மலைச்சாரலில்…

இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று சொல்லவேண்டும்.

கமலுடனும் அவருக்கு நெல்லை வட்டார வழக்கு சொல்லிக்கொடுக்க வந்திருந்த நண்பர் சுகாவுடனும் பேசி அவர்களுடைய அற்புதமானநகைச்சுவைக்காகச் சிரித்து கண்ணீர்மல்கிக் கொண்டிருந்தேன். நடுவே மதன் கார்க்கி சுகாவை கூப்பிட்டு ஒரு பாடலுக்காக நெல்லையின் சிறப்புச் சொற்களைக் கேட்டார். அவற்றை பாட்டில் சேர்க்கமுடியாது என்பதே உண்மை.

கமல் பாலு மகேந்திரா ஷூட் செய்வதை நடித்துக்காட்டியது ஒரு ‘கிளாசிக்’ அனுபவம். சோமன் , சுகுமாரன், திக்குறிச்சி , அனந்து, பாலசந்தர் என அவர் யாரைப்பற்றி பேசுகிறாரோ அவரது அசைவுகளும் முகமும் அவர் வழியாகக் கடந்துசெல்வதை கண்டது நான் கண்ட மிகச்சிறந்த கலைநிகழ்வு.

ஆனால் நடுவே ஓயாமல் அகத்தில் ஓடிக்கொண்டிருந்தது இந்தப்பாடல். எங்கே கேட்டேன், எப்போது என்றெல்லாம் நினைவில்லை. யாருடைய இசை என்று வந்தபின் இணையத்தில் பார்த்து தெரிந்துகொண்டேன். அற்புதமான பாடல். எம்.எஸ்.வியையும் ராஜாவையும் கொண்டாடும் வேகத்தில் சங்கர் கணேஷ் போன்றவர்களை மறந்துவிடுகிறோமோ? [ஒரு குடும்பத்தின் கதை, வாலி, சங்கர் கணேஷ்]

தெய்வீகம் பெண்ணாகி நேர்வந்தது!
எந்தன் திருவீதி வழிதேடி தேர்வந்தது!

https://www.youtube.com/watch?v=Mk3njnY4pNc

முந்தைய கட்டுரைஒரு வெறியாட்டம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15