1997 ஜூலை மாத தொடக்கத்தில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான வி ராமமூர்த்தி இந்து நாளிதழ் அலுவககத்துக்கு வந்து அதன் ஆசிரியர் என்.ரவியைச் சந்தித்து காந்தியின் கடைசி இருநூறு நாட்களைப்பற்றி தான் எழுதவிருக்கும் நூலை நாளிதழில் தொடக்கமாக வெளியிட அவருக்கு விருப்பமா என்று கேட்டார்.காந்தியின் கடைசி நாட்கள் ஒரு கிரேக்க துன்பியல் நாடகத்துக்கு நிகரானவை என்று ராமமூர்த்தி சொன்னர். ரவி அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் காந்தி கொல்லப்பட்ட 1948 ஜனவரி 30 ஒரு வெள்ளிக்கிழமை. அதேபோல 1998 ஜனவரி முப்பதும் ஒரு வெள்ளிக்கிழமையாக அமைந்தது. ஹிந்துவின் கேலிப்படக்காரரான கேசவ் வரைந்த கோட்டோவியங்களுடன் காந்தியின் கடைசி இருநூறு நாட்கள் என்ற தொடர் ஹிந்துவில் அன்று ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இருநூறு நாட்கள் வெளிவந்து அது நிறைவடைந்தது. அதன்பின் அக்கட்டுரைகள் நூலாக வெளிவந்தன.
பாரதி புத்தகாலயம் அந்நூலை தமிழில் கி.இலக்குவன் மொழியாக்கத்தில் நூலாக்கி 2007ல் வெளியிட்டது. தமிழில் காந்தியைப்பற்றிக் கிடைக்கும் நூல்களில் மிக முக்கியமான ஒரு ஆக்கம் இது. வரலாற்றுக்கொந்தளிப்பு மிக்க அந்த நாட்களில் காந்தியுடனேயே பயணம்செய்யும் அனுபவத்தை அளிக்கிறது இது. முற்றிலும் புனைவம்சம் இல்லாத ஆவணமாக இருந்தாலும் நெஞ்சை அடைக்கவைக்கும் ஒரு துயரத்துடன் மகத்தான சோககாவியமொன்றை வாசிப்பதுபோலத்தான் இந்நூலை வாசிக்க முடியும்.
காந்தியின் கடைசி இருநூறு நாட்கள் அவருக்கு மிகவும் சோதனையானவை. அவர் மகாத்மாவா இல்லையா என்று விதி விசாரணை நடத்திய நாட்கள். அது வரையிலான காந்தி ஆழமான தன்னம்பிக்கை கொண்டவர். அவரது கடிதங்களில் உரைகளில் எப்போது தான் சத்தியத்தின் பக்கம் நிற்கும் வல்லமை கொண்டவர் என்றும், சத்தியம் எந்நிலையிலும் வெல்லும் என்றும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை வெளிப்படும். அந்த நம்பிக்கை ஆட்டம் கண்ட நாட்கள் இவை.
ஏனென்றால் காந்தி அந்த தன்னம்பிக்கையை மனிதர்களின் நல்லியல்பு மீது கொண்ட நம்பிக்கையில் இருந்தே அடைந்தார். மனித மனம் சத்தியத்தையும் கருணையையும் மட்டுமே என்றும் நாடக்கூடியது என்று காந்தி உறுதியாக நம்பினார். சத்தியாக்ரகம் என்று அவர் சொன்ன போராட்டமே அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. தன் எதிரிக்கும் மனசாட்சி உண்டு என நம்பி அந்த மனசாட்சியுடன் தன் மனசாட்சியால் உரையாட முயல்வதே சத்தியாக்கிரம். அந்த நம்பிக்கை கண்முன் உடைவதை காந்தி கண்டார். தன்னுடைய இலட்சியங்களின் பெறுமதி என்ன என்று அவரே நேரடியாக வரலாற்றைக்கொண்டு பார்க்க நேர்ந்தது.
அந்த காலகட்டத்தில் சிலுவையில் என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறிய ஏசுவைப்போல காந்தியும் நம்பிக்கை இழந்தார். மனக்கொந்தளிப்புக்கும் உக்கிரமான துயரத்துக்கும் ஆளானார். மானுடத்தீமையின் மானுட அவலத்தின் விஸ்வரூபத்துக்கு முன் செயலற்று நின்றார். தன் ஆன்மசுத்தியை ஐயப்பட்டார். தன்னையே வருத்திக்கொண்டார். ஆனால் அப்போதும் தன் நம்பிக்கையைக் கைவிடாமல் உறுதியை உருவாக்கிக்கொண்டு அந்த குருதிநதி வழியாக கடந்து சென்றார். துரோகங்கள் அவதூறுகள் வெறுப்புக்கூச்சல்கள் புறக்கணிப்புகள் நடுவே தன் சத்தியத்தையே கைவிளக்காகக் கொண்டு ஊடுருவிச்சென்றார்.
ஆகவே காந்தியின் கடைசி நாட்கள் அவர் யாரென்று உலகுக்குக் காட்டுவதாக அமைந்தன. அவரது கடுமையான எதிரிகள்கூட அவரது தியாகத்தின் மகத்துவத்தின் முன் சொல்லிழந்தனர். அரை நூற்றாண்டாக உலகின் மாபெரும் வரலாற்றாசிரியர்கள் அவரது கடைசிநாட்களை ஆழ்ந்த தீவிரத்துடன் விவாதித்து வருகிறார்கள். அப்போது நடந்த ஒவ்வொன்றும் மீள மீள பேசப்படுகின்றன. மாபெரும் ராணுவங்கள் தோற்கும் இடத்தில் ஒரு தனிமனிதனின் அர்ப்பணிப்பு வென்றதன் கதை அது என்று இன்று வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள்.
அந்த இருநூறு நாட்களின் நேரடி நிகழ்ச்சிப்பதிவு இந்த நூல். 1947 ஜூலை 15 ஆம்தேதி காந்தி டெல்லியில் உள்ள துப்புரவுத்தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருக்கிறார். மாபெரும் மதக்கலவரம் நடந்த பிகாரின் கிராமப்புறங்களில் ஓர் அமைதியாத்திரையை முடித்துவிட்டு அவர் திரும்பியிருந்தார். டெல்லியில் அரசியல் விவாதங்கள் கொதித்துக்கொண்டிருந்தன. காந்தி டெல்லிக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது இடுப்பிலணியும் கடிகாரம் காணாமல் போய்விட்டிருந்தது. அந்தப்புகழ்பெற்ற கடிகாரம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடிகாரம். இந்நூலின் முதல் பத்தியில் வரும் அந்த நிகழ்ச்சி ஒரு நாவலுக்குரிய திறப்பு போல, ஒரு நுட்பமான குறியீடு போல இருக்கிறது.
இந்நூலில் ஒவ்வொருநாளும் காந்தி மூன்று விஷயங்கள் செய்கிறார். நாள்முழுக்க பொதுமக்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார். எந்தவிதமான தடையும் இல்லாமல் எளிய மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து அவரிடம் முறையிட்டுக்கொண்டு விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். நடுவே இந்திய அரசை அமைக்கப்போகும் காங்கிரஸ் தலைவர்களும் இதழாளர்களும் ராஜதந்திரிகளும் அவரிடம் வந்து ஆலோசனை செய்கிறார்கள். மாலையில் அவர் தவறாமல் ஒரு பிரார்த்தனைக்கூட்டத்தில் பேசுகிறார். இந்தியாவின் கோடானுகோடி எளியமக்களுக்கும் இந்தியாவின் அரசமைப்புக்கும் நடுவேயான ஊடகமாக காந்தி நாள் முழுக்கச் செயல்படுகிறார். மாலையில் இந்த மொத்த நாடகத்துக்கும் அப்பால் நின்றுகொண்டு அழியாத மானுட விழுமியங்களை அவர்களனைவருக்கும் ஒரேகுரலில் சொல்லும் தீர்க்கதரிசியாக இருக்கிறார்.
முதல்நாள் காந்தி தேசம் பிரிவினை செய்யப்படுவதைப்பற்றிய தன் துயரத்தை பற்றிச் சொல்கிறார். எக்காரணத்தாலும் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை தான் விரும்பவில்லை என்கிறார். மனிதர்கள் ஒருவரோடொருவர் பகை கொண்டு கொன்று அழிப்பதைப்பற்றி கண்ணீர் தோய்ந்த சொற்களில் பேசும் காந்தி மற்ற மனிதனின் நல்லியல்பை நம்பவேண்டும் என்று அங்கே வந்திருக்கும் மக்களுக்குச் சொல்கிறார். பிறனிடம் உள்ள தீய அம்சத்தை மட்டுமே காணும் போக்கே ஆபத்தானது என்கிறார்.
ஒருவகையில் காந்தியின் செய்தியே அதுதான். அன்றுவரையிலான அரசியல் நமர் X பிறர் என்ற இருமையின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருந்தது. பிறரை உருவகிப்பதே அரசியலின் அடிப்படையாக இருந்தது. அந்த எல்லைக்கோட்டை அழித்ததே காந்தியின் சாதனை. நாம் எதிர்த்துப் போராடுபவர்கள் நம் எதிரிகளல்ல அவர்களும் நம்மவரே என்பதே காந்திய அணுகுமுறையின் சாரம். வாழ்நாள் முழுக்க சகமனிதனை பிறன் என்று பார்க்காதீர்கள், அரசியல் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து ஆதிக்கம் சார்ந்து பிறனை கட்டமைக்கும் எல்லாவற்றையும் நிராகரியுங்கள் என்றே காந்தி சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒவ்வொருநாளும் காணும் அனைவரிடமும் மீண்டும் மீண்டும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் காந்தி. அடுத்த நாள் இந்தியர்கள் ஒவ்வொருவரும் மற்ற பிரிவினரின் மொழிகளையும் பழக்கவழக்கங்களையும் அறிமுகம்செய்துகொள்ள வேண்டும், குறுகிய பிரதேச வெறித்தனத்தைக் கைவிட வேண்டும், உண்மையான தேசபக்தி இத்தகைய அணுகுமுறைகளில்தான் அடங்கியிருக்கிறது என்கிறார். இன்னொருநாள் ‘மகத்தான செயல்களைச் செய்ய முற்படும் ஒவ்வொருவருக்கும் மகத்தான பொறுமை தேவைப்படுகிறது’ என்று ஒரு கடிதத்தில் எழுதுகிறார்.
ஆகஸ்ட் 13 அன்று காந்தி கல்கத்தாவில் இஸ்லாமிய தலைவர் சுரவர்த்தியுடன் இஸ்லாமியக்குடியிருப்பு ஒன்றில் தங்கினார். அப்பட்டமான வகுப்புவாதியும் சுயநல அரசியல்வாதியுமான ஷஹீத் சுரவர்த்தியின் தலைமையில் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு எதிராக கொலைவெறியாட்டம் ஆடியிருந்தார்கள். ஆனால் பின்னர் கிராமப்புறத்தில் இருந்து இந்து இளைஞர்கள் திரண்டு திருப்பியடிக்க ஆரம்பித்தபோது அவர்கள் நடுவே தன் மக்களுடன் சுரவர்த்தி மாட்டிக்கொண்டார். தங்களை காக்கும்படி காந்தியிடம் அவர் சரண்புகுந்தார். முஸ்லீம்களை இந்து வெறியர்களிடம் இருந்து காக்க காந்தி சுரவர்த்தியுடன் அங்கே வந்தார், அவரும் சுரவர்த்தியும் சேர்ந்து ஹைதாரி மாளிகை என்று சொல்லபப்ட்ட பாழைந்த நாற்றமடிக்கும் கட்டிடத்தில் தங்குவதாக ஏற்பாடாகியது.
சுரவர்த்தியை காரில் இருந்து இழுத்துப்போட்டு கொல்லவந்த இந்துவெறிக்கும்பலிடம் காந்தி கைகூப்பி மன்றாடி அவருடைய உயிரை காப்பாற்றினார். அவர்களிடம் தன் பேச்சைக் கேட்குமாறு அவர் மன்றாடினார். மெலிந்த தோள்களுடன் நின்ற தந்தைவடிவம் அவர்களை அமைதியடையச்செய்தது. ஆனால் அவர்கள் அவரை வசைபாடினார்கள். இந்துக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படும்போது அவர் எங்கே சென்றிருந்தார் என்று கேட்டார்கள். அப்போதுகூட இந்துக்கள் கொல்லப்படுகிறார்களே அதை தடுக்க அவரால் ஆகுமா என்றார்கள். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அவர்களிடம் அகிம்சையை வலியுறுத்தினார். பரஸ்பரப்புரிதலை நோக்கி பொறுமையுடன் முன்னகர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
‘நான் என்னை உங்கள் பாதுகாப்பில் விடப்போகிறேன்.அவ்வளவுதான். நீங்கள் எனக்கு எதிராக திரும்பலாம். என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நான் என் வாழ்க்கைப்பயணத்தின் இறுதிக்கட்டத்தை அனேகமாக எட்டிவிட்டேன். நான் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டியதில்லை. ஆனால் பைத்தியக்காரத்தனத்துக்கு நீங்கள் இடம்கொடுக்கப்போகிறீர்கள் என்றால் நான் அதை உயிரோடு பார்க்கும் சாட்சியாக இங்கே இருக்கப்போவதில்லை” அவர்கள் அமைதியடையவில்லை. அவர்கள் ஆழமாக புண்பட்டிருந்தார்கள். கொதித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் அவரை மீறவும் அவர்களால் முடியவில்லை.
மறுநாள் இந்தியா சுதந்திரமடைவதற்கு முந்தைய காலையில் மீண்டும் அந்த வெறிகொண்ட இளைஞர்கள் அவரிடம் வந்தார்கள். அவரை வசைபாடினார்கள். அவரை சாபமிட்டு அழுதார்கள். ஆனால் அவர் மீண்டும் அவர்களிடம் பொறுமையையும் அகிம்சையையும் சகமனிதர்கள் மீதான நம்பிக்கையையும் வலியுறுத்தினார். நவீன யுகத்திலும் அதிசயங்கள் நிகழக்கூடும் என்பது மெல்ல மெல்ல நிரூபணமாகியது. அந்த இளைஞர்கள் அவர் முன் மெல்ல அமைதியடைந்தனர். அவரது சொற்களுக்குப் பனிந்து வன்முறையைக் கைவிட்டனர். கல்கத்தா பரிபுரணமாக அமைதிக்குத் திரும்பியது.
அன்று மாலை நடந்த பிரார்த்தனைக்கூட்டத்தில் காந்தி பேசும்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு உண்டு என்றார். சுதந்திரம் கிடைக்கும் ஆகஸ்ட் 15 நாள்முழுக்க உண்ணாநோன்பிருந்து பிரார்த்தனை செய்து இந்தியாவும் பாகிஸ்தானும் நலம்பெறுவதற்காக பிரார்த்தனை செய்வோம் என்றார். அந்த கூட்டத்தில் மக்கள்நடுவே தோன்றிய சுரவர்த்தி அவர் தலைமைதாங்கி இந்துக்கள் மீது நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு முழுப்பொறுப்பு ஏற்பதாக அறிவித்து தலைகுனிந்து இந்துக்களிடம் மன்னிப்பு கோரினார்.
ஆகஸ்ட் 15 அன்று தேசமே மகாத்மா காந்திக்கு ஜே என்று கூவிக்கொண்டிருந்தது. டெல்லியில் காந்தியின் படத்தை வைத்து நேருவும் படேலும் புதிய இந்திய அரசை அமைத்தனர். ஆனால் காந்தி கல்கத்தாவில் கலவரத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெலியகட்டா பகுதியில் இருந்தார். அன்று அவர் உணவுண்ணவில்லை. அவரது அமைதிச்செய்தி அங்கே பரவி தெருக்கள் தோறும் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினார்கள். மாலை ஆக ஆக மகிழ்ச்சியும் களியாட்டம் கலந்த மனநிலை உருவாக ஆரம்பித்தது.
அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்திருந்த காந்தி அன்று தூஙகச்செல்ல பதினொரு மணி ஆகிவிட்டிருந்தது. மூன்றுமணிநேரம் தூங்கிவிட்டு எழுந்த அவர் கைராட்டையில் நூல்நூற்க ஆரம்பித்தார். அதன் பின் காலைநடை சென்றார். அந்த பாழடைந்த மாளிகை காந்தியாலும் ஊழியர்களாலும் முழுமையாக தூய்மைசெய்யப்பட்டு ஆசிரமம் ஆக மாற்றப்பட்டிருந்தது.
இதிகாசமொன்றின் நிகழ்வுகள் போல விரிகின்றன இந்த மகத்தான நூலின் அத்தியாயங்கள். மானுடத்தின் தீமைகள் யாவும் விரிந்து கிடந்தன அவரது கண் முன். தன் ஆன்மவல்லமையை மட்டுமே நம்பி காந்தி சென்றுகொண்டே இருக்கிறார். அவரது மகத்துவத்தின் முன் இருண்ட மனங்கள் சட்டென்று ஒளிகொண்டு மண்டியிடுகின்றன. அவரோ இன்னமும் பெரிய ஓர் ஒளியை நோக்கி தன் கண்களை தூக்கியவராகச் சென்றுகொண்டே இருக்கிறார். மனசாட்சி மிச்சமிருக்கும் எவரும் கண்ணீருடன் மட்டுமே வாசித்துச்செல்லக்கூடிய பக்கங்கள் இவை.
1948 ஜனவரி இருபத்தைந்தாம் தேதி காந்தி ஒரு கடிதத்தில் எந்தினார். ‘ நான் ராமனின் சேவகன் அவன் விரும்புகிறவரை அவனுக்கான பணியை நான் ஆற்றுவேன். உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு மரணத்தை அவன் எனக்கு அருள்வானானால் நான் எனது வாழ்க்கை இலட்சியத்தில் வெற்றிபெற்றவனாவேன். நான் அவற்றை மனப்பூர்வமாக பின் தொடர்ந்திருந்தால் கடவுளை சாட்சியாகக் கொண்டு நான் செயல்பட்டிருந்தால் அத்த¨கைய மரணத்தை கடவுள் எனக்கு நிச்சயம் அருள்வான் யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால் அந்தக்கொலையாளியின் மீது எனக்கு எந்தவிதமான கோபமும் ஏற்படக்கூடாது. நான் ராமநாமத்தை உச்சரித்தபடியே மரணமடையவேண்டும்…” அவரைக்கொல்ல நடந்த முயற்சிகள் அவருக்குச் சொல்லப்பட்டிருந்தன.
ஐந்துநாட்கள் கழித்து 1948 ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்ஸே காந்தியை அவரது பிரார்த்தனைக்கூட்டத்தில் சுட்டுக்கொன்றான். இந்நூல் அந்த உச்சகட்டத்துடன் ஒரு பெரும் நாவலுக்குரிய மன எழுச்சியை அடைந்தபடி முடிவடைகிறது. நம் காலகட்டத்தின் உச்சகட்ட தார்மீக வெளிப்பாடு ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்படும் ஒரு காவியம் இந்த நூல். நம் ஆத்மாவை பரிசுத்தமான கண்ணீரால் கழுவிக்கொள்வதற்கு உதவும் இத்தகைய நூல்கள் மிக அபூர்வமாகவே வந்துள்ளன.
காந்திஜியின் கடைசி 200 நாட்கள். வி.ராமமூர்த்தி. தமிழாக்கம் கி இலக்குவன். பாரதிபுத்தகாலயம் சென்னை வெளியீடு