கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி

 பேச்சிப்பாறை வாய்க்கால் பார்வதிபுரம் வழியாகச்செல்கிறது. அதன் கீழ்க்கரையில் இருந்த வயல்வெளியில் உருவானது நான் குடியிருக்கும் சாரதா நகர். வாய்க்காலின் கரையிலேயே செல்கிறது கணியாகுளம் வரைச்செல்லும் தார்ச்சாலை.நான் குடிவரும்போது அது ஒரு சிறு மண்சாலையாகவே இருந்தது. இப்போது பாறையடிமலையடிவாரத்தில் மூன்று எஞ்சீனியரிங் கல்லூரிகளும் இரண்டு கல்குவாரிகளும் வந்துவிட்டன. அவர்களின் உடைப்புவேலை காரணமாக போக்குவரத்து அதிகமாகி தார்ச்சாலை போட்டுவிட்டார்கள். நான் எட்டுவருடம் முன்பு கண்ட சாலையோரக்காட்சிகள் இப்போது இல்லை என்றாலும் அழகான ஒரு நடைபயன வழியாகவே உள்ளது இந்தச்சாலை.

திருவனந்புரம் ரயில்பாதை சாலையை  முறித்துச் செல்கிறது. கீழே கால்வாயில் நீரோடை. 

பொதுவாகவே நாகர்கோயில் திருவனந்தபுரம் ரயில்சாலை அழகானது. பெரும்பாலும் இருபக்கமும் பசுமையான வயல்கள் வரும். நான்கு ஆறுகள் ஏராளமான ஓடைகள் முறித்துச்செல்லும்.

இது ஆடிமாதம். ஆவணி பிறப்பதுவரை குமரிமாவட்டத்தில் வானம் மேகம்மூடித்தான் இருக்கும். அதிகாலையின் வெலிச்சமும் குளிரும் பகல் முழுக்க உண்டு. ஆனியாடிச் சாரல் என்று இதைச் சொல்வார்கள். குமரிமாவட்டத்தில் இருந்து ரப்பர் போன்ற சில பயிர்களை நெல்லைபக்கமாகக் கொண்டு சென்று நடுகிறார்கள் என்று சொல்லப்பட்டபோது பாலராமவர்மா மகாராஜா ‘எதைக் கொண்டுபோனாலும் அனந்தபத்மநாபனையும் ஆடிச்சாரலையும் கொண்டுபோக முடியாதே’ என்று சொன்னதாக அய்யப்பண்ணன் டீக்கடையில் அமர்ந்து ஒருமுறை சொன்னார். ஆடிமாதம் நடை போவதற்கு ஏற்ற காலம்.  10-8-2008 ,காலை பதினொரு மணிக்கு நானும் அஜிதனும் ஆஸ்தான புகைபப்டக்காரர் சைதன்யா தொடர சென்றோம். புகைப்படத்துக்கு வெளிச்சம் இல்லை என்று சிணுங்கல் பின்பக்கம் ஒலித்துகொண்டே இருந்தது

இருபக்கமும் விரிந்த வயல்களுக்கு ஆயிரம் வருட வரலாறுண்டு. நாஞ்சிநாட்டு ஏலா என்று சொல்லபப்டும் இவ்வயல்வெளி சோழர்காலத்திலேயே உருவாக்கபப்ட்டது.

 

சோழர்கால ஏரி ஒன்று இங்கே இப்போது சதுப்புவெளியாக கிடக்கிறது

வேளிமலையின் தொடக்கம் கணியாகுளம்,பாறையடிதாண்டி கடுக்கரையில் இருந்து. அதற்கு அப்பால் தாடகைமலை தொடங்குகிறது. சாலை திரும்பியதுமே பச்சைவயல்களுக்கு அப்பால் வேளிமலையில் முகம் தென்படுகிறது. மடிப்புகளில் பசுமை பரவி இறங்கியிருக்கும். எப்போதுமே மழைமேகம் சூடியிருக்கும் மலையின் சிரம்

 சாலையின் அருகே தூரத்தில் சவேரியார் கல்லூரி குன்று பச்சை வயல்களுக்கு அப்பால்

வேளிமலையின் முகம் .

 

வேளிமலை தாய்மிருகம் குழந்தையை முகர்வதுபோல சவேரியார்கல்லூரி குன்றை நோக்கி நீன்டிருக்கிறது

 

நடைமுழுக்க வேளிமலையை நோக்கியபடித்தான்

சாலையோர அரசமரம். இப்பகுதி முன்பு அரசமரங்கள் அடர்ந்ததாக இருந்திருக்கிறது. இப்போதும் அரசமரங்கள் சில உள்ளன.

 இலந்தையடி முக்கு திரும்பினால் ஒரே காட்சியாக வேளிமலை விரிகிறது.வேளிமலைக்கு எப்போதுமே ஒரு நீலமூட்டம் உண்டு. மேகம் காரணமாக ஒருபோதும் அது தெளிந்திரு இருப்பதில்லை. மேமாதம் ஒருவிதமான மஞ்சள்நிற தெளிவு உண்டு

தெற்குகுளம் போகும் சாலை

மழை கனத்த மேகம். குளிர் நிறைந்த காற்று. ஆடிச்சாரல்…

புகைப்படங்கள்:ஜெ.சைதன்யா

முந்தைய கட்டுரைகாமரூபிணி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்