன்: தாத்தா வணங்குகிறேன்.
பீஷ்மர்: புகழும் மகத்துவமும் உன்னை அடைவதாக!
துரியோதனன்: வலி நிரம்ப உள்ளதா?
பீஷ்மர்: ஆம். அதற்கென்ன? ஷத்ரியனுக்கு வலி விதிக்கப்பட்டுள்ளதுதானே?
துரியோதனன்: (கோபத்துடன்) அந்த நபும்சகனை நீங்கள் கொன்று வீழ்த்தியிருக்க வேண்டும் தாத்தா. வெல்ல முடியாத உங்களை அந்த மனிதப்பிண்டத்தைக் காட்டி வென்று விட்டார்கள் பேடிகள்.
பீஷ்மர்: நான் வீரர்களுடனே பொருத விரும்புகிறேன்.
துரியோதனன்: மூடத்தனம். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னியுங்கள். உங்களைக் கொல்ல வந்தவன் அவன். ஒரே அம்பில் அவனை நீங்கள் வீழ்த்தியிருக்க முடியும்…
பீஷ்மர்: அவன் கொன்ற இழிவு என் பெயருடன் சேர்ந்து சூதர் நாவில் வளரும்…
துரியோதனன்: சூதர்கள். யார் இவர்கள்? நாணயங்களை விட்டெறிந்தால் பரியை நரி என்று பாடும் பதர்கள். ஷத்ரியன் வாழ்வதே சூதர்களால் பாடப்படுவதற்குத்தானா?
பீஷ்மர்: இல்லை. ஆனால் ஷத்ரியனுக்கு மறு பிறப்பு உள்ளது. சூதர் நாக்கு மூலம் அவன் மீண்டும் பிறக்கிறான், பிறகு இறப்பதேயில்லை. எனக்கு இந்தச் சிறிய வாழ்வைவிட அந்தப் பெரிய வாழ்வே முக்கியமானது.
துரியோதனன்: வெற்றிதான் பாடல் பெறும்.
பீஷ்மர்: இல்லை குழந்தை. எப்போதுமே மகத்தான தோல்விகள்தான் பாடல் பெறுகின்றன.
துரியோதனன்: ஏளனத்துடன் அதற்காக நான் தோற்க வேண்டும் என்பீர்களா?
பீஷ்மர்: விதியின் முன் தோற்பது மட்டுமே மகத்தான தோல்வியாக இருக்க முடியும்.
கர்ணன்: இது கோழைகளின் சித்தாந்தம்பீஷ்மர்: நான் ஷத்ரியர்களுடன் மட்டுமே பேச விரும்புகிறேன்.
கர்ணன்: உங்கள் கணிப்பில் ஷத்ரியன் மீது மீன்வாடை அடிக்குமோ? இல்லை கங்கைக் கரைகளின் சேற்று வாடை?
பீஷ்மர்: (சிரித்து) நீ இதை முன்பு சொல்லியிருந்தால் உனக்கு என் அம்புகளால் பதில் கூறியிருப்பேன். மூடா. எல்லா ஷத்ரிய குலங்களும் சேற்றில், நீரில் முளைப்பவையே. வெற்றி மூலம் ஷத்ரியன் பிறக்கிறான்.
கர்ணன்: என் வெற்றிகளை நீர் காண்பீர்.
பீஷ்மர்: இதுவரை நீ கண்ட வெற்றிகள் என்ன? தானமாக கிடைத்த அங்க நாடு. சுயம்வரமின்றி கிடைத்த மனைவி. நட்பு நாட்டின் ராணுவத்தில் தலைமைப் பதவி.
கர்ணன்: (கடும் கோபத்துடன் வில்லை எடுத்து) பீஷ்மரே
பீஷ்மர்: என் உடலில் தேவையான அளவுக்கு அம்புகள் இப்போதே உள்ளன, தேரோட்டி மகனே.
கர்ணன்: உங்கள் வறண்ட அகங்காரம் உங்களை வீழ்த்தியது. இந்த அம்புத்தழல் மீது நீங்கள் காத்திருப்பது என் வெற்றிகளை காணத்தான். குருஷேத்திரத்தில் பாண்டவர் தலைகள் உதிரும்போது பொறுக்கி எடுத்து கொண்டுவந்து உங்களுக்குக் காட்டுகிறேன்.
பீஷ்மர்: (பெருமூச்சுடன் கண்களை மூடி) ஒரு போதும் அப்படிச் செய்யும் துரதிருஷ்டம் உனக்கு வாய்க்காமலிருக்கட்டும்…
கர்ணன்: (நிலை குலைந்து போய்) என்ன சொல்கிறீர்கள் பிதாமகரே?
(பீஷ்மர் பதில் கூறவில்லை)
துரியோதனன்: [வியப்புடன் ] நீ அவரை பிதாமகர் என்று முதல் முறையாக கூறுகிறாய் கர்ணா.
கர்ணன்: ஆம் எனக்கும்தான் அது ஆச்சரியமாக உள்ளது.
துரியோதனன்: பிதாமகரே நாளைய போரில் துரோணர் தலைமை தாங்குகிறார். என் வெற்றிக்கு உங்கள் ஆசி தேவை.
பீஷ்மர்: உனக்கு என் ஆசி எப்போதுமே உண்டு.
துரியோதனன்: நீங்கள் என்னை வெற்றியடைய வாழ்த்தவில்லை.
பீஷ்மர்: அப்படி எவரால் வாழ்த்த முடியும்? வெற்றி தோல்விகள் ஒரு பெரும் பகடையாட்டத்தின் அன்றாட நிகழ்வுகள் மட்டுமே.
துரியோதனன்: இப்படி நீங்கள் ஒருபோதும் பேசியதில்லை.
பீஷ்மர்: ஆம். ரத்தம் குறைகிறதல்லவா?
துரியோதனன்: எங்களை வாழ்த்துங்கள் மீண்டும்
பீஷ்மர்: என் வாழ்த்துகள் (கண்களை மூடியபடியே) ரத்தம்… ரத்தம்… என்னிடமிருந்து விலகி ஓடுகிறது… விசித்திரமான மனப்பிரமைகள்.
(ஒளியும் ஒலியும் மெல்ல மாறுபடுகின்றன. துரியோதனனும் கர்ணனும் விசித்திரமான இளிப்புடன் கண்களை விழித்தபடி சுற்றி வருகிறார்கள்)
துரியோதனன்: (இளித்தபடி) பிதாமகரே உங்கள் உடலை நான் உண்ண விரும்புகிறேன். திடம் கொண்ட அந்த புஜங்கள் எத்தனை ருசியாக இருக்கும்.
கர்ணன்: வில்லாளியின் விரல்கள் எனக்கு…
துச்சாதனன்: இதயம் எனக்கு
(ஓநாய்கள் போல உறுமியபடி அவர்கள் அவரை உண்ணுகிறார்கள். கடித்து கிழித்து இழுத்து, சண்டையிட்டு)
பீஷ்மர்: ஆ!
துரியோதனன்: (ஒளி ஒலி அறுபட, சாதாரணமாக நின்று) என்ன ஆயிற்று பிதாமகரே!
பீஷ்மர்: தாகம்…
துச்சாதனன்: சற்று மது அருந்துகிறீர்களா?
பீஷ்மர்: வேண்டாம். எனக்கு ஏற்கனவே போதை.
துரியோதனன்: தண்ணீர்?
பீஷ்மர்: இல்லை. இது நீருக்கான தாகம் அல்ல. (கண்களை மூடிக் கொள்கிறார்)
கர்ணன்: சித்தம் கலங்கிவிட்டிருக்கிறது.
துரியோதனன்: (வியப்புடன்) எத்தனை அம்புகள் ! ஆனாலும் மரணம் வரவில்லை.
கர்ணன்: மரணத்திற்கு எதிர்திசையில் ஓடும் ஏதோ ஒரு பெருவல்லமை அவருள் உள்ளது.
(சற்று நேரம் நின்றுவிட்டு திரும்பிச் செல்கிறார்கள்)
(தனிமையில் பீஷ்மர் கிடக்கிறார். கீழிருந்து ஒரு பிணம் மெல்ல எழுந்து சங்கு சக்கர கதாதாரியாக மாறுகிறது. எட்டு கரங்கள். முகத்தில் சுடரும் ஒளி. பின்னணியில் மெல்லிய ஆனால் ஓங்கிய குரலில் கீதை. “சர்வ தர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ!”]
பீஷ்மர்: மகாபிரபு! (எழ முயல்கிறார். முடியவில்லை. ஏதோ இழுத்துக் கட்டியிருப்பதுபோல தவிக்கிறார் ) விடுங்கள்! விடுங்கள் என்னை!
விஷ்ணு: (சிரித்தபடி) உன்னால் முடியாது. (பேரொலியுடன்) மரணத்திற்கு எதிர்திசையில் ஓடும் ஏதோ ஒரு பெருவல்லமை உனக்குள் உள்ளது.
(ஒளி அணைகிறது. விஷ்ணு தனி உடல்களாக பிரிந்து பிணங்களாக தரையில் பரவுகிறார்)
பீஷ்மர்: (விழித்துக் கொண்டு) மாற்றமே இல்லாத இரவு. காலம் நகர்கிறதா? (நட்சத்திரங்களைப் பார்த்து) விண்மீன்கள் இடம் மாறியுள்ளன. மிகுந்த விசையுடன் இம்மியிம்மியாக காலத்தை நகர்த்துகின்றன இவ்விண்மீன்கள். இன்னும் எத்தனை நேரம்! எத்தனை நாள்! (வலியுடன்) அம்மா…!
(மீண்டும் மயங்குகிறார். தரையிலிருந்து உருவங்கள் எழுகின்றன. துள்ளிக் குதித்து மழலை பேசும் சிறு குழந்தைகள். சிரித்து கூவி ஆர்ப்பரித்து விளையாடுகின்றன. )
ஒரு குழந்தை: (ஓடி வந்து பீஷ்மரின் காலை பிடித்து மூச்சு வாங்க சிரித்தபடி) அப்பா இவன் என்னை பிடிக்க வருகிறான். போடா.
இன்னொரு குழந்தை: இல்லை அப்பா இவள்தான். நீ அப்பா காலை விடு. தூங்குகிறார் தெரியவில்லை.
முதல் குழந்தை: போடா காட்டுப் பன்றி
இரண்டாம் குழந்தை: நீ போடி வீட்டுஎலி.
முதல் குழந்தை: அப்பா பாருங்கள் அப்பா (காலை உலுக்குகிறது)
பீஷ்மர்: என்ன இது! என்ன இங்கே?
முதல் குழந்தை: அப்பா இவன் என்னை வீட்டு எலி என்று சொல்கிறான். அப்பாவிடம் சொல்வேன் என்றால் போடி என்கிறான். போடி என்று சொல்லலாமா? கெட்ட வார்த்தை தானே?
இரண்டாம் குழந்தை: இல்லை அப்பா இவள்தான்…(வேகமாக) பொய் சொல்கிறாள் அப்பா. பொய் பொய் களவாணி. பொய் சொல்கிற களவாணி.
பீஷ்மர்: சரி சரி சண்டை போட வேண்டாம். இரண்டுபேருமே நல்லவர்கள்தான்.
முதல் குழந்தை: எனக்கு நீங்கள் முத்தம் கொடுப்பீர்களா?
பீஷ்மர்: இங்கே வா (கட்டிப்பிடித்து) உம்ம போதுமா?
முதல் குழந்தை: இந்த முத்தம் இவ்வளவுதான் இனிப்பு. இன்னும் பெரிய முத்தம் வேண்டும்.
இரண்டாம் குழந்தை: அப்பா எனக்கு முத்தம்…
பீஷ்மர்: இங்கே வா. நீயும் பெரிய வீரன்தான். அப்பாவின் செல்லங்கள் தானே?
முதல் குழந்தை: அப்பா நான் இனிமேல் கொஞ்சம்தான் இனிப்பு சாப்பிடுவேன். திரைச்சீலையை கிழிக்க மாட்டேன் (யோசித்து) பாலை கொட்டவும் மாட்டேன்.
பீஷ்மர்: மற்றவர்கள் எங்கே?
முதல் குழந்தை: நீச்சலடிக்கிறார்கள்.
பீஷ்மர்: (பயந்து) நீச்சலா எங்கே?
முதல் குழந்தை: அங்கே ஒரு சிவப்பான ஆறு ஓடுகிறது அப்பா. தண்ணீர் சூடாக இருக்கிறது. அதில் எல்லாரும் குதித்து நீச்சல் போடுகிறார்கள்.
இரண்டாம் குழந்தை: அண்ணா சொல்கிறான். அந்த ஆறு அம்மாவிடம்தான் போகிறது என்று. அதில் மிதந்து போனால் அம்மாவிடம் போகலாமாம்.
முதல் குழந்தை: அப்பா நான் அம்மாவிடம் போகிறேனே?
பீஷ்மர்: அம்மாவா? என்ன இதெல்லாம்? நீங்களெல்லாம் யார்?
(விழிக்கிறார். யாருமில்லை. பிணங்கள். ஒரே ஒரு கழுதைப்புலி மென்று கொண்டிருக்கிறது.)
பீஷ்மர்: யார்? என்ன இதெல்லாம்?
கழுதைப்புலி: (மென்றபடி) மரணத்திற்கு முந்தைய பிரமைகள்.
பீஷ்மர்: (தலையை உலுக்கியபடி) எனக்கு மனம் கலங்கிவிட்டதா? மயங்கிவிட்டேனா?
(கழுதைப்புலி உறுமியபடி தலைதூக்கிக் காதுகளை விடைக்கிறது)
பீஷ்மர்: இந்த பிரமைகள் எல்லாம் இதுவரை எங்கிருந்தன? எனக்குள்தானே? ஆனால் நான் இவற்றை காணவில்லை. தர்க்கத்தின் திரை மறைத்திருந்தது. ரத்தம் மறைத்திருந்தது. விசித்திரமான பிம்பங்கள்.
ஒரு பிணம்: (எழுந்து பீஷ்மரை உற்று பார்த்து) மரணம் என்பது அதுதான் உத்தமரே, அப்பிரமைகளிலிருந்து நம்மை பிரித்துப் பார்க்க முடியாமல் ஆவது.
இன்னொரு பிணம்: (எழுந்து உற்று பார்த்து) அத்துடன் நாம் வேறு பலரின் பிரமைகளுடன் கலந்து விடுகிறோம்.
மூன்றாவது பிணம்: பிரமைகளின் அலைகடலில் மிதந்தபடி அசைவற்ற கரையாக வாழ்க்கையை பார்க்கிறோம்.
நான்காவது பிணம்: ஆனால் கரை ஒரு விபரீதப் பிரமை போலிருக்கிறது.
ஐந்தாவது பிணம்: அதில் வாழும் மனிதர்கள் வெறும் நிழல்கள்.
(பிணங்கள் உணர்ச்சி ஏதுமின்றி சரிகின்றன. அமைதி. பீஷ்மர் முனகியபடி படுத்திருக்கிறார்)
கழுதைப்புலி: (மெல்ல முன்னகர்ந்து) நம்பாதீர்கள். மரணத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும். நான் மரணத்தையே தின்று வாழ்பவன். மரணம் என்பது குளிர்ந்த சதை. ருசியான மென்மையான சதை. கடிக்க முடியாத எலும்பு. நல்ல மணம் மிக்க ஏப்பம். அவ்வளவுதான் (யோசித்து ஒருமுறை சுற்றி வந்து) இல்லை. பின்பு நிலவு நோக்கி அமர்ந்து நான் எழுப்பும் ஊளைதான் மரணம் என்பது (குழம்பி, இருமுறை சொறிந்துகொண்டு) அதுவும் சரியல்ல. ஊளையிட்டு முடித்தபின் எனக்கு ஏற்படும் ஏக்கம் நிரம்பிய வெறுமைதான் மரணமா? புரியவில்லை. (கோப வெறிகொண்டு முன்கால்களால் தரையைப் பிராண்டி) தெரியவில்லை [கனைக்கிறது]
பீஷ்மர் : இந்த இரவு! ஏதாவது ஒருபக்கத்தில் இது விடிந்தால் போதும். இருள் மிகப் பயங்கரமான ஒன்று அம்மா!
[தொலைவில் குழந்தைகள் சிரித்துக் குதூகலிக்கின்றன]
பீஷ்மர்: என்ன ஒலி அது? விசித்திரமான பிரமைதான். குழந்தைகள் [முகம் மலர்ந்து] எங்கிருந்து வந்தன அவை? அவற்றின் தாய்…
(சற்று தொலைவில் ஒரு குரல் ‘அவள் பெயர் உனக்குத் தெரியாதா என்ன?’)
பீஷ்மர்: யாரது?
குரல்: (நெருங்கி வந்து) நான்தான். என்னைத்தான் நீ உன் வாழ்நாளில் அதிகமாக உற்று பார்த்திருக்கிறாய்.
பீஷ்மர்: அறிமுகமான குரல்…
(ஒரு பிணம் மெல்ல எழுகிறது சட்டென்று அதன் முகம் ஒளி பெறுகிறது. அதன் நெற்றியில் ஒளிரும் ஒரு பொட்டு)
பீஷ்மர்: நீ யார்?
எழுந்த பிணம்: என் பெயர் சரபிந்து. அம்புப் பயிற்சியின்போது குறி வைக்கப்படும் மையப் புள்ளிக்குரிய தேவதை நான். அம்புகள் தைக்கும் எல்லா உதிரத்திலும் ஒரு துளி எனக்கு அவிஸாக கிடைக்கும். உன் அம்புகளை நான் விரும்பினேன். ஏனெனில் அவை அனேகமாகக் குறி தவறுவதில்லை.
பீஷ்மர்: நான் உன்னை கேள்விப்பட்டதேயில்லை.
சரபிந்து: தேவதைகளுக்கு முடிவேயில்லை. மனிதர்களின் செயல்களிலிருந்து அவர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்.
பீஷ்மர்: நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். அக்கேள்விகளுக்கு நீ ஏன் பதில் சொல்கிறாய்?
சரபிந்து: ஏனென்றால் உன் எல்லா இலக்குகளுக்கும் நான் பிரதிநிதியாக இருந்திருக்கிறேன். உன் அம்புமுனையின் வேகத்திலும் கூர்மையிலும் ஒரு பகுதியை அவர்களுக்கு கொண்டு சென்றிருக்கிறேன். உன் எல்லா நண்பர்களையும் பகைவர்களையும் நான் அறிவேன்.
பீஷ்மர்: நண்பர்களையுமா?
சரபிந்து: (சிரித்தபடி) நண்பர்களுக்கென சில ரகசிய அம்புகளை வைத்திருக்காத அம்புறாத் தூளி எங்குள்ளது?
பீஷ்மர்: அப்படியானால் சொல், இந்தக் குழந்தைகள் யாருடையவை?
சரபிந்து: அவை அம்பையில் உனக்கு பிறந்திருக்கக் கூடியவை.
பீஷ்மர்: (திடுக்கிட்டு) இல்லை. இது அவதூறு. நீ என்னை அவமதிக்க எண்ணுகிறாய்.
சரபிந்து: (பொருட்படுத்தாமல்) உனக்கும் அம்பைக்கும் இடையிலான ஒரு மெளன வெளியில் அவை வளர்ச்சியே இன்றி வாழ்கின்றன. உங்களில் ஒருவர் இருக்கும்வரை அவை இருக்கும்.
பீஷ்மர்: பொய். பொய் சொல்லாதே
சரபிந்து: இதோ பார். இந்த நுண்வெளியில் உன் உதிரம் ஒரு நதியாக ஓடுகிறது. அது போகுமிடம் எது தெரிகிறதா?
பீஷ்மர்: (சட்டென்று தளர்ந்து) ஆம்.
சரபிந்து: ஆனால் அது அம்பையை அடையப் போவதில்லை. அவளைச் சுற்றி அவளால் உருவாக்கப்பட்ட நெருப்பு வளையம் உள்ளது. பாலை நிலத்தில் புகுந்த நதிபோல உன் இச்சை வீணாகி மடியும்.
பீஷ்மர்: அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
சரபிந்து: அம்பையின் கடனை மீட்டாமல் நீ சாக முடியுமா?
பீஷ்மர்: நான் உத்தராயணத்திற்காக காத்திருக்கிறேன். அவ்வளவுதான்.
சரபிந்து: (சிரித்து) சரி (எழுகிறது)
பீஷ்மர்: இரு. (தணிந்த குரலில்) நீ சொன்னதற்கு என்ன பொருள்?
சரபிந்து: அம்பையின் கோபம் உன்னை சாகவிடாது. அவள் அமைதி அடைந்தாக வேண்டும்.
பீஷ்மர்: எப்படி?
சரபிந்து: அதற்காகத்தான் நீ காத்திருக்கிறாய். உன் மரணமும் உன்னருகே பொறுமையிழந்து நின்று கொண்டிருக்கிறது…
பீஷ்மர்: அம்பை!(வலியுடன் முனகியபடி) ஒவ்வொருமுறை உச்சரிக்கும்போதும் எரியம்பு போல வந்து தைக்கும் வார்த்தை.
சரபிந்து: அறுபத்தெட்டு வருடங்களாக அவளுடைய பிரதிநிதியாக நான் உன்முன் இருந்திருக்கிறேன். எத்தனை ஆயிரம் அம்புகள். (சிரித்து) அம்பைக்கான உன் அம்புகள் எப்போதும் குறி தவறுவதில்லை.
பீஷ்மர் (அதை கவனிக்காமல்) அம்பை!
(சரபிந்து சரிந்து வடிவிழக்கிறது)
பீஷ்மர்: அம்பை!
(ஊளைகள், பலவிதமான கள ஒலிகள். அப்பால் வெகுதொலைவில் ஒரு சிரிப்பொலி. இளமை நிரம்பிய பெண்குரல்)
பீஷ்மர்: அம்பை!
(தலைவிரிக்கோலமாக ஒரு பெண் நிழல் அரங்கை கடந்து செல்கிறது)
பீஷ்மர்: (துடிதுடித்து எழுந்து விழுந்து வலியுடன் அலறுகிறார்) அம்பை!
(நிழல்கள் எழுகின்றன. அரங்கு முழுக்க அவை அலை மோதுகின்றன. பலவிதமான ஒலிகள் நகரம் ஒன்றின் சதுக்கம் போல தேர் ஓடும் ஒலிகளும் குதிரை கனைப்புகளும் மணியோசைகளும் கலந்த ஒலி)
பீஷ்மர்: காசிநாட்டரசனின் கோட்டை முகப்பல்லவா அது. ஆனால் அது அங்கே இருண்ட இறந்த காலத்தில்…
(கரிய முக்காடிட்ட ஒரு நிழல் நெருங்கி வருகிறது. குனிந்து அவர் முகத்தை உற்று பார்க்கிறது.)
பீஷ்மர் என்ன குளிர்! யார் நீ? ஏனிப்படி குளிர்ந்திருக்கிறாய்?
நிழல்: நான் நிழல். உன் நிழல்தான்.
பீஷ்மர்: ஆம். என்னைப் போலவே இருக்கிறாய். (சிரித்து) சீக்கிரமே நீயும் இவ்வுலகிலிருந்து விடைபெற்று செல்லவிருக்கிறாய்.
நிழல்: (சிரித்து) ஆம். கணை சென்று தைக்குமிடத்தையே அதன் நிழலும் சென்று தைக்கிறது.
பீஷ்மர்: எத்தனை காலம் எத்தனை தூரம் நாம் சேர்ந்தே தாண்டி வந்திருகிறோம் இல்லையா?
நிழல்: நீ ஏங்கியதை கேட்டேன். உனக்கு மீண்டும் அவ்விடங்களில் போக விருப்பமா?
பீஷ்மர்: விளையாடாதே?
நிழல்: என்ன விளையாட்டு? நம்மால் செய்யக் கூடாதது என ஏதுமில்லை. நாம் நம்பாததை செய்ய முடியாது. அவ்வளவுதான்.
பீஷ்மர்: நான் அம்பையை பார்க்க விரும்புகிறேன்.
நிழல்: ஏன் பார்க்க முடியாது? பார்க்கலாம்.
பீஷ்மர்: எப்படி?அவள்தான் இறந்துவிட்டாளே.
நிழல்: ஆம். அப்படியென்றால் நீ வாழும் காலத்திலும் இடத்திலும் அவள் இல்லை என்று பொருள். உனக்குத் தெரியுமா, பரு வெளியானது உத்தரீயப்பட்டை மடிப்புகள் போல மடிக்கப்பட்டிருக்கிறது. உன் காலமும் இடமும் ஒரு மடிப்புதான் அதில்.
பீஷ்மர்: அவள் இருக்கிறாளா எங்கே?
நிழல்: ஒரு வேளை மிக அருகே. ஒருவேளை இதே இடத்திலேயே.
பீஷ்மர்: என் மனதில் பித்தேறுகிறது…
நிழல்: புகையிருக்கும் பாண்டத்தில் நீரும் புக முடியும். நீரும் புகையுமறியாமல் அதற்குள் வாசனை குடியிருக்க முடியும். அதற்குள் ஒளி புகுந்தால் எதுவுமே இடம் பெயர்வதில்லை. வேறுவேறு இடங்களையே அவை எடுத்துக் கொள்கின்றன. முடிவற்ற இடங்களின் அடுக்குகளையே நாம் வெளி என்கிறோம்.
பீஷ்மர்: நான் அங்கு நுழைய முடியுமா? அவளைப் பார்க்க முடியுமா? (உடைந்த குரலில்) ஒரு கணம் ஒரே ஒரு கணம்?
நிழல்: எதற்கு?
பீஷ்மர்: அவளிடம் நான் சொல்ல வேண்டிய ஒரு வரி. சொல்ல விட்டுப்போய்விட்டது. இத்தனை வருடங்களில் பல்லாயிரம் சொற்களாக மாபெரும் காவியங்களைவிட பெரிதாக அந்த வரி மாறிவிட்டது. மீண்டும் அவளை நான் சந்தித்தால் என்னை முன்பு தடுத்த அத்தனை மாயத்திரைகளையும் கிழித்து வீசுவேன். அவள் முன் என்னைத் திறந்து வைத்து, இல்லை, அந்த ஒரே ஒரு வரி போதும்… அதை மட்டும் சொல்லிவிட்டால்…(வெட்கி, திணறி அமைதியாகிறார்.)
நிழல்: இந்த உடலுடன் நீ அங்கே புக முடியாது. ஒன்று செய்யலாம். நீ நுண் வடிவில் அங்கு செல்லலாம்.
பீஷ்மர்: எப்படி?
நிழல்: நீ உன் ஆத்மாவை எனக்குகொடு. நான் என் உடலை உனக்குத் தருகிறேன். ஆனால் நீ இங்கு திரும்பிவிட வேண்டும்.
பீஷ்மர்: ஒரு சில நாழிகைகள்…
நிழல்: (சிரித்து) நாம் நமது காலக்கணக்கைப் போடுகிறோம். நிமிடங்கள், நாழிகைகள், நாட்கள், யுகங்கள். நீ திரும்பி வர எண்ணினால் போதும். எழுந்து வா.
(பீஷ்மர் எழுந்து கொள்ள நிழல் அவர் இடத்தில் படுக்கிறது.)
பீஷ்மர்: இது வேறு இடம். வேறு வாசனைகள். இங்கு நான் எதையோ விபரீதமாக வித்தியாசமாக உணர்கிறேன். (சுற்றி வந்து) ம் ஒவ்வொரு கணமும் கூடவேயிருக்கும் கால உணர்வு இங்கே இல்லை. எத்தனை கனமற்றிக்கிறது என் பிரக்ஞை! எத்தனை இலகுவாக இயங்குகின்றன என் எண்ணங்கள். காலம் என்பது நம் பிரக்ஞைமீது மாட்டப்பட்ட இரும்புக் கவசமா என்ன? விடுதலையுணர்வு. ஆனால் விடுதலையுடன் இணைந்திருக்கும் அந்த பதற்றம் சற்றும் இல்லை!
(அவரெதிரே ஒரு கோட்டை வாசல். மக்கள் புழங்கும் ஒலி. ஒரு ரதம் தடதடத்து உள்ளே போகிறது. இருவர் பேசியபடி வருகிறார்கள்.)
ஒருவர்: அப்படியென்றால் எதற்கு சுயம்வரம்? மன்னர் சால்வரை அழைத்து சம்பிரதாய மணமே பேச வேண்டியதுதானே?
மற்றவன்: மற்ற மன்னர்கள் விடுவிடுவார்களா? காசி மன்னர் மூன்று பெண்களுக்கும் ஒரே கணவர் என்பதில் தெளிவாக இருக்கிறார். பாரத வர்ஷத்தில் இன்று யார் காசி மன்னன் மகள்களை மணக்கிறார்கள் என்பதே பெரிய கேள்வி. அவன்தான் அடுத்த சக்ரவர்த்தி.
முதல்வன்: விசித்திர வீரியர் வருவாரோ?
இரண்டாமவன்: யார், அஸ்தினபுரி மன்னரா? அவனால் எழுந்து நடமாடவே முடியாது.
முதல்வன்: ஆனால் பீஷ்மர்…
இரண்டாமவன்: அவர் நித்திய பிரம்மசாரி.
முதல்வன்: இங்குதான் போர் மூள வாய்ப்பிருக்கிறது. யார் காசி மன்னன் மகள்களை மணக்கிறானோ அவனுக்கும் பீஷ்மரின் படைகளுக்கும் இடையே.
இரண்டாமன்: ஆம். சால்வர் என்ன செய்வார்…
பீஷ்மர்: ஆ! (வியப்புடன்) அதே இடம். அதே ஒளி நிழல்கள். அதே மனிதர்கள். அதே காட்சிகள். நான் என்ன செய்வது சற்று முன்னகர்ந்தால் அங்கு சென்றுவிட முடியும். (தாடியைத் தடவி) ஆனால் இந்த முதிய உடல்….
(ஒரு நிழல் முன்னகர்கிறது)
நிழல்: தோற்றம் என்பது ஓர் ஆடைதானே?
இன்னொரு நிழல்: உத்தமரே தங்கள் புது ஆடைகள் இதோ
பீஷ்மர்: ஆம். அதே உடைகள்தான் இவை. அதே செம்பட்டு உத்தரியம். (உடைமாற்றுகிறார்)
நிழல்: உத்தமரே தங்கள் நகைகள்
பீஷ்மர்: அதே செம்பவள ஆரம். நான் நாற்பது வருடம் கழித்து வேகவதியில் தொலைத்தது. (அணிகிறார்)
நிழல்: உத்தமரே தங்கள் ரதம்…
(குதிரைகள் குளம்புதைத்து திமில் உதறி வந்து நிற்க ரதம் ஒசையிடுகிறது)
பீஷ்மர்: மீண்டும் இளமை! (தாடியை களைகிறார். தலை மயிரையும். கரிய தலை மயிர். இளமை நிரம்பிய தோற்றம்)
(உள்ளே பெருமுரசங்கள் ஆர்ப்பரிக்கின்றன)
பீஷ்மர்: சுயம்வர மேடை தயாராகிவிட்டது. (வில்லை சுண்டி நாணோசை எழுப்புகிறார்) காசிராஜன் மகள்கள் அஸ்தினபுரிக்கு மட்டுமே சொந்தம். ஏனெனில் பாரத வர்ஷத்தில் மீண்டும் ஒரு பெரும் போர் நடக்கலாகாது…(சேணத்தைச் சுண்டுகிறார் தடதடத்து கோட்டை வாசலுக்குள் புகுந்து கொள்கிறது ரதம். உள்ளே மீண்டும் முரசொலி. சங்கும் கொம்பும் மணியோசையும் எழுகின்றன. இருபாதசாரிகள் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.)
ஒருவர்: யார் அவர் பீஷ்மரா?
பிறிதொருவர்: சுயம்வரத்துக்கா? நடுவயதில் இப்படி ஒரு ஆசையா? அவரது பிரம்மசரிய விரதம் என்னவாயிற்று?
(எட்டுக்கரங்கள் கொண்ட ஒரு தேவன் புரவி மீதேறி விரைகிறான். )
முதல் மனிதர்: இது போருக்குரிய தேவன் அல்லவா? களப்பலிகளை அவிஸாக உண்பவன்.
(நான்கு கரங்களுடன் இன்னொரு தேவதை புரவி மீதேறி உள்ளே விரைகிறது.)
இரண்டாமவர்: இவள் கண்ணீரின் தேவி. போர்த் தேவனின் மனைவி இவள். கணவனை எப்போதும் பின்தொடரும் பத்தினி.
முதல்வர்: என்ன நடக்கப்போகிறது.
இரண்டாமவர்: போர், அழிவு, வெறென்ன?
(கோட்டைச்சுவர், மனிதர்கள் எல்லாம் கலைகின்றன. ஆள் கூட்டமாக மாறுகின்றன. நடனம், பாட்டு, ஜனநெரிசல். ‘விலகு! விலகு!’ ஒலிகள். இரு சூதர்கள் பாடுகிறார்கள்)
பாடல்: (உரை போன்றது)
சூதர்களே
காசி மன்னன் குலத்தைப் பாடுவோம்!
கால பைரவன் அருள்
அவன் மடியில் மூன்று தேவதைகளாக மலர்ந்தது
சக்தி ரூபமானவள் அம்பை
செல்வமோ அம்பிகை
கல்வியின் வடிவே அம்பாலிகை
முப்பெருந்தேவியர் அருள்க!
முழு முதலோன் அருள்க!
முக்கண் தேவன் அருள்மழை பொழிக!
(நெரிசல், கூக்குரல்கள், அனைவரும் அங்குமிங்கும் அலைமோதி சுழல்கிறார்கள். மணியோசை. பெருமுரசும் முழவும் அதிர்கின்றன. கூட்டம் மெல்ல நிதானமடைகிறது. உருமாறி அரண்மனை வாசல் கதவாகவும், சுயம்வர மண்டபத்து தூண்களாகவும், கவரி வீசும் சேடியராகவும் மாறுகிறது. நடுவே சுயம்வரத்துக்கு வந்த மன்னர்கள் சிலர் நிற்கிறார்கள். பெரிய பட்டுத் தலைப்பாகையும் கோலும் ஏந்திய நிமித்திகன் அரங்கு நடுவே வருகிறான்.)
நிமித்திகன்: ஜய விஜயீபவ!
(அரங்குக்கு வெளியே வாழ்த்தொலிகள் முழங்குகின்றன)
நிமித்திகன்: இன்று சுக்ல பஞ்சமி. மகாமங்கல நாள். பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் இந்நாள் ஒரு பொன்னாள் என்று குறிக்கப்படும். ஏனெனில் கங்கையின் முடிவற்ற கருணையால் அமுதூட்டப்பட்ட காசி நாட்டின் அதிபர் தோல்வியறியா பெருங்குலத்து முதல்வர் மாமன்னர்.. பீமசேனரின் புதல்விகள் அம்பைதேவி, அம்பாலிகா தேவி, அம்பிகா தேவி ஆகியோரின் சுயம்வர நாள் என இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாரத நாட்டின் அத்தனை ஷத்ரிய குலங்களிலிருந்தும் இங்கே வீரர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களை காசிநாட்டு செங்கோல் பணிந்து வரவேற்கிறது.
(முரசொலி: வாழ்த்துக் கூக்குரல்கள்)
நிமித்திகன்: இதோ காசிமன்னர், பரம் பொருளின் பாதவடிவான காலபைரவன் குலத்துதித்த வீரர், வெற்றியே வடிவானவர் எழுந்தருள்கிறார்.
(காவலர் பணிந்து வழிவிட காசிமன்னன் பட்டு பீதாம்பரங்களும் பொற்கிரீடமும் அணிந்தவனாக இரு மெய்க்காவல் வீரர் புடைசூழ வருகிறான். மன்னர்கள் வணங்கி வரவேற்கிறார்கள்.)
காசிமன்னன் (அரியாசனத்திலிமர்ந்து) இங்கு என் அழைப்பை ஏற்று வந்துள்ள பாரத வர்ஷத்தின் மாமன்னர்களை வரவேற்று தலை வணங்குகிறேன். வெற்றி, செல்வம், புகழ் ஆகியவற்றின் மெய்வடிவங்களான என் புதல்வியர் இன்று எவரை வரிக்கிறார்களோ அவனை பாரத வர்ஷமே தன் சக்கரவர்த்தி என ஏற்கிறது என்று பொருள்.
(வாழ்த்தொலிகள்)
அமாத்யரே சுயம்வரம் துவங்குவதாக!
நிமித்திகன்: இதோ பொற்கணம் இதழ்விரிக்கிறது. இளவரசியர் வருகிறார்கள்.
(மேடைக்கு அப்பால் வரும் இளவரசிகளைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. மன்னர்கள் பரபரப்படைகின்றனர்.)
நிமித்திகன்: பெரிய இளவரசி அம்பை எவரை ஏற்கிறார்களோ அவரே மூவர்க்கும் மாலையிடுவார்.
(தொலைவில் மங்கல ஒசைகள். இளவரசிக்கு மன்னர்களை அறிமுகம் செய்து கோல்காரன் கூவும் புகழொலிகள்)
கோல்காரன்:(தொலைவில்) இவர் அங்க மன்னர் அஜயபாகு. பத்தாயிரம் யானைகளும் பத்தாயிரம் குதிரைகளுமடங்கிய மாபெரும் படையின் அதிபர். ஏழுபோர்களில் வெற்றி பெற்று தென்கங்கை பிராந்தியத்தை ஆள்பவர்.
(அரங்கில் பரபரப்பு. அனைவரும் அதே திசையைப் பார்க்கிறார்கள்.)
ஒரு மன்னன்: வானில் விடுக்கப்பட்ட செய்திப் புறா போல இளவரசி தன் இலக்கு நோக்கியே வருகிறார்கள்.
இன்னொரு மன்னர்: பெண் மனம் தாமரையிலை நீர் போல சஞ்சலம் மிக்கது. அது புறாவா இல்லை வண்ணத்துப் பூச்சியா என இறைவன்கூட கூறமுடியாது.
தொலைவில் கோல்காரன்: இவர் வங்க மன்னர் மகாபலன். இவருடைய வலிமை படகுகளில் உள்ளது. கங்கையையே தன் பாய்களால் மூடிவிடுமளவு படகுகளுக்கு உரிமையாளர். இவரது துறைமுகத்தில் திறைப்பணம் மரக்கால்களால் அள்ளப்படுகிறது என்பர் சூதர்.
ஒரு மன்னர்: இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் நடையில் போர்க்குதிரையின் நிமிர்வும் மிடுக்கும் உள்ளது.
இன்னொருவர்: எழுந்து படபடக்கும் தீத்தழல் போலிருக்கிறாள். அந்தப்புரத்துக்குள் அடைபடும் பெண்ணல்ல இவள்.
முதல் மன்னர்: அக்கினி ஆக்கவும் அழிக்கவும் செய்யும்.
இரண்டாமவர்: இவள் அழகு அச்சம் தருகிறது. இவளை அடைபவன் இக்கணமே பலநூறு எதிரிகளை அடைந்துவிட்டான். (கோல்காரனின் குரல் நெருங்கி வந்து அரங்குக்கு வெகு அருகே கேட்கிறது. வாழ்த்தொலிகள்)
கோல்காரன்: இவர் காந்தாரத்து மன்னர் சுமித்ரர். வல்லமை மிக்க ரதங்கள் கொண்ட மாபெரும் படையின் அதிபர். உயர்ந்த சிவந்த மலைகளால் காவல் காக்கப்பட்ட நாட்டின் தலைவர்.
(வாழ்த்தொலிகள் எழ அம்பை கோல்காரன் துணைவர கையில் மாலையுடன் அரங்கில் பிரவேசிக்கிறாள்)
மன்னன் ஒருவன்: காட்டை உண்டு முன்னேறும் நெருப்பு…
இரண்டாம் மன்னன்: அவள் சால்வனையே நெருங்குகிறாள்.
முதல் மன்னன்: வறியவனின் மண்சட்டியில் வான் கங்கை இறங்குவது போல.
(வெளியே குரல்கள். ‘சால்வ மன்னர்.’ ‘ சால்வரை!’ என்று ஆர்ப்பரிக்கின்றன. அரங்கில் அமைதி, துடிப்பு. அம்பை மாலையுடன் சால்வனை நெருங்குகிறாள்)
கோல்காரன்: இவர் சால்வர். செளபால நாட்டின் அதிபர். இந்த பாரத வர்ஷத்திலேயே வைடூரியங்கள் கிடைக்கும் ஒரே நாடு இதுதான். நமது நாட்டின் நட்பு நாடாக செளபாலம் இருந்து வருகிறது.
(வெளியே கூக்குரல்கள். உலோகக் கதவுகள் பேரோசையுடன் பிளக்க வீரர்களை உதறித் தள்ளிவிட்டு கையில் வில்லுடன் பீஷ்மர் நுழைகிறார்.)
குரல்கள்: பீஷ்மர்! பீஷ்மர்!
காசிமன்னன்: பீஷ்மரே தாங்கள்…
பீஷ்மர்: காசி மன்னரே உன் பெண்களை நான் இராட்சத மணமுறைப்படி கவர்ந்து செல்லவிருக்கிறேன். (அம்பு அம்பையின் கையிலிருந்த மாலையை விழச் செய்கிறது.)
காசிமன்னன்: என்ன? (பாய்ந்தெழுந்து) யாரங்கே…
பீஷ்மர்: யாராக இருந்தாலும் என் வில்லுக்குப் பதில் சொல்லுங்கள்.
நிமித்திகன்: பீஷ்மரே தாங்கள் சுயம்வரத்தில் கலந்து கொண்டு…
பீஷ்மர்: விலகி நில் (நானோசை எழுப்புகிறார்) இந்த அரங்கிலிருந்து இளவரசிகளை நான் கவர்ந்து செல்லவிருக்கிறேன் தடுக்க எண்ணும் யார் வேண்டுமானால் என்னிடம் போட்டியிடலாம்.
சால்வன்: பீஷ்மரே வலிமை எப்பொழுமே வெல்வதில்லை. தர்மம் என்று ஒன்று உள்ளது.
பீஷ்மர்: இராட்சதமும க்ஷத்ரியனுக்கு தர்மம் தான்.
சால்வன்: (வில்லை நாணிழுத்தபடி) நில்லுங்கள். (பீஷ்மரும் சால்வனும் போர் புரிகிறார்கள். வெளியே மக்களின் கூக்குரல்கள். யுதங்களின் உலோக ஒலிகள்)
சால்வன்: என்னுடன் இணைந்து கொள்ளுங்கள் மன்னர்களே.
ஒரு மன்னன்: இது உனது போர் சால்வா. நாங்கள் எப்படியும் இளவரசியரை இழந்தாயிற்று.
(சால்வன் அம்பு பட்டு அலறி வீழ்கிறான். அவனது வீரர்களும் விழுகிறார்கள்.)
அம்பை: (கதறியபடி சால்வனை நோக்கி ஓடுகிறாள்) அநீதி!… இதை தடுக்க யாருமில்லையா?.
(பீஷ்மரின் அம்பு அவள் தலையை தாக்குகிறது. கூர்மையற்ற அம்பு. அவள் மயங்கி சரிகிறாள். அவளை அள்ளியபடி பீஷ்மர் மறுபக்கமாக விரைகிறார்.)
மன்னன் ஒருவன்: ஒருவகையில் இதுதான் சரியான முடிவு. இளவரசியர் இருக்க வேண்டிய இடம் அஸ்தினபுரிதான்.
(அமாத்யன் ஒருவன் ஓடிவந்தபடியே கூவுகிறான்.)
அமாத்யன்: பீஷ்மர் இளவரசியர் மூவரையும் ரதத்தில் ஏற்றிச் செல்கிறார். சால்வனின் படைகள் அவரை தொடர்கின்றன. போர் ரதவீதியெங்கும் நிகழ்கிறது.
(இன்னொரு வீரன் ஓடி வருகிறான்.)
வீரன்: போர். செளபாலனின் படைகள் தெருக்களெங்கும் பிணங்களாக சிதறிக் கிடக்கிறார்கள்.
(இன்னொரு வீரன் ஓடி வருகிறான்.)
வீரன் 2: அரசே நமது கோட்டை முகப்பு வரை பிணங்கள். உதிர்ந்த பழங்கள் போல.
காசி மன்னன்: (பெரு மூச்சுடன்) தண்ணீர் வலிமையில்லாத கரையையே உடைக்கிறது. வரலாறு தன் திசையை அறியும் போலும்.
(எழுந்து தளர்ந்த நடையுடன் உள்ளே செல்கிறான். மன்னர்கள் கலைந்து குழப்பமாக பேசியபடி வெளியேறுகிறார்கள். சால்வனை அவன் வீரர்கள் தாக்கிச் செல்கிறார்கள். வெளியே பெரும் கூக்குரல்கள் அழுகையொலிகள். சாபங்கள்.)
வீரன் ஒருவன்: இனி காசி நாடு அஸ்தினபுரியின் நட்பு நாடு இல்லையா?
இன்னொரு வீரன்: இங்கு நடந்தது மணம் அல்ல. ஓர் அரசியல் ஒப்பந்தம் தான்.
(அரங்கில் ஒளி மாறுபடுகிறது. அனைவரும் கலைந்து மறு வடிவம் கொள்ள அது அஸ்தினபுரியின் அரச சபையாகிறது.)
நிமித்திகன்: அஸ்தினபுரியின் அதிபர், குரு வம்சத்து வழித் தோன்றல், பாரத வர்ஷத்தின் சக்கரவர்த்தி விசித்ர வீரியர் வருகை!
வாழ்த்துக்கள்: ஜய விஜயீபவ.
(விசித்திர வீரியன் தளர்ந்த கூனல் நடையுடன் வருகிறான். அனைவரும் வணங்குகிறார்கள்.)
விசித்திர வீரியர்: (மூச்சிளைத்தபடி) தமையனார் பீஷ்மர் கிளம்பி விட்டாரா?
அமாத்யர்: வந்து கொண்டிருக்கிறார் பிரபு.
(வெளியே வாழ்த்தொலிகள். பீஷ்மர் நுழைகிறார்.)
விசித்திர வீரியர்: வருக தங்களை எதிர்நோக்கியிருக்கிறோம்.
பீஷ்மர்: அமர்க. (அமர்ந்து) என்ன அமாத்யரே மகாமங்கல நாள் குறித்தாகி விட்டதா?
அமாத்யர்: நிகழ் குறியும் செல் குறியும் தேர்ந்த போது நிமித்திகர்களில் சிலர்…
பீஷ்மர்: (பொறுமையிழந்து) என்ன சொன்னார்கள்?
நிமித்திகர்: பிரபு, மன்னிக்க வேண்டும்.
பீஷ்மர்: அவர்கள் சொன்னதைச் சொல்.
நிமித்திகர்: கனல்துண்டை கம்பளத்தால் மூடி வைப்பது போல குறிகளுக்குள் ஏதோ ஒன்று மறைந்துள்ளது – இதுதான் அவர்கள் கூறியது.
விசித்திர வீரியர்: அண்ணா அது என்ன… எனக்கு குழப்பமாக உள்ளது.
பீஷ்மர்: (ஏளனமாக) அச்சம் என்பதை நீ குழப்பம் என்று சொல்வாய், போதும்.
(ஒரு வீரன் உள்ளே வந்து தங்குகிறான்)
பீஷ்மர்: என்ன?
வீரன்: இளவரசி…
பீஷ்மர்: யார்?
வீரன்: காசி நாட்டு இளவரசி அம்பா தேவியார்
பீஷ்மர்: அவளுக்கென்ன?
வீரன்: தங்களைக் காண வந்துள்ளார்
பீஷ்மர்: (கோபத்துடன்) இங்கா? இங்கு அது மரபல்ல.
(அம்பை உள்ளே வருகிறார்)
அம்பை: நான் இன்னும் இங்குள்ளவள் ஆகவில்லை.
பீஷ்மர்: (கோபத்துடன்) அதைத் தீர்மானிப்பது நீ அல்ல.
அம்பை: இந்த உடலில் உயிர் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று நான் தீர்மானிக்க முடியும்.
விசித்திர வீரியர்: என்ன சொல்ல விரும்புகிறீர்கள் இளவரசி.
அம்பை: நான் மனதால் செளபால நாட்டு மன்னர் சால்வனை வரித்து விட்டேன். அவரையன்றி எவரும் என்னை தீண்ட அனுமதிக்க மாட்டேன்.
பீஷ்மர்: (கடும் கோபத்துடன்) என்ன? (எழுந்து) என்ன பேச்சு இது?
அம்பை: பேசாமல் இருந்துவிட்டால் சரியாகி விடுமா?
பீஷ்மர்: நீ க்ஷத்ரியப் பெண்ணுக்குரிய நெறியை பின்பற்ற வேண்டும்.
அம்பை: சதுரங்கத்தில் காய். படுக்கையில் பொம்மை. வீரர்களைப் பெறும் வயிறு. இறுதியில் விதவை என்று ஏதாவது ஒரு வேடம் இல்லையா?
பீஷ்மர்: (வாயடைந்து போய்) உன் குரலில் விஷம் இருக்கிறது.
அம்பை: பாதாளத்தின் விஷம் அழுதுதான்.
நிமித்திகர்: தேவி தங்கள் கூற்று முறையல்ல.
அம்பை: இராக்கதத்தை முறை என ஒப்புக் கொள்பவை உங்கள் சாத்திரங்கள்.
பீஷ்மர்: (தன்னை திரட்டிக் கொண்டு) உனக்கு என்ன தேவை?
அம்பை: விடுதலை.
பீஷ்மர்: (சிரித்து) எதிலிருந்து?
அம்பை: உங்களிடமிருந்து.
பீஷ்மர்: எந்தச் சரடு உன்னை கட்டியிருக்கிறதோ அதன் மறுபக்கமே என்னை கட்டியிருக்கிறது.
அம்பை: எனக்கு அலங்காரப் பேச்சு தேவை இல்லை. எனக்கு என் காதலரிடம் போக அனுமதி தேவை. உங்கள் யுத்தம் என்னை தடுக்கக் கூடாது.
பீஷ்மர்: நீ ஏற்கனவே கிளம்பி விட்டாய் நான் உன்னை தடுக்கவில்லை. ஆனால் நீ இன்னமும் சிறு பெண். இந்த ஆட்டத்தின் போக்கு உனக்குப் புரியவில்லை. நீ…(தயங்கி) நீ போகலாம்…உனக்கு நன்மைகள் வருவதாக.
(அம்பை எதுவுமே பேசாமல் திரும்பி செல்கிறாள். )
[மேலும்]