அசோகமித்திரனைச் சந்தித்தல்

ஜெமினி எஸ் எஸ் வாசனைப்பற்றி அசோகமித்திரன் நிறையவே எழுதியிருக்கிறார். தன் முதிரா இளமையில் அசோகமித்திரன் சந்தித்த முக்கியமான ஆளுமை வாசன். தனிப்பட்டபுகழ், ஆளுமை, செல்வம் என அனைத்தும் அடைந்து அமர்ந்திருந்தவர். ஆகவே இளம் அசோகமித்திரனின் மனம் வாசன் மீது ஆழமாகப் படிந்திருக்கலாம். நுட்பமாகக் கவனித்திருக்கலாம். வேறெந்த பதிவையும் விட அசோகமித்திரன்  அளிக்கும் சித்திரமே வாசனைப் புரிந்துகொள்ள உதவக்கூடியதாக இருக்கிறது.

வாசன் 1940களில் மவுண்ட் ரோட்டில் ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறார். அங்கே செல்லும் அசோகமித்திரனின் அப்பா ஒரு சில நூல்களை வாங்குகிறார். போதிய பணமில்லை. ‘பரவாயில்லை, நீங்கள் வீட்டுக்குச் சென்று பணத்தை  அனுப்புங்கள்’ என்று புத்தகத்தை கொடுத்து விடுகிறார் வாசன். ‘நான் பணம் அனுப்பாவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்?’ என்று அசோகமித்திரனின் அப்பா கேட்கிறார். ‘ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் அனுப்பாமல் இருக்க மாட்டீர்கள்’ என்கிறார் வாசன்

 

அதன்பின் வாசனுக்கு நெருக்கமானவராக ஆகிவிடுகிறார் அசோகமித்திரனின் அப்பா. வாசன் அவர் விகடனை செகந்திராபாதில் வினியோகம் செய்ய வேண்டுமென விரும்புகிறார். அவரால் அதை செய்ய முடியவில்லை. ஆனால் வாசன் செகந்திராபாத் வரும்போதெல்லாம் அசோகமித்திரனின் அப்பாதான் கூட சென்று இருக்கிறார்

 

அப்பாவுடன் வாசனைச் சந்திக்க இளம் அசோகமித்திரன் செல்கிறர். அப்போதே பல வணிக நிறுவனங்களை ஏககாலத்தில் நடத்திக் கொண்டிருந்த வாசன் எந்தவிதமான பொறுப்பும் கவலையும் இல்லாதவர் போல உற்சாகமாகவும் சாதாரணமாகவும் இருக்கிறார். குதிரைப் பந்தயத்தில் பங்கு கொள்ளத்தான் வந்திருக்கிறார். அது அசோகமித்திரனுக்கு பெரும் வியப்பை அளிக்கிறது.

பின்னர் அப்பா இறந்துபோக சென்னைக்கு வரும் அசோகமித்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் சிறிய வேலையில் சேர்கிறார். சென்னையில் தன் ஆரம்ப நாட்களை அப்படித்தான் அவர் தாண்டி வர முடிந்தது. வாசனை மிக அருகிருந்து கவனிக்க முடிகிறது அவரால். வாசன் ‘அதிருஷ்டசாலி’ என்று அவர் புரிந்து கொள்கிறார். வாசனுக்காக உயிரைக் கொடுத்து வேலை செய்பவர்கள் அவருக்காக இருக்கிறார்கள்

 

ஜெமினி ஸ்டுடியோவில் வேலைசெய்த ஒரு தொண்டு கிழத்தை அசோகமித்திரன் சாலையில் சந்திக்கிறார் [நானும் தொண்டுகிழம்தான் என்கிறார் அசோகமித்திரன்] அவர் ஒரு ஆபீஸ் ‘பையன்’. மாறாத பக்தி விசுவாசத்துடன் ‘அந்த அம்மா காலிலே விழுந்து கும்பிட்டா எல்லா கஷ்டமும் ஓடிப்போயிடுமே’ என்கிறது கிழம். இந்தக் கிழம் ஆமோதிக்கிறது.

 

ஜெமினி வாசனுக்கு மனிதர்களை எடைபோடும் திறன் இருக்கிறது. மிக எளிதிலேயே எவர் பயன்படுவார் என்று அவருக்குப் புரிகிறது. அந்நாளில் ஜெமினி கதை இலாகா விவாதங்கள் நாள் முழுக்க நடக்கும். அவ்வப்போது வாசன் வந்து அமர்ந்துகொள்வார். அவருக்கு எழுத்தாளர்களுடன் இருப்பது பிடித்திருந்தது. வெற்றிலைத் தாம்பூலம் துப்ப அடிக்கடி சிலர் வெளியே வந்து செல்வார்கள். அசோகமித்திர வெளியே காத்திருப்பார். ஒருநாள் தானும் அந்த சபையில் அமர அழைக்கப் படுவோம் என்று அவர் நம்பினார்

ஆனால் வாசனுக்கு அசோகமித்திரன் சினிமாவுக்கு எந்த வகையிலும் பயன்பட மாட்டார் என்று [சரியாகவே] புரிந்திருந்தது. அந்நாளில் அசோகமித்திரன் எழுதிய சிறந்த சிறுகதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வந்தன. வாசன் அவற்றை படித்திருக்கக் கூடும். அவற்றை அவர் கவனத்துக்குக் கொண்டு செல்ல ஆட்கள் இருந்தார்கள். ஆனால் வாசன் அசோகமித்திரனை தன் ஏவலாளாகவே வைத்திருந்தார்.

 

வாசனைப் பற்றி அசோகமித்திரன் அவரது நினைவோடை என்ற சிறிய நூலில் அங்கிங்காகச் சொல்லும் உதிரித் தகவல்களை இப்படி வரிசையாக ஆக்கினால் ஒவ்வொரு வரியும் அடுத்த வரிக்கான விளக்கமாக இருப்பதைக் காணலாம். இதுவே அசோகமித்திரனின் எழுத்தின் தனித்தன்மை. மிகக் குறைவான மளிகைப்பொருட்களை வைத்துக்கொண்டு சிக்கனமாகச் சமைக்கும் கீழ் நடுத்தரக் குடும்பத்து மூத்த குடும்பத் தலைவி போன்றவர் அசோகமித்திரன். அவரது எழுத்தில் வீண் என்பதே கிடையாது. ஆடம்பரத்துக்கு இடமே இல்லை.

மேலே சொன்ன கதையை இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்லித்தான் முடிக்க முடியும்– வேறு ஒரு நூலில் அசோகமித்திரன் சொன்னது அது. ஒருநாள் வாசன் அசோகமித்திரனிடம் தன் காரைக் கழுவும்படிச் சொல்கிறார். அவமானம் அடைந்த அசோகமித்திரன் ”நான் ஓர் எழுத்தாளன், என்னிடம் காரைக் கழுவச் சொல்கிறீர்களே?” என்று கேட்டார். சற்று சிந்தித்த வாசன் ”இதோ பார், நீ உண்மையான எழுத்தாளனாக இருந்தால் இங்கே நின்று இதையெல்லாம் செய்து கொண்டிருக்க மாட்டாய்” என்றார்.

 

அவர் சொன்னது சரிதானே என எண்ணும் அசோகமித்திரன் அந்த ஸ்டுடியோ வேலையை விட்டார். அதன் பின்னர் ஐம்பது வருடம் எந்த நிறுவத்திலும் வேலைபார்க்கவில்லை. பல இடங்களில் கூலி வேலைகள் செய்திருக்கிறார். மனைவி அப்பளம் போட வீடு வீடாகக் கொண்டு சென்று விற்றிருக்கிறார். தொடர்ச்சியாக நாட்கணக்கில் பட்டினி கிடந்திருக்கிறார். ஆனால் தன் எழுத்தை ஒரு அந்தரங்கமான தவமாக ஆற்றிக் கொண்டிருந்தார்.

 

அசோகமித்திரன் பல்வேறு இதழ்களில் எழுதிய சிறு குறிப்புகளின் தொகை இந்த நூல். சமகால தமிழ் எழுத்தாளர்கள், அமெரிக்க எழுத்தாளர்கள் குறித்த பதிவுகள் உள்ளன. பழைய நூல்களை வாசித்த ரசனைக் குறிப்புகள் உள்ளன. நினைவுகளும் நிகழ்வுப்பதிவுகளும் உள்ளன. வழக்கம் போல எல்லா கட்டுரைகளும் அற்புதமான சுவாரசியத்துடன் அசோகமித்திரனுக்கே உரிய மென்மையான நகைச்சுவையுடன் உள்ளன.

அசோகமித்திரனின் கட்டுரைகளை ஆய்வுகள் என்று சொல்ல முடியாது. கருத்துக்கள் என்றும் சொல்லிவிடமுடியாது. அவை, மனப்பதிவுகள் மட்டுமே

 

‘ஜான் அப்டைக் ராஜாராவ் எழுதிய நாவல்களை புகழ்ந்து நீட்டி முழக்கி கட்டுரைகள் எழுதியிருக்கிறார், ஆனால் அப்டைக் அவரது பிடித்த நூல்களை பட்டியல் போடும் போது ஒருபோதும் ராஜாராவின் பெயர் அதில் இடம் பெற்றதில்லை’

 

‘எழுத்தாளர் கல்கியும் நிறைய சினிமா விமரிசனங்கள் எழுதினார். எல்லாரும் காத்திருந்தார்கள். அவரே திரைக்கதை எழுதி பங்குபெற்ற தியாகபூமி வெளி வந்த போது வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார்கள். அந்த நாளில் கல்கி ஆனந்த விகடனில் விமரிசனங்களுக்கு நான்கு வாரங்களாக பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்’.

 

‘செகந்திராபாத் ஜம்ஷெட் ஹாலில் தண்டபாணி தேசிகர் பாடிய கச்சேரியைக் கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பல சம்பிரதாயக் கீர்த்தனைகளை எல்லாம் பாடிவிட்டு அவர் ‘ஐயே மெத்த கடினம்’ பாடினார். அதைக்கேட்டு உருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கச்சேரி முடியப்போகும் தருணத்தில் கோடீஸ¤வரன் வந்தார். அவர் நல்ல ரசிகர்.பரம பக்தர்.  சுருக்கமாக ஆனால் அனைவருக்கும் மனநிறைவு ஏற்படும்படியாக பேசிவிட்டு தேசிகருக்கும் இதர இசைக்கலைஞர்களுக்கும் மாலை அணிவித்தார்

 

இன்றைக்கு அறுபத்து மூன்று வருடங்களுக்கு முன்பு கோடீசுவரன் தேசிகருக்கு பின் பாட்டு பாடிய இளைஞரை விசேஷமாகப் பாராட்டினார்.  அடுத்தமுறை அந்த இளைஞரே தனிக்கச்சேரி செய்பவராக இருப்பார் என்றார். அந்த இளைஞரின் பெயர் மதுரை சோமு’

 

‘தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் சிறைத் தண்டனை கொடுத்து அனுப்பியபோது நன்றாக வேண்டும் இவர்களுக்கு என்று சொல்பவர்கள்தான் அன்று அதிகமாக இருந்தார்கள். ஏன் மரண தண்டனை தரவில்லை என்று கேட்டவர்கள்கூட இருந்தார்கள். ஆனால் அவர்கள் பின்பு குற்றமற்றவர்கள் என்று விடுதலையானார்கள்’

 

‘பேட்டிகள் சலிப்படையச்செய்கின்றன. உண்மையில் எழுத்தாளரைப்பற்றியும் எழுத்தைப்பற்றியும் ஒப்புக்குத்தான் கேள்விகள்.பலகேள்விகள் ஜோசியர்களை கேட்கவேண்டியவையாக இருக்கும். இது எப்போது மாறும்? இதை ஏன் நீங்கள் செய்யவில்லை? அதை ஏன் செய்தீர்கள்? உண்மையில் இதெல்லாம் யாருக்கும் எந்த தெளிவும் ஏற்படுத்தப்போவதில்லை’

 

–என்று இந்த நூல் முழுக்க நம்முடைய கவனத்தை வந்து தைக்கும் அவதானிப்புகள் பதிவுகள் நிறைந்து கிடக்கின்றன. சுவாரசியமான ஒரு நூல். நம் காலகட்டத்தின் மகத்தான கலைஞனை அருகே சென்று பார்த்து சற்றே பேசிவிட்டு வந்த நிறைவை அளிப்பது.

 

 

[நினைவோடை, அசோகமித்திரன், நர்மதா பதிப்பகம்]

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

படிப்பறைப் படங்கள்

சென்னை சித்திரங்கள்

அசோகமித்திரன் சந்திப்பு

 

 

  1. பாலு சத்யா: அசோகமித்திரன் நேர்காணல் http://balusathya.blogspot.com/2009/06/blog-post_17.html
  2. 2.                             ஆட்டோவில் போன அசோகமித்திரன் http://solvanam.com/?p=3745

அசோகமித்திரன் அவர்களுடன் ஒரு நேர்முகம்  http://www.nilacharal.com/ocms/log/03170818.asp

 

புலிக்கலைஞன் – அசோகமித்திரன் http://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_850.html

முந்தைய கட்டுரைதமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்
அடுத்த கட்டுரைகோவையில் வாசகர் சந்திப்பு