காமரூபிணி-கடிதங்கள்

அன்புமிக்க ஜெயமோகன்,
வணக்கம்.
சற்று முன்புதான் உங்கள் ‘காம ரூபினி’ படித்தேன். இன்னும் அந்தப்
பக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை. உங்கள் கட்டுரைகளிலும்
இதே செறிவையும் தர்க்கத்தையும் ஒரு உண்மையை நோக்கிய
நிருபணத்தையும் கண்டறிய முடிகிறது எனினும், இந்தக் கதைகள்
உண்டாக்குகிற வெளிச்சங்களை, பதற்றங்களை,ஒருமையை,எங்கோ
அழைத்துச் சென்று,ஒரு இடத்தில் ‘நீயே போய்க்கொள்’ என்று விலகி
அப்பால் போய்விடுகிற விளையாட்டை அல்லது சதியை, அந்த விளையாட்டின்
அல்லது சதியின் இழைகளில் இருந்து உருவிக்கொண்டு வருகிற நேரத்தில்
ஏற்படுகிற மன எழுச்சியை, அந்த எழுச்சியின் உச்சத்திலிருந்து தொய்வுக்குள்
நமக்கு மட்டுமே கிட்டுகிற புதிய பிரதேசங்களை , காட்டில் வழி தப்புகிற
நேரத்தின் பரவசத்தை , இது போன்று விவரிக்கும்போது மட்டுமே விவரனைக்குள்
வருகிற உணர்வுகளை எல்லாம் அடைய முடிவதில்லை அவற்றில்.
இந்தப் பிற்பகலில் “காடா செடியா” அலைந்து திரும்ப,[திரும்பிவிட்டேனா நான்?],
உங்கள் செல்லம்மையும் பாருவம்மையும் வள்ளியம்மையும் உதவினார்கள்
என்றே சொல்லவேண்டும்.தப்பிக்கவிடுவதுபோல் போக்குக்காட்டி தப்பிக்கவிடாத
யட்சிகளைக் கல்யாணம் ஆகி இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நான் தெரிந்து
வைத்திருக்காவிட்டால் எப்படி?
கல்யாணி.சி.
[வண்ணதாசன்]
**************************

6:55 pm (2 minutes ago)

காமரூபிணியை மிகுந்த பரவசத்துடன் படித்தேன்.

இன்று தமிழில் வரக்கூடிய நவீன கதைகள் எல்லாமே ழிபெயர்ப்புவாடையுடன் கூடிய மொழிநடையில்
இருக்கின்றன என்பது என்னுடைய எண்ணமாகும். ஆனால் இந்தக்கதை ஒரு அற்புதமான சங்கீதம்
போல மனதை மயக்குகிறது. இயற்கைச்சூழலை வர்ணிக்கும்போது உங்கள் மொழியில் வரும் சித்திரங்கள் மிக அற்புதமானவை. மனித உடலின் வேட்கையும் தவிப்பும் அதன்
விளைவான சுரண்டலும் வன்முறை
யும்தான் எல்லா கலாச்சாரங்களிலும் ஆழத்தில் உருகி
தேங்கியிருக்கிறது. நல்ல எழுத்து
அந்தப் புள்ளியைச் சென்று
மீட்டுகிறது. மீண்டும் மீண்டும் சொல்லபப்ட்ட இந்தக்கதையை புதிதாகச் சொல்வதில்தான் நல்ல கலைஞனின் வெற்றி
இருக்கிறது. கலைடாஸ்கோப் போல கதை திரும்பிக்கொண்டே இருக்கிறது.
பற்பலகதைகள் ஒரேகதையின் பல
பக்கங்களாக மாறிமாறி ஜாலம் காட்டுகின்றன. ஆனால் இந்த வித்தையை கைதெரியாத மாயத்துடன் இயல்பாக தெரிவதுபோல செய்திருக்கிறீர்கள். இந்த ஜாலத்தில்தான்
பெரும் கலைஞன் ஒருவனை வாசகன் அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது. தமிழில்
காமத்தின் தவிப்பையும்
வன்முறையையும் தனிமையையும்
எழுதிய கதைகளில் முதன்மையானது
இந்தக்கதை என்று சந்தேகமில்லாமல் சொல்லிவிடலாம்.
வைரம் போல பார்த்துத் தீராத நுண்ணிய
பக்கங்களுடன் இந்தக்கதை இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜெயராமன்

**************************
அன்புள்ள ஜெயமோகன்

சமீபத்தில் வாசிக்க நேர்ந்த அபூர்வமான சிறுகதை காமரூபிணி. சிறுகதை என்ற வழக்கமான இலக்கணம் அனைத்தையும் உடைத்து அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ள கதை. கதையை தவிர்த்து முழுக்கமுழுக்க படிமங்கள் வழியாகவே இயங்குகிறது. தொடர்ச்சியான உத்வேகமான நிகழ்ச்சிகள் வருகின்றபன. அவற்றையும் படிமங்களாக ஆக்கி அப்படிமங்களை கோத்து கதையின் வடிவம் உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு படிமமும் ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டு முழுமையை அடையும் விதம் பிரமிப்பூட்டுகிறது. கதை முழுக்க வரும் நடையும் நுட்பமான படிமங்களால் நெய்யப்பட்டதாக உள்ளது. குறிப்பாக பூநாகம் பற்றிய பகுதிகள் தூய கவிதைநிலையில் உள்ளன. சமகால சர்வதேச இலக்கியத்தை கூர்ந்து படித்து வருபவன் என்ற நிலையில் இதற்கிணையான கதைகளை குறைவாகவே காணமுடியும் என்று என்னால் சொல்லமுடியும். ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் தமிழ் கதயை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் ஒரு படைப்புடன் வந்திருக்கிறிர்கள். பாராட்டுக்கள்.

தி.ஸ்ரீனிவாசன் [தமிழாக்கம்]
நியூயார்க்

***

முந்தைய கட்டுரைகீதை கடிதங்கள்
அடுத்த கட்டுரைகணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி