இமயச்சாரல் – 21

பில்லாவரிலிருந்து மாலையிலேயே கிளம்பி நேராக பாசோலி என்ற சிற்றூரை அடைந்தோம. உண்மையில் அது ஒரு நகரம். ஆனால் அங்கே பயணிகளின் வருகை அறவே இல்லாத காரணத்தால் தங்கும் வசதிகள் இல்லை. செய்திகளில் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று செய்தி வந்துகொண்டிருப்பதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அமைதிப்பகுதியான ஜம்முதான்.

பாசோலியில் ஒரு அரசு விருந்தினர் மாளிகையை தேடிப்பிடித்து கெஞ்சி இடம்பெற்று தங்கினோம். மெத்தையில் இருந்து வந்த மட்கும் நெடியையும் கழிப்பறை வாடையையும் தாங்கிக்கொண்டு தூங்க வைத்தது களைப்புதான். இங்கே ஏழுமணிக்குமேல் உணவகங்கள் இல்லை. அவை மறுநாள் காலை பத்துமணிக்குத்தான் திறக்கும்.

காலையில் பாசோலியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றோம். பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்த ஆலயம் பெரும்பகுதி எஞ்சியிருக்கிறது. ஆனால் கருவறையில் சிறிய சிவலிங்கம் உள்ளது. அருகே இன்னொரு அடித்தளம் மொட்டையாக மிஞ்சியிருக்கிறது.

கோயிலின் சுவர்களில் சிறிய மழுங்கிய சிற்பங்களைக் காணமுடிந்தது. வில்லேந்திய வீரர்கள், கருடன் மேல் அமர்ந்த விஷ்ணு, கணபதி சிலைகளைக் கண்டோம். நன்றாக தொல்லியல் துறையால் பேணப்பட்டுவரும் ஆலயம் இது. தொல்லியல்துறைக்குச் சொந்தமான ஒரு பழைய மெகஃபோன் அங்கே கிடந்தது. அதுவும் ஒரு தொல்பொருள்போலவே தோன்றியது. மெகஃபோனை வைத்து கடந்த காலத்துடன் பேசமுடியுமானால் அது எவரால் எப்போது கட்டப்பட்டது என்று தெரிந்துகொள்ளலாமென எண்ணினேன்.

ஜம்முவிலேயே நாங்கள் பார்ப்பதற்கு சிறப்பான பல இடங்கள் இருந்தன. இந்தப்பயணம் திட்டமிடப்படாதது. நாங்கள் உத்தர்கண்ட்தான் செல்வதாக இருந்தோம். பருவமழை பிந்திவந்தமையால் உத்தர்கண்ட் மூடப்பட்டது. ஆகவே நான்குநாட்களில் திட்டமிட்டு காஷ்மீர் வந்தோம். காஷ்மீரை நேரில் உணர்ந்தோம் என்பது லாபம். ஆனால் காஷ்மீர வரலாற்றை ஓரளவேனும் ஆராய்ந்தபின் வந்திருக்கலாமென்ற பெரிய மனக்குறை எஞ்சியது.

காஷ்மீரின் வரலாற்றின் முக்கியமான நூல் கல்கஹணர் எழுதிய ராஜதரங்கிணி. அதன்பின் பல வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன. ராஜதரங்கிணி இணையத்திலேயே கிடைக்கிறது. வெள்ளையர் காஷ்மீரின் வரலாற்றைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை நானும் கூர்ந்து வாசித்ததில்லை. அது எவ்வளவு பெரிய குறை என்பது இங்கு வந்தபோதுதான் தெரிந்தது. நாமே கூட காஷ்மீரை இந்திய மைய வரலாற்றுக்கு வெளியே வைத்துத்தான் பார்க்கிறோமா? அதற்கு நம் கல்வித்துறை நம்மை பயிற்றுவிக்கிறதா என்ன?

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் வாசிப்பரங்கம்
அடுத்த கட்டுரைஒரு சாட்சி