இனிய ஜெயம்,
வென்முரசை எப்போதுதான் வாசிப்பது? விழித்ததும் முதல் வேலையாக வாசித்தால் அதற்குமேல் வேலையே துவங்க தேரை தலையால் முட்டி நிலை கிளப்புவதுபோல மனதை உந்த வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறேன். இரவில் வாசித்தால் தூங்காமலேயே கனவுக்குள் விழுந்து விடுகிறேன்.
தன்னளவில் உங்களது மகாபாரதம். தனிப்பட்ட முறையில் எனக்கு மிக மிக அந்தரங்கமானது. ஆகவே அதன் மீதான சிறு விமர்சனமும் என்னை சங்கடப் படுத்துகிறது. திறமான வாசக விமர்சனத்துக்கு உரியதே எந்த இலக்கியப் படைப்பும், என்றாலும் எனது இந்த மனச் சாய்வின் காரணமாக, பெரும்பாலும் நண்பர்கள் மத்தியில் கூட நான் வெண்முரசு குறித்து குறைவாகவே உரையாடுகிறேன்.
வெளியில் எது என்னவானால் என்ன இது என் வெண் முரசு. எனக்கே எனக்கானது.
மதுரை கோவிலில் உங்களைக் கண்டதும் மனதில் ஓடிய முதல் சொல் நீலம் . ‘நீலம் கருமைக்குள் ஒளி பரவும் வண்ணம் அது’ அதைத் தொடர்ந்தே உங்களை நீலம் துவங்கி விட்டீர்களா? என்று வினவினேன். ஒரு சிறிய துவக்க இடறிலிருந்து மீண்டு சில மணி நேரங்கள் முன்புதான் நீலத்தை நீங்கள் துவங்கியது அறிந்து ஆச்சர்யம் அடைந்தேன். டெலிபதி.
நீலம் துவங்கிய விதம் குறித்த நீங்கள் சொன்ன உங்கள் ‘படைப்பு மன’ சங்கடம் அதன் பிறகான உத்வேக துவக்கம் இவைகள் குறித்து நீங்கள் எழுத வேண்டும். பொதுவாக இத்தகைய உத்வேக துவக்கம் அடுத்த அடுத்த அத்யாயங்களுக்கான சவாலை இன்னும் உயர்த்தி விடும். நீங்கள் ஜெயம் அல்லவா அத்தனை பந்துகளையும் சிக்ஸர் விளாசி தள்ளுகிறீர்கள்.
உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உயிந்திடும் ஒரு பொருள் நீ, எனும் வாக்கியத்தில் உயர்ந்து பறக்கத் துவங்கிய மொழி, இன்றைய அதுவாதல் அத்யாயத்தில் சிகரமுனை எட்டி விட்டது.
நீலம் எனும் நீள் கவிதையில் எந்த வாக்கியத்தை சொல்ல? எதை விட? நதியோர மரத்தின் வேர் அறியும் குளிர்மை, அகத்தில் பரவுகிறது. முத்தி முத்தி மொட்டைத் திறக்கும் வண்டாய் வாக்கியங்கள். புறங்கையில் அமரும் வண்ணத்துப் பூச்சியின் கால்கள் நம் சருமத்தைப் பற்றுகையில் எப்படி இருக்குமோ, ஒவ்வொரு சொல்லும் அகம் தீண்டுகையில் அப்படி இருக்கிறது.
நீலம் கதைக்குள் கண்ணனின் ஒவ்வொரு லீலையும், பூதகி துவங்கி, காளிங்கநர்த்தனம் தொடர்ந்து, உருளும் தேர்ச் சகடம் வரை, அனைத்தும் நேரடி விவரணையாக இல்லாமல் இன்னொரு கதை சொல்லியின் மொழிதலாக விரிவது, அழகு.
தன்னளவில் வென்முரசின் ஒவ்வொரு நாவலும் வடிவத்திலும் தரிசனத்திலும் முழுமையான தனி ஆக்கம்தான் எனினும், எனக்கு அவையெல்லாம் ஒரே தொடர்தான். தர்மன் துவங்கி கிருஷ்ணன் வரை வெண் முரசு நெடுக எத்தனை வண்ண பேதம் கூடிய பிறப்புகள். தீர்க்க சியாமர் துவங்கி பூதனை வரை எத்தனை வகை பேதம் கூடிய மரணங்கள்.
தீர்க்க சியாமரின் சிதயூட்டலில் நானே உடனிருந்ததுபோல ஒரு உணர்வு. மரக்கிளையின் பறவை ஓசை துவங்கி, நெருப்பு பற்றி சடசடக்கும் சிதை வரை காட்சியை அடுக்கிய விதம் அத்தனை உயிரோட்டம். நெய் வழியும் திசையெலாம் பரவிப் பற்றும் நெருப்பு மனதை விட்டு அகலாத காட்சிப் படிமம்.
தீர்க்க சியாமரின் கரத்தில் கட்டை விரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடைபட்ட தசைப் பரப்பு கிழிக்கப் பட்டிருக்கும். அவர் காம விலக்க நோன்பு கொண்டவர் கூட. [உங்கள் உரையாடல் ஒன்றினில் சில பாடகர்கள் குரலின் கார்வைக்காக சுயமாக விதை நீக்கம் செய்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டீர்கள். அதையும் என் மனம் இதனுடன் இணைத்துக் கொண்டது] அவர் சொல்கிறார் அவரது சிதைத் தீயில் அவரது யாழையும் சேர்த்து விடுமாறு. தந்திகளின் முறுக்கை தளர்த்தி விட்டு. என்ன ஒரு வாழ்க்கை ஆயுள் முழுதும் முறுக்கிய தந்தியாய்…
சிறைக்குள் வசுதேவரின் வெறி நடனம் வரவேற்க பிறக்கிறான் கண்ணன். பாசுரங்களின் அம்புலிப் பருவம், சப்பாணிப் பருவம் போல பெயர் சூடும் பருவம், பீலி சூடும் பருவம், வேய்ங் குழல் தேறும் பருவம் என வளர்கிறான் கண்ணன்.
ராதை. அவளுக்கும் கண்ணனுக்குமான வயது பேதம், ராதை திருமணம் ஆனவள் எனும் நிலை இவை எல்லாம் எனக்கு முற்றிலும் புதிய தகவல்.
ராதை ராதை முத்தங்களால் மட்டுமே அறிய முடிந்தவள். கேசாதி பாதம் முத்தமிடும் இதழ்களுக்கும் பல்லாண்டு.
யசோதை சொன்ன ஒரு சொல்லுக்கு அதற்காகவே காத்திருந்தவள் போல உரையாடலின் அடுத்த வார்த்தயிலேயே ராதை மாமி என்று யசோதையை விளிக்கும் கட்டம். அற்ப்புதமான தருணம்.
எத்தனை விதமான தாய்மை. கண்ணனை கொஞ்சியபடியே யசோதை தனது மகளை நினைக்கும் தருணம். மரணிக்கையில் அதன் இறுதிச் சொல் அம்மா என்றிருக்குமா எனும் அவளது ஏக்கம், இது துயரத் துலாபாரத்தின் ஒரு தட்டு எனக் கொண்டால், சிறையில் அத்தனை மகவையும் இழக்கும் கண்ணனின் தாயின் துயர் மறு தட்டு. தாளாத பாரம் ஏந்தி தாழ்ந்தே இருக்கும் தட்டு.
துரியோதனனுக்காக சுரக்கும் ஸ்தனங்களுக்கும், கண்ணனுக்காக சுரக்கும் ஸ்தனங்களுக்கும் இடையில் தான் எந்தனை பண்பு பேதம். இடது மார்பகத்தை கண்ணனின் இதழ்களுக்கு கொடுத்து விட்டு, அமுதம் பொங்கும் வலது மார்ப்பகத்தை யசோதை பற்றிப்பொத்திக் கொள்ளுகையில், என்னுள்ளே எங்கோ கர்ணனுக்கான அமுதத்தை இருளுக்கு வார்க்கும் குந்தியின் முகம் எழுந்து வந்து, துக்கம் கண்களை நிறைத்தது.
உள்ளே கொதிக்கும் உணர்வை இத்தனை துல்லியமாக எப்படி உங்களால் இன்னொரு அகத்துக்கு கடத்த முடிகிறது. கர்ணன் அனுபவிக்கும் அவமானத்தின் வெம்மை அதை உடலால் உணர முடிகிறதே எப்படி? இந்த மாயத்தின் உச்சம் நீலத்தின் முதல் அத்யாயம்.
எரோட்டிக் எனும் ஆங்கில வார்த்தைக்கு பதிலாக உன்மத்தம் எனும் வார்த்தயை பயன் படுத்தினால் உன்மத்தம் கிளர்த்தும் அத்யாயம்.
இங்கே ஒன்றை சொல்ல வேண்டும் அப்பட்டமாக பாலியலை எழுதிய எழுத்தாளர்கள், பெண் உடலின் விடுதலையை எழுதிய கவிதாயினிக்கள் எந்தளவு கூருணர்வும் மெல்லுணர்வும் அற்றவர்கள் என்பதற்கு இந்த முதல் அத்யாத்தின் உன்னத தருணமே சாட்சி.
பழம் உண்ணும் பறவையை ‘நோக்கும்’ பறவையால் மட்டுமே காண முடிந்த நிலை.
நாவால் தீண்ட பொற்குவை ஆவுடை மேல் எழுந்தன இரு இளநீல சிவக் குறிகள்.
கை நிறைக்கும் ஸ்தனங்களின் முதல் ஸ்பரிசத்தை அடைந்த எவரும் அறிவர், சுண்டு விரல் நுனி போல உள்ளங்கைத் தீண்டும் முலை மொட்டின் எழுச்சியை.
உலை பானையின் கொதிப்பை சுட்டும் வெளிப்புற நீராவித்துளிகள் போன்றது இன் நிலை.
நானறிந்த வரை என் மெய் தீண்டிய இன் நிலையை தமிழ் இலக்கியத்தில் வர்ணித்த ஒரே ஆளுமை நீங்கள்தான்.
கோபியர்களின் நீர்த்துகில் போர்த்திய போன்னுடல்களை கைதொடாமல் தழுவி, இதழ் படாமல் முத்தி சுழலும் குழலிசை.
ராதையின் ஊடலை கரைத்தழித்து, கல்லையும் கனியச் செய்யும் குழலிசை.
புன்னகை ஒளி ஏந்தி கண்ணீர் எரியும் விழிகளுடன் ஓடிவரும் ராதை கண்ணனாக்கும்
குழலிசை .
இவ்விரவு இனி நிகழாது. ஷியாம் ஷியாம் ராதேஷியாம்.
கடலூர் சீனு