ஞானிக்கு இயல் விருது…

2009 ஆம் வருடத்துக்கான கனடாவின் ‘இயல்’ விருது கோவை ஞானிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்றுவரை குறிப்பிடத்தக்க இலக்கிய விருதுகள் எதையும் பெறாத ஞானியை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலம் இயல் தன்னையும் கௌரவப்படுத்தியிருக்கிறது. அதன் கடந்த கால பிழைகளில் இருந்து அது வெளிவர இது ஒரு வாய்ப்பாக அமையட்டும். ஞானிக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

கி.பழனிச்சாமி என்ற ஞானி ஒரு தமிழாசிரியர். எழுபதுகளில் திரண்டெழுந்த தீவிர இடதுசாரி அமைப்புகளில் இருந்து உருவாகி வந்தவர். புரட்சிகர மார்க்ஸிய சிந்தனையாளரான எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து ‘புதிய தலைமுறை’ என்ற கோட்பாட்டுச் சிற்றிதழை நடத்தினார். இக்காலகட்டத்தில் வானம்பாடி இலக்கியக் குழுவுடனும் ஞானிக்கு நெருக்கமான உறவிருந்தது. அவர்களுடன் முரண்பட்டு விவாதிக்கவும் செய்தார்.

அதன்பின் தொடர்ச்சியாக மார்க்ஸிய விமரிசனக் கருத்துக்களை எழுதிவந்தார் ஞானி. ‘நிகழ்’ என்ற சிற்றிதழை பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக நடத்தி வந்தார். என்னுடைய ஆரம்ப காலக் கதைகள் பல அதில் வெளிவந்தவையே. போதி, படுகை போன்றவை நிகழில் வெளி வந்தமை என்னை இலக்கிய உலகுக்கு சரியாக அறிமுகம் செய்தது.

ஞானி மார்க்ஸியத்திலிருந்து கொஞ்சம் வழி விலகி இன்று தமிழியக் கோட்பாட்டாளராக இருக்கிறார். அதற்காக ‘தமிழ்நேயம்’ என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார். மார்க்ஸிய அடிப்படையிலான ஒரு தமிழ்த் தேசியத்தை முன்வைத்து வருகிறார்.

ஞானி முதன்மையாக ஒரு இலக்கிய திறனாய்வாளர். கோட்பாட்டாளர். ‘மார்க்ஸியமும் தமிழும்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை’ போன்றவை குறிப்பிடத்தக்க நூல்கள். ‘கல்லிகை’ போன்ற நீள்கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.

தமிழிலக்கியத்திற்கும் சிந்தனைக்கும் ஞானியின் பங்களிப்பு என்ன? சுருக்கமாக இவ்வாறு வகுத்துரைக்கலாம். ஞானி நாகராஜனின் சிந்தனைகளில் இருந்து தன்னை உருவாக்கிக் கொண்டவர். இந்தத் தரப்பு மார்க்ஸியத்தை பண்பாட்டுத் தளத்திலும் வைத்து ஆராய்கிறது. பண்பாட்டுப் பிரச்சினைகளில் மார்க்ஸியத்தை பயன்படுத்த முனைகிறது என்று இன்னமும் சுருக்கமாகச் சொல்லலாம். ஞானியை ‘மார்க்ஸியப் பண்பாட்டு ஆய்வாளார்’ என்று கூறலாம்.

தமிழில் அதுவரை பேசப்பட்ட மார்க்ஸியக் கோட்பாடுகளை செவ்வியல் மார்க்ஸியம் என்று சொல்லலாம். ஐரோப்பிய மார்க்ஸியச் செயல் திட்டத்தை அப்படியே அடியொற்றி உருவாக்கப் பட்டது அது. அதன்படி உற்பத்தி,வினியோகம், உற்பத்தி உறவுகள் ஆகிய மூன்றும் சமூகக் கட்டுமானத்தின் அடித்தளமாக அமைபவை. சமூகம், அரசாங்கம்,பண்பாடு, ஆன்மீகம் அனைத்தும் அதன் மேற்கட்டுமானங்கள். ஒரு மார்க்ஸியர் அடித்தளத்தை ஆராய்ச்சி செய்து அதை மாற்றுவதற்கு போராட வேண்டும். அடித்தளம் மாறினால் மேற்கட்டுமானமும் மாறியாக வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஐரோப்பிய சிந்தனையாளர்கள் பண்பாடு என்பது வெறுமே பொருளியல் செயல்பாடுகளின் நுரை மட்டுமல்ல என்று சொல்ல முனைந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அண்டோனியோ கிராம்ஷி. இவர் இத்தாலிய சிந்தனையாளர். இவரது சிந்தனைகள் எழுபதுகளில்தான் ஐரோப்பிய மொழிகளில் பரவலாகப் பேசப்பட்டன. இந்தியாவில் எண்பதுகளில் பேசு பொருளாயின. ஆனால் நாகராஜனும் ஞானியும் சமகாலத்திலேயே அவற்றை  முன்வைத்தவர்கள். அவ்வகையில் கிராம்ஷியை ஒரு தீவிர உரையாடலுக்குக் கொண்டு வந்த ஆரம்ப கட்ட இந்திய மார்க்ஸியர்கள் இவர்களே.

பண்பாடு பொருளியல் அமைப்பின் நேர்விளைவு அல்ல அதற்கு சிக்கலான ஒரு தன்னியக்கம் உண்டு என்று இவர்கள் வாதிட்டார்கள். ஆகவே கலையிலக்கியங்களை அவற்றின் பொருளியல் உள்ளடக்கம் சார்ந்து மட்டுமே மதிப்பிடுவதென்பது மேலோட்டமான பார்வை என்றார்கள். உற்பத்தி உறவுகள் பண்பாட்டை தீர்மானிப்பதில்லை பண்பாடும் உற்பத்தி உறவுகளை தீர்மானிக்கக் கூடும். மக்கள் போராட்டத்தின் அடிப்படைகளாக பண்பாட்டு விழுமியங்களே அமைய இயலும். சேவை, அன்பு போன்ற மானுட விழுமியங்கள், மொழிப்பற்று போன்ற பாரம்பரிய விழுமியங்கள் மக்களை ஒருங்கிணைக்கவும் போராடவும் செய்யக் கூடியவை;  மேலான உற்பத்தி உறவுகளை உருவாக்கக் கூடியவை என்றார்கள். இவர்களுக்கும் மரபான மார்க்ஸியர்களுக்கும் இடையே விவாதங்கள் நிகழ்ந்தன.

கார்ல் மார்க்ஸின் இளமையில் அவரிடம் ஹெகலின் பாதிப்பு நேரடியானதாக இருந்தது. அப்போது அவர் பொருளியல் அடிப்படைகள் அளவுக்கே பண்பாட்டுப் பிரச்சினைகளையும் கணக்கிலெடுத்து பேசுபவராக இருந்தார். ஒரு ஆதிப்பழங்குடி வாழ்க்கையில் உழைப்பாளிக்கு உழைப்பு ஒரு கொண்டாட்டமாக இருந்தது. நிலப்பிரபுத்துவ வாழ்க்கையில் அவன் தன் கைகளால் ஒன்றை உருவாக்குவதன் நிறைவு இருந்தது. ஆனால் முதலாளித்துவத்தில் அவன் உற்பத்தியின் ஒரு கருவியாக மாற்றப் பட்டு விட்டான். அவனுக்கு படைப்பாளனின் இன்பம் இல்லாமலாகிறது. ஆகவே அவன் உழைப்பில் இருந்து அன்னியப் படுகிறான். விளைவாக பலவகையான பண்பாட்டுத் திரிபுகளுக்கும், உளச்சிக்கல்களுக்கும், ஆன்மீக நெருக்கடிகளுக்கும் ஆளாகிறான். இந்த நிலையை ‘அன்னியமாதல்‘ என்று சொல்லி ஒரு முக்கியமான மானுடச் சிக்கலாக இளம் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்

பின்னாளில் மார்க்ஸியத்தை ஒரு நடைமுறை வாதமாக ஆக்கிய அரசியல் புரட்சியாளர்கள் இந்த பிரச்சினையை மார்க்ஸ் அவரது முதிரா இளமையில் முன்னிறுத்தினார் என்றும் இது மார்க்ஸியத்தில் முக்கியமல்ல என்றும் சொன்னார்கள். மார்க்ஸேகூட அதை அதிகமாக முன்வைக்கவுமில்லை. ஆனால் பிற்பாடு அல்தூஸர் முதலியோர் இதை விரிவாக மேலெடுத்துப் பேசியிருக்கிறார்கள்.

இளம் மார்க்சின் நோக்குகள் சரியே என்று சொல்லி அந்தக் கோணத்தில் உழைப்பாளியின் அன்னியமாதலை அடிப்படையாகக் கொண்டு சமகாலத்துப் பண்பாட்டுப் பிரச்சினைகளை பேசியவர்கள் நாகராஜனும், ஞானியும். இலக்கியம், மதம், ஆன்மீகம் அனைத்தையும் இந்தக் கோணத்திலேயே புரிந்து கொள்ள முடியும் என்றும் இயந்திரத்தனமாக பொருளியல் வாதத்தை பேசலாகாது என்றும் சொன்னார்கள்.

தமிழகத்தின் மார்க்ஸிய விவாதங்களில் இது ஒரு பெரிய திருப்புமுனை என்றே சொல்லலாம். மிகச் செயற்கையாக ‘இது தொழிலாளி வர்க்க எழுத்தா? முதலாளித்துவ எழுத்தா?’ என்று கட்சி கட்டி பேசிக்கொண்டிருந்த தமிழ்ச் சூழலில் இந்த விவாதம் இலக்கியத்தை மேலும் நுட்பமாக அணுகும் ஒரு கருவியாக அமைந்தது. இவர்களில் எஸ்.என் நாகராஜனுக்கு நுட்பமான இலக்கிய உணர்வு கிடையாது. ஞானி நுண்ணிய ருசிகளும் மேலும் திறந்த மனமும் கொண்டவர். ஆகவே மார்க்ஸிய நோக்கில் ஒரு புதிய வழியைத் திறக்க அவரால் முடிந்தது.

தமிழின் மார்க்ஸிய  இலக்கிய விமரிசகர்களான கைலாசபதி, நா.வானமாமலை, சிவத்தம்பி, தோதாத்ரி போன்றவர்களில் அதிகமான படைப்பூக்கத்துடன் இலக்கியத்தை அணுகியவர் ஞானிதான். அவருக்கு மட்டுமே கலையை புரிந்து கொள்ளும் உணர் கொம்புகள் இருந்தன. முதலாளித்துவ திரிபுகள் என்று முத்திரை குத்தப் பட்டு நிராகரிக்கப் பட்ட பல நவீன ஆக்கங்களை புதிய நோக்கில் ஆராய்ந்து அவற்றின் முக்கியத்துவத்தை முன்வைத்தார் ஞானி. பல நூறு பக்கங்கள் வழியாக தமிழின் நவீன இலக்கியங்களை அவர் மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்திருக்கிறார். இன்றும் முக்கியமாக இருக்கும் அவரது பங்களிப்பு என்பது இதுவே.

ஞானி அவரது பண்பாட்டு மார்க்ஸிய நோக்கை தமிழ்த் தேசியம் நோக்கிக் கொண்டு சென்றார். மார்க்ஸிய சர்வ தேசிய வாதத்துக்கு இனிமேல் இடமில்லை என்றும், தனிப் பண்பாடுகள் தனித் தேசியங்களாகவே நீடிக்க முடியும் என்றும், பண்பாடுகள் தேசியங்களாக திரள்வது என்பது இன்றியமையாத சமகாலத் தேவை என்றும் அவர் நினைக்கிறார். மக்கள் தங்கள் இயற்கையை காக்கவும் உரிமைக்காக போராடவும் அந்த தனிப்பண்பாட்டை ஒர் ஆயுதமாக பயன் படுத்த வேண்டும் என்கிறார். தேசியம் குறித்த மார்க்ஸின் கருத்துக்கள் ஐரோப்பாவில் இருந்த சுரண்டல் நோக்குள்ள தேசிய அமைப்புகளுக்கு எதிரானவை என்றும், இன்றைய சூழலில் சர்வ தேசியம் என்பதுதான் சுரண்டலாக உள்ளது என்றும் சொல்லும் ஞானி தனித் தேசிய போராட்டங்கள்தான் இனிமேல் மார்க்ஸிய போராட்டத்தின் தொடக்கமாக இருக்கும் என்கிறார்.

இந்த அடிப்படையில்தான் ஞானி ஈவேரா அவர்களிடம் வந்து சேர்கிறார். ஞானியின் நோக்கில், ஈவேரா தமிழில்  உள்ளார்ந்து இருக்கும் போராடும் மனநிலையின் வெளிப்பாடு. அவ்வகையில் ஈவேராவை தமிழ் சித்தர் மரபின் நீட்சியாகவே ஞானி கான்கிறார். ஈவேராவை தமிழின் முதன்மையான சிந்தனையாளராக காணும் ஞானி, ஈவேரா அவர்களின் எல்லா கருத்துக்களையும் ஆதிக்க எதிர்ப்பு என்ற நிலைபாட்டில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். தனித்துவம் கொண்ட ஒரு பண்பாடு தன் தனித்துவம் தாக்கப் படும்போது அளிக்கும் எதிர்வினையே ஈவேரா. இன்றைய காலகட்டத்தில் தமிழ் நிலமும் மனமும் புறவுலகின் பெரும் சக்திகளால் உலக மயமாக்கம் என்ற பேரில் தாக்கப் படும்போது ஈவேராவின் கருத்தியல் ஒரு பெரும் ஆயுதமாக அமைய முடியும் என்கிறார்.

ஈவேராவின் சுயமரியாதைக் நோக்கும் மார்க்ஸியமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று ஞானி நினைக்கிறார். பண்பாட்டுப் பிரச்சினைகளை வெறுமே மேல் கட்டுமானச் சிக்கல்களாக காணும் மார்க்ஸியர்களின் நோக்கு அது. ஈவேரா பேசியது பண்பாட்டுத் தளத்தில் உள்ள சுரண்டலுக்கு எதிராக. ஆகவே அவர் மார்க்ஸியர்களுக்கு தோழராக அமைய முடியும். ஈவேராவை உள்ளிழுத்துக்கொள்ளும் விரிவான மார்க்சிய கோட்பாடு தேவை என்று ஞானி நினைக்கிறார்.

ஞானியின் பெரும்பாலான கருத்துக்களுடன் நான் எப்போதுமே உடன் பட்டதில்லை. அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவருடன் உக்கிரமாக விவாதிப்பவனாகவே இருந்திருக்கிறேன். ஆரம்ப நாட்களில் மட்டுமல்ல சமீபத்திலும் அவருடன் மனக் கசப்பு உருவாகும் எல்லை வரை மறுத்து வாதிட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய சிந்தனைகளின் உருவாக்கத்தில் அவர் பெரும் பங்காற்றியவர். அவரது நிதானமும், பொறுமையும் எனக்கு பெரிதும் கற்பித்திருக்கின்றன. அவரை என் நல்லாசிரியராகவே எண்ணுகிறேன். கருத்துப் பூசல்கள் படைப்பூக்கத்தை நோக்கி நகர முடியும் என்பதற்கும் மாறுபடும் கருத்து கொண்டவர்கள் மாற்றாராக இருக்க வேண்டியதில்லை என்பதற்கும் வாழும் உதாரணம் அவர்.

எத்தனை திரிபு பட்டிருந்தாலும், எத்தனை தூரம் மரபிலிருந்து அன்னியப் பட்டிருந்தாலும், தமிழகம் அதன் அனைத்துத் தளங்களிலும் எப்போதும் சான்றோர்களை உருவாக்குவதாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஞானி அந்த தமிழ் மரபின் நீட்சி. ஞானிக்கு பாதம் பணிந்து வணக்கம்.

தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

தமிழியம்,ஞானி:கடிதங்கள்

கேள்வி பதில் – 43

கேள்வி பதில் – 03

முந்தைய கட்டுரைதமிழ்ச்சித்தர் மரபு
அடுத்த கட்டுரைபின் நவீனத்துவம்