அன்புள்ள ஜெயமோகன்,
இன்று கொற்றவை படித்து முடித்தேன். கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆனது. எனக்கும் எங்கள் குல தெய்வத்திற்குமான உறவை உறுதி செய்தது.
அத்வைதி என்றோ, வைதீகன் என்றோ, நாத்திகன், பக்தன் என்றோ அடையாளம் இல்லாத ஆள் நான். குல தெய்வத்தை என் சகோதரியாக பாவிப்பது எனக்கு வசதி. கொற்றவையின் கடைசி அத்தியாத்தில், நீங்கள் அதே பொருள் பட எழுதியிருப்பது எனக்காக எழுதியதைப்போல இருந்தது.
உங்களை சந்திக்க விரும்பியதுண்டு. சென்ற நவம்பர் டிசம்பரில் நீங்கள் திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக வந்தபோது சந்திக்க நினைத்தேன். அலுவலகப் பணியினால் சந்திக்க முடியவில்லை.
எழுத்தாளர்களை சந்தித்தல் ஒரு சங்கடமான விஷயமாகவே இருந்து வந்துள்ளது. திருச்சியில், பள்ளியில் படிக்கும் போது சுஜாதாவை சந்திக்கும் வாய்ப்பு இருந்தும் செல்லவில்லை. சில வருடங்களுக்கு முன் விமான நிலையத்தில் ஜெயகாந்தனைப் பார்த்தும் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒதுங்கி இருந்தேன். அவரிடம் பேசுவது அவர் privacyயில் யில் குறுக்கிடுவதாகத் தோன்றியது. அவரை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு அவருக்குத் தரவேண்டிய மரியாதையைதரவில்லையோ என்ற குற்ற உணர்வும் .இருந்தது.
உங்களை சந்திக்க நேர்ந்தால், பல நாட்கள் பழகிய நண்பரை சந்திப்பது போலத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் வாசகர்களை அந்தரங்கமாக அறிந்திருப்பது உங்கள் உண்மையாக இருக்கலாம். உங்கள் எழுத்துக்கள் மூலம் நாங்கள் உங்களையும் அறிந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.
வாய்ப்பிருந்தால் நேரில் சந்திப்போம்.
அன்புடன்
ஸ்ரீதர்
அன்புள்ள ஸ்ரீதர்
இந்த விஷயத்தை தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ளலாம்
கொற்றவை அல்லது நீலம் எழுதும் நான் ஓர் உச்சகட்ட மனஎழுச்சியுடன் இருக்கிறேன். அந்தப்புள்ளியில் என்னை சந்திக்கும் நீங்களும் அதே மன எழுச்சியை அடைகிறீர்கள். இருபறவைகள் வானில் சந்திக்கின்றன.
ஆனால் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்திக்கும் நீங்கள் உலகியலின் தளத்தில் என்னை காண்கிறீர்கள். எல்லா சந்திப்புகளும் ‘மரியாதை நிமித்த’ மானவை. சம்பிரதாயங்கள் கொண்டவை. உபச்சாரங்கள் சொல்லப்படுபவை. நிலத்தில் நடக்கும் பறவைகள் தத்தித் தத்தி தான் நடந்தாகவேண்டும்
பெரும்பாலான சந்திப்புகளில் முகம் அறிமுகமாகிறது. அந்தச் சந்திப்பு நிகழ்ந்த சூழல் அந்தச் சந்திப்பின் மனநிலையைத் தீர்மானிக்கிறது. தனிப்பட்ட உரையாடல்கள் மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன
ஆனாலும் நான் ஒன்றை உணர்ந்திருக்கிறேன், எந்நிலையிலும் முகம் முக்கியமானதே. நாம் அப்போது ஒரு சாதகமனநிலையில் இருந்தால் நம் அகம் கவனித்தால் முகம் எத்தனையோ விஷயங்களைச் சொல்லிவிடுகிறது.
ஆனால் சில தருணங்கள் நிகழலாம். சில மின்னல்கள் நிகழலாம். அதுவே சந்திப்பின் லாபம் என்றால், அப்படித்தான் அது என அறிந்திருந்தால் பிரச்சினை இல்லை
சந்திப்போம்
ஜெ