தமிழ்ச்சித்தர் மரபு

சேலம் ஆர்.கே என்ற இரா.குப்புசாமி ஓரு வெள்ளி நகை வியாபாரி. ஏறத்தாழ முப்பது வருடங்களாக வாசிப்பதையே பெரும் பகுதி வாழ்க்கையாகக் கொண்டவர். வீட்டிலேயே மிகப்பெரிய நூலகம் வைத்திருந்தார். பெரும்பாலான வாசகர்கள் சமகால இலக்கியங்களையே வாசிப்பார்கள். சமகால சிந்தனைகளை வாசிப்பார்கள். இவற்றைப் பற்றிய பேச்சுகள் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி அளிக்கும். பழைய இலக்கியங்கள் மற்றும் சிந்தனைகளை கவனிப்பதில்லை. ஆகவே அவர்கள் புதுமையில் மெய் மறப்பவர்களாகவும் அசலான சிந்தனைகளை நோக்கி நகர முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

இரா.குப்புசாமி அபூர்வமான விதிவிலக்கு. மேலைச் சிந்தனை என்றால் அவர் பிளேட்டோ முதல் தொடங்கி சீராக கென் வில்பர் வரை வந்திருப்பார். இலக்கியம் என்றால் கிரேக்க நாடகங்கள் முதல் ராபர்ட்டோ பொலானோ வரை வந்திருப்பார். தமிழ்நாட்டில் இலக்கியம், தத்துவம் இரு துறைகளிலும் எந்த ஒரு ஐயத்திற்கும் திட்டவட்டமான தகவல் சார்ந்த விளக்கம் அளிக்கும் திராணி கொண்ட முக்கியமான சிந்தனையாளர் அவர். வியாபாரிகள் பேராசிரியர்களாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்க உண்மையான பேராசிரியர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

இரா.குப்புசாமி வள்ளலாரிடம் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். கீழைச் சிந்தனைகளை ஆழ்ந்து கற்று தமிழ்ச் சித்தர் மரபே அதன் உச்சம் என்று தெளிந்து அந்த மரபின் சமகால வெளிப்பாடு வள்ளலார் என்று நினைப்பவர். நித்ய சைதன்ய யதியிடமும் அவருக்கு நல்லுறவு இருந்தது. தமிழ் மெய்யியல் மரபு என்ன, அதன் பல்வேறு நுண்தளங்கள் எவை என்பதை நீண்ட உரையாடல்கள் வழியாக அவரிடம் கேட்டறிந்திருக்கிறேன். விஷ்ணுபுரம் நாவலின் ஆக்கத்தில் இரா.குப்புசாமிக்கு வழிகாட்டியின் பங்களிப்புண்டு, அதை முன்னுரையில் சொல்லியிருக்கிறேன். என்னுடைய தன்னுரை என்ற நூலை குப்புசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

இரா.குப்புசாமி அவர்களின் மூன்று முக்கியமான நூல்கள் இந்த வருடம் தமிழினி வெளியீடாக வந்துள்ளன. நீட்சே, ரூஸோ இருவரைப் பற்றியும் அவர் எழுதியிருக்கும் விமரிசனப் பூர்வமான இரு நூல்களும்  காலூன்றி நிற்க சொந்தமாக ஒரு சிந்தனைப் பரப்பு கொண்ட வாசகனின் மதிப்பீடுகள். தமிழின் மரபைக் கொண்டு அவர்களை புரிந்து கொள்ளும் முயற்சிகள்.

சித்தர் மரபின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மெய்யியல் நோக்கில் திருக்குறளை ஆராயும் நூல் ‘அறிவு நிலைகள் பத்து’. ஒரு பொது வாசகனுக்கு சொற் பொருள் காண்பதில் அதீதமான நகர்வு இருக்கிறதோ என்ற ஐயம் எழலாம். அது நியாயமே. ஆனாலும் இந்த அளவுக்குச் சாத்தியமா என்ற பிரமிப்பை உருவாக்கும் நூல் இது. தமிழுக்கே உரிய ஞான,யோக மரபை புரிந்து கொள்ள வழி செய்வது

முந்தைய கட்டுரைபசுமை அழைப்பு
அடுத்த கட்டுரைஞானிக்கு இயல் விருது…