பகுதி இரண்டு: 1. சொல்லெழுதல்
கன்றுகளின் கழுத்துமணியோசைகள் சூழ்ந்த பர்சானபுரியின் ஊர்மன்றில் நின்றிருந்த கல்லாலமரத்தின் அடியில் மரப்பீடத்தின்மேல் புலித்தோலைப் போட்டு அமர்ந்துகொண்டு ஆயர்குடியின் முதுதாதை மகிபானு தன் தொல்குடியின் கதையைச் சொன்னார். எதிரே இருந்த ஏகநம்ஷையின் சிற்றாலயத்துக்குள் நெய்ச்சுடர் நின்றெரிய, கருநாகத் தொகை போலெழுந்த பதினாறு கைகளிலும் கொலை ஆயுதங்களுடன் செவ்வைரக் கண்கள் ஒளிவிட வெண்பல் வாய்திறந்து வெறிக்கோலம் கொண்டு நின்றிருந்தாள் அன்னை. அவள்முன் படைக்கப்பட்டிருந்த செம்மலர்களும் அரிசிப்பொரியும் காற்றில் பறந்து முற்றத்தில் வீழ்ந்துகிடந்தன.
மன்றுமுன்னால் குளிருக்கு மரவுரிகளைப் போர்த்தியமர்ந்த மூதன்னையரின் மடிவெம்மையில் ஒண்டி அமர்ந்து திரண்ட நீள்விழிகளுடன் குழந்தைகள் கதை கேட்டிருந்தன. தரையிலிட்ட பாய்களில் அமர்ந்த பெண்களும் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஆண்களும் அறியும்தோறும் அறியவிரும்பும் தொல்கதையை ஒவ்வொரு சொல்லாக மீண்டும் கேட்டனர். கால்நீட்டி அமர்ந்திருந்த முதியவர்கள் அந்த மன்றில் முன்பிருந்து அக்கதையைச் சொன்ன அத்தனைபேரின் சொற்களும் அங்கே நிறைந்த குளிர்காற்றில் இருப்பதாக உணர்ந்தனர்,
“ஒற்றைப்பெருஞ்சொல்லால் உலகுபடைத்த உத்தமரான அத்ரி பிரஜாபதிக்கும் அனசூயைக்கும் பிறந்த மைந்தர்கள் மூவர் முதன்மையானவர்கள். சந்திரன், துர்வாசர், தத்தாத்ரேயர் ஆகியோரை ஆயர்குடிகள் வணங்குகின்றன. சந்திரனிலிருந்து புதன் பிறந்தான். புதனிலிருந்து புரூரவஸ். ஆயுஷ் நகுஷன் யயாதி என்று குலமுறை தொடர்ந்து அறம்திகழ்ந்தது இம்மண்ணில். மூதாதை யயாதியை வாழ்த்துவோம். அவரது குருதி நம் வனங்களில் வேங்கையும் கொன்றையுமாக மலர்க. அவரது கண்ணீர் நமது வனங்களில் கடம்பும் மருதமுமாக மலர்க. அவரது சொற்கள் நம் எண்ணங்களில் வேரோடி இலை தழைத்து எழுக!” மகிபானு கைகூப்பி வணங்கினார்.
“யயாதி மாமன்னர் மணந்தவள் அசுரர்குலத்தரசி தேவயானி. தேவயானிக்கு மணிவயிறு வாய்த்தவர் நம் குலமூதாதை யது. யதுவின் குருதி முளைத்த குலமென்பதனால் நாம் யாதவர். தந்தை சொல்லேற்று யது தன் கோலூன்ற நிலம்தேடி வந்து கோடையில் மெலிந்தோடிய பர்ணசா ஆற்றின் கரையில் அமைத்த நன்னாடே முதல் யாதவ மண் என்பார்கள். ஒவ்வொரு குடியில் இருந்தும் பன்னிரு வருடங்களுக்கொருமுறை பர்ணசா நதிக்கரைக்குச் சென்று ஊற்று தோண்டி நீராடி யதுவின் கால்பட்ட மண்ணெடுத்து கைப்பிடிக்குவையாக்கி மலரும் நீரும் கொடுத்து வணங்கி மீளும் மரபுகொண்டவர் யாதவர். நானும் அவ்வண்ணம் சென்று என் கடன் கழித்துள்ளேன்” என்றார் மகிபானு.
மகிபானுவின் முதுகுரல் அவர்பின் எழுந்த கரியவானின் விண்மீனுடன் சேர்ந்து நடுங்கி ஒலித்தது. குலத்தோரே கேளுங்கள், யாதவமுதல்மன்னன் யதுவுக்கு சஹஸ்ரஜித், குரோஷ்டன், நளன், ரிபு என மைந்தர் நால்வர். சஹஸ்ரஜித்துக்கு சதஜித் என்னும் மைந்தன் பிறந்தான். சதஜித்துக்குப் பிறந்தவர்கள் மகாபயன், வேணுஹயன், ஹேகயன் என்ற மூவர். ஏகவீரன் என்று நம் மன்றுதோறும் அமர்ந்து மலர்கொள்பவர் ஹேகயரே. யாதவப்பெருங்குலம் வேலேந்தி வென்றதும் கோலேந்தி அமர்ந்ததும் குடிசொல்லி நின்றதும் சொல்நிறுத்திச் சென்றதும் ஹேகயசக்ரவர்த்தியின் காலத்திலேயே. யாதவர்சொல் உள்ளவரை வாழும் நம்குலத்து முதல்மன்னர் கார்த்தவீரியர் பிறந்ததும் ஹேகயகுலத்திலேயே என்றறிக. ஆயிரம் தோள்கொண்டான் அணையாப்பெரும் புகழைப் பாடுகின்றன யாதவர் நிலத்தில் துளைகொண்ட மூங்கில்களெல்லாம். அவன் வாழ்க!
ஹேகயப் பெருங்குலம் ஐந்து ஜனபதங்களாகப் பிரிந்து விதிஹோத்ரர்கள், ஷார்யதர்கள், போஜர்கள், அவந்தியர், துண்டிகேரர்கள் என்னும் அரசுகளாகியது. ஐந்து விரல்களாலும் யமுனாவர்த்தத்தை அள்ளிப்பற்றி தான் கொண்டது யமுனை. அமர்ந்திருக்கும் ஆமையே அவர்களின் குலமுத்திரையாக ஆகியது. அவர்களின் கலங்களில் நெய்யும் உள்ளங்களில் வாய்மையும் நிறைந்தன. ஆக்னேயர்கள் என அவர்களை அரசர்கள் வணங்கினர். எங்களை அரசர்கள் அறியவேண்டாம். வைதிகர் அறியவேண்டாம். ஷத்ரியர் எங்களை எண்ணவும் வேண்டாம். அவிகொள்ள வந்து நிற்கும் தெய்வங்களனைத்தும் எங்களை அறியும் என்றனர் யாதவர்.
மாகிஷ்மதியை ஆண்ட கார்த்தவீரியனுக்கு ஜயத்துவஜன், சூரசேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் என மைந்தர்கள் ஐவர். மதுவுக்குப் பிறந்தவர் விருஷ்ணி. இனியவர்களே, விருஷ்ணியின் மைந்தர்கள் விருஷ்ணிகுலம் எனப்பட்டனர். விருஷ்ணிக்கு சுமித்ரன், யுதாஜித், வசு, சார்வபௌமன் என மைந்தர் நால்வர். யுதாஜித்தின் உடல் விரிந்த முளைகளையே விருஷ்ணிகுலம் என்றனர் சான்றோர். ஸினி, சத்யகன், சாத்யகி, ஜயன், குணி, அனமித்ரன், பிருஸ்னி, சித்ரரதன், விடூரதன், என நீர்கண்ட நிலமெங்கும் தழைக்கும் புல் என எழுந்தது விருஷ்ணிகுலம்.
விருஷ்ணிகுலத்து விடூரதர் கருநீர் யமுனையின் கரைசேர் மாநகர் மதுரையை ஆண்டார். ஹேகயகுலத்து ஏகவீரர் அமைத்த அந்நகர் ஆயிரம் யாதவப்பெருங்குலங்களால் நெய்பெய்து எழுப்பப்படும் வேள்வித்தீ என பெருகிக் கொண்டிருந்தது. நெய்யை நாடிய தெய்வங்களெல்லாம் எரியில் எழுந்து வந்து மதுரா மதுரா என்றே நா துடித்தன. ஆக்னேயபுரி என்றும் கோபாலபுரி என்று மதுபுரி என்றும் மாயாபுரி என்றும் கவிஞர் அதை வாழ்த்தினர்.
விருஷ்ணிகுலத்து விடூரதரின் கோல் நின்ற நகர் வேதச் சொல்நின்ற நெடுங்களம் என விண்ணவர்க்கு உவப்பானதாக இருந்தது. என் குலமே, இங்கமர்ந்து எளியேனின் கல்லாச் சொல்தேர்ந்து சொல்லத்தக்கதோ யாதவகுலப்பெருமை? கார்மேகத்தை தன் கேள் என்னலாம் கருங்குருவி. அதன் குரல் இடியோசைக்கு நிகர்கொள்ளுமா என்ன?
விடூரதரின் கொடிவழி வந்தமைந்தர் ஹ்ருதீகர். ஹ்ருதீகரின் மைந்தர் தேவபிதூஷர் பெற்ற சூரசேனரே மதுராவுக்கு உரிமைகொண்டவர். மைந்தர்களே, மண்ணாள்வோன் ஒருகையில் அனலும் மறு கையில் புனலும் கொண்டிருக்கவேண்டும் என்கின்றன நூல்கள். எரிதலும் அணைதலுமாக அவன் நின்றாகவேண்டும். படர்தலும் குளிர்தலுமாக அவன் சொல் அமைந்தாகவேண்டும். மண்ணில் வாழ்கின்றாள் பேராசையின் தெய்வமான திருஷ்ணை. அன்னைப்பெரும்பசுவின் கருணைவிழிகளிலேயே அனலென குடியேறும் பேராற்றல் கொண்டவள் அவள். மண்ணை ஒருகண்ணால் நோக்கும் மன்னன் மறுகண்ணால் தன் மூதாதையரின் சொல்லையும் நோக்கியாகவேண்டும்.
யாதவகுடிசெய்த பாவத்தால் அறம்பிழைத்தார் விடூரதரின் மெய்த்தம்பி குங்குரர். விடூரதரின் கொடிவழியை மதுராவிலிருந்து துரத்தி நகரை படைகொண்டு பற்றிக்கொண்டார். குங்குரரின் கொடிவழி வஹ்னி, புலோமன், கபோதரோமன், தும்புரு, துந்துபி, தரித்ரன், வசு, நாகுகன், ஆகுகன் என வளர்ந்தது. ஆகுகரின் மைந்தர்கள் உக்ரசேனரும் தேவகரும். உக்ரசேனர் மதுராபுரியின் மணிமுடி சூடினார். தேவகர் உத்தரமதுராபுரிக்கு அரசரானார்.
விதர்பநாட்டு வேடர்குலமன்னர் சத்யகேதுவின் மகள் பத்மாவதியை மணந்தார் உக்ரசேனர். அவள் வயிற்றில் பிறந்தவர் மதுராபுரியின் முடிகொண்டுள்ள கம்சதேவர். இளையோரே, அடித்தளத்தில் அளவுபிழைத்த மாளிகை கோபுரத்தில் கோணலையே காட்டும் என்றறிக. மூத்தோர் நெறிமீறும் முதலடியிலேயே முற்றழிவின் முதற்சொல்லும் சொல்லப்பட்டுவிட்டது. வாழும் மானுடரைச்சுற்றி நிறைந்திருக்கின்றது மூதாதையரின் மூச்சு. அறிந்தவற்றை மீறலாகும், அறியாமல் இங்கிருக்கும் அவர்களை எவர் மீறிச்செல்ல முடியும்?
விருஷ்ணிகுலத்து சூரசேனரின் மைந்தர் வசுதேவர் தந்தை சொல் கேளாது தன் விருப்பே வழிகாட்ட மதுராபுரிக்குச் சென்று உக்ரசேனரின் அமைச்சரானார். அவர் தங்கை பிருதை மார்த்திகாவதியின் போஜர்குலத்து குந்திபோஜரின் மகளாகச் சென்றாள். வசுதேவரை தன்னுடன் வைத்து விருஷ்ணிகுலத்தை வென்றெடுக்கலாமென்று எண்ணினார் கம்சர். குந்தியை மணந்து போஜர்களையும் வென்றால் யாதவகுலங்களனைத்தையும் ஆளும் முதன்மை கொள்ளலாமென்று திட்டமிட்டார்.
குந்திதேவியோ அஸ்தினபுரியின் அரசியாகச் சென்றாள். அஸ்தினபுரியுடன் பகைமைகொண்டு மகதத்தின் அரசர் ஜராசந்தனிடம் சென்று கம்சர் பணிந்தார். ஜராசந்தரின் ஆசைமனைவியர் பெற்ற ஆஸ்தி, பிராப்தி என்னும் இரு அரசமகளிரை மணந்து மகதத்தின் பெரும்படைகளை அழைத்துவந்து மதுராபுரியை நிறைத்தார்.
யாதவர்களின் தொல்நகரில் இன்று மகதர்களின் வேல்கள் மின்னி நிறைந்துள்ளன. நம்குடி மூதாதையர் பெயர்களை மகத நாட்டு வீரர்கள் விரல்சுட்டி அதட்டி அருகழைப்பதை நான் கேட்டேன். மண்ணிலெவருக்கும் மிடிமைசெய்யா நம் முதுகுடி மூத்தோர் நாணித் தலைகுனிந்து நகர் நீங்கும் கண்ணீர்த்துளிகளை கண்டேன். விண்ணிலமர்ந்த ஹேகயரும் கார்த்தவீரியரும் எழுப்பிய நீள்மூச்சின் வெம்மையை என் உடலெங்கும் அறிந்தேன்.
உத்தர மதுராபுரியையும் ஒருங்கிணைத்து மதுராபுரியை விரித்தெடுக்க விழைந்தார் கம்சர். தேவகரின் மைந்தர்களான தேவானன், உபதேவன், சுதேவன், தேவரக்ஷகன் என்னும் நான்கு பெருவீரர்கள் இருக்கையில் போர்மூலம் அது நிகழாதென்றறிந்தார். ஆகவே தேவகியை தன் அமைச்சர் வசுதேவருக்கு மகற்கோள் எடுப்பதொன்றே வழி என்று எண்ணி தூதனுப்பினார். தூதனை வணங்கி “மதுராபுரியின் மண் வேண்டுமா என்று என் மகளே சொல்லட்டும்” என்று சொல்லியனுப்பினார் தேவகர்.
அறத்தை வெல்லும் ஆசை கொண்ட கம்சரை அஞ்சிய தேவகர் தன் மகளுக்கு தன்மண ஏற்பு நிகழ்வை அமைத்திருந்தார். பதினெட்டு யாதவகுலங்களுக்கும் அழைப்பிருந்தமையால் நானும் என் மூன்று தோழர்களும் அவ்விழவுக்குச் சென்றிருந்தோம். ஷத்ரிய மன்னர்களும் விழாவுக்கு வரவேண்டுமென்று தூதர்களை நாடெங்கும் அனுப்பியிருந்தார் தேவகர். யமுனையின் பெருக்கில் கொடிகள் அசையும் அணிப்படகுகள் பாய் புடைத்து வந்துகொண்டே இருந்தன. உத்தரமதுராபுரியின் தெருக்களிலெங்கும் ஒரே பேச்சுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. தங்கையின் திருமணத்துக்கு மதுராபுரியின் கம்சதேவருக்கு அழைப்பில்லை.
நாங்கள் தங்கிய ஆக்னேய சத்திரத்திலும் இரவெல்லாம் அதுவே பேச்சாக இருந்தது. இளவரசி தேவகிக்கும் விருஷ்ணிகுலத்து வசுதேவருக்கும் காதலிருந்ததாக ஒரு செய்தி நகரில் உலவுவதாக சித்ரபதத்தில் இருந்து வந்த யாதவராகிய தாமசர் சொன்னார். “தாசிகள் சொல்லும் செய்திகளை நம்பியா அரசு சூழ்வது?” என்று நான் சினந்து கேட்டேன். “இளவரசிக்கு வசுதேவரை பிடித்திருந்தால் தேவகர் ஏன் அதை மறுக்கவேண்டும்?” என்றேன். “முதுயாதவரே, வசுதேவர் இன்று கம்சரின் கையிலிருக்கும் சிறு பாவை மட்டுமே” என்றார் தாமசர்.
சினம்கொண்டெழுந்து “விருஷ்ணிகுலத்தின் கொழுந்து ஒருபோதும் வாடுவதில்லை யாதவரே” என்று நான் கூவினேன். “விடூரதரின் கொடிவழிவந்தவர், சூரசேனரின் மைந்தர் எவருக்கும் அடிமைசொல்லமாட்டார். அவர் வந்து தேவகியை கைப்பிடித்துக் கொண்டு சென்றால் அவரது கொடிக்கீழே யாதவகுலங்கள் அணிவகுக்கும். மதுராபுரியின் கொடியன்றி வேறேதும் யமுனையில் பறக்காது” என்றேன். ஆனால் அங்கிருந்த எவரும் என் குரலை ஏற்கவில்லை என்று அவர்களின் அமைதியைக் கண்டு அறிந்துகொண்டேன். பத்ரவனத்தின் நெய்வணிகரான ரிஷபாக்ஷர் “விரைவில் எரியும் மரம் விறகாவதில்லை” என்றபோது அனைவரும் தலையசைத்தனர்.
மறுநாள் மணநிகழ்வுக்காக நகர்மன்றுக்குச் சென்றபோதுதான் ஏறுதழுவலையே மணநெறியாக தேவகர் அறிவித்திருப்பதை அறிந்தேன். ரிஷபாக்ஷர் “இப்போது அறிந்துகொள்ளுங்கள் முதுயாதவரே. நூல்கற்று நெறிதேரும் வசுதேவர் ஒருபோதும் மணமன்றில் வந்து நின்றுவிடலாகாதென்றே இந்நெறியை வைத்துள்ளார் தேவகர்” என்றார். அங்கிருந்த அத்தனை நெஞ்சங்களிலும் ஓடியது அவ்வெண்ணமே என்று முகங்கள்தோறும் சென்றமர்ந்து எழுந்த என் விழிகள் அறிந்தன. மன்று அமர்ந்து அவை நோக்கி வியந்துகொண்டேன், அங்குள்ள ஒவ்வொருவரும் விழைவதெதை என்று. இளையோரே, எப்போதும் மக்கள் விழைவது இயலாதது நிகழ்வதையே.
மன்றுநின்றது மாகாளை ஒன்று. மின்னும் கூர்முனை பொருத்திய கொம்புகளுடன் மலையிறங்கி வந்த பெரும்பாறை போன்ற கரிய காளைக்களிறு. தோரணங்களாடிய அவைமேடையில் தேவகர் தன் அரசியுடன் வந்தமர்வதை அமைச்சரும் படைத்தலைவரும் கொலுக்கொள்வதை வேதநாதத்தை மங்கலப்பேரொலிகளை முறைமைச்சொற்களை வாழ்த்தொலிகளை எதையும் கருதாமல் அவ்வெருதை மட்டுமே நோக்கி அமர்ந்திருந்தேன். அதன் சின்னஞ்சிறுவிழிகளில் தேங்கிய மதத்தைக் கண்டபோது காதலின் விரைவெழுந்து வசுதேவர் வந்து நின்றுவிடலாகாதே என்று அஞ்சினேன். மைந்தரே, நூறு மதஏறுகளை களம்பற்றி வென்றவன் நான். அவ்வெருதுக்கு நிகரான ஒன்றைக் கண்டதில்லை.
செருக்கடித்து முன்காலால் மண்கிளறி தலைசாய்த்து விழி உருட்டி மூச்சு சீறி நின்றது. பெருவெள்ளமெழுந்த யமுனை போல அதன் உடல் ஆங்காங்கே சிலிர்த்துக்கொண்டது. அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்தது தேவகியின் கழுத்திலணியப்படவேண்டிய மஞ்சள்நூல் மணிமங்கலம். சுற்றிலும் பட்டு விதானங்களுக்குக் கீழே அமைந்த அணியிருக்கைகளில் இளமன்னர் அமர்ந்திருந்தனர். அங்கனும் வங்கனும் கங்கனும் கலிங்கனும் மாவலியும் தேவலனும் என ஷத்ரியர் பதினெண்மர் அங்கு வந்திருந்தனர். நூற்றெட்டு யாதவகுடித்தலைவர் வந்திருந்தனர். இளையோர் தசைபுடைத்த கைகளால் மீசையை வருடி எருதை நோக்கி நின்றனர்.
அன்றுதான் துவள்கொடி போல் உடல்கொண்ட தேவகியை நான் முதலில் பார்த்தேன். நீளச்செம்முகத்தில் அகன்றகருவிழிகள் அடைகாக்கும் கருங்குருவி போல வெண்விழிகள் மேல் சிறகுசரித்திருப்பதை கண்டதுமே அவள் உள்ளத்தை அறிந்துகொண்டேன். அவையமர்ந்ததுமே அவள் மன்றுமுழுக்க விழிதுழாவி பின் தலைகுனிந்து நெட்டுயிர்த்ததைக் கண்டு அவள் தேடுவது எவரை என்றும் உணர்ந்துகொண்டேன். அவர் அங்கிருக்கவேண்டும் என்று நானும் வேண்டிக்கொண்டேன்.
ஆனால் உத்தரமதுராபுரியைச்சுற்றி தன் முழுப்படைகளையும் நிறுத்தி நீரிலும் நிலத்திலும் மதுராபுரியின் பாதைகளனைத்தையும் மூடியிருந்தார் தேவகர். எதிர்ப்படும் ஒவ்வொரு வீரனின் விழிகளிலும் படைக்கல முனைகளிலும் இருந்த தேடலை நினைவுகூர்ந்தேன். நலம் திகழ்க என்று என் நெஞ்சுக்கு நானே சொல்லி அமர்ந்திருந்தேன். அரியணையில் அமர்ந்திருந்த தேவகர் விழிசரித்து அருகே வணங்கிய அமைச்சர்களுக்கு ஆணைகளை இட்டுக்கொண்டே இருப்பதைக் கண்டேன்.
நிமித்திகன் எழுந்து யாதவகுலமுறையைக் கிளத்தினான். மண்வாழ்த்தும் நீர்வாழ்த்தும் குடிவாழ்த்தும் கோன்வாழ்த்தும் சொல்லி மணமன்றின் முறைமைகளை அறிவித்தான். எருது கொள்ளலே மணநெறி என்று அவன் சொன்னதும் அவை பேரொலி எழுப்பி அதை வரவேற்றது. மணம்கொள்ள வந்தவர்கள் மேலாடைகளைந்து கச்சிறுக்கி களம் வந்து நின்றனர். ஆனால் மேடைமுகப்பு திறந்து காளை வெளிவந்ததும் களம்வந்தவர்களில் பலர் பின் நடந்தனர். அவர்களைக் கண்டு அவையினர் எக்காளமிட்டு கூவிநகைத்தனர்.
மதவிழிகளால் மன்றை நோக்கி கனத்த குளம்புகளை மெல்ல எடுத்துவைத்து சரிந்த பெருந்திமில் மெல்ல குலைந்தசைய கழுத்துத் தசைவளைவுகள் உலைந்து உலைந்தாட செம்மண் பரவிய களத்திற்கு வந்து கூரொளி மின்னிய கொம்புகளைத் தாழ்த்தி அசையாமல் நின்றது எருது. அதன் மூச்சின் ஒலியை அனைவரும் கேட்டனர். அதன் உடல் சிலிர்ப்பை அனைவரும் கண்டனர். சிரிப்புகள் அடங்கி அஞ்சிய விழிகளாக ஆயிற்று ஆயர்ப்பெருஞ்சபை.
எருது முன்னெழுந்தோறும் அங்கனும் வங்கனும் அஞ்சி பின்வாங்குவதைக் கண்டேன். மாளவன் தன் கைகளை முன்னால் நீட்டி மெல்லச்சென்று விலாவணைய நாகமென சீறித் திரும்பி அவனை கொம்பிலெடுத்து குலைத்து வீசியது எருது. சிறுத்தைகள் போல பாய்ந்து அதன்மேல் விழுந்தனர் இளையோர். கருநாகப்பின்னல் போல கைகள் அதைச்சுற்றிக்கொண்டன. இளையோரே, அவர்கள் கால்கள் காற்றில் சுழல அலறி எழுந்து சிதறிவிழுந்ததையே அங்கிருந்தோர் கண்டோம். இடிந்த வீட்டின் உத்தரங்களும் தூண்களும்போல கிடந்த அரசர்கள் மீது குளம்புதூக்கி வைத்து குதித்து வந்து நாற்புறமும் நோக்கி சீறிச்செருக்கடித்து மண் தோண்டிப்பறக்கவைத்து நின்றது காளை.
தேவகரின் அவைப்பெண்டிர் தங்கள் நெஞ்சங்களை கைகொண்டு பற்றி திகைத்து அமர்ந்திருந்தனர். இளவரசியர் சுருதேவியும் யசோதையும் சுருதிஷ்ரவையும், ஸ்ரீதேவியும், உபதேவியும் ஸ்வரூபையும் பெருமூச்சு விட்டு மெல்ல அமைந்தனர். நடுவே தேவகி கண்ணீர் வழிய அவைக்களத்தை நோக்கி அமர்ந்திருந்தாள். இளையோரே, அன்று அப்பெண்டிரின் கைகவரும் ஆண்மகனே அவை நிற்கவில்லை என்றுதான் அனைவரும் எண்ணினர்.
அப்போது தேவகரின் சேடியர் நடுவிருந்து செம்மஞ்சள் ஆடையணிந்த முதுசேடி ஒருத்தி எழுந்து மன்றுநோக்கி ஓடிவரக்கண்டோம். உடனே அவை அறிந்துகொண்டது அது கம்சதேவர் என்று. அவைக்கொலுவமர்ந்த தேவகர் எழுந்து கைநீட்டி ஆணையிட்டுக் கூவ அதற்குள் மேலாடை களைந்து இடைக்கச்சை இறுக்கி கம்சர் களம்வந்து நின்றுவிட்டார். திகைத்து எழுந்து நின்ற தேவகரின் விரித்த கரங்கள் அசைவிழந்தன. கம்சர் தொடைகளை ஓங்கி அறைந்த ஒலிகேட்டு பெருங்காளை சினந்து சீறி தலைதாழ்த்தியது. அதன் பின்னங்கால் மண்ணைக் கிளற குறியவால் சுழன்று சுழித்து நின்றது.
காளை பாய்வதற்குள் கம்சர் பாய்ந்து அதன் கொம்புகளைப் பற்றிக்கொண்டார். தன் வலக்காலை அதன் முன்னிரு கால்களுக்கு நடுவே செலுத்தி உந்தி நிலையழியச்செய்து மண்ணில் சரித்தார். பேரொலியுடன் மண்ணை அறைந்து விழுந்து நான்குகால்களையும் உதைத்துத் துடித்த காளையின் கொம்பிலிருந்த மங்கலநாணை பறித்தெடுத்து எழுந்து நின்று தன் தோள்களை ஓங்கியறைந்து “இது என் நண்பன் வசுதேவனுக்காக நான் வென்ற மங்கலநாண்! இதை எதிர்ப்பவன் எவனும் இக்கணமே இங்கு களமிறங்கலாம்!” என்றார். வங்கன் கைதூக்கி “வாழ்க மதுராதிபன்!” என்று கூவ பிற மன்னர்களும் வாழ்த்துரை எழுப்பினர்.
தேவகரின் படைப்பிரிவிலிருந்து மூன்றுகுதிரைகள் இழுத்த விரைவுத்தேர் படையரணை உடைத்து உள்ளே வந்தது. சூதனைப்போல் தலைக்கச்சை அணிந்து ரதத்தில் நின்ற வசுதேவரைக் கண்டதும் அவைப்பெண்டிர் நடுவிலிருந்து தேவகி இறங்கி ஓடிவந்து அவர் கைகளைப்பற்றிக்கொண்டாள். ரதமோட்டி வந்த ஸினி வாள் சுழற்றி முன் சென்று அவையமர்ந்த இளவரசியரை கூட்டிவந்து ரதத்தில் ஏற்றிக்கொண்டார். படைக்கலமேந்தி ஓடிவந்த வீரர்களை வீழ்த்தி விரைந்துசென்ற கம்சர் அமரத்தில் ஏறிக்கொள்ள தேவகியைத் தூக்கி தேர்த்தட்டில் ஏற்றிக்கொண்டு வசுதேவர் நின்றார்.
சினந்தெழுந்து குதிரைகளில் ஏறி வந்தனர் இளவரசர்கள். பறந்தெழுந்த அம்புகளையும் வேல்களையும் விலக்கி துள்ளி ஆர்ப்பரித்த ஊர்மக்கள் குரல் நடுவே தேரை ஓட்டிச்சென்றார் கம்சர். அவருக்குப்பின்னால் நூறு விரைவுத்தேர்கள் வில்லாளிகளுடன் துரத்திச்செல்ல வில்லேந்தி நாணொலித்து முன்னால் எழுந்தனர் தேவகரின் மைந்தர். மன்றிலிருந்து எழுந்தோடி காவல்கோபுரமொன்றில் ஏறிச்சென்று அவ்விரைவாடலை நான் கண்டேன். மண்ணில்பரந்த செம்மேகமென புழுதி சுருண்டெழ அதன் மேல் சகடங்கள் அதிர அச்சுகள் கூவ கொடிகள் துடிதுடிக்க நிலம்நடுங்கி ஊரிடிந்து சரியும் பேரொலி எழுப்பி உருண்டோடிச் சென்றன தேர்கள்.
கம்சரின் குதிரைகளின் உடலில் அம்புகள் தைத்து குருதி வழிந்தது. அவரது கொழுத்த பெருந்தோளில் ஒரு அம்பு தைத்து நின்றது. வலக்கையால் கடிவாளம் பற்றி இடக்கையால் அவர் விட்ட அம்புகள் பட்டு ரதங்களில் ஓடிய வீரர்கள் உதிர்ந்து விழுந்து துடித்தனர். அவர்கள் மேல் சகடங்கள் ஏறிச்சென்றன பிற ரதங்கள். பின்னர் புழுதியடங்கியபோது உடைந்த ரதங்களும் துடிக்கும் குதிரைகளும் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தன.
உத்தரமதுராபுரியில் இருந்து யமுனைக்கரையோரமாகவே சென்றனர் வசுதேவரும் கம்சரும். படையரண்களை உடைத்து சோலைகளைக் கடந்து மதுராபுரியின் புறநகர்ச் சோலையை அடைந்து செம்மண் படிந்த சிறுசாலையில் ஏறிச்சென்றபோது அங்கு நிகழ்ந்ததென்று ஒரு கதை சொல்லப்படுகிறது. இளையோரே, எல்லையாளும் ஏகநம்ஷையின் சிற்றாலயத்தில் வெறியாட்டெழுந்து கைவிரித்து கனன்றாடி வெளியே ஓடிவந்த முதுமகள் ஒருத்தி கம்சரை நோக்கி கைசுட்டி “குலமுறை அறியா குருடா! உன் மண்ணாள வேண்டியவன் மருகன் அல்லவா! உன் தங்கை வயிற்றில் பிறப்போன்! எட்டாமவன்! உன் உயிர்குடித்து தலைமுறைப் பழிதீர்ப்பான்! என்றுமழியா பெரும்புகழ்பெறுவான்!” என்று கூவிச் சுழன்று ஆடி தளர்ந்து விழுந்தாள்.
தேர்த்தட்டில் அமர்ந்திருந்த கம்சதேவர் அவ்வெறி விழிகளை அருகே கண்டு அஞ்சி சொல்லற்றார். ரதம் அரண்மனைக்குச் சென்றதுமே நிமித்திகரை அழைத்து அதன் நெறியும் பொருளும் என்ன என்று கேட்டார். “அரசே, நீங்கள் யாதவப்பெண்ணுக்குப் பிறந்தவர் அல்ல. பசுக்குலத்தின் அரசுரிமை பெண்வழியே செல்வதென்றறிக. குங்குரரின் கோலுக்குரியவள் தேவகரின் மகளே. அவள் மணிவயிற்றுதிக்கும் மைந்தனுக்குரியதே மதுராபுரியின் பட்டம்” என்றார் நிமித்திகர்.
“அதன்பின்னர் தேவகியையும் வசுதேவரையும் எவரும் பார்த்ததில்லை” என்றார் முதுயாதவராகிய மகிபானு. “அவர்கள் மதுராபுரியின் சிறையிருளில் வாழ்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தேவகி எட்டு மைந்தரைப் பெற்று எட்டையும் தன் கையால் கொன்றபின்னரே அவளை கம்சர் விடுவிப்பார் என்கிறார்கள் மதுராபுரிக்கு நெய்கொண்டுசெல்லும் ஆயர்கள். ஏழுமைந்தர்களை கொன்றுவிட்டார் என்றும் எட்டாவது மைந்தன் கருவிலிருக்கிறான் என்றும் சந்தைக்கு வந்த மதுராபுரி வணிகன் சொன்னதை நானே கேட்டேன்.”
இலைநுனிகளில் இருந்து பனிசொட்டத்தொடங்கியது. கன்றுமணிகளின் தாளத்துடன் அவ்வொலி இணைந்துகொண்டது. பெருமூச்சுவிட்டு அசைந்தமர்ந்த மகிபானு “மண்ணில் மாளாப்பெருந்துயரம் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது இளையோரே. ஆனால் அன்னையரின் விழிநீருக்கு அவையேதும் இணையில்லை. மன்னவர் ஆள்வதும் அறங்கள் திகழ்வதும் தெய்வங்கள் எழுவதும் அன்னை விழிநீரின் ஈரத்தில் வேரூன்றியே” என்றபின் திரும்பி கோயில் நோக்கி கைகூப்பி “தாயே, தாங்குபவளே, நீ முனியாதவரை இங்கு வாழும் எளிய மானுடம்!” என்று சொல்லி கையூன்றி எழுந்தார்.