மனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெ,

25.12.2009 அன்று சென்னையில் நடந்த உயிர்மை கூட்டத்துக்கு போனேன். அங்கே ஒரு புத்தகத்தில் நீங்கள் மனுஷ்யபுத்திரனின் உடலூனத்தைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என்று சாரு நிவேதிதா உங்களை மிக அவமரியாதையாக ‘டேய் முட்டாள், வாடா போடா’ என்றெல்லாம் பேசினார் . சாரு நிவேதிதா அன்று மிகக்கேவலமாக பேசினார். நாகரீகவரம்புகளுக்குள் நிற்கவில்லை.

சாரு நிவேதிதா உயிர்மை வெளியிட்ட அந்தப்புத்தகத்தை அந்த மேடையில் கிழித்து வீசி அதை அனைவரும் காறித் துப்ப வேண்டும் என்று சொன்னார். பிரபஞ்சன் உட்பட மேடையில் இருந்த பலர் அதை கைத்தட்டினார்கள். அதை உங்களிடம் போனில் சொன்னேன். நீங்கள் சரிதான் என்று விட்டு விட்டீர்கள். ஆனால் என் மனம் கேட்கவில்லை. என் அபிமானத்திற்குரிய எழுத்தாளர் நீங்கள். நீங்கள் அப்படி எடுத்துக் கொண்டாலும் என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு எழுத்தாளரை அவமரியாதை செய்வதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. இதெல்லாம் ரொம்ப அநியாயம். ஒருவர் பொறுத்துப்போகிறார் என்பதற்காக அரைவேக்காட்டு ஆசாமிகள் இப்படியெல்லாம் திட்டுவது அராஜகம். உயிர்மை இதற்கெல்லாம் எப்படி இடம் கொடுக்கிறது? நீங்கள் இதை மனுஷ்யபுத்திரனிடம் கேட்டாக வேண்டும்.

ஸ்ரீனிவாஸ் கண்ணன்

அன்புள்ள ஸ்ரீ,

தமிழில் சாதாரணமாக நடப்பது இது. தமிழைப்பற்றி ஏதோ சொன்னார் என்று ஜெயகாந்தனை நாய் என்று ஊர் ஊராக திட்டினார்கள். அசோகமித்திரன் தமிழகத்து பிராமண வெறுப்பு பற்றி கருத்துச் சொன்னார் என்பதனால் பிணமே என்று திட்டினார்கள். சுந்தர ராமசாமியை ‘பிள்ளைகெடுத்தாள் விளை’ கதைக்காக கேவலமாக வசை பாடினார்கள். எஸ்.ராமகிருஷ்ணனையும், யுவன் சந்திரசேகரையும் குட்டிரேவதி சச்சரவில் ஆபாசமாக வசைபாடினார்கள்.

இது ஒரு தமிழ் மனநிலை. படைப்பூக்கத்துடன் செயல்படுபவர்களைப்பற்றி நம் ஊரில் அரைவேக்காடுகளுக்கு ஓர் உள்ளார்ந்த அச்சம் இருக்கிறது. அவனது படைப்பூக்கநிலை அவனுக்கு அளிக்கும் அதிகாரத்தைப்பற்றிய அச்சம். அது தான் தங்களை அரைவேக்காடுகளாக காட்டுகிறது என்ற அச்சம். இது எப்போதும் தொடரக்கூடியது. எனக்குப் புதியதும் அல்ல.

நம் சூழலில் அரைவேக்காடுகளே பொதுவெளியில் அதிகம். எழுதுபவர்களிலும் சரி வாசிப்பவர்களிலும் சரி. சாருவை விட பெரிய அரை வேக்காடுகள் அவரைவிட ஐம்பது மடங்கு பிரபலமாக இருக்கும் மண் இது.

எந்த எழுத்தாளனையும் வாசிக்காமல் கருத்துக்களை மட்டுமே உருவாக்கிக் கொள்பவர்கள், வம்புச் சண்டைகளை மட்டுமே கவனிப்பவர்கள் நம்மிடம் அதிகம். அதிலும் சமீபமாக அத்தகையோர் கொஞ்சம் அதிகரித்திருக்கிறார்கள்.  அவர்கள் இன்று சாருவையும்  அவர் வழியாக உயிர்மையையும் மையம் கொண்டிருக்கிறார்கள்.

சாரு ஒரு வெறும் கேளிக்கையாளர், கோமாளி என்பதனால் அந்தக் கும்பலை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இந்த மாதிரி நாடகங்களை நடிக்கிறார். அது மனுஷ்யபுத்திரனின் வணிகத்துக்கு உதவியாக இருப்பதனால் அவர் ஊக்குவிக்கிறார்.

இவர்களை எவ்வகையிலேனும் பொருட்படுத்த ஆரம்பித்தால் எழுத முடியாது. நான் இந்தக்குறிப்பை எழுதுவதே தொடர்ச்சியாக வரும் வாசகர் கடிதங்கள், அழைப்புகளுக்காகவே. [‘இரவு’ என்ற சிறிய நாவல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது. அதில் இருக்கிறேன்]

========

அன்புள்ள ஜெ,

‘கடவுளற்றவனின் பக்திக்கவிதைகள்’ கட்டுரையில் மனுஷ்யபுத்திரனின் உடலூனத்தை நீங்கள் சொன்னது தப்பு என்று சிலர் சொன்னார்கள். [உயிர்மைக்கூட்டத்தில் சாரு உங்களை மிகக்கேவலமாக வசைபாடினார் என்றும் அங்கிருந்தவர்கள் அதை கைதட்டி ஊக்குவித்தார்கள் என்றும் கேள்விப்பட்டேன்] அந்தக் கட்டுரையில் அதைப்பற்றி என்ன தப்பாக இருக்கிறது என்றும் எனக்குப்புரியவில்லை. ஒருவருடைய  அந்தரங்கத்தைப்பற்றியோ தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விமரிசனங்களில் எழுதவேண்டுமா என்ற எண்ணமும் ஏற்படுகிறது. குழப்பமாக இருக்கிறது. உங்கள் கருத்தை தெளிவுபடுத்த முடியுமா?

சிவம்

இந்த விஷயத்தைப்பற்றி விரிவான ஒரு விவாதம் என் இணையதளத்தில் பேசும்  தீவிரமான விஷயங்களை திசை திருப்பிவிடும் என்று எண்ணுவதனால் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.

ஓர் எழுத்தாளனின் அந்தரங்க விஷயங்களை முழுக்க கணக்கில் கொண்டு அந்த எழுத்தாளனின் ஆக்கங்களை ஆராயும் போக்கு ஐரோப்பிய விமரிசனங்களில் உண்டு. அந்தப்போக்கை நான் கைகொள்வதில்லை. ஆனால் அதை ஒருவர் தன் முறைமையாக கருதினால் தவறென சொல்லமாட்டேன்.

என்னைப் பொறுத்தவரை ஒருவர் தன் புனைகதைகளில் அல்லது கவிதைகளில் எதை முன்வைக்கிறாரோ அதைப் பற்றியே பேசுவேன். ஒருவர் தன்னுடைய சாதியை, மதத்தை, உடலை, தோற்றத்தை படைப்பில் பேசு பொருளாக்கினால் அது ஆய்வுக்கு உள்ளாவது இயல்பான விஷயம். ஒருவர் தன் புனைகதைகளிலும் கவிதைகளிலும் பேசும் ஒரு பொருளைப்பற்றி விமரிசகன் ஒன்றும் சொல்லக்கூடாது என்பது அபத்தமான வாதம்.

உதாரணமாக மாதவிக்குட்டி [கமலாதாஸ்] யின் தோற்றம் குறித்து நான் எழுதிய சில வரிகளுக்காக பெண் கவிஞர்கள் கொந்தளித்தார்கள். மாதவிக்குட்டியின் கதைகளை வாசித்தவர்களுக்கு அவருடைய ‘என் கதை’ முதலிய ஆக்கங்களில்  அவர் தன் தோற்றம் குறித்து எழுதியவற்றையே நான் விவாதித்திருக்கிறேன் என்பது புரியும். இங்கே கொதித்தவர்கள் எவருமே அவரை வாசித்திருக்கவில்லை!

அதாவது என் விமரிசனம் என்பது பிரதிசார்ந்த விமரிசனம். [Textual criticism ] படைப்பில் வாசகனாகிய எனக்கு என்ன அளிக்கப்படுகிறதோ அதைக் கூர்ந்து நோக்கி நான் எழுதுகிறேன். படைப்புக்குப் பின்னால் உள்ள மனிதர் எனக்கு முக்கியமே இல்லை. அவர் எப்படி படைப்பில் வெளிப்படுகிறார் என்பதே முக்கியம்.

தனிப்பட்ட விஷயங்களை ஏன் விவாதிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன் என்றால் அதற்கு எல்லை இல்லை, அது பிரதியை தாண்டிச் சென்று விடும் என்பதனாலேயே.

*

இனி மனுஷ்யபுத்திரன் கவிதைகளைப்பற்றிய என்னுடைய ஆய்வுக்கு வருகிறேன். பொதுவாக கவிதை விமரிசனம் என்பது கவிதைகளை வாசித்து விவாதிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கானது.  அதுவும் கவிதையின் கருவிகளாலேயே எழுதப்பட்டிருக்கும். ஆகவே பொதுவாசகர் அதை சாதாரணமாக புரிந்துகொள்ள முடியாது.

என்னுடைய கட்டுரைகளில் நான் ஆரம்பத்திலேயே ஒரு வடிகட்டியை வைத்துவிடுவேன். தீவிரமான ஒரு கோட்பாட்டுவிவாதம் ஆரம்பத்தில் இருக்கும். அது உருவாக்கும் வரலாற்றுச் சித்திரத்தில்தான் பிற மதிப்பீடுகளை செருகுவேன். ஒரு வாசகருக்கு அந்த முதல் பகுதியை கடந்து வரும் திராணி இருந்தால் மேலே வாசித்தால் போதும் என்பதே என் எண்ணம். இதை எல்லா திறனாய்வுக்கட்டுரைகளிலும் நீங்கள் காணலாம். ஏனென்றால் விவாதம் அத்தகைய சிறு வட்டத்திற்குள் மட்டுமே நிகழ முடியும்.

ஆனால் சாரு போன்றவர்கள் உள்ளே வரும்போது இந்த வரையறுக்கப்பட்ட விவாதச்சூழல் சிக்கலுக்குள்ளாகிறது. இவர்களுக்கு என்ன புரியும், இவர்கள் ஏற்கனவே என்ன வாசித்திருக்கிறார்கள் என்ற திகைப்பு ஏற்படுகிறது. கவிதை விமரிசனத்தின் அந்தரங்கத்தன்மை பாதிக்கப்படுகிறது. அவ்வாறு உள்ளே வரும் பொதுவாசகர்களிடையே புரிதல்சிக்கல்கள் உருவாகின்றன. அவர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே பேசவேண்டியிருக்கிறது

ஆகவே அக்கட்டுரையை சுருக்கிச் சொல்கிறேன். ஆனால் இவ்வரிகளை மட்டும் வாசித்தவர்களிடம் மேலே விவாதிக்க மாட்டேன்.

1. தமிழ்க்கவிதையின் செவ்வியல் [கிளாசிக்] அடிப்படை சங்கப்பாடல்களால் உருவாக்கப்பட்டது. நிதானமான உணர்ச்சிகள், கச்சிதமான வடிவம் ஆகியவற்றைக் கொண்டது அது.

2. கட்டற்ற உணர்ச்சிகளும் நீண்டுசெல்லும் வடிவமும் கொண்ட உணர்வெழுச்சி [ரொமாண்டிக்] கவிதைகள் நம் மரபில் பக்திக்காலகட்டத்தில் உருவாகி வந்து இன்றும் மரபில் ஒரு வலுவான போக்காக உள்ளன

3. தமிழில் நவீன கவிதை பாரதியில் உணர்வெழுச்சிக் கவிதையாக உருவானது.  ஆனால் பின்னர் புதுக்கவிதை செவ்வியல் அடிப்படைகளை ஏற்றுக்கொண்டது.

4 ஆகவே பிரமிள், தேவதேவன், சுகுமாரன் போன்ற சிலரிடம் மட்டுமே உணர்வெழுச்சிப்போக்கு இருந்தது. அந்த வரிசையில் வருபவர் மனுஷ்ய புத்திரன்

இந்த விரிவான பின்னணியில் வைத்து மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் வளார்ச்சிப் போக்கை நான் ஆராய்கிறேன். அதை இவ்வாறு சுருக்கலாம்.

1 மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் பாடுபொருள் ஆரம்பத்தில் புரட்சிக்குரலாக இருக்கிறது. இடதுசாரி அமைப்புகளுடன் தொடர்புள்ளவராக இருக்கிறார். அவரது உணர்வெழுச்சிவாதம் அங்கிருந்து தொடங்கியது.

2 இக்காலகட்டத்திலேயே தன் உடற்குறை குறித்த தன்னுணர்வு வலுவாக இருந்து அது வளர்ந்து வலுவான தன்னிரக்கக் கவிதைகளை எழுதியிருக்கிறார். ‘கால்களின் ஆல்பம்’, ‘கழிப்பறையில் 90 நிமிடங்கள்’ முதலிய பல கவிதைகள்.

3 இந்த தன்னிரக்க அம்சம் அவரது கவிதைகளில் என்ன வகையான விளைவுகளை உருவாக்கியது என்ற ஆய்வே கட்டுரையில் உள்ளது. புரட்சிகரம் என்பது சுயபெருமிதம் சார்ந்த ஓர் உணர்ச்சி. தன்னை பிறரில் இருந்து மேலானவன், பிறரை வழிநடத்துபவன் என்று ஒருவர் எண்ணும்போதே புரட்சியாளன் ஆகிறார்.

ஆனால்  தன்னிரக்கம் அதற்கு நேர் எதிரானது. அது தன்னை பிறரை விட எளியவனாக எண்ணுகிறது. உடற்குறை காரணமாக இந்த அம்சம் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் வலுவாகவே உள்ளது. அது அவரை புரட்சிகர மனநிலையில் இருந்து இருந்து விலக்குகிறது.

4 பிற்காலக் கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் இந்த உடற்குறை குறித்த தன்னுணர்வை சமூக அளவிலும், உலகளாவிய தளத்திலும் விரிவுபடுத்திக் கொள்கிறார். அவர் தன்னை கைவிடப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, கீழான பெரும்பான்மையினரின் குரலாக மாற்றிக்கொள்கிறார். இதுவே அவரை முக்கியமான கவிஞராக ஆக்கும் திருப்புமுனை. இப்படி ஆகாமல் புரட்சி, தன்னிரக்கம் இரண்டையும் மட்டும் அவர் எழுதியிருந்தால் அவர் இந்த முக்கியத்துவத்தை அடைந்திருக்க முடியாது.

5. புரட்சிகரம் என்பது நேர்நிலை [பாசிடிவ்] கொண்டது. அது உணர்வெழுச்சிவாதத்துக்கு உகந்தது. நவீனத்துவம் எதிர்மறைத்தன்மை [நெகட்டிவ்] ஆனது ஆகையால் அது புரட்சிகரத்துக்கு எதிரானது. புரட்சிகரத்தில் கசப்பு கொள்ளும் கவிஞர்கள் அந்தக் கசப்பு மூலமே நவீனத்துவத்திற்குள் வருகிறார்கள். உதாரணம் சுகுமாரன்.

6 மனுஷ்யபுத்திரன் புறக்கணிக்கப்பட்ட சாமானியர்களின் கசப்பையும் எதிர்ப்பையும் பிரதிநிதித்துவம் செய்யும் அவரது எதிர்மறைத்தன்மை காரணமாக நவீனத்துவத்திற்குள் வந்தார். நவீனத்துவம் கட்டுப்பாடுள்ள வடிவத்தை கொண்டது. அந்த மாற்றம் மனுஷ்யபுத்திரன் கவிதைகளிலும் நிகழ்ந்தது. அவரது நடுக்காலக் கவிதைகள் கச்சிதமான வடிவம் நோக்கிச் செல்கின்றன. உதாரணம் ‘இடமும் இருப்பும்’ தொகுப்பு.

7 ஆனால் அந்தக் கசப்பில் நின்று முழுமையான நவீனத்துவக் கவிஞராக அவரை  ஆக விடாமல் செய்த ஓர் அம்சம் அவரது கவிதைகளில் உள்ளது. அது கனிவு. ‘நான்’ என்ற உணர்வுநிலைக்கு எதிராக அவர் ‘நீ’ என்ற உணர்வு நிலையை உருவாக்குகிறார். அவரது கவிதைகள் முழுக்க நீ என்ற முன்னிலையிடம் உணர்ச்சிகரமாகப் பேசுகின்றன.

அந்த நீ முதலில் ஒரு கனவுப்பெண்ணாக ,காதலியாக இருந்து விரிந்துகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ‘நீ’ ஒரு மனித இருப்பாகவே இல்லை. வெறுமே நீ ஆகவே சொல்லப்படுகிறது.

8 இந்த நீ நம் பக்திக்கவிஞர்கள் முன்வைக்கும் கடவுளுக்கு நிகரானதாக இக்கவிதைகளில் உள்ளது. இக்கவிதைகளில் உள்ள நீ என்பது கடவுளைக்குறிக்கும் என எடுத்துக்கொண்டால் மனுஷ்யபுத்திரனின் பல கவிதைகலை தமிழின் பக்திக் கவிதைகளில் சேர்த்துவிடக்கூடியவை என்றே சொல்லலாம். அதாவது இவை கடவுள் இல்லாதவனின் பக்திக்கவிதைகள்.

9 இந்த கனிவு காரணமாக மனுஷ்யபுத்திரன் ஒரு உணர்வெழுச்சிக் கவிஞராக இருக்கிறார். பாரதியின் வழிவந்தவராக, தேவதேவனுக்கும் சுகுமாரனுக்கும் பின்வந்தவராக இருக்கிறார். அவரது பிற்காலக் கவிதைகளில் மீண்டும் நெகிழ்ச்சியான கட்டற்ற உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.

இதுவே என்கட்டுரையின் சுருக்கம்.

*

இக்கட்டுரையில் ஊனத்தை இழிவுபடுத்தும் எந்த அம்சம் உள்ளது? கொஞ்சம் வாசிப்புப்பழக்கம் உடையவர்கள் இது பற்றி யோசிக்கலாம். ஒரு கவிஞன் இங்கே அவன் கவிதைகளில் பேசிய விஷயத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறான். அவன் கவிதைகளில் நெடுநாள் ஈடுபாடுள்ள ஒருவனால் மட்டுமே சொல்லத்தக்க நுண் அவதானிப்புகளினால் ஆனது இந்தக்கட்டுரை. உருவகமொழி ஊடாடி வருவதனால் கவிதை வாசகர்களுக்கு மட்டுமே புரியக்கூடியது.

இலக்கிய விமரிசனம் என்பது மேடைப்பசப்பு அல்ல. அது ஒரு தீவிரமான செயல்பாடு. அறுவைசிகிழ்ச்சைக் கத்தியின் கச்சிதமான இரக்கமற்ற கூர்மை கொண்டது அது. தனி வாழ்வில் நான் ஒருபோதும் எவரையும் எதன் பொருட்டும் புண்படுத்துவதில்லை. அதற்கான காரணம் இருந்தாலும் நாகரீகம் கருதி விட்டுவிடுவேன். பெரியவர்களுக்கு ஒரு தருணத்திலும் மரியாதை செலுத்தாமலிருக்க மாட்டேன். நாசூக்கற்ற எச்சொல்லையும் கருத்தையும் சொல்ல மாட்டேன். ஆனால் இலக்கிய விமரிசனத்தில் அந்த கொள்கைகள் இல்லை. இது கறாரானது, மதிப்பீட்டை மட்டுமே மையநோக்கமாகக் கொண்டது.

மனுஷ்யபுத்திரனை நான் 20 வருடங்களுக்கு மேலாக அறிவேன். அவரது ஆரம்பகாலக் கவிதைகளை வாசித்து மிகநீண்ட கடிதங்களை எழுதியிருக்கிறேன்.அவர் காலச்சுவடு முகாமில் இருந்த நாட்களில்கூட அவரது வாசகன் என்ற இடத்தில் இருந்து அவரிடம் தொடர்பு கொண்டிருக்கிறேன்.

வேதசகாயகுமார் என் அறிதல் இல்லாமல் சதக்கத்துல்லா ஹசனீ ஆசிரியராக இருந்த சொல் புதிதில் எழுதிய நாச்சார் மடம் என்ற உருவகக் கதை அவரது உணர்வுகளைப் புண்படுத்தியது என்று அறிந்தபோது நானே நேரடியாக அவருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரினேன். அவர் என்னைபப்ற்றி கடுமையான கட்டுரை ஒன்றை எழுதியபோதுகூட கடிதம் எழுதி நான் அப்போதும் அவரது வாசகனே என்று சொன்னேன். ஏனென்றால் என் ஆதர்சக் கவிஞர்களில் அவரும் ஒருவர்.

கடந்த இருபதாண்டுகளாக தொடர்ச்சியாக தமிழின் முக்கியமான கவிஞர் அவர் என்று சொல்லிவரக்கூடியவன் நான். கவிதை பற்றிய என்னுடைய எந்த உரையாடலிலும் அவரது ஒரு வரியேனும் இருக்கும். கடைசியாக சென்னை உரையில்கூட.

தமிழில் வலுவாக உள்ள செறிவான,பூடகமான கவிமொழி மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இல்லை என்பதனால் தேர்ந்த கவிதை வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்பதில்லை. ஆனால் இது உணர்வெழுச்சிவாதக் கவிதை என்று விளக்கி , இவ்வகை கவிதைகளின் இடம் குறித்து மீண்டும் மீண்டும் நான் பேசியிருக்கிறேன். அவரது கவிதை பற்றி நான் எழுதும் மூன்றாவது கட்டுரை இது.

ஒரு நல்ல கவிதை வாசகனுக்கு அவனுடைய ஆதர்ச கவிஞர்களுடனான உறவு மிக நெகிழ்ச்சியான ஒன்று. எனக்கு தேவதேவன், சுகுமாரன், எம்.யுவன், மனுஷ்யபுத்திரன்  போன்ற எனது கவிஞர்களுடனான உறவு மிக அந்தரங்கமானது. அவர்களின் எச்செயலும் எனக்கு பிழையானதல்ல. அவர்களின் புகைப்படங்க¨ளையே நான் பெருங்காதலுடன் பார்ப்பதுண்டு. நேரில் சந்தித்தால் அவர்களின் உடல்மொழியையே கவனித்துக்கொண்டிருப்பேன். நான் என் சிந்தனைகளில் இவர்களை மீண்டும் மீண்டும் தொட்டுக்கொள்கிறேன். திட்டமிட்டு அல்ல, இயல்பாகவே இவர்களின் வரிகள் பேச்சில் கலக்கின்றன.சாதாரண உரையாடல்களில் இவர்களை மேற்கோள் காட்டாத நாளே இல்லை

இந்த ஐந்தாண்டுகளில் அனேகமாக தினமும் மனுஷ்யபுத்திரனுடன் பேசிக்கொண்டிருந்தேன். பலசமயம் அவரது குரலுக்காக மட்டுமே.

இக்கட்டுரையையே இரு மாதங்கள் முன்பு எழுதி அவருக்கு அனுப்பி அவரே தட்டச்சு செய்து அனுப்பி அதன்பின் பிரசுரமாகியது. அந்த நாட்களில் இந்தக் கட்டுரையைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம். அனேகமாக தினமும். நக்கலாகவும் வேடிக்கையாகவும் தீவிரமாகவும். இக்கருத்துக்கள் இருபதாண்டுகளாக நான் அவரைப்பற்றி எழுதிவரும் கருத்துக்களின் அடுத்த படிநிலையே. இதில் உள்ள எல்லா கருத்துக்களும் அவரிடம் அவ்வப்போது நான் சொன்னவையே.

உடலூனம் என்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒரு குறைபாடாக இருந்திருக்கலாம் இப்போதல்ல என்பதை அக்கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். ஆகவே ‘கால்களின் ஆல்பம்’ போன்ற தன்னிரக்கக் கவிதைகள் இன்றையசூழலில் பெரிய முக்கியத்துவம் உடையனவல்ல என அவை வெளிவந்து பலரும்  மனுஷ்யபுத்திரன் மீது அனுதாபங்களை கொட்டிய அக்காலத்திலேயே சொல்லியிருக்கிறேன். அவ்வனுதாபங்களை ஓரு கவிஞனாக அவர் பெற்றுக்கொள்ளலாகாது என்பதே என் கருத்தாக இருந்து வந்தது. கவிஞன் செயல்படும் தளமே வேறு. அவன் ஒரு தனிமனிதனல்ல, அவன் ஒரு மக்கள்த்திரளின் ஆன்மா.

என்னுடைய கட்டுரையில் மனுஷ்யபுத்திரன் அவரது கவிதையில் அவரே எழுதிய ஒரு பேசுபொருளாகிய உடலூனம் குறியீட்டு ரீதியாக எப்படி கவிதையை பாதிக்கிறது என்று மட்டுமே பேசப்பட்டுள்ளது. அதுவும் கவிதை விவாதத்தின் நுண்பரப்பில் ஆனால் அவரை மேடையில் வைத்துக்கொண்டு அவரது உடலூனத்தை ரசாபாசமான ஒரு விவாதமாக ஆக்கி தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவரை இரையாக்கியதையே உண்மையில் மிகக்கொடுமையான  அவமதிப்பாக எண்ணுகிறேன்.

அந்த விஷயத்தை பிரபல ஊடகங்களின் வம்புப்பகுதிகளுக்கு தீனிபோடவென்றே பொதுமேடையில் செய்ததன் மூலம் மனுஷ்யபுத்திரனை சாரு கீழ்மைபப்டுத்திருக்கிறார். இருபதாண்டுகளுக்கும் மேலாக என் ஆதர்சக் கவிஞராக இருந்து வரும் ஒருவருக்கு நிகழ்த்தப்பட்ட அந்த அவமதிப்பே என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைக்கிறது.

மனுஷ்யபுத்திரன் இங்கே தந்திரமான மௌனத்தை கடைப்பிடிக்கிறார். மாற்றுக்கருத்துக்கள் எங்கும் உள்ளவையே. ஆனால் அவரது மேடையில் நான் வசைபாடப்பட்டமைக்கு அவர் பொறுப்பாகாமல் இருக்க முடியாது. உயிர்மை கடந்த நாலைந்தாண்டுகளாக அதன் முகமாக, அது தமிழ்சமூகத்துக்கு அளிக்கும் முதன்மை எழுத்தாளராக, சாரு நிவேதிதாவையே முன்னிறுத்துகிறது. ஆகவே அவரது செயல்களுக்கு அது பொறுப்பேற்றாகவேண்டும்.

ஒரு பதிப்பாளராக இன்று மனுஷ்யபுத்திரன் எங்கோ அவரது இலக்குகளை உருவாக்கிக் கொண்டு விரைந்து சென்று கொண்டிருக்கிறார். அந்த இலக்குகளுக்கு அவருக்கு இன்று சாருதான் தேவையானவராக இருப்பார். நான் அதற்கு தடையாக இருக்கக் கூடும். அவரது இதழுக்கும் பிரசுரத்துக்கும் அதன் முதல் இதழ் முதல் பலன்நோக்காது உழைப்பவனாக இருந்திருக்கிறேன். அதற்கு அவர் மீது கொண்ட மதிப்பும் நம்பிக்கையுமே காரணமாக இருந்திருக்கிறது. இனி அதற்கான தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.

உயிர்மையில் இனி என் எழுத்துக்கள் எதுவும் பிரசுரமாகாது. அதனுடனான எல்லா தொடர்புகளையும் நிறுத்திக்கொள்கிறேன். இப்போதிருக்கும் நூல்கள் விற்கப்படுவது வரை, அதிகபட்சம் 2012 வரை, அவர் என் பெயரை விளம்பரங்களில் பயன்படுத்தலாம். என்னுடைய நூல்களை அவர் மறுபதிப்புசெய்யலாகாது. நான் அவற்றை வேறு பதிப்பாளருக்கு அளிக்கவிருக்கிறேன்

ஆனால் இனியும் மனுஷ்யபுத்திரன் என் ஆதர்ச கவிஞர்களில் ஒருவராகவே நீடிப்பார். அவர் நல்ல கவிதை என ஒன்றை எழுதும்போது எப்போதும் என் நினைவு  வரும் என நினைக்கிறேன். ஏனென்றால் என்னைப்போல அவரது ஒவ்வொரு சொல்லையும் வாசிக்கும் வாசகர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

ஒரு நெடுங்கால நண்பராக அவரது இலக்குகள் கைகூடி அவருக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

*

தமிழ் எழுத்தாளர்களில் அனேகமாக அதிக நண்பர்கள் கொண்டவன் நான். உலகமெங்கும் தொடர்பு அறாமல் நீடிக்கும் முந்நூறு நண்பர்களேனும் எனக்குண்டு. பத்துக்கும் மேற்பட்ட பாலியகால நட்புகள் உண்டு. மாற்று அரசியல் தளங்களில்கூட நெருக்கமான நட்புகள் உண்டு. பல அறிவுலக நட்புகள் கால்நூற்றாண்டாக நீடிப்பவை. எந்நிலையிலும் நான் நட்புகளை விட்டுக்கொடுப்பதில்லை. என்னிடமிருந்து முறிந்துபோன நட்பு என்று ஒன்றிரண்டைக்கூட சொல்லமுடியாது. என் வாழ்நாளில் நானே முறிக்கும் இரண்டாவது நட்பு இது. என் நட்பு எவரிடமும் சுமையாக கனக்கக்கூடாது என்பதற்காக.

இந்தக்குறிப்பை மிகுந்த மனவலியுடன்தான் எழுத ஆரம்பித்தேன். முடித்த உடனே அதைக் கடந்தும் வந்துவிட்டேன். வாழ்க்கை மிக மிகக் குறுகியது. சட்டென்று கடந்துசென்றுவிடுவது. நாட்கள் மிகவும் பெறுமதிகொண்டவை. நானோ பெரிய கனவுகளை, என்னைவிடப்பெரிய கனவுகளை எப்போதும் சுமந்தலைபவன். ஆகவே தேவையற்ற அல்லல்களை அளிக்கும் , பயனற்ற எதையும்  வெட்டிவிட்டுக்கொண்டு என் பணிகளில் மூழ்கிவிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்.

என்னைப்பொறுத்தவரை இரு பதிற்றாண்டுகள் நீண்டிருந்த ஒரு காலகட்டம் இந்தக் கணத்தில் முடிகிறது. மறு கணத்தில் இது சார்ந்த எந்த உணர்ச்சிகளுக்கும் இடமில்லை. அந்த வெட்டிவிடுதலே இந்தக் குறிப்பு. இது எப்போதுமே எனக்கு உதவிசெய்திருக்கிறது. மனித உறவுகள் வரும்போகும். ஒரு ஆறுமாதம் கழிந்தால் இந்த நினைவுகளை தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கும். காலத்தை தாண்டி நிற்பவை மனித வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் நாம் அளிக்கும் பங்களிப்புகள் மட்டுமே.

[இவ்விஷயம் குறித்து 48 மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள். அனைவருக்குமான பதிலாக இதைக் கொள்ளக் கோருகிறேன்]

முந்தைய கட்டுரைகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமை நேம் இஸ் பாண்ட்