பகுதி ஆறு: 3. வான்சூழ் சிறுமலர்
ஆயரே, தோழர்களே, கன்று அறியும் நிலமெல்லாம் நன்று அறிந்துளேன். காளை அறியா வாழ்வேதும் இன்றும் அறிந்திலேன். எளியோன், ஆயர்குடிபிறந்தோன். பாலும் நறுநெய்யும் கன்றோட்டும் கோலும் வனக்குடிலும் என வாழ்வமைந்தோன். கலம்நிறைந்த புதுப்பால்போல் குலமகளை மணம் கொண்டேன். சிறுகுடியில் நலம் சூழ்ந்து ஒருமகவை பெற்றேன். நன்று சூழ்க! என் மடியமைந்த சிறுமைந்தன் என்னை மன்னவர் கோல்துணைக்கும் மணிமுடியை சூடவைத்தான். அரியணையில் அமர்ந்த அரசனென்றே உணரச் செய்தான். ஏழ்கடலும் அலையடிக்கும் இருநிலத்தை ஆளவைத்தான். விண்ணவரும் வந்து மலர்பொழிந்து வாழ்த்தவைத்தான். மண்ணவரில் முதல்வனென்றே என்னை இருத்திவைத்தான்.
அதிகாலை அவன் காலெடுத்து கண்ணிலொற்றி விழித்தெழுந்தால் விடியலெல்லாம் புதுப்பொன்னொளி கொள்வதை கண்டேன். அவன் உள்ளங்கால் மலரில் உதடுகுவித்து முத்துகையில் என் கள்ளமெல்லாம் உருகி கண்ணீராய் வழிவதை அறிந்தேன். அன்னைப்பால் மணக்க அவளுடலின் ஒருதுளிபோல் அவன் துயிலக்கண்டு அகம்பொங்கி குரல்விழுங்கி நான் நின்ற அந்த முதல்நாளை நினைவுறுகிறேன். அன்றென் நெஞ்சத்திரையின் நுனிபற்றி எழுந்த நெருப்புத் துளியல்லவா? இன்றென் சிந்தைவெளியெங்கும் கிளைசெழித்து நின்றாடும் செந்தழல்வனமல்லவா? எரிமேல் கூளமென சொல்மேல் சொல்லிட்டு அவனைச் சொல்ல முயன்று எஞ்சிய சாம்பல் துளியெடுத்து நெற்றியில் பொட்டிட்டு நின்றிருக்கும் எளியோன். கண்ணனென்ற ஒருசொல்லே என்னை கடைத்தேற வைக்குமென்று அறிந்தோன். என்னை வாழ்த்துங்கள் ஆயர்களே. என் ஏழு மூதாயரை கைகூப்பி வணங்குங்கள்!
“நீலமலர்க் குவளை நிலத்தே மலர்ந்ததுவோ! ஆலமணி திரண்டு ஆயர்குடி வந்ததுவோ! கருமேகக் கீற்றெழுந்து கண்மணியாய் எழுந்ததுவோ! உருக்கொண்டு மண்வந்த வான்நீலம் நீதானோ? உலகாள வந்த மன்னவனே இவன்தானோ? பலகாலம் காத்திருந்த பகலவன் எழுந்தானோ?” என அகமதிர இசைந்தொலிக்கும் ஆய்ச்சியர் குரவை ஒருகணமும் அறுந்ததில்லை. அவன் வந்துதித்த ஆவணி அட்டமியில் தாலம் இசைத்து கைத்தாளமிட்டு அச்சொற்கள் பாடி புதுத்தளிரும் மலர்க்கொத்தும் ஏந்தி மஞ்சள் நீர்தொட்டு மண்மேல் தெளித்து அவர்கள் என் இல்லத்தைச் சுற்றி வருகையில் இருசெவியும் மூடி தலைப்பாகை இறுக்கி கண்களை அசைக்காமல் கால்மேல் காலிட்டு திண்ணையில் அமர்ந்திருந்தவன் அல்லவா நான்? எந்த விழி அவர்களைக் கண்டது? எந்த செவி அவர்களின் சொல் கொண்டது? எந்த மனம் அவர்களாகி என் இல்லம் சுற்றியது? ஆயரே தோழர்களே, எத்தனை ஆயர் என்னுள்ளே வாழ்கிறார்கள்?
கண்ணனை ஒருபோதும் நான் கையில் எடுத்து கொஞ்சவில்லை. அவன் நீலவிழியை நேர்கொண்டு நோக்கவில்லை. அவன் கண்முன்னால் என்னை கடுஞ்சொல் தாதனென்றே படைத்திருந்தேன். தீம்பால் பசுபோலே என் நெஞ்சம் கனிகையிலும் திமிலெழுந்த காளைபோல் உறுமவே பயின்றுகொண்டேன். என்முன் விழிதூக்கி ஒருசொல்லும் இளங்குமரன் சொன்னதில்லை. என் பாதப்பணி செய்து பணிந்து நிற்றலன்றி வேறுசெயல்கொண்டு என் முன்னே வந்ததில்லை. எந்தையர் முகம் அவன், என் கழல் என்றே எண்ணியிருந்தேன்.
கோடி கன்றுகளில் ஒருகன்றில் தெய்வம் குடியேறும். வெண்முடிமேல் அமர்ந்தவனின் வெள்ளெருது வந்துதிக்கும். அதன் கொம்புகண்டு அஞ்சும் கொலைச்சிம்மம் என்பார்கள். அதன் திமில்கண்டு பின்வாங்கும் மதகளிறு என்றறிவோம். அந்த கால்நடந்து காடு சேறாகும். மரங்கள் வளைந்தாடும். நதிகளில் நுரைபெருகும். பெருமலைகள் குனிந்து நோக்கும். நந்தி வந்துதிக்க ஆநிரைகள் பெருகியெழும். அது நடந்த காடெல்லாம் அமுதம் அலையடிக்கும்.
தெய்வச்சிறுகன்றின் திமிராடல் கண்டு ஆயர் குடிகொள்ளும் திகைப்பையெல்லாம் நானறிந்தேன். வெண்ணை திருடி உண்கின்றான் என்பார்கள். இல்லமெல்லாம் புகுந்து கள்ளவினை இயற்றுகிறான் என்பார்கள். “உண்ணும் உணவிலே மண்ணெடுத்துப் போடுகிறான், ஊருணி நீரிலே முள்வெட்டி நிறைக்கிறான், பெண்களின் ஆடைபற்றி இழுத்தோடிச் செல்கின்றான். பேசாச் சொல்லெல்லாம் பிதற்றும் நாணிலாதான். பிள்ளையென்று இவனைப்பெற்று பெரும்பிழை செய்துவிட்டாய்!” எத்தனை குரல்கள். இக்குடியில் நான் கேட்க இனியொரு சொல்லும் எஞ்சவில்லை என்னவரே.
“ஒவ்வொருநாளும் ஒருவகை முறையாடல். அத்தனையும் செய்யும் ஒருபிள்ளை வேறில்லை. ஆய்ச்சியர் குரல்கேட்டு அஞ்சி ஒளிந்திருப்பேன். இவனை கட்டிவைக்க கயிறில்லை. சிறைவைக்கும் சொல்லில்லை. நான் என்ன செய்வேன்? குதிரைக்குட்டியை பசுபெற்றால் என்னாகும்?” என்று என் குலமகள் வந்து கண்ணீர் வடிப்பாள். ”எத்தனை கலம்தான் உடையும் ஒருநாளில்? எத்தனை கன்றுகள் கயிறவிழ்ந்து காடேகும்? எத்தனை ஆய்ச்சியர் ஆடைகிழியும்? எத்தனை இளமைந்தர் கண்ணில் மண்நிறையும்? இனித்தாங்க என்னால் முடியாது. நாளை காடேகும்போது இவனை கையோடு கொண்டுசெல்லுங்கள். நான் நிறைந்தேன், இனி எனக்குள் இவனுக்கு இடமில்லை” என்பாள்.
உள்ளே பனியுருக முகத்தில் நெருப்பெரித்து “கண்ணா!” என்றேன். கண்கள் இமை தாழ்த்தி கால்கள் நீக்கிவைத்து வந்து அன்னை உடைபற்றி பாதி உடல்மறைத்து நின்றான். “இவள் சொன்னதெல்லாம் உண்மையா?” என்றேன். “ஆம்” என்று தலையசைத்தான். “அடி சிறுநாயை. செய்வதெல்லாம் செய்துவிட்டு சத்தியம் வேறா?” என்றேன். “அதையெல்லாம் செய்தவன் நானல்ல வேறு கண்ணன்” என்றான். “நல்ல விடை. ஒருவனைத் தாங்கவே இவ்வுலகு போதவில்லை. எத்தனைமுறை கேட்டாலும் இதையேதான் சொல்லிநிற்பான்” என்றாள் என் துணைவி.
மூண்ட சிறுசினத்தை மெல்ல அடக்கி “நீயன்றி இங்கே வேறு கண்ணன் யார்?” என்றேன். “இரண்டு கண்ணன் இருக்கின்றான்” என்று மூன்று விரல் காட்டி “முதல் கண்ணன் கெட்டவன். இந்தக்கண்ணன் நல்லவன்” என்று சொல்லி எஞ்சிய ஒரு விரல் நோக்கி சற்றே திகைத்து “இந்தக்கண்ணன் வானத்திலே” என்றான். “சொல்லுதிர்த்து ஒளிந்துகொள்ள எண்ணாதே, சிறுமூடா. ஆய்ச்சியர் குடம் உடைத்தது யார்?” என்று அதட்டினேன். வானெழுந்த சுனைபோல ஆழம் வரை தெளிந்த விழியிரண்டால் என் விழிநோக்கி “அது கெட்ட கண்ணன்” என்றான். “அவன் எங்கே?” சற்றே தலைசரித்து சிந்தித்து “அங்கே” என்றான். கைசுட்டி அவன் காட்டிய இடத்தில் ஒரு நீலவண்ணன் நின்று சிரிக்கக் கண்டேன்.
விழிமயக்கா என் வீண்சிந்தை மயக்கா என்று திகைத்து மெய்ப்புற்று கைநடுங்கி கால்சோர்ந்தேன். திரட்டி என்னை மீட்டு திரும்பி அவனை நோக்கி “அப்படியென்றால் நீ ஒன்றுமே செய்வதில்லையா?” என்றேன். பால்நுரைபோல் சிரித்து கண்மலரில் ஒளி நிறைத்து “தந்தையே, நான் ஒன்றுமே செய்வதில்லை” என்றான். மூச்சிழுத்து மனம் ஆற்றி மெல்ல சொல் கூட்டி “ஒன்றுமே செய்யாமல் நீ எப்படி இருக்கிறாய்?” என்றேன். பனிகனக்கும் குவளைமலர்போல் சொல்திரண்ட சிறுமுகத்துடன் என் அருகே வந்து தொடைதொட்டு விழிதூக்கி “தந்தையே, அங்கே நேற்று ஒரு ஆலமரம் கண்டேன். அதில் இரண்டு கிளிகள். ஒருகிளிபோன்றே இன்னொன்று. ஒன்று பழம் தின்றுகொண்டிருந்தது. ஒன்று வெறுமே நோக்கி அமர்ந்திருந்தது” என்றான்.
“என்ன பசப்புகிறாய்? வீண்கதை சொல்லாதே” என்றேன். அவனே ஓடிச்சென்று கன்றோட்டும் கோலெடுத்துக் கொண்டு வந்து என் கையில் தந்து “அந்தக் கண்ணன்தான் அனைத்தும் செய்கிறான். அவனை அடியுங்கள்” என்று கைகாட்டினான். திரும்பி நோக்க அஞ்சி “நீ அவனைப் பார்த்ததுண்டா?” என்றேன். “அவனும் என்னைப் பார்த்ததுண்டு” என்றான். ஈதென்ன பதில் என்று என் நெஞ்சம் குழம்ப “என்ன சொல்கிறாய்?” என்றேன். “எங்கள் இருவரையும் அவன் பார்ப்பான்” என்றான். “யார்?” என்றேன். “அந்த கண்ணன்” என்று வானை நோக்கி சுட்டிக்காட்டினான்.
அதற்குமேல் பேசினால் எனக்குத்தான் அகமழியும் என்றறிந்தேன். “பேச்செல்லாம் வேண்டாம். செய்தபிழை ஏற்று தண்டம் கொள்” என்றேன். “தங்கள் ஆணை!” என்று சொல்லி திரும்பி நின்று சிற்றாடைதூக்கி குனிந்து சிறுபுட்டம் காட்டி நின்றான். நீலத்தாமரை மொட்டுகள் இரண்டு. மேகம் குழைத்துருட்டிய இரு தளிர்க்கோளங்கள். என் கையில் நடுங்கியது கோல். “போடு, தோப்புக்கரணம் நூறு” என்று சொல்லி கோலை கூரையில் செருகி வெளியே சென்றேன்.
பாலருந்தும் கன்றின் கிண்கிணி என சிறுசிரிப்பின் ஒலிகேட்டு கதவருகே நின்று கண் சரித்து நோக்கினேன். “ஒன்றேய்” என்று சொல்லி தோப்புக்கரணம் போடக்குனிந்தவன் கையூன்றி குட்டிக்கரணம் போட்டு புரண்டு விழுந்து எழுந்து நின்றான். வாய்பொத்தி உடல்குலுங்க கண்கள் ஒளிகொள்ள அன்னை சிரித்தாள். “இரண்டேய்!” என்று சொல்லி அவன் என்னைப்போல் நடந்து, என் கையால் மீசை வருடி, என் விழிபோல் நோக்கி, என் அசைவில் கரணமிட அன்னை சிரித்து அப்படியே அமர்ந்துவிட்டாள். “மூன்று” என்று சொல்லி அவன் மீண்டும் குனிய அவள் எட்டி இதழ்குவித்து அவன் செல்லச்சிறுகுண்டி மென்சதைமேல் முத்தமிட்டாள்.
அன்பரே, ஆயர்குடித் தோழரே, அக்கணத்தில் ஆணாகி வந்த என் ஆன்மாவை வெறுத்தேன். இவ்வுடலில் மீசையும் புயங்களுமாய் வந்து நிற்கும் என் மூதாதை வடிவங்களைக் கசந்தேன். உள்ளே சென்று அவள் கூந்தல் குவை பற்றி அந்த வாயில் அடித்து வெறிதீர்க்க விழைந்தேன். என் செல்வக்களஞ்சியத்தை, நானேந்தும் செங்கோலை, என் கோட்டைக் கொடியை, என் சிதையின் தழலை பிறிதொருவர் உரிமைகொள்ள ஒருபோதும் ஒப்பேன். உயிர்கொடுத்தும் அதைச் செறுப்பேன். ஒவ்வார் தலையறுத்தும் ஒறுப்பேன். ஆம், வீண் சொல் அல்ல இது!
துடித்தாடும் தழல்போன்ற மைந்தனுக்குத் தந்தையாவது என்பது குளிர்ந்துறையும் தடாகமாதலே என்றறிகிறேன். அடங்காக் கன்றுக்கு அத்தனாகும் வழிஎன்பது அடிஎண்ணி நடக்கும் பெருந்திமில் காளையாவது மட்டுமே. இந்நாட்களில் என்னில் எழுந்த அசைவின்மையை அறிகிறேன். பெருங்களிறு நீரில் செல்வதுபோல பேராற்றலுடன் எளிதே ஒழுகுகிறேன். ஆயர்குலத்தோரே, என் விழிகண்டு வினைவலர் பணிவதை காண்கிறேன். என்னுடன் பேசுகையில் உங்கள் சொற்கள் தணிவதைக் கேட்கிறேன். கப்பநிதிகொண்டு மதுராபுரிசென்றபோது கம்சரும் என் கண்நோக்கி கண்கள் விலக்கியதை அறிந்தேன். இப்புவியில் என் நிகர் நின்று சொல்லெடுக்க இனி விண்ணளந்தோன் தன் உருமாற்றி வந்தெழுதல் வேண்டும். அவன் அருகமையும் செந்நிறத்தானும் புவிபடைத்தானும் கூட என்னை வணங்கியாகவேண்டும். அறியுங்கள், நான் ஏழுலகாக்கிய ஒருபெரும்பொருளை மைந்தனெனப் பெற்ற மானுடன். அழிவற்றோன். ஆயர்குலத்தரசன். ஆழிபோல் புகழுள்ளோன்.
அன்றொருநாள் இதை நான் அறிந்தேன். என் மைந்தன் மண்ணுதைத்து மறிந்தமைந்ததை மூத்தாரை முறைசெய்து கொண்டாடும் ஔத்தானிக நாளன்று நிகழ்ந்தது இது. ஆயர்குலத்தோடு அன்னைப்பசுவொன்றோடு மைந்தனை இடையெடுத்து நானும் என் குலமகளும் களிந்தமலைச்சாரலில் குடிகொள்ளும் கருங்கழல் அன்னையை வணங்கச் சென்றோம். கரும்பாறை குகைக்குள்ளே காரிருள் பீடத்தில் பேருருவம் கொண்டிருந்த பேராய்ச்சி பாதத்தில் மலர்சூடி மங்கலம் படைத்து வணங்கினோம். மைந்தனை அவள் காலடியில் வைத்து குரவைக் குரலெழுப்பி வாழ்த்தியபோது வேல் கைகொண்டு சூர் அகம் கொண்டு எழுந்த சாலினி ஒருத்தி “எழுந்தது அறவாழி. இனிச்சுழலும் அது இந்த யுகம் தழுவி. அவ்வாறே ஆகுக! சூழ்க நலம்!” என்று அருளுரை செய்தாள்.
அவள் சொற்களென்ன என்று நான் உணரவில்லை. அன்று என் மைந்தன் பசித்து கைகால்கள் உதறி அழுதான். அன்னை அவனை அள்ளி கொண்டுசென்று முலைகொடுத்து உறக்கினாள். சிறுமழைத்தூறல் இருந்தமையால் அவனை நாங்கள் சென்ற மாட்டுவண்டியின் அடியில் சேலைத்துணியால் சிறுதொட்டில் கட்டி படுக்கவைத்தோம். கொற்றவையின் கோயிலில் ஊன்படைப்பும் தீப்படைப்பும் எஞ்சியிருந்தமையால் ஆயர்குடி முழுக்க அவள் காலடியில் நின்றிருந்தது. என் உடலை விழியாக்கி மைந்தனை முதுகால் நோக்கி நின்றிருந்தேன். பூசை ஒலிநடுவே ஒரு அச்சுமுறியும் ஒலிகேட்டேன். முன்னின்ற சகடம் ஒன்று முறிந்து சரிவதைக் கண்டேன். ஒன்று முட்டி ஒன்று என்று வண்டிகள் சரிந்து விசையெடுத்து மலைச்சரிவில் உருண்டெழப்போவதை உணர்ந்தேன்.
கண்ணா என்ற சொல் என் கருத்தில் எழுந்து நாவை அடைவதற்கு முன்பே அங்கு நிகழ்ந்ததை என் சிந்தை அறிந்தது. மைந்தன் தன் இளநீலச் சிறுகாலால் தன் வண்டிச் சக்கரத்தை உதைத்தான். அச்சு உடைந்து வலிகொண்டு கூவி சரிந்தெழுந்து விலகி தன்னை உணர்ந்து திகைத்து நின்றது. பின்னர் தான் தேர்ந்த திசை நோக்கி உருண்டோடியது. அன்னையும் பிறரும் அலறிக்கூவி அருகணைந்து மைந்தனை எடுத்து மார்போடணைக்க நான் மட்டும் விலகி நடந்தேன். சகடம் சென்ற தடம் தேர்ந்து சரிவிறங்கிச் சென்றேன்.
தோழரே, நான் கண்ட எதையும் நெஞ்சக்குழி விட்டு நாவுக்கு எடுத்ததில்லை. சகடத்தடம் ஒரு சாட்டை வடுபோல குருதிவரியாக குமிழியிட்டு நீளக் கண்டேன். செங்குருதி ஊறும் சிற்றோடை என அது மரத்தடிகள் உடைத்து கரும்பாறை குவை உடைத்து மலையிறங்கிச் சென்றது. குளிர்கொண்ட சிறுகுஞ்சென கூசி சிறகணைத்து மெய்நடுங்கி மனம் உறைந்து அதன் வழியே சென்றேன். அச்சகடம் சென்று ஒரு தெளிநீர் தடாகத்தில் விழுந்து அலையெழுப்பி மூழ்கி மறைந்தது. அச்சகட வளையமே ஆயிரம் அலையாழிகளாக மலர்ந்தெழுந்து வந்தது.
ஒன்றுக்குள் ஒன்றாக ஓராயிரம் இதழ்விரியும் முடிவிலித்தாமரை. அதில் ஆயிரம் கோடி ஒளிநிழல்கள். ஒவ்வொன்றிலும் எழுந்தமரும் நீலமலர் முகம். நான் கண்டது கனவேதானா? கன்று தேர்ந்து காட்டில் வாழும் ஆயன் விழிசேர்ந்ததுதான் என்ன? வானுறையும் மெய்யா? சொல்லறியா பொருளா? அங்கு நின்று அதைக் கண்டது இங்கு நின்று இதைச் சொல்லும் எளியேன்தானா? தோழரே, தோள்தழுவி என் இளமையை அறிந்தோரே. துயர் தழுவி என் முதுமையை அறிவோரே. சொல்லுங்கள் நான் ஆயர்குடிபிறந்த நந்தனென்ற அவனேதானா?
அலைச்சுழியின் மலர்வளைய மையத்தில் மலர்ந்து நின்ற நீலத்தாமரை சிறு மொட்டு ஒன்றைக் கண்டு அங்கே நின்றிருந்தவன் நான். குயிலொன்று புதர்மறைந்து கூவிக்கூவி ஒரு சொல்லையே காட்டின் குரலாக்கி நிறைக்கக் கேட்டவன் அவன். கற்றறிந்ததெல்லாம் மறந்து கருத்துறைந்ததெல்லாம் இழந்து முற்றழிந்த மனம் கொண்டு நின்ற பேதை. பின் காலமென்று கூவியது கருங்குயில். காடென்று கூவி கருத்தளித்தது. குலமென்று கூவி நினைவளித்தது. பகலென்றும் இரவென்றும் கூவி அனைத்தையும் படைத்தளித்தது.
என் குலம் மீண்டேன். அன்னை மார்பில் மலர் மொக்கு வாய் திறந்து நகைக்கும் மைந்தனைக் கண்டு அகம் நிறைந்தேன்.கை ததும்ப கால் ததும்ப அவன் உடல் நிறைக்கும் உவகை கண்டு உடல் விதிர்த்தேன். அச்சுழிமையத்தில் அலையெழுந்து என் குலமெல்லாம் நிறைந்தது பேருவகை. ஆனந்தமய பெருஞ்சுழி. ஆயர்குலமெனும் நெற்றியிட்ட நீல நறுந்திலகம். பனிமலையடுக்குமேல் உதித்தெழும் பால்நிலவு. மண்ணை ஒளியாக்கும் விண்ணின் ஊற்றுமுகம். ஐந்து பசுக்களும் பால்கனிந்து பெருகி கலம் நிறைக்கும் சிறுகன்று. முட்டிமுட்டி முலை நெகிழ்க்கும் அதன் சிறுமூக்கு. மூலாதாரம் முற்றிக்கனியும் முழுமுட்டல். பால். பாலெனும் பெருவெள்ளம். பால்கங்கை. பாற்கடல். பிறிதொன்றிலாமை. பங்கயத்திருவடி. பன்னீர்த் தண்துமி. ததும்பா நிறையா பேரொளிப் பனித்துளி.
என்ன சொல்கிறேன் என்றறியேன். சொல்லின்மை என்பதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன். அன்று சிறுமழைச் சாரலின் தோகை சுழன்று சுழன்று அடிக்க எஞ்சிய வண்டிகளில் பெண்டிரையும் பிள்ளைகளையும் ஏற்றி மலையிறங்கி குடி மீண்டோம். காவலராக சிலர் கோலேந்தி முன்செல்ல எண்ணைப்பந்தம் ஏந்தி சிலர் பின்னால் வந்தனர். நடுவே என் மைந்தன் அமர்ந்த வண்டியின் கழிபற்றி நான் நடந்தேன். சகட ஒலியில் காட்டில் துயின்ற பறவைகள் எழுந்து கூவிய சொற்களைக் கேட்டேன். ஈர இருளில் வெளவால்கள் நீந்திச்செல்வதைக் கண்டேன். பேசிச் சிரித்துவந்தவர்கள் வழிக்களைப்பில் மூச்சு மட்டுமாக சூழ்ந்து வந்தனர்.
தோள்நழுவி மண்ணில் விழுந்த மேலாடையை எடுக்க கைப்பந்தத்துடன் ஒருவன் குனிந்தான். என்ன ஒலியென்று திரும்பிய நான் மண்தொட்டு விண் உரசி உருண்டுசெல்லும் பெருஞ்சகடம் ஒன்றைக் கண்டேன். காடுகள்மேல், மலைப்பாறை அடுக்குகள் மேல், வழிச்சுருள்மேல், வெள்ளருவிக்கூட்டம் மேல் உருண்டு எழுந்துசென்றது கரியபேராழி. நெஞ்சு நடுங்கி கழிபற்றி கண்மூடினேன். அங்குள்ள இருள்வழியிலும் அதுவே உருண்டோடியது.
ஆயரே, தோழரே, ஆழிவண்ணம் கண்டவன் அதன்பின் ஆயனாகி அமர்ந்திருக்கலாகுமோ? கால்பதறும் மலைவிளிம்பில் காரிருளில் எப்படி நிற்பேன்? ஒன்றுசெய்தேன். கடுஞ்சொல் தந்தையென என்னை மேலும் இறுக்கி இப்பக்கம் இழுத்துக் கொண்டேன். இங்கு இதோ இவ்வண்ணம் நின்றிருக்கிறேன்.