கடலூர் சீனு-ஒரு கடிதம்

இனிய ஜெயம்,

தொடர்ந்து சிறிய சிறிய பயணங்களில் இருக்கிறேன். சில தினங்கள் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டிக்கு ஐந்து கிலோமீட்டர்கள் உள்ளே கீழைப்பட்டி எனும் [பேருந்து கூட வராத] சிறிய கிராமத்தில் நண்பர் பிரபுவின் இல்லத்தில் தங்கி இருந்தேன்.

ஊரைச் சுற்றி ஆறு ஏழு கம்மாய். முக்கால்வாசி ஆக்கிரமிக்கப்பட்டவை.விவசாயம் கைவிடப்பட்டு கிட்டத்தட்ட ஊரே காலி. இருபது முப்பது வீடுகள். அனைவரும் ஒருவர் முகம் ஒருவர் அறிந்த நெருக்கம்.

புதுமைப்பித்தன் கதைகளில் வரும் சவுக்கை எனும் கிராமத் திண்ணை அரங்கை முதல் முறையாகக் கண்டேன்.கல்பாவிய சில்லிடும், கூரை வேய்ந்த சம சதுர இடை உயர திண்ணை. சிறுகூடல்பட்டியில் [சிறுகூடல் நகர் என்றும் பெயர்ப்பலகை உள்ளது கண்ணதாசன் மகாத்மியம் போலும்] அதே திண்ணை செல்வச்செழிப்பாக இருக்கிறது.

சில கிலோமீட்டர்கள் சுற்றில் உள்ள கோவில்களில். வைரவன்பட்டி கோவில் தவறாமல் பார்க்கவேண்டிய ஒன்று. கோவிலின் விதானம் முழுக்க கண்களை உறுத்தாத வண்ணக்கலவையில் ஓவிய விரிப்பு. கருவறைக்கு இடதுபுறத் தூணில் இரண்டரை அடி உயரமே கொண்ட கண்ணப்பனை சிவன் தடுத்தாட்கொள்ளும் சிற்பம் அழகின் சிகரம்.

கார் மேகம் கூடி, குளிர்காற்று சுழலும் மென்னொளி தினங்கள். சாரல் மழையில் ஒதுங்கி நின்றிருந்தோம். முதல் மழைக்கு, காவி நிலம் புரண்டு பசுமை வண்ணம் பூக்கும் கதிமாற்றம். காற்றில் மணம் பரப்பும் பச்சையம். தூரத்தில் பெருமரம் தேடி ஒதுங்க விரையும் ஆடுகள். சாரலில் பூமிப் பரப்பு சரசரக்கும் ஒலி. நில விரிவு. இன்பத்துள் தலைமை இன்பம் என்று இதனையே சொல்வேன். புல்லாய், பூண்டாய், மரமாய், புழுவாய், பிறந்து பிறந்து இளைத்ததாக யாரோ வெம்பி வெம்பி பாடி வைத்திருக்கிறான். பாவம் அவன் ஒரே ஒரு பிறவி புல்லாய் முளைத்து, வானம் நோக்கி முதல் மழைத்துளியை ஏந்தும் கணத்தை முற்றும் உணர்ந்திருந்தால்,.. பாடலை மாற்றிப் பாடி இருப்பான். ஆம் கோடி கோடி பிறவிகள் எடுக்க விழைகிறேன் நான். அனைத்து உயிர்களின் அனைத்து புலன்களின் வழியும் இவ் உலகை அறிய வேண்டும்.

இரவு மழை அடித்துப் பெய்தது. நண்பரின் குடும்பம் விவசாயக் குடும்பம். ஒரு மழை மானுடத்தால் எப்படி வரவேற்கப்பட வேண்டுமோ அப்படி அக் குடும்பம் மழையை வரவேற்றுக் கொண்டாடியது. மின்வெட்டு இரவில் அறைக்குள் பூத்த மெல்லிய வெளிச்சத்திற்கு வயல் நிலத்தின் அத்தனை பூச்சிகளும் அறைக்குள் படை எடுத்தன. காதுக்குள் மட்டும் போய்டாம பாத்துக்கங்க மத்தபடி எதுவும் பாதகம் செய்யாது என்றார் நண்பரின் அப்பா.

அதிகாலை கிளம்பி அருகிலிருந்த குறுங்காட்டுக்குள் சென்றோம். காட்டுக்குள் பெய்யும் மழை எல்லாம் கம்மாய் வந்து நிறைக்கும் சிறிய வனஆற்றின் கரை ஓரமாக ஒரு காலை நடை. குறுங்காட்டுக்குள் இரண்டு கிலோமீட்டர்கள் கரண்டை அளவு, சலசலக்கும் நீர் ஒழுக்கில் நடை. சில்வண்டுகளின் சேர்ந்திசை. கரையோரம் மான்கள் கூட்டம் வந்துபோன காலடித் தடம். தூரத்தில் மயிலின் அகவல்.

காலையில் புதுவெள்ளம் நிறைத்த, குருதிவண்ண மலர்கள் பூத்த கம்மாயில் குளியல். முதலில் இறங்குகையில் ,முழங்கால் வரை கடுங்குளிர், இடைவரை மென்குளிர், மார்புவரை கதகதப்பு என துல்லியமாக மூன்று அடுக்காக பிரிந்துகிடந்த நீர்வெளியின் வர்க்க பேதத்தை, விழுந்து அளைந்து திளைத்து சிதறடித்தேன். ஆனந்தக் குளியல்.

திரும்புகையில் உதிர்ந்து கிடந்த நவாப் பழங்களை பொறுக்கி உண்டேன். ரொம்ப வருடம் கழித்து தொட்டாச் சிணுங்கியை, தொட்டு சிணுங்க வைத்தேன். மஞ்சு விரட்டு திடல், வாடிவாசல் களம் என எங்கும் பரவிக் கிடந்தது தொட்டாச் சிணுங்கி.

வீடு அடைகையில், வீட்டுப் பெண்கள் காளான் பறிக்கவும், நத்தை சேகரிக்கவும் குழுவாகக் கிளம்பி வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். விடைபெற்றுக் கிளம்புகையில் அறிந்தேன். நண்பருடன் செலவழித்த அத்தனை நேரமும் ஏதேனும் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறேன். அனைத்தும் ஜெயமோகனில் துவங்கிய உரையாடலாகத்தான் இருந்திருக்கிறது.இரவெல்லாம் இலக்கியம் . நண்பர் சொன்னார் ”நீங்க ஈரோடு புத்தக சந்தையின் முதல்நாள் பேச ஆரம்பிச்சீங்க இன்னமும் நிறுத்தல”என்றார்.

ஆம் ஜெயமோகன் இன்றி எனது நாள் எதுவும் சமீபத்தில் நகர்ந்ததே இல்லை. விலகி நின்று விவாதிக்கும் அளவு விலக்கம்இன்றி வெண்முரசில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். வடக்கு முகம், [உங்களது தனிப்பட்ட தொலைக்காட்சிக்கான மகாபாரத நாடகம்] இவற்றில் நிகழ்ந்த, பீஷ்மர் சிகண்டினி சந்திப்பு அளித்த உணர்வு உன்மத்தம் எழுச்சி, நேர் எதிராக முதற் கனலில், மிக மிக சமநிலையில், பெருமூச்சு விலகிய நுரையீரல் போல் ஒரு உணர்வை அளித்தது.

தால்ஸ்தொயின் நிதானமும், சித்தரிப்பு விரிவும், தாஸ்தாவெஸ்கி யின் நாடகிய உச்சமும் கச்சிதமாக முயங்கிய கலவை மழைப்பாடல். விஷ்ணுபுரத்தில் சில இடங்களில் தெறித்த ஒன்றினை இந்நாவல் விரித்தெடுத்திருக்கிறது. அது பெண்களின் பாவனைகள் மற்றும் உடல் மொழி. குறிப்பாக நோய் மீண்ட பாண்டுவை தொட விழைய நீண்டு, தயங்கிப் பின்னகரும் அன்னையின் கரம் போல நூறு விஷயங்களை அடுக்கலாம்.

மழைப் பாடலில், பீஷ்மர் காணும் நிலக்காட்சிக்கான மொழிக்கும், வண்ணக்கடலில் இளநாகன் காணும் நிலக் காட்சிக்கான மொழியிலும் எத்தனை வித்தியாசம். மொழியின் மேல் காதல் கொண்ட எவரும் வியக்கும் வகை பேதங்கள் செறிந்த எழுத்து.

வஞ்சினமும், அதிகார வேட்கையும், புறக்கணிப்பின் வலியுமாக நீங்கள் சொன்னதுபோல, வனத்தில் பெய்யும் அத்தனை மழையும், கோடி கோடி இலைநாவுகள் சொட்டும் அத்தனை துளியும் ஒழுகி நதியாகி விரைவது கடலை நோக்கியே என்பதைப்போல நாவலுக்குள் அனைத்து அசைவுகளும் குருஷேத்ரம் நோக்கியே நகர்கின்றன.

பித்து பித்து பெரும் பித்துக் கொள்ளவைக்கும் நிகழ்சிகள். தன் மகனைக் கட்டி அனைத்து திருதராஷ்ட்ரன் ”எங்களுக்கு ஒருவரும் இல்லை தெய்வங்கள் கூட ” என்று கதறும் இடம் இதோ நான் என் கண் முன்னால் கண்டதுபோல இருக்கிறது.

”என் கண்ணீர் உன்னை வழிநடத்தும்” என்ற அம்பையின் சொல் இப்போதும் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அனைத்துக்கும் மேல் அவமதிப்பால் மட்டுமே உயிர்த்திருத்தலை உணரும் துரோணர் கர்ணனை அவமதிக்கும் கட்டம். துரோணருக்கு கூட தான் எந்த குலம் என்பதில்தான் இடர். கர்ணனை அவர் குலமிலி என்று விளிப்பதன் வழியே, துரோணர் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் இடம், மனித மனத்தைக் காட்டிலும் கூடிய விசித்திரம் புவியில் வேறில்லை.

இன்றைய நீலம் குலப்பாடகன்ஒருவன்பாடும் குழந்தைகளின் குருதியால் நிறையும் மதுராவின் வீதி பற்றிய பாடல். முற்றிலும் வேறு உணர்வுகளுக்கு சுழற்றி எரிகிறது. அணு அணுவாக கிருஷ்ணனை வர்ணித்துவிட்டு, சிதைத்து எறியப்படும் கிருஷ்ணன்களைப் பற்றிய இன்றைய அத்யாயம் திகைக்க வைக்கிறது. பின் தொடர இயலாமல் ஸ்தம்பிக்க வைக்கிறது. நீலம் ஒரு நீண்ட கவிதையாகவே எனக்குப் படுகிறது.

உங்கள் சொற்களைப் பின்தொடர்ந்து, டென்மார்க் அருகே, பரோ தீவில் வருடம் தோறும் நடக்கும் டால்பின் வேட்டை திருவிழா காணொளி கண்டேன். என்னால் எந்த அளவு ஒரு கொடூரத்தை கற்பனை செய்ய இயலுமோ அதற்கும் மேலே இருந்தது அந்தக் காட்சித்துணுக்கு. நிஜமாகவே ஒரு குருதிக் கடல். டால்பின்கள் மொத்தத்தையும் கரைக்கு தள்ளிவந்து, கூட்டமாக அதற்குள் புகுந்து அனைத்து வடிவமான வெட்டு கருவிகள், குத்துக் கருவிகள் கொண்டு குழந்தை போன்ற அந்த ஜீவன்களை வெட்டி எறிகிறார்கள். நல்ல திருவிழா. அனைத்து மயிராண்டிகளையும் தூக்கி சுறாக்களுக்கு இரையாகப் போட வெறி எழுந்தது.

மகிழவனின் மரணம் குறித்த பதிவு கண்டேன். என்னவோ சொல்ல இயலா சங்கடம். உங்களுக்கு நினைவு இருக்கலாம், தொலைபேசியில் உங்களுடன் நான் முதலில் பேசியதே சுராவின் மரணம் குறித்துதான். நீண்ட வருடம் கழித்து உங்கள் இல்லத்தில் ஒரு ஒலிப்பதிவில் சுராவின் குரலைக் கேட்டேன். இரவெல்லாம் விக்கித்துக் கிடந்தேன். ஆம் நான் அவரை மிக மிக விரும்பிய ஒரு வாசகன் என்பது அவருக்கு தெரியவே தெரியாது. வலிகளில் பெரியது இது. உங்களுக்கு பிடித்த ஒருவருக்கு அவர்மீதான உங்களது பிரியத்தை உணர்த்தவே வழி அற்ற கையறு நிலை.

சமீபத்திய சந்திப்பில் அடிக்கடி பேசியதுதான் எனினும், பௌத்தத்தின் தோற்றம், பிரிவு வளர்ச்சி, இன்றைய திபத்திய பௌத்தம், இலங்கை பௌத்தர்கள் பற்றிய உங்களது உரையாடல் எனக்குள் சிலவற்றை தொகுத்துக்கொள்ள உதவியது.

தடுமாறசாமி கோவில் தர்மராசா உங்கள் எழுத்து வழி புதுப்பிறவி எடுக்க காத்திருக்கிறேன். தடுமாற சாமி கோவில் அக்ரகாரத்தின் அத்தனை கதைகளும் தனித்துவமானவை. உங்களின் குரல் பாவனைகள் வழியே அதைக் கேட்டுக் கொண்டிருந்தது மகத்தான அனுபவம். மனம் விட்டு சிரித்தேன்.

அன்றிரவு மழைக்குள் பேருந்துப் பயணம். எங்கோ மனம் இடறி நண்பர் கொண்டைவெள்ளையின் உரையாடலிலேயே மனம் சிக்கிக் கிடந்தது. ஆம் அந்த சங்கடத்தை மறக்கவே அன்று அதிகம் சிரித்தேன் போலும்.

ஒரு முறை மதுரையில், தடுமாறி பிரும்மாண்ட சாக்கடைக்குள் விழுந்துவிட்டேன்.அதற்குமேல் என்னால் எழுதவே இயலாது. சாக்கடைக்குள் விழுந்த ஒருவனை மீட்க யாரும் சாக்கடைக்குள் இறங்கமாட்டார்கள் என்று அன்றுதான் அறிந்துகொண்டேன். உச்சிமுதல் உள்ளங்கால் வரை, தொண்டைகுழி வரை சாக்கடை. என் உடலை நானே வெறுத்துத் திரிந்த காலங்கள் அவை.

நண்பர் கொண்டை வெள்ளையின் அறிக்கையை என்னால் ஜீரணிக்கவே இயலவில்லை. மாதம் சராசரியாக எட்டு துப்புரவு தொழிலாளர்கள் செப்டிக் டேங்குகளில் சிக்கி இறக்கிறார்கள். மாதம் எட்டு பேர்.

இனிய ஜெயம் இங்கே எழுதும் மனநிலை அறுந்துவிட்டது.

சீனு கடலூர்

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைநந்தகோபன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25