டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்

doc

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் மருத்துவர்கள் மேல் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய விமர்சனங்களை முன் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. அது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க விவாதத்தை நிகழ்த்தியது. எதிர்பார்த்தது போலவே மருத்துவர்கள் அவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டைப் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் அதற்கான பொறுப்பு தங்களுக்கு உள்ளது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், தனது துறை சார்ந்த பாசம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, தன்னிடம் வரும் நோயாளிகள் அறிவற்று இருப்பதாகவும், TRP ரேட்டிங்கிற்காக இப்படி அந்த டிவி செய்வதாகவும் திசை திருப்பும் விவாதங்களை முன்னெடுக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி ஏற்கனவே மருத்துவர்கள் மேல் இருக்கும் அதிருப்தியை அதிகப்படுத்தும், மரியாதையை குலைக்கும் என்று அவர்கள் நம்புவது நியாயமானதே. ஆனால் ஒரு துறையின் சமூக அந்தஸ்திற்கு பங்கம் வந்துவிடாமல் காக்கும் அந்த மனநிலையே, அந்தத் துறையில் நடக்கும் எல்லா கேடுகளுக்கும் ஆரம்பமாக இருக்கிறது, இல்லையா? இந்தத் துறை சார்ந்த பாசத்தில்தானே கண்டக்டர், ஆட்டோ டிரைவர்களில் இருந்து RTO ஆபீசர்கள், ஆசிரியர்கள், பொதுநலப் பணியாளர்கள் என அனைவரும் சங்கம் வைத்து எந்த பெரிய ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளும் நடந்துவிடாமல் செய்துவிடுகிறார்கள்? நீயா நானா கோபி மேல் வழக்கு தொடுக்கப் போகிறார்களாம். “முதல்வன்”-ல் பஸ்ஸை மறித்து படுக்கும் அதே கண்டக்டர் மனநிலைதான்.

இந்த நாட்டில் மருத்துவத்துறை என்றில்லை, எல்லா அக்கிரமங்களும் எல்லா துறைகளிலும் சரி சமமாகவே நடக்கிறது. “இந்தியாவில் ஊழல் புரையோடி போய்டுச்சு”னு சொன்னா ஒத்துகுவாங்கள், மற்ற எல்லா துறையும் சீரழிஞ்சு போச்சுனா ஒத்துகுவாங்கள், ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் துறை பற்றி சொன்னால் உடனே கொடி பிடித்துக் கொண்டு ஒவ்வொருவரும் வந்து விடுகிறார்கள். நீங்கள் யாரையும் குற்றம்/குறை மட்டும் கூறிவிட முடியாது, அந்த அந்த துறை சார்ந்த பிதாமகர்களாக தன்னை கருதிக் கொண்டு, “நாங்கள் எல்லாம் புனித பசுக்கள், 1% தான் கெட்டவர்கள் எங்களிடையே உள்ளார்கள்” என்று வக்கீலிலிருந்து, RTO ஆபிசர்கள், கண்டக்டர்கள், தாசில்தார்வரை, எல்லா துறை ஆட்களும் கொடி பிடித்துக்கொண்டு வந்து விடுவார்கள். அந்தத் துறையில் நடக்கும் எல்லா அவலங்களுக்கும் இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

ஒரு ஆசிரியர் தவறு செய்தால் கூட அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கே முடியவில்லை, கூட்டாக ஸ்டிரைக் செய்து எந்தவித தண்டனையும் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு துறை பற்றிய விவாதங்கள் அதை பற்றிய விழிப்புணர்வு நமது நாட்டிற்க்கு மிகவும் தேவை. ஆனால் அந்த துறை சார்ந்த விவாதங்களுக்கு எதிராக, அதை உருவாக்கும் நபர்களின் உள்நோக்கங்களாக எதையாவது கற்பித்து, விவாத நிகழ்ச்சியில் நடக்கும் சிறு பிழைகளை பெரிதாக்கி, விவாதத்தையே திசை திருப்பி ஒன்றுமில்லாமல் ஆக்கும் நபர்கள் அந்த துறையின் எல்லா அக்கிரமங்களுக்கும் துணைபோகிறார்கள் என்றே சொல்லுவேன். இப்பொழுதுதான் இது பொது வெளியில் ஒரு விவாதமாக மேலெழுந்து வருகிறது., மருத்துவத்துறை/ கல்வித்துறை போன்றவை நாம் ஒரு முறையாவது அனுபவபட்ட துறை என்பதாலும், நம் மக்களின் எதிர்காலம் அல்லது உயிர் காக்கும் துறை என்பதாலும், முக்கியமானதாகி விடுகிறது.

இல்லை, சில நண்பர்கள் கூறுவது போல் இது போன்ற நிகழ்ச்சிகள் மருத்துவர்கள்/ஆசிரியர்கள் மேல் இருக்கும் அதிருப்தியை அதிகப்படுத்தி, பொது மக்கள் மத்தியில் மரியாதையை குலைக்கும் என்பதால் அப்படி நடக்காமல் தடுத்து இத்துறைகளின் “புனிததன்மை” காக்கப்படத்தான் வேண்டுமா? தனது துறை சார்ந்த ஒழுங்கீனங்களை வெளிப்படுத்தி உள்ளிருந்தே அதற்காக போராடுவது அல்லது அந்த அநியாயங்களுக்கு எதிரான ஒத்த மனநிலையை ஒன்று சேர்ப்பது போன்ற தார்மீக தர்மங்களை இந்த துறை சார்ந்த நபர்களிடம் இனியும் நாம் எதிர்பார்க்கத்தான் முடியுமா?

அன்புடன்
முருகதாஸ்

அன்புள்ள முருகதாஸ்,

எனக்கு நல்ல மருத்துவ நண்பர்கள் சிலர் உண்டு. ஆயினும் இது சார்ந்த என் மனப்பதிவை சொல்லிவிடுகிறேன். நீயா நானா நிகழ்ச்சியில் கோபி சொன்ன கருத்துக்களை மேலும் தீவிரமாக அதே நிகழ்ச்சியில் ஒருவருடம் முன் நான் சொல்லியிருக்கிறேன்.

ஆசிரியர்கள், டாக்டர்கள் என்னும் இரு தரப்பையும் நாம் ஒரு தொழிலைச்செய்து ஊதியம் பெறுபவர்களாக பார்ப்பதில்லை. ஊதியம் பெற்றாலும் அவர்களை ஒருவகை சேவை செய்பவர்களாகத்தான் அணுகி வருகிறோம். ஆகவேதான் அவர்களை ஒரு தொழிலைச் செய்பவர்கள் என்பதற்கும் மேலாக மதிக்கிறோம். குரு என்றும் ரட்சகன் என்றும் நினைக்கிறோம்.

இந்தக் காரணத்தால்தான் அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஏமாற்றம் கொள்கிறோம். கண்டிக்கவும் செய்கிறோம். ஒரு கட்டிட காண்டிராக்டரை அல்லது ஒரு பொறியாளரை அல்லது வழக்கறிஞரை நாம் அப்படி மதிப்பதில்லை, ஏமாறுவதில்லை. ஆகவே உணர்ச்சிகரமாக கண்டிப்பதும் இல்லை.

காரணம் கட்டிடப்பொறியாளர் அல்லது வழக்கறிஞர் போன்ற தொழில்கள் முதலாளித்துவ காலகட்டத்தில் உருவாகி வந்தவை. அவை தொழில்கள் மட்டுமே. ஆனால் மருத்துவர், ஆசிரியர் தொழில்கள் தொன்மையானவை. நமது பாரம்பரியம் உருவாக்கிய தொன்மையான மனநிலைகள் கொண்டே அவற்றை நாம் அணுகிவருகிறோம். அதாவது மருத்துவரும் ஆசிரியரும் மரபார்ந்த படிமங்களும்கூட. அவை உடைவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்றைய முதலாளித்துவச் சூழலுக்காக நம் உளவியலை மாற்றியாக வேண்டியிருக்கிறது. மருத்துவர் என்பவர் உயிர்காக்கும் தேவன் அல்ல. ஊதியம் பெற்றுக்கொண்டு தான் கற்றுக்கொண்ட சேவையை விற்பவர், அவ்வளவுதான். ஆசிரியர் என்பவர் குரு அல்ல. ஊதியம் பெற்றுக்கொண்டு ஒரு சேவையை ஆற்றுபவர் அவ்வளவுதான். அதற்குமேல் எந்த மரியாதையையும் அவர்களுக்கு அளிக்கவேண்டியதில்லை. அவர்களிடம் நமக்கு இருக்கவேண்டியது ஊதியமளித்து சேவை பெறுபவரின் மனநிலை மட்டுமே.

மறைமுகமாக பெரும்பாலான டாக்டர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். ‘நான் செய்வது தொழில், அதை லாபகரமாகச் செய்யவேண்டும் அல்லவா?’ என்கிறார்கள். ‘இத்தனை லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேனே’ என்கிறார்கள். ‘இதையே ஒரு எஞ்சினீயரிடம் கேட்பாயா?’ என்கிறார்கள். அவர்கள் சொல்வது முழுக்க உண்மை. அவர்கள் கோருவது ஒரு வணிகச்சேவையாளருக்கான சமூக இடம் மட்டுமே. அதை மட்டும் அவர்களுக்குக் கொடுத்தால் போதும். அதற்கு அப்பால் நாமே அவர்களை தூக்கி வைத்துவிட்டு அவர்கள் அப்படி இல்லை என்று புலம்புவதில் பொருளில்லை.

வேறெந்த சேவையாளரையும், பணியாளரையும் நாம் எப்படி அணுகுகிறோம்? முதலில் அவர் நமது நலனுக்காகப் பணியாற்றுபவர் அல்ல, தன்னுடைய சொந்த லாபத்துக்காகப் பணியாற்றுபவர் என வகுத்துக் கொள்கிறோம். ஆகவே அவரை எப்போதும் சந்தேகத்துடன் மட்டுமே அணுகுகிறோம். அவரது தகுதி, சேவை ஆகியவை நாம் கொடுக்கும் பணத்துக்கு ஈடாக உள்ளனவா என்று சோதித்துக்கொள்கிறோம். இல்லை என்றால் அவரை மாற்றுகிறோம். அவர் வேண்டுமென்றே பிழை செய்தால் சட்டத்தின் துணையை நாடுகிறோம்.

டாக்டர்கள் பணம்பெறும்போது தங்களுடையதை தொழில் என வாதிடுகிறார்கள். ஆனால் அதில் அவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு எதிராக சட்டம் எழும்போது தாங்கள் மானுடசேவை செய்வதாக வாதிடுகிறார்கள். சென்ற இருபதாண்டுகளில் டாக்டர்களை சட்டக் கண்காணிப்புக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மிகமிக மெல்லத்தான் முன்னகர்ந்துள்ளன. டாக்டர்களின் வலுவான கூட்டு சக்தி அதற்கு தடையாக உள்ளது.

டாக்டர்கள் – மருந்துக்கம்பெனிகள் – மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்கள் என்னும் மூன்று சக்திகளின் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் சாமானியனின் வாழ்க்கையையே அழித்து லாபம் பெறும் நச்சு சக்தியாக இன்றே இது வளர்ந்து வந்துள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வை நாம் அடையாமல் தடுப்பது டாக்டர்கள் பற்றி நாம் கொண்டுள்ள மனப்பிரமையே.

டாக்டர் தொழில் முழுமையாகவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் எல்லைக்குள் வந்தாகவேண்டும் என்பதும், டாக்டர்களின் பிழைகள் தேவை என்றால் பொதுவான சமூகசேவகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவர்கள் கொண்ட குழுக்களால் பரிசீலிக்கப்படவேண்டும் என்பதும் இன்றைய முக்கியமான கோரிக்கைகளாக அமையவேண்டும். இந்திய மருத்துவம் மிகக்கடுமையான சட்டக்கண்காணிப்புக்கு உட்பட்டாகவேண்டிய சூழல் இன்றுள்ளது.

டாக்டர்களை எவ்வகையிலும் சிறப்பாக மதிக்கவேண்டியதில்லை, சேவையளிப்பவர்களாக மட்டும் அணுகுவோம். உலகம் முழுக்க டாக்டர்களை இன்று அப்படித்தான் அணுகுகிறார்கள். அந்த அணுகுமுறையே இன்றைய சூழலில் நமக்குப் பாதுகாப்பானது, லாபகரமானது. ஒருபோதும் ஒரு கட்டிடப்பொறியாளரை முழுமையாக நம்பி நம் பணத்தையும் பொருளையும் ஒப்படைப்பதில்லை. ஒருபோதும் டாக்டர்களையும் நம்பக்கூடாது. நம் உடலையும் உயிரையும் கொண்டு அதிகபட்ச லாபத்தை அடைய முயலும் ஒரு சேவை வணிகர் அவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

நான் அறிந்தவரை புத்திசாலியான தொழில்முனைவோரும் வணிகர்களும் இன்று டாக்டர்களை அவ்வகையில்தான் அணுகுகிறார்கள். நடுத்தர வர்க்கமாகிய நாம்தான் சின்னவயதில் கிடைத்த மனப்பிம்பங்களை சுமந்துகொண்டு குழப்பிக்கொள்கிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த தலைமுறை டாக்டர்களையும் ஆசிரியர்களையுமெல்லாம் அப்படித்தான் அணுகும். அதுவே இயல்பானது, பயனுள்ளது.

ஜெ

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் /Aug 26, 2014

முந்தைய கட்டுரைவாசகர்களின் நிலை -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75