அறிவுடையவர்களுக்கு மட்டும்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வெண்முரசு மூலமாக தமிழ் எழுத்து உலகில் நீங்கள் ஒரு புதிய trend create செய்து இருக்கிறீர்கள். என்னை போல் facebook வாசிப்பு தவிர வேறு எதுவும் இல்லாமல் இருந்தவனுக்கு தங்கள் புத்தகங்கள் வரப்பிரசாதமாக வந்து அமைந்தது. நடுவே சில காலம் புத்தகம் படிக்கும் பழக்கம் ஒழிந்து facebook 4 வரிகளே வாசிப்பு என்று இருந்த எனக்கு முதலில் உங்கள் நீண்ட நாவல்களை படிப்பது சோதனையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தங்கள் வரலாற்று சிறப்பு மிக்க படைப்பை அது நிகழும்போதே படிக்கும் வாசகன் என்பதில் பெருமை அடைகிறேன். விஷ்ணுபுரத்தை மீண்டும் படித்து வருகிறேன். உண்மையில் முதல் முறை வாசிக்கவே இல்லை என்று தான் இப்போது தோன்றுகிறது.

சிவக்குமார்

சென்னை

அன்புள்ள சிவக்குமார்

உண்மையில் ஃபேஸ்புக் வந்ததனால் வாசிப்பு குறைந்தது, அதற்கு முன் டிவியினால் வாசிப்பு மறைந்தது என்று சொல்வதெல்லாம் சொத்தை வாதம். வாசிப்புக்குத் தேவை நேரம் அல்ல, அறிவு

இருவகை மனிதர்கள் உள்ளனர். ஒருவகையினர் இயல்பிலேயே அறிவுத்திறன் குறைந்தவர்கள். கற்பனை அற்றவர்கள். அவர்கள் தொழில்களைத்தான் கற்றுக்கொள்ள முடியும். வேலைகளைத்தான் செய்ய முடியும். படைக்க முடியாது. படைப்பை அறியவும் முடியாது.

முன்பெல்லாம் அவர்கள் கலை ,சிந்தனை சம்பந்தமான வட்டாரங்களில் தென்பட மாட்டார்கள். இப்போது இணையம் அவர்களையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அவ்வளவுதான் வேறுபாடு. அவர்கள் இதையெல்லாம் பார்த்து திகைக்கிறார்கள். உள்ளூர கொஞ்சம் அவமானப்படுகிறார்கள்.

அவர்களில் சிலர் திருப்பி அவமானப்படுத்த முயல்கிறார்கள். அதைத்தான் நாம் இணையத்தின் அற்பக்கிண்டல்களாகக் கண்டுகொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் சீண்டப்பட்டு தாக்குகிறார்கள். அவர்களுக்குக் கிடைப்பது சில்லறை அரசியல். அதைப் பயன்படுத்தி வசைபாடுகிறார்கள்.

உண்மையான அறிவுத்திறன் கொண்டவன் அறிவார்ந்த எதையும் ஒரு அறைகூவலாகவே எடுத்துக்கொள்வான். ஒரு விஷயம் தனக்குப்புரியவில்லை என்பதை, தன் ரசனைக்குள் சிக்கவில்லை என்பதை தன் ஆளுமை மீதான சீண்டலாகவே கொள்வான். அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்வான். அதை வென்றுசெல்லமுயல்வான்

இன்றுகூட இருபது வயதுக்கும் குறைவான பல இளம் மனங்களைப் பார்க்கிறேன். அவர்களின் கைகள் ஒரு கனத்த நூலையே தேடிச்செல்லும். ஒரு செறிவான நூலிலேயே நிறைவடையும். 17 வயதான என் மகள் மக்ஸீம் கார்க்கியை இலகுவான எழுத்தாளர் என்று நிராகரிக்கிறாள். அந்த தெனாவெட்டுதான் அறிவுத்திறனின் இலக்கணம்.

சின்னதாக இருந்தால் படிக்கலாம், ஏன் இலகுவாக எழுதப்படவில்லை என்பதெல்லாம் அடிப்படையில் புரிதலுக்கும் உணர்தலுக்குமான திறனில்லாத பொக்கைகளின் பேச்சு. அந்தக்குரல் எப்போதும் எழுந்துகொண்டிருக்கிறது. ‘போ போய் வயல் உழு. தறி ஓட்டு. கம்ப்யூட்டர் தட்டு. உனக்கு இது இல்லை. இதற்கானவர்கள் வேறு பலர் உள்ளனர். அவர்கள் இவ்வுலகை அமைப்பார்கள்’ என்பதுதான் பதில்

உங்கள் முதல் தயக்கம் என்பது இச்சூழலில் பொதுவான அற்பப்பேச்சுகள் மூலம் உருவாக்கப்பட்டது. அது ஒரு பொய்யான நிராகரிப்பை உருவாக்குகிறது. உங்களால் மிக இயல்பாக வெண்முரசைப்போன்ற செறிவான நூலை வாசிக்கமுடியும் என்றால் நீங்கள் இவ்வுலகைச் சேர்ந்தவர். அந்தத் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால் போதும்,

ஜெ

முந்தைய கட்டுரைபாலைவன நிலவு
அடுத்த கட்டுரைகமலும் ஜீயரும்