தாய்மை

மதிப்புமிக்க ஆசிரியருக்கு,

ஒரு குழப்பமான கேள்வி. ராதையின் அறிமுகத்திற்கு பிறகு கேட்காமல் இருக்க முடியவில்லை. வழக்கம் போல் உங்கள் பதிலுக்கு பின் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.

பொதுவாகவே நீங்கள் தாய்மைக்கும் பெண்மைக்கும் கொடுக்கும் விவரணைகள் கனிதலின் உச்சத்தை நோக்கியே செல்கிறது.உணவளிப்பதன் மூலமே கனிவதையும், பிள்ளை பெறுவதின் மூலமும், தன் குழந்தைக்கு பாலும் சோறும் அளிப்பதன் மூலம் பேரின்பம் அடைவதாகவும் சொல்கிறீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையில் அடுத்தவருக்கு உணவும் பாசமும் அளித்து இன்புற்ற தாய்மார்களை பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள்.

என் கேள்வி… இந்த விவரணைகள் இன்றும் பொருந்துமா.. அல்லது இவை ஒரு வகை stereo-typing தானா ?. சொந்த குழந்தைகள் மீது பாசம் இருந்தாலும் இன்று இருக்கும் ஒரு மனநிலை “ஒரு வருடம் பால் கொடுப்பது போல ஒரு கடுப்பான வேலை எதுவும் இல்லை” என்பதே…கிட்டதிட்ட 2-3 வருடங்கள் தூக்கத்தையும் தன் சொந்த சௌகர்யங்களையும் கெடுத்து கொண்டு பிள்ளை பெறுவதும் பேணுவதும் பெரிய கனிவு என்றால் அந்த கனிவே எனக்கு தேவை இல்லை என்பவர்களே இந்த தலைமுறையில் அதிகம் என்று படுகிறது. எங்கள் தலைமுறையில் இந்தகாரணத்தினாலேயே ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்டவர்கள் அதிகம்…”ஒரு பெண்ணிடம் நீ எதிர்ப்பார்ப்பதையெல்லாம் பெண்ணின் பெருமை என்று சொல்லாதே ” என்பதே எனக்கு மீண்டும் மீண்டும் கிடைத்த பதில். ” பெண்ணின் பெருமை அது இதுவென்று எங்களால் இறக்க முடியாத சுமையை எங்கள் தலை மீது ஏற்றி இருக்கிறது. இதை பெருமையோடு வேறு தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆண்களால் பிள்ளை பெற முடியும் என்றால் சந்தோஷமாக அந்த சுமையை இறக்கி வைக்க தயார்” என்றே நான் விவாதித்த இடங்களில் பதில் கிடைக்கிறது.

இவை தவிர்க்க முடியாத மாற்றமா ? இந்த மாற்றத்தை எப்படி புரிந்து கொள்வது ?

அன்புடன்
கோகுல்

கோகுல்,

முதலில் புனைவில் வரக்கூடிய ஒரு வாழ்க்கை உண்மை அந்தப் புனைவு உருவாக்கும் புனைவுச்சூழலுக்குள் மட்டுமே முக்கியமானது. அதை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன்.

மற்றபடி உங்கள் மனப்பதிவை என் அனுபவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நேர் எதிரான உண்மையைத்தான் நான் கண்டுகொண்டிருக்கிறேன். குழந்தை பெற்றுக்கொள்வதில் இன்று இருக்கும் பிடிவாதமும் அதற்காகச் செலவழிக்கப்படும் பணமும் கண்ணீரும் முன்பு எப்போதுமே இருந்தது இல்லையோ என்றே எனக்குத் தோன்றுகிறது. அதற்காக மொத்த வாழ்க்கையையும் செலவழிப்பவர்களைக் காண்கிறேன். வாழ்நாள் சேமிப்பை முழுக்க கொண்டு சென்று கொட்டுகிறார்கள். எல்லா அறிவியல் வழிகளையும் மேற்கொள்கிறார்கள். ஆகவே அது இன்று ஒரு பெருந்தொழிலாக மாறியிருக்கிறது.

மேலும் இந்தத் தலைமுறை குழந்தைகள் மேல் பித்து கொண்டிருக்கிறது. இரவும் பகலும் குழந்தையைப்பற்றி எண்ணி பேசி வாழும் இன்றைய பெண்களைப்போல சென்ற தலைமுறை பெண்கள் இருந்ததில்லை. பல ஆண்டுகாலம் படித்தபின் குழந்தைக்காக அதையெல்லாம் விட்டு விடுபவர்களையே நான் காண்கிறேன். இந்த அளவுக்கு வேகம் தேவையா என்பதே என் எண்ணமாக உள்ளது.

ஆம், விதிவிலக்குகள் உண்டு. அவர்கள் எப்போதும் இருந்திருப்பார்கள். இரு கோணங்களில் இல்லறத் துறப்பு நிகழலாம். மேலான ஒரு பொதுநல இலட்சியத்துக்காக அது நிகழுமென்றால் போற்றத்தக்கதே. காந்தி அதை வலியுறுத்தினார். வெறும் சுய நலத்துக்காக, போகவேட்கைக்காக அது நிகழுமென்றால் அதை ஆன்மீக வறுமை என்றே கொள்வேன்.

மானுட வரலாற்றை என்றும் இயக்குவது அத்தகைய அடிப்படையான சில அகநிலைகள்தான். ஆன்மீகம் என நான் சொல்வது அவற்றையே. அவை வலுவாக இருப்பதனாலேயே அவற்றுக்கு எதிரான மனநிலைகளும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். சிலர் அவற்றை சில காரணங்களுக்காக ஏற்றுக்கொண்டு சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தாய்மை போன்ற உணர்வுகள் எல்லாம் சமூகக் கட்டுமானங்கள் மட்டுமே என்பதெல்லாம் இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூகவியலாளர் சிலர் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல் முன்வைத்த வாதங்கள். நம்மூர் பெண்ணியர் அதை ஒற்றை வரியாக பற்றிக்கொண்டிருக்கிறார்கள். நவீன மூளைநரம்பியல் அதை நிராகரித்து நெடுநாட்கள் ஆகின்றன.

அவை மானுட மூளையில் பரிணாமம் மூலம் உருவாகி வந்த இயல்புகள். மானுடப்பரிணாமத்துக்கு அவசியமென்பதனால் மூளையால் தக்கவைக்கப்படுபவை. அவற்றில் கருத்துக்களால் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்வதில்லை. சிலர் வேண்டுமென்றே கவ்விக்கொண்டிருக்கலாம். அவர்கள் விதிகள் அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைஅனந்தமூர்த்தி- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9