கோவையில் வாசகர் சந்திப்பு

கோவையில் வாசகர் சந்திப்பு நடத்துவதைப் பற்றி நண்பர்கள் பலர் சொன்னார்கள். [வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்] ஆர்வத்துக்கு நன்றி. ஏற்பாடு செய்யலாம். நான் கோவையில் ஏதேனும் கூட்டத்தில் பேசி பல வருடங்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட பத்து  வருடங்கள்கூட இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் கோவை வருவதில் மகிழ்ச்சி

 

தமிழில் எனக்காக நிகழ்த்தப் பட்ட முதல் கூட்டம் 1991 ஜனவரியில் விஜயா வேலாயுதம் ஏற்பாட்டில் கோவையில் நடைபெற்றது. ரப்பர் வெளியானபோது, அதன் மீதான விமரிசனக்கூட்டம் அது. அதன்பின்னர் அடிக்கடி வர நேரவில்லை. தோப்பில் அண்ணாச்சியின் துறைமுகம் நாவல் வெளிவந்தபோது அதன் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருக்கிறேன். அப்படி சில கூட்டங்கள்.

 

தமிழினி வெளியீடாக வரும் ‘இன்றைய காந்தி’ நூலின் ‘வெளியீட்டு’விழா ஈரோட்டில் ஜனவரி 24 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதன் பின்னர் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை நான் மலேசியா, சிங்கப்பூருக்கு ஒரு பயணம் செய்ய விருக்கிறேன். பிப்ரவரி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பரீக்ஷா ஞாநி அவரது கேணி அமைப்பு சார்பில் சென்னையில் பேச அழைத்திருக்கிறார்.

 

ஆகவே பிப்ரவரி இறுதியில்தான் இப்போது வசதிப்படும். பிப்ரவரி மூன்றாம் வார சனி அல்லது ஞாயிறு நண்பர்களுக்கு வசதி என்றால் வைத்துக்கொள்ளலாம். பிப்ரவரி இறுதி ஞாயிறு என்றபோது பையன் வேண்டாம் என்கிறான். மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அவனுக்கு தேர்வு ஆரம்பிக்கிறது. ஒரு திகிலோடு இருக்கிறான்.

 

இந்த தேதி இல்லையென்றால் மார்ச் 20க்குப்பின் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஜனவரி முதல் அல்லது இரண்டாவது சனி ஞாயிறுகளில் வைத்துக் கொள்ளலாம். அதிக அவகாசம் இல்லை என்பது பரவாயில்லை என்றால் எனக்குப் பிரச்சினை இல்லை.

 

கூட்டத்தை இரு பகுதிகளாக நடத்தலாம். ஒருநாள் மாலை எல்லா வாசகர்களுக்காகவும் ஒரு ‘ஆசிரியரைச் சந்தியுங்கள்’ போன்ற நிகழ்ச்சி. அதாவது கேள்வி – பதில். அனைவருக்கும் அழைப்பு அனுப்பி பொதுவாக நடத்தலாம். மறுநாள் ஆர்வமுள்ள நண்பர்களை மட்டும் சந்திக்கும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி, அதை அறை நிகழ்ச்சியாக எங்காவது ஏற்பாடு செய்யலாம்.

 

நண்பர்கள் கூடிப் பேசித் தெரிவித்தால் நல்லது. சந்திப்போம்

 

ஜெ

வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனைச் சந்தித்தல்
அடுத்த கட்டுரைசென்னை நூல் வெளியீட்டுவிழா