பகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு
உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன்!’ என்ற ஒரு சொல்லாக மீண்டு வந்தாள். பனிவிழும் வனத்தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள்.
தன்னுள்தானே நுழைந்து மீண்டுமொரு விதையாக ஆகவிழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து முறுக்கி முட்டுகளின்மேல் முகம்சேர்த்து அமர்ந்துகொண்டாள். இன்னதென்றறியாமல் எண்ணி எண்ணி ஏங்கி மறுகிய இளநெஞ்சம் ஏக்கத்தின் சொல்வடிவாக ‘ஏனுளேன்?’ என்றுணர்ந்து உருகிவழிந்து கண்ணீரின் வெளியாக ஒளிகொண்டது. காற்றிலாடிய அச்சொல்மேல் அமர்ந்து ‘இங்குளேன்! ஏனுளேன்!’ என்று குரலின்றி கூவியது தாபத்தைச் சொல்லத்தெரியாத பெண்குயில்.
ஆவணிமாதத்து எட்டாம் கருநிலா நாளின் புலரியில் யமுனைநதிக்கரையிலமைந்த பர்சானபுரியின் ஆயர்குடித்தலைவர் ரிஷபானுவின் இல்லத்தில் அவரது ஒரேமகள் ராதை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். கண்ணீரின் இனிமையை பெண்களன்றி யாரறிய முடியும்? ஒவ்வொரு துளியும் தித்திக்கும் கன்னிமையின் விழிநீரை அவள் முதல்முதலாக அறிந்தாள். சொல்லில் நிறையும் மதுரகவிப்பொருள் போல மென்மயிர் வகிடு முதல் உள்ளங்கால் வெண்மை வரை நிறைந்தது கண்ணீர். வேய்ங்குழலை நிரப்பி வழியும் இசையென வழிந்தது.
மெல்லிய விசும்பல் ஒலி அரையிருளில் எழக்கேட்டு கண்விழித்த அன்னை புரண்டு தன் உடலொட்டிப் படுத்திருந்த அவள் விலகிவிட்டிருப்பதை உணர்ந்து “என்னடி?” என்று சொல்லி கைநீட்டி அவளை மீண்டும் அருகணைக்க முயன்றாள். அவள் கைதொடுகையை அரைக்கணம் முன்னரே உணர்ந்து விதிர்த்து அவள் விலகிக்கொண்டாள். “ஏனடி?” என்றபடி அன்னை எழுந்தமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தாள். சிவந்து கனன்ற அவள் முகத்தைக் கண்டு “காய்ச்சலோடி?” என்று மீண்டும் கைநீட்டி அவள் நெற்றியை தொடவந்தாள். தொடப்படுவதற்குள்ளாகவே ராதை அத்தொடுகையிலிருந்து அகம் விலகப்பெற்றாள்.
அன்னையின் தொடுகையை என் அகம் விலக்கும் விந்தைதான் என்ன? இனி அவள் இடைமேல் கால்வைத்து ஒருபோதும் நான் துயிலப்போவதில்லை. ஆழ்துயிலில் நான் அயர்கையில் அவள் தோளில் என் வாய்நீர் சொட்டப்போவதில்லை. அவள் கை என் குழல்கோதுகையில் கனவுக்குள் புன்னகைக்கப்போவதில்லை. இளங்காலைக்குளிரில் அவள் முந்தானையை இழுத்து நான் சுருண்டு அவள் கனத்த தொய்முலைகளை காற்றுக்கு விடப்போவதில்லை. அம்மா, உன் மகள் சென்ற கணத்தில் உன்னிலிருந்து உதிர்ந்துவிட்டிருக்கிறாள்.
பிறிதொரு பெரும்பேதமைக்குள் வாழ்ந்திருந்த அன்னை ஏதுமறியாதவளாய் அவள் கழுத்தையும் கன்னங்களையும் தொட்டுநோக்கினாள். “வெம்மையேதும் இல்லையேடி” என்றாள். “ஆவணி மாதத்து இளமழை ஆகாதென்றேனே? சாளரவாயிலை மூடலாகாதென்று அடம்பிடித்தாய். படுத்துக்கொள். மஞ்சளும் மிளகும் சேர்த்து இளஞ்சூடாக பசும்பால் கொண்டு வருகிறேன்” என்றாள். மகளின் அகன்றவிழிகள் மேலும் கருமை கொண்டிருப்பதை அவள் கண்டாள். “கண்ணெல்லாம் கருமை கொண்டிருக்கிறது. இது உள்காய்ச்சலேதான்” என்று சொல்லி எழுந்தாள். “என்ன செய்கிறதென்று சொல்லத்தான் என்னடி?”
யார் நீ? என் ஆலயத்துக் கருவறை முற்றம் வரை தயக்கமின்றி வருகிறாயே. விலகு. இங்கே பீடம்கொண்டவன் மலரும் மலராடையும் அணியும் முடியும் அற்றவனாக நின்றிருக்கும் அதிகாலைவேளை இது. அவனுக்காக இரவுக்காற்று பரப்பிவைத்த மென்மணல் பரப்பின் கதுப்பில் எளிய முதியவளே உன் பாதம் படியலாகாது. உள்ளங்கை ஒளிமணியை தொலைதூரத்து விண்மீன்போலப் பார்க்கும் உன் பேதைவிழிகளை, அன்னமிட்டு அன்னமிட்டு அன்னமய உடலை மட்டுமே தொட்டறியும் உன் நரம்போடிய கைகளை, என் பெயர் சொல்கையில் மட்டும் இசைக்கருவியாகும் உன் உதடுகளை வெறுக்கிறேன். விலகிச்செல், இவ்வாலயத்தில் ஒருவருக்கே இடம்.
கொல்லையில் கட்டுக்கயிற்றை இழுத்து மெழுகுமூக்கை நீட்டி கத்தும் கன்றின் குரலாக என் அகம் ஆனதென்ன? முல்லைமொக்கு எழுந்த காந்தள் மலர்நுனி போன்ற காம்புகளுடன் கனக்கும் அகிடுகளேயான பசுக்களின் பதில்குரலும் என் அகமே ஆவதெப்படி? பர்சானபுரி எழுந்துவிட்டது. நூறு தொழுவங்களில் பசுக்கள் நாதமெழுப்புகின்றன. அவற்றின் அடியில் மண்டியிட்டமர்ந்து வெண்ணை தொட்ட கைகளைக் கொண்டு காம்பு பற்றிக் கறக்கும் ஆயர்கள் என் குடியின் வேதத்தை எழுப்புகிறார்கள். கழுத்துமணிகளின் இசையில் கண்விழித்த பால்மழலைகளின் அழுகைகள் கலக்கின்றன. இங்கிருக்கிறேன், எவரோ மறந்து விட்டுச் சென்ற வைரம் போல.
அப்பால் யமுனைநதிக்கரையின் சோலைகளில் இன்று அத்தனை பறவைகளும் கிளர்ச்சி கொண்டிருக்கின்றன. இளந்தூறல் பரவிய மென்வெளிச்சத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது புள்வேதம். மையல்கொண்டிருக்கின்றது மணிப்பொழில். அங்கே கேட்கும் அத்தனை பறவைக்குரல்களையும் ஒன்றொன்றாய் தொட்டுத் தொட்டு மீள்கிறேன். ஒவ்வொரு சொல்லும் அதுவே. ஒரு சொல்லும் அவனல்ல. தனித்து கனத்து என் தாபம் திரும்பிவந்து தன் கூடணைந்து நெட்டுயிர்த்து வாயில் மூடும் கணம் தேன்மாமரத்தின் கிளையில் வந்தமர்ந்த குயில் அவன் பெயரைச் சொன்னதைக் கேட்டேன். அக்கணமே இறந்தேன்.
“அம்மா!” என்று அலறியபடி அடுமனைக்குள் ஓடிவந்து தன்னை அணைத்துக்கொண்ட மகளின் நடுங்கும் சிறிய உடலை தன் மார்போடு சேர்த்து குனிந்து அவள் நீலப்பெருவிழிகளைக் கண்டதுமே கீர்த்திதை புன்னகைத்தாள். “ஒன்றுமில்லையடி… ஒன்றுமே இல்லை. அஞ்சாதே” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டாள். “வா, என் கண்ணே…” என்று கைகள் பற்றி கூடத்துக்கு அழைத்துச் சென்றாள். “பேதையே, இதற்கா இத்தனை விழிநீர்? மலர்க்கிளையை காற்று அசைப்பதுபோன்றதல்லவா இது?”
ஓடிச்சென்று ஒருகைப்பிடி கன்னிப்பசுஞ்சாணி எடுத்து நீரில்கரைத்து இல்லத்தின் தென்மேற்கு மூலையை மெழுகினாள். பச்சரிசி மாவெடுத்து நீரில் கரைத்து ‘பெருகுக! வளர்க! வாழ்க!’ என்று மும்முறை சொல்லி கோலமிட்டு அதன்மேல் மரத்தாலான மணையிட்டு அவளை அமரச்செய்தாள். அத்தனை தெய்வங்களையும் இப்பால் நிறுத்த ஓர் உலக்கையை அவள் முன் வைத்தாள். அப்பால் தான் மட்டுமே தெய்வமாக அமர்ந்திருந்த அவளை நோக்கி “தென்கடல் முனைநின்ற தெய்வத்திருவே வாழ்க!” என வாழ்த்தி வணங்கியபின் முதிய உடல் குலுங்க கண்ணீரும் சிரிப்புமாக ஓடிச்சென்று தன் பூசனைத்தட்டை எடுத்து முற்றத்திற்கு வந்து நின்று அதை தூபக்கரண்டியால் தட்டி ஒலியெழுப்பினாள். அக்கணமே ஆயர்ச்சேரி உவகையில் நகைத்துக்குலுங்கத் தொடங்கியது.
தேன்கொண்டு கூடுதிரும்பும் தேனீக்களைப்போல ஆயர்பெண்டிர் அக்காரமாவும், அரிசிப்பொரியும் மஞ்சள்நீரும் மலர்களுமாக அவள் வீட்டை நோக்கிவரத்தொடங்கினர். கன்றுகளை கறந்துகட்டி திரும்பிவந்த ரிஷபானு நகையொலியும் நகைப்பொலியுமாக தன் இல்லத்தைச் சூழ்ந்திருந்த பெண்களைக் கண்டு திகைத்து நின்றார். அவரை நோக்கி ஓடிவந்த கீர்த்திதை அருகே வந்ததும் நெடுங்காலம் முன்பு தான் மறந்துவிட்டுவந்த நாணத்தை திரும்பப்பெற்று முகம்சிவந்து மூச்சிரைக்க நின்றுவிட்டாள். “என்ன? என்ன?” என்றார் ரிஷபானு. “நம் மகள் இல்லம் நிறைத்தாள்” என்றாள் கீர்த்திதை. அதைச்சொன்ன அக்கணமே அவர்களிருவரும் அவள் தங்கள் கைகளில் இருந்து நழுவிவிட்டதை உணர்ந்து கண்ணீர் துளிர்த்தனர்.
நெடுமூச்சுடன் உயிர்த்தெழுந்த கீர்த்திதை “இரு தரப்பு மூதன்னையரையும் முறைப்படி அறிவிக்கவேண்டும். தாய்மாமன்களை அழைக்க தங்கள் தம்பியரே செல்லவேண்டும்” என்றாள். “ஆம்” என்று சொல்லி ரிஷபானு புன்னகைத்தார். “வாருங்கள்” என்று அழைத்துச்சென்று உள்ளறையில் மரப்பெட்டியில் தாழைமடலிட்டு மூடிவைத்திருந்த பொன்னூல் நெய்த பட்டுப்பாகையை எடுத்து அவரிடம் அளித்து “தலையில் கட்டிக்கொள்ளுங்கள்” என்றாள். “கன்றோட்டும் சிறுகோலே செங்கோலாக, இன்று ஒருநாள் விண்ணவரும் வணங்கும் அரசனாக ஆனீர்” என்றாள்.
பொற்பட்டுத் தலைப்பாகை சுற்றி, கங்கணமும் குண்டலங்களும் அணிந்து மார்பில் மலர்மாலை துவள தன் இல்லத்துத் திண்ணையில் சித்திரப்பட்டுப்பாய் விரித்து கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டார் ரிஷபானு. செய்திகேட்ட அவர் தம்பியர் ரத்னபானுவும், சுபானுவும், பானுவும் தாங்களும் பட்டுத் தலைப்பாகையும் மலர்மாலையும் அணிந்தவர்களாக வந்து வணங்கினர். எவரையும் குறித்து நோக்காது மிதந்த விழிகளுடன் செருக்கி தலைதூக்கி “அடேய், இன்று எது முறைமையோ அதையெல்லாம் நிகழ்த்துங்கள். தேவையென்றால் எனக்குரிய அத்தனை பசுக்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ரிஷபானு ஆணையிட்டார். தோள்குறுக்கி வணங்கி “அவ்வண்ணமே” என்றனர் தம்பியர்.
பர்சானத்தின் சரிவுக்கு அப்பாலிருந்த பத்ரவனத்திலிருந்து கீர்த்திதையின் தங்கை கீர்த்திமதி அங்கிருந்தே மூச்சிரைக்க ஓடிவந்தாள். நாணத்தை முற்றிலுமிழந்தவளாக திண்ணையில் அமர்ந்திருந்த ரிஷபானுவை நோக்கி வாய்விட்டுச் சிரித்து “அரியணையில் அல்லவா அமர்ந்திருக்கிறீர்கள் அத்தான்! என்கண்ணே பட்டுவிடப்போகிறது!” என்றாள். இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி இல்லத்திற்குள் ஓடிச்சென்று தென்மேற்கு மூலையில் கொலுக்கொண்ட செல்வத்தை நோக்கியதும் தீச்சுட்டவள் போல ஒரு கணம் துடித்து “உன்னை முதலில் காணக் கொடுத்துவைத்தவள் அவளல்லவா கண்ணே?” என்று ஏங்கினாள். அருகணைந்த தமக்கையை ஓடிச்சென்றணைத்து “உனக்குமட்டும் தெய்வங்கள் அள்ளிக்கொடுக்கின்றன அக்கா!” என்று சொன்னதுமே அகம்வெந்து கண்ணீர் விட்டாள்.
“நீயே இப்படிச் சொல்கிறாய். இவள் மாமியர் வந்தால் என்னை என்னதான் சொல்லமாட்டார்கள்?” என்றாள் கீர்த்திதை. “உன்னை என்ன சொன்னாலும் தகும். எல்லாவற்றையும் ஒருத்தியே வைத்துக்கொண்டால் அது என்ன நியாயம்?” என்று தமக்கையை பிடித்துத் தள்ளி சிவந்த முகத்துடன் சொன்னாள் கீர்த்திமதி. உரத்தகுரலில் “முப்போகம் விளையும் பொன்வயலை நீயே வேலியிட்டு வைத்திருக்கிறாய், பாதகத்தி” என்று சொன்னபடி உள்ளே வந்தனர் மேனகையும் ஷஷ்தியும். “இப்போதுதான் உங்களைப்பற்றிச் சொன்னேன். எங்கே மற்றவர்கள்?” என்றாள் கீர்த்திமதி. “தாத்ரியும் கௌரியும் வந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் முந்தி ஓடிவந்தோம். தாதகி குழந்தையுடன் வருகிறாள்” என்றாள் மேனகை.
“அய்யோடி, தனியாகவா அமரச்சொன்னாய்? அவள் தோழிகளை அருகமரச்செய்யவேண்டாமா? இதைக்கூடவா சொல்லிக்கொடுக்கவேண்டும் உனக்கு? என்றைக்குத்தான் அறிவு வரப்போகிறது?” என்றாள் ஷஷ்தி. மேனகை “பொன்னகை போடாமலா என் செல்லத்தை அமரச்செய்தாய்? இதற்காகவே உன்னை அறையவேண்டும். என் பொன்மகள் அருகே வராதே, விலகு” என்றபடி ராதையின் அருகே சென்றாள். “அமர்ந்திருப்பதன் அழகை இதுபோல் இனியொருவர் நிகழ்த்திவிடுவார்களா என்ன இவ்வுலகில்? என் தெய்வமே” என்றாள் மேனகை.
அருகே சென்ற மாமியர் இமைதாழ்ந்து பாதிமூடிய விழிகளுடன் இருந்த அவளைக் கண்டு பேச்சிழந்து கைகூப்பினர். “மதுரம் நிறைந்த பொற்கலம்” என்றாள் மேனகை. அச்சொல் கிளையில் அமராத பறவை போல அங்கிருந்த அமைதியின் மேல் தவித்தது. உள்ளே ஓடிவந்த தாத்ரியும் கௌரியும் “எங்கே? எங்கே என் கொன்றைமலர்க்குண்டு?” என்றபடி வந்து அருகே நின்று கால்தளர்ந்து தமக்கையரின் தோள்பற்றிக்கொண்டனர். உள்ளும் புறமும் பெண்கள் ஒலித்து நிறைந்திருந்த சிற்றிலில் முற்றிலும் தனிமையில் இருந்த அவளை மட்டும் நோக்கி நின்றனர்.
பத்மவனத்தில் இருந்து ரிஷபானுவின் அன்னை சுகதை வந்தாள். அவள் கால்கழுவிக்கொண்டு உள்ளே நுழையும்போதே இரு கைகளிலும் இனிப்புகளுடன் கீர்த்திதையின் அன்னை முகாரையும் வந்தாள். பெருஞ்செல்வத்தை பதுக்கிவைத்த வணிகன் அயலூரானை என இரு கிழவியரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். இவ்வளவு போதும் என்று ஓர் சிறுநகை பரிமாறினர். உள்ளே வந்ததுமே முகாரை “என் கண்ணே, இன்று அதிகாலையிலேயே குயில் பாடியதே இதனால்தானா?” என்றாள். அவள் கைகூப்பி தென்மேற்கு மூலையை நெருங்குவதற்குள்ளாகவே சுகதை கடந்துசென்று ‘உலக்கையருகே ஓர் உரலை வைக்கவேண்டுமென்றுகூட நானேதான் சொல்லவேண்டுமா பெண்களே?” என்றாள்.
லலிதையும், விசாகையும், சுசித்ரையும், செண்பகலதையும், ரங்கதேவியும் வளையலோசையும் வெட்கிய சிரிப்போசையுமாக வந்தனர். பட்டுப்பாவாடை ஒலி அவர்களின் கிசுகிசுப்பொலியுடன் இணைந்தும் விலகியும் மாயம் காட்ட, பேசிப்பேசி அசையும் தலைக்கு இருபக்கமும் ஒளிமணிக்குழைகள் கன்னம் தொட்டு கன்னம் தொட்டு ஆடிக்கொண்டே இருந்தன. சுதேவியும், துங்கவித்யையும், இந்துலேகையும் அவர்களுக்குப் பின்னால் கொலுசுகள் ஒலிக்க ஓடிவந்து தோள்தொட்டு சேர்ந்துகொண்டனர். மெல்லுதடுகளுக்கு மேல் இளவியர்வை பனித்திருக்க உள்ளே வந்து தங்கள் தோழியைக் கண்டு “யாரிவள்?” என்று திகைத்தனர்.
“ஒன்பதிலேயே ஒருத்தி அமரமுடியுமா என்ன?” என்றாள் தாத்ரி மெல்லியகுரலில். “மாமி, நம் ஆயர்குடிகளில் இதற்குமுன் அவ்வண்ணம் ஆகியிருக்கிறதா?” முகாரை “ஆனதில்லை. ஆனால் இந்தமரம் எளிதில் தீப்பற்றுவதென்று நினைக்கிறேன்” என்றபின் குனிந்து நகைத்து “குன்றாப் பெருந்தாபம் கொண்டவளாக இருப்பாள்” என்றாள். சமையற்கட்டுமுழுக்க பெண்களின் சிரிப்பொலி எழுந்தது. சினத்துடன் முகத்தை நொடித்து சுகதை “வீண்சொல் பேசவேண்டாம் பெண்களே. என் மடமகளுக்கு ஒன்றும் தெரியாது” என்றாள். “அவளுக்குத் தெரியாததை அந்த மாமரத்துக்குயில் சொல்லிக்கொடுக்கும்” என்றாள் ஒருத்தி. மீண்டும் சிரிப்பொலி நிறைந்தது.
நீங்களெல்லாம் யார் பெண்களே? உங்கள் விழிகள் பார்க்கும் எதையும் எப்போதுமே பார்த்திராத எனக்கும் உங்களுக்கும் என்ன உறவு? அன்னையர் என்கிறீர்கள். மாமியர் என்கிறீர்கள். தோழிகள் என்கிறீர்கள். இந்த மண்ணில் எனக்கு உறவென்று ஏதுமில்லை என்றான பின் எந்த ராதையை நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஆயர்மடமகள் என்கிறீர்கள். போஜர் குலக்கொழுந்து என்கிறீர்கள். அவள் யார்?
“மன்று சூழ்ந்து மந்தணம் பேசியது போதும் பெண்களே. மங்கையை கூட்டிச்சென்று நதிக்கரை மலர்க்கிளை ஒன்றை ஒடித்து கையில் எடுத்துக்கொள்ளச் சொல்லவேண்டுமென்று உங்களில் எவருக்குமே தெரியாதா? நீங்களெல்லாம் வீடுநிறைத்து பின் மடிநிறைத்தவர்கள் அல்லவா?” என்றாள் முதுபெரும்செவிலியான நந்திதை. “ஆம், அது முறைமை” என்றாள் சுகதை. “பொறுத்தருள்க அன்னையே. அத்தனைபேரும் பித்துகொண்டிருக்கிறோம்” என்றாள் கீர்த்திமதி.
முதுதந்தையர் மகிபானுவும் இந்துவும் பெரியதலைப்பாகை அணிந்து கோலூன்றி வந்து சேர்ந்தனர். தாய்மாமன்கள் பத்ரகீர்த்தியும் மகாகீர்த்தியும் அவர்களை கைப்பிடித்து படியேற்றி பட்டுப்பாய்விரித்த திண்ணையில் அமரச்செய்தனர். பொற்தலைப்பாகை அவர்களின் கால்களில் பட வணங்கிய ரிஷபானுவின் சூடான கண்ணீரை அவர்கள் உணர்ந்தனர். அவர் இழந்ததென்ன என்றறிந்திருந்த முதுதாதையர் முதுமைகனிந்த கண்கள் சுருங்க நகைத்து “மூடா, மின்னல்தாக்கிய மரம்போல விண்ணவர்க்கு உகந்தது எது?” என்றனர்.
மாமியரை மணந்த மாமன்கள் குசனும் கசனும் வந்தனர். அவர்களுடன் காட்டில் ஆநிரை மேய்க்கச்சென்றிருந்த ராதையின் தமையன் ஸ்ரீதமன் ஓசையின்றி வந்து எவராலும் அறியப்படாமல் முற்றத்து மாமரத்தின் கீழே நின்று அக்கூட்டத்தின் பேச்சொலிக்குள்ளும் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்த குயிலை கேட்டுக்கொண்டிருந்தான். மீண்டுமொரு பெண்குரல் சலசலப்பு இல்லத்துக்குள் எழுந்தது. அவன் பெருமூச்சு விட்டு கால்மாற்றி நின்றான்.
சேமக்கலத்தை கரண்டியால் தட்டியபடி முதுசெவிலி நந்திதை முன்னால் செல்ல லலிதையும், விசாகையும், சுசித்ரையும், செண்பகலதையும், ரங்கதேவியும் தொடர்ந்தனர். நடுவே பொற்பட்டுச்சால்வையால் முற்றிலும் முகமும் உடலும் மூடிக்கொண்டு ராதை நிலம்நோக்கி நடந்துசென்றாள். சுதேவியும் துங்கவித்யையும் இந்துலேகையும் அவளுக்குப்பின்னால் காதோடு இதழ் தொடச் சிரித்துச் சிரித்து அகச்சொல் பேசிச்சென்றனர். அன்னையரும் மாமியரும் என முதுபெண்டிர் அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.
இந்த மண்ணுக்குமா நான் அயலாகிவிட்டேன்? இதன் மேல் படும் என் ஒவ்வொரு காலடியும் சிலிர்த்துக்கொள்வதென்ன? நான் செல்லும்பாதையில் அத்தனை மலர்மரமும் என்னை நோக்கிக் கைநீட்டி ஏங்குவதேன்? ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டுச் சலித்து விலகிக்கொள்கிறது என் விழி. கண்ணுக்குத்தெரியாத கோடிமலர்கள் என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் மலர்ந்திருப்பதை உணர்கிறேனே? எவர் நடந்து செல்வதற்கான பாதை நான்?
யமுனையின் ஒளியை இலைகளின் அடியில் காண்கிறேன். இந்த மதுவனத்தின் அத்தனை இலைகளிலும் யமுனை ஓடிக்கொண்டிருப்பதை இன்றுதான் அறிந்தேன். உயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது? அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே. ஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.
“மகளே, இந்தச் சோலைமரங்களில் உனக்கு உகந்த ஒன்றின் சிறுகிளையை ஒடித்து எடுத்துக்கொள். வாழ்நாளெல்லாம் காதலிலும் தாய்மையிலும் உன்னுடன் துணையாக அது இருக்கும்” என்றாள் முதுபெரும் செவிலி. ராதை ஒருகணமும் தயங்காமல் சென்று அந்த முதுகடம்பின் கீழ்க்கிளை ஒன்றை ஒடித்துக்கொண்டாள். “ஆ!” என்றாள் முதுபெரும் செவிலி. “அனல் ஓடும் காதல் நெஞ்சம் கொண்டவர்கள் தேரும் மலர்மரமல்லவா அது!” யமுனைநதிக்கரையில் பெண்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் தழுவி நகைத்தது.
மலர்க்கிளையை கையிலேந்தி திரும்பிய ராதை அப்பால் விரைவழிந்த கரையோர நீர்மீது பூத்து நிறைந்து காற்றிலாடிய நீலக்குவளை மலர்வெளியின் மீது சென்ற சிறுபடகொன்றைக் கண்டாள். முகம் மறைய தலைப்பாகையைத் தாழ்த்தி அணிந்து குனிந்தமர்ந்த ஒருவர் அதை துடுப்பிட்டு செலுத்திக்கொண்டிருக்க படகின் பலகைமேலிருந்த மூங்கில்கூடையொன்றுக்குள் சிற்றசைவொன்று தெரிந்தது. மூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள். மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம்.