துரியோதனி

அன்புள்ள ஜெயமோகன் சார்,

வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமீபத்தில் நான் படித்ததிலேயே மிகவும் உள்ளார்ந்த அத்தியாயங்களில் ஒன்று துரியோதனன் துரியோதனையை எதிர்கொள்வது. காலதாமதமான இந்த கடிதத்துக்கு மன்னிக்கவும். அனால் இந்த அத்தியாயம் சரியாக வசிக்கப்பட்டதா, கவனிக்கபட்டதா என்று தெரியவில்லை. இந்த இடம் பீமன் – துரியோதனன் உறவை புரிந்துகொள்வதில் ஒரு புதிய பரிமாணம் என்று நினைக்கிறேன்.

சி.ஜி.யுங்-கின் அனிமா-அனிமஸ் என்னும் கொள்கைக்கு நெருக்கமாக வரும் இந்த இடம் துரியோதனின் ஆளுமையை புரிந்துகொள்வதற்கு ஒரு முக்கியமான படி. அதுவரை ஆடி பிம்பங்களாக இருக்கும் இருவர் விலகும் இடம். தனக்குள் உள்ள பெண்ணை அழித்த பீமனே துரியோதனன் அல்லது தனக்குள் உள்ள பெண்ணை அழிக்காத துரியோதனனே பீமன் என்று சொல்லலாமா. இந்த பரிமாணத்தில் பார்க்கும் போது பலவற்றை விளக்கமுடியும் என தோன்றுகிறது.

யுங்-கின் கொள்கைப்படி ஆணுக்குள் இருக்கும் பெண்ணிண் வடிவம் அனிமா என்றும், பெண்ணுக்குள் இருக்கும் ஆணின் வடிவம் அனிமஸ் என்றும் விளக்குகிறார். ஆணுக்குள் இருக்கும் அணிமாவே அவனது உள்ளுனர்வு, கற்பனை, படைப்பாற்றல், sensitivity அகியவற்றுக்கு பெரும் பங்களிப்பாற்றுவன. அவனது அகத்துக்கும் ஆழ்மனதுக்கும் இடையில் செயல்படும் முக்கியமான சக்தி. உளவியல் துறையில் பெரும் புறட்சி செய்த இந்த கொள்கை. ஃப்ராய்டின் அழ்மனதைப்பற்றிய கண்டதைலின் அடுத்தப்படி. ஃப்ராய்டின் அழ்மனதை பற்றிய புரிதலின் எளிமையை சுட்டி காட்டி யுங் அழ்மனதை நிழல்மனது(shadow – typical Freudian unconscious of repressed thoughts and feelings), அனிமா-அனிமஸ், கூட்டு ஆழ்மனம் என்று பிரிக்கிறார். உளவியல் துறையில் புறட்சியை ஏற்படுத்திய இது ஃப்ராய்ட் உருவாக்கிய ஆழ்மனது குறித்த கசப்பான புரிதலை மாற்றியமைத்தது.

துரியோதனன் தன் அனிமாவை அழிப்பது அவனுக்கு பெண்கள் மீதுள்ள அவமரியாதை, தர்மன் போன்ற sensitive ஆளுமைகள் மீதுள்ள வெறுப்பு ஆகியவற்றை விளக்குகிறது. இதுதான் அவன் தன் தந்தையின் பாதையில் இருந்து விலகும் இடம் என தோன்றுகிறது. பீமனுக்குள் இருக்கும் பெண்ணே அவனது ஆளுமையில் ஒரு முக்கியமான பகுதி என தோன்றுகிறது, literal-ஆகவே அவன் graceful ஆன ஒரு பெண்ணாக இருக்கமுடியும் என தோன்றுகிறது, ஒரு வதத்தில் பெண்ணாக வேடமிட்டு செல்வது நினைவுக்கு வருகிறது.

அவ்வகையில் அவனே திருதராஷ்டிரனின் சரியான வாரிசு. நீங்கள் யுங்-கின் கொள்கையை குறித்து கேள்விபட்டிருக்கலாம் அனால் அதைத்தான் உத்தேசித்தீர்களா? அல்லது இதுவும் நம் மரபிலிருந்து யுங் எடுத்துகொண்டது தானா, இதற்கு வேறு ஏதேனும் பொருள் உண்டா?

அன்புடன்
தியாகராஜன்

அன்புள்ள தியாகராஜன்

நான் சி.ஜி.யுங்கின் நூல்கள் சிலவற்றை பதினைந்தாண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். சில பகுதிகளை மொழியாக்கமும் செய்திருக்கிறேன். சொல்புதிது இதழில் வெளிவந்துள்ளது. நித்ய சைதன்ய யதி யுங்கிய உளவியலில் ஆர்வம் கொண்டவர். பல உளவியலாளர்களிடம் தொடர்பில் இருந்தார்.

ஆனால் அவை நான் எழுதும்போது பிரக்ஞையில் இல்லை. இயல்பாகவே வந்த ஒரு பரிணாமம் துரியோதனனின் சித்தரிப்பு. எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.

இப்படி நாம் எழுதியதை நாமே கண்டுபிடிப்பதுதான் எழுதுவதில் உள்ள பேரின்பம். நன்றி.

ஜெ

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஒரு சாட்சி
அடுத்த கட்டுரைசம்ஸ்கிருதத்தின் அழிவு?