கிறிஸ்தவ இசைப்பாடல்கள்- கடிதம்

வில்லியம் மில்லர் விக்கி 

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

உங்களின் பரந்து விரிந்த வாசிப்பினாலேயே நீங்கள் நினைப்பவைகளை எல்லாம் வார்த்தைகளாக வடித்துவிட முடிகிறது. கிறிஸ்தவ இசைப் பாடலாசிரியர்கள் என்ற நூல் பற்றிய உங்களின் பதிவுக்கு நன்றி. CLS பதிப்பகத்தைச் சேர்ந்த அருள்திரு. தயானந்தன் பிரான்சிஸ் அவர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ அருட்கவிஞர்கள் என்ற நூலை எழுதி இருக்கிறார். நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்றாலே எல்லோரும் வேத நாயகம் சாஸ்திரி அவர்களையே நினைப்பர். நீங்கள் சொல்லியது போல நாமறியாத பலரால் கிறிஸ்தவ கீர்த்தனைகள் இந்திய இசை மரபில் கிறிஸ்தவர்கள் பாட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டன. வேத நாயகம் சாஸ்திரியார் அவர்கள் இதை முழு நேர தொழிலாகவும், தஞ்சை அரச கவியாகவும் இருந்ததால் மிகவும் புகழ் பெற்றார் என்பது என் கருத்து. வேத நாயகம் சாஸ்திரியார் அவர்கள் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகபிரும்மம் அவர்களின் சம காலத்தவர் என்பது செய்தி. சாஸ்திரியார் கிறிஸ்தவராக இருந்த படியால் பரவலான கவனத்தைப் பெற வில்லை என்று சிலர் கூறுவர்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கியத்தின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர். சர்வ சமய சமரச கீர்த்தனைகள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றி வெளியிட்டவர். அவருடைய படைப்புகளில் கிறிஸ்தவத்தின் பாதிப்பு இருந்தாலும் அவர் ஒன்றே இறைவன் என்ற கொள்கை உடையவராக இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. முனைவர் இளங்கோ அவர்கள் இவர் பற்றி கட்டுரைகள் எழுதி இருப்பதாக ஞாபகம். அவருடைய எல்லையை அவர் கிறிஸ்தவத்துடன் சுருக்கிக் கொள்ள வில்லை.

மதுரையைச் சேர்ந்த சந்தியாகு ஐயரைப் பற்றி அந்த புத்தகத்தில் இருந்ததா என்று அறிய விரும்புகிறேன். என் மனம் கவர்ந்த சந்தியாகு அவர்கள் ஆங்கிலப் பாமாலைகளை அப்படியே தமிழ் இசை மரபில் மிகச் சிறந்த பாடலாக இயற்றுவதில் மிகவும் சிறந்தவர்.

இவைகளெல்லாம் நீங்கள் அறியாத தகவல்களாக இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் சொல்லத் தோன்றியது. உங்களுக்குப் பிடித்த கிறிஸ்தவ பாடல்களை முன்பு ஒரு பதிவில் வரிசைப் படுத்தி இருந்தீர்கள். அதை மறுபடியும் பகிர்ந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

என்றும் அன்புடன்
அற்புதராஜ்
பெங்களூ

அன்புள்ள அற்புதராஜ்,

சாந்தியாகு அய்யர் பற்றி நூலில் ஒரு கட்டுரை உள்ளது. ஏறத்தாழ முழுமையான நூலாகவே உள்ளது. வேதநாயகம் சாஸ்திரியின் பாடல்களுக்கும் பிறவற்றுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. அவற்றின் வரிகளும் அந்த ராக அமைப்பும் பாவமும் மிகச்சரியாக பொருந்திச்செல்கின்றன. தியாகராஜர், புரந்தர தாசர் போன்ற சிலரிடமே அதைக் காணமுடிகிறது.

இப்போது என் மனம் கவர்ந்த பாடல் ‘உனையன்றி எனைக்காக்க உலகினில் யார்’ ராகமும் வரிகளும் சரியாக இணையும் ஒரு கலைநிகழ்வு

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 6
அடுத்த கட்டுரைமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்