வழிகாட்டியும், பாதசாரிகளும்

கிரிராஜ் கிஷோர் எழுதிய  சதுரங்கக் குதிரை நூலில் ஒரு வரி வரும். சுதந்திரப்போராட்ட காலத்தில் எங்கு பார்த்தாலும் காந்திகளாகத் தெரிந்தார்கள், சுதந்திரம் கிடைத்த பின்னர் தெரிந்தது, காந்தி மட்டும்தான் காந்தி என்று

காந்தியப் போராட்டம் என்பது ஒரு மகத்தான கனவுஜீவி, ஒரு இலட்சியவாதி, ஒரு கர்ம வீரர் தன்னை விட பல படிகள் கீழே நின்ற கோடானு கோடிபேர்களை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றதன் கதைதான். அவர்களில் சிலர் முக்கால்வாசி காந்திகளானார்கள். சிலர் அரைவாசி. சிலர் கால்வாசி. பலர் அந்தந்த தருணங்களில் காந்தியம் நோக்கி கொஞ்சம் மேலெழுந்து விட்டு கீழிறங்கினார்கள்.

காந்தி தன்னுடைய புகழ்பெற்ற தண்டி யாத்திரையை 1930 மார்ச் 12 அன்று ஆரம்பித்தார். அது காந்திக்கு ஒரு திருப்பு முனைக் காலகட்டம். அதற்கு முன்னர் அவர் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் வன்முறையை நோக்கி நகரவே அவர் அதை பின்னிழுத்துக் கொண்டார். அதையொட்டி அவர் மீது கடுமையான விமரிசனங்கள் காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகியிருந்தன. குறிப்பாக இடதுசாரிப் போக்குள்ள இளைஞர்கள் இந்தியா போராட்டத்திற்குப் பொங்கியெழுந்தபோது காந்தி சமரசம் செய்து கொண்டு போராட்டத்தை கட்டிப் போட்டார் என்று எண்ணினார்கள்.

அதே சமயம் பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு தேர்தலில் வென்று மாகாண அரசுகளில் பங்கு கொள்ள அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசபதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிய மோதிலால் நேரு போன்ற மூத்த தலைவர்களும் காந்தி மீது கசப்பில் இருந்தார்கள். காந்தி அந்த அதிகாரம் போலியானது என்றும் அது இந்திய சுதந்திரப் போராட்டத்தை  அழிக்கும் என்றும் எண்ணினார். அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் அனைத்து குறைபாடுகளுக்கும் காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றார்.

மொத்த்ததில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் காந்தியை எதிர்த்தார்கள். காந்தி பேசாமல் ஒதுங்கிக் கொண்டு தன் ஆசிரமங்களை மையமாக்கி அடிப்படைப் பணிகளில் ஈடுபட்டார். தேசம் முழுக்க ஒரு சோர்வு நிலவியது. உண்மையில் இந்தச் சோர்வுக் காலத்தில்தான் பல காங்கிரஸ் போராளிகள் இலக்கியம் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். பெரும்பாலான இந்திய மொழிகளில் நவீன இலக்கியங்கள் உருவாகி வந்தன. தமிழில் மணிக்கொடி முதலிய இதழ்கள் உருவாயின.

ஆனால் காந்தி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கவில்லை. காந்தியப் போராட்டம் கட்டுவிரியனின் கடி போல. கடித்து விட்டு அது மிக மெல்ல இரையை பின் தொடர்ந்து செல்லும். இரை பின்னாலேயே அது இருக்கும். இரை விழுந்து இறந்த பின் அது அங்கே வந்து சேர்ந்திருக்கும். பொறுமையும், நெடுங்காலத் திட்டமிடலும் காந்திய போராட்டத்தின் வழிமுறை. சாதாரணப் பொதுமக்களை சத்யாக்கிரகப் போராட்டத்திற்குக் கொண்டு வந்தால் வன்முறையே விளையும் என காந்தி சௌரி சௌரா மூலம் உணர்ந்தார். ஆகவே உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளைக்கொண்டே மேற்கொண்டு சத்யாக்கிரகப் போராட்டங்களை நிகழ்த்தவேண்டும் என்று காந்தி முடிவெடுத்தார்.

அதற்காக தன் ஆசிரமங்கள் வழியாக போராட்ட வீரர்களை தயாரித்தார். அவர்களுடன் காந்தி உப்புசத்யாக்கிரகத்திற்கு இறங்கினார். அந்தப்போராட்டத்தின் வெற்றிமூலம் காங்கிரஸ் மீண்டும் அவரது முழுமையான ஆதிக்கத்திற்குள் வந்தது. வன்முறையில்லாமலேயே மக்கள் போராட்டம் மூலம் இந்தியாவை அரசியல் உரிமைகள் நோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என்பது அனைவருக்கும் உறுதியாகத் தெரியவந்தது.

காந்தியப்போராட்டம் ஒன்றின் கிட்டத்தட்ட நேரடி வருணனையாக அமைந்த நூல் பா.முருகானந்தம் எழுதி விகடன் வெளியீடாக வந்திருக்கும் ‘தண்டி யாத்திரை’. சாதாரணமான மொழிநடையில் நேரடியாக தகவல்களைச் சொல்லிச்செல்லும் பாணியில் எழுதப்பட்ட இந்நூல் காந்தியை அறிய விரும்பும் பொதுவாசகர்களால் மிகுந்த தீவிரத்துடன் வாசித்து முடிக்கக்கூடிய ஒன்று. தண்டி யாத்திரையின் பின்னணி, அந்தப்பயணம் நடந்த ஒவ்வொரு நாளும் என்னென்ன நிகழ்ந்தது என்ற விவரணை அதன் விளைவுகள் என மூன்று பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது.

காந்தி ஏன் உப்பை தேர்ந்தெடுத்தார்? இன்று அது அற்பமான பொருள். ஆனால் அன்று அப்படியல்ல. கோடானுகோடி இந்தியர்கள் குடில்கள்வில் வாழ்ந்துகொண்டு கந்தல் அணிந்து முரட்டுத் தானியங்களையும் கிழங்குகளையும் வெறும் உப்புடன் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆக, அவர்கள் அடிக்கடி பணம்கொடுத்து வாங்கக்கூடிய ஒரே பொருள் உப்புதான். ஒரு வறுமைப்பட்ட உள்நிலக் கிராமம் வெளியே இருந்து வாங்கும் பொருளும் உப்பே. ஆகவே உப்புக்கு வரிபோட்டு பலகோடி ரூபாய் சம்பாதித்தது பிரிட்டிஷ் அரசு. ஒருகட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் வருமானத்தில் பதினெட்டுசதம் வரை உப்புவரியாக இருந்துள்ளது.

ஆனால் மக்களின் கண்ணெதிரே உப்பு கடலோதத்தால் இயற்கையாக விளைந்து கிடந்தது. அதை அள்ளினால் அது ராஜதுரோகம் என்று சொன்னது பிரிட்டிஷ் அரசு. அந்த ஆதிக்க அரசின் சுரண்டலையும் மக்களுக்கு தங்கள் மண் மீதான உரிமையையும் திட்டவட்டமாக எடுத்துக்காட்ட உப்பு வரி பிரச்சினை போல பொருத்தமானதாக இன்னொன்றில்லை. அத்துடன் இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழை மக்களையும் பாதிக்கும் பிரச்சினை என்றால் அது அன்று உப்புதான். ஏற்கனவே உப்புவரிநீக்கத்துக்காக பல கோரிக்கைகளும் சிறிய போராட்டங்களும் நடந்திருந்தன. காந்தி அதை இந்திய விடுதலைக்கான குறியீடாக முன்னெடுத்தார்.

காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட 80 தொண்டர்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை நோக்கி தன் நடைபயணத்தை ஆரம்பித்தார். அந்தப்போராட்டம் காந்திய போராட்டத்தின் எல்லா சிறப்பம்சங்களும் கொண்டது. முதலாவதாக, அது பிரச்சாரமே போராட்டமாக ஆன ஒன்று. அருகே உள்ள கடற்கரைகளை தவிர்த்து 390 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தண்டி நோக்கி காந்தி நடந்துசென்றார். ஏப்ரல் ஆறாம் தேதி அந்த பயணம் முடிந்தது.

25 நாட்கள் நீண்ட அந்தப்பயணம் உலகமெங்கும் பெரும் செய்தியாக பரவியது. இந்தியாவெங்கும் கோடானுகோடி மக்கள் அந்த பயணம்குறித்த செய்திகளை அன்றாடம் கேட்டனர். அதைத்தவிர எதைப்பற்றியும் தேசம் பேசவில்லை. உப்புசத்யாக்கிரகம் முடிந்ததும் காங்கிரஸ் பலமடங்கு வளர்ந்து இந்தியாவை இணைத்துக்கட்டும் சக்தியாக ஆகியது. இந்திய விடுதலை நோக்கிய அதன் பயணம் எவராலும் தடுக்க முடியாததாக ஆகியது.

இரண்டாவதாக, முடிந்தவரை எளிய மக்களை மானசீகமாக பங்கெடுக்கச்செய்வதாக இருந்தது அந்தப்போராட்டம். காந்தி சிறிய ஊர்கள் வழியாக சென்றார். குக்கிராமங்களில் தங்கினார். போகுமிடமெங்கும் அவரைக்காண மக்கள் கூடினார்கள். அவர்களிடம் காந்தி தீண்டாமை ஒழிப்பு, கிராமசுகாதாரம், அன்னியப்பொருள் மறுப்பு, கிராமத்தன்னிறைவு குறித்து பேசினார். அந்தப்போராட்டத்தின் முடிவுக்குள் காந்தி பல லட்சம் மக்களை நேரில் சந்தித்துவிட்டிருந்தார்.

நான்காவதாக, எல்லா காந்தியப்போராட்டங்களையும்போல நாடகத்தன்மையும் குறியீட்டுத்தன்மையும் கொண்ட போராட்டம் அது. காந்தி புழுதி படிந்த கிராமச்சாலைகள் வழியாக கால்கள் புண்ணாக நடந்து சென்று உப்பை அள்ளும் காட்சி எந்தக் கட்டுரை அல்லது உரையும் நிகழ்த்தாத விளைவை இந்திய மக்கள் மனத்தில் நிகழ்த்தியது. இந்தியப்போராட்டத்தின் மாபெரும் குறியீடாகவும் அது அமைந்தது. காந்தி கைதானது இந்தியாவையே கொந்தளிக்கச்செய்தது.

உப்புசத்தியாக்கிரகத்தின் தொடர்ச்சியாக நடந்த தாராசனா போராட்டமே சத்யாக்கிரகம் என்றால் என்ன என்று உலகுக்குக் காட்டியது. அங்கிருந்த உப்பு ஆலையின் எல்லையை மீறமுயன்று சட்டமறுப்பு செய்த சத்யாக்கிரகிகளை போலீஸார் அடித்து ரத்தக்களரியில் தள்ளினர். தற்காப்புக்காகக் கூட கைகளை உயர்த்தாத சத்யாக்கிரகிகள் அடிபட்டு அடிபட்டு விழுந்துகொண்டே இருந்த காட்சி அமெரிக்க ஊடகங்கள் வழியாக உலகமெங்கும் சென்றது. பிரிட்டிஷார் பேசிவந்த அரசியல் நேர்மைமீது அது பலத்த அடியாக விழுந்தது. அந்தப்போராட்டத்துடன் பிரிட்டிஷ் குடிமக்களில் பாதிப்பேர் இந்தியச் சுதந்திரப்போராட்டத்துக்கு ஆதரவளிப்பவர்களாக ஆனார்கள். சொல்லப்போனால் வைஸ்ராய் இர்வின்பிரபுகூட உள்ளூர காந்தி மீது பக்திகொண்டவராக ஆனார். உண்மையில்  இந்தியவிடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரிய முதல்கால்வைப்பு அதுதான்.

இந்தப்போராட்டத்தில் காந்தி தன் மூன்று மகன்களையும் ஈடுபடுத்தினார். தாராசனா போராட்டம் மணிலால்காந்தி முன்னிலையில் நின்று நடத்தியது. கடுமையாக தாக்கப்பட்ட மணிலால் பிரிட்டிஷ்போலீஸால் தூக்கி வீசப்பட்டு யாரென தெரியாமல் மருத்துவமனையில் நான்குநாள் நினைவிழந்து கிடந்தார். ராமதாஸ் மண்டை உடைந்து வாழ்நாள் முழுக்க அவதிப்பட்டார்.

காந்தியப்போராட்டத்தின் இயல்பு என்பதே போராட்டத்திற்குப் பின் சமசரம்தான். காந்தி – இர்வின் உடன்படிக்கை மூலம் உப்புசத்தியாக்கிரகம் விலக்கிக்கொள்ளப்பட்டது. உப்புவரி முழுக்க நீக்கப்படவில்லை என்பதை வைத்துப் பார்த்தால் இந்தப்போராட்டம் தோல்வியே. இது எந்த காந்தியப்போராட்டத்திற்கும் பொருந்தும் முடிவே. மறைமுகமாக உப்புசத்தியாக்கிரகம் பிரிட்டிஷ் அரசை நிலைகுலையச் செய்தது. சிறிய இடைவேளைக்குப் பின் காந்தி ஆரம்பித்த அடுத்த போராட்டம் அதன் அடிப்படைகளையே அசைத்தது.

பா.முருகானந்தத்தின் நூலில் அந்தப்போராட்டத்தின் பல நுண்விவரங்களைக் காண்கிறோம். காகா காலேல்கர் அமைத்த அருண் துக்தி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் காந்தியின் பயணம் செல்லும் வழி முழுக்க ஏற்கனவே பரவி அடிப்படை வேலைகளைச் செய்திருந்தார்கள். நடைபயணத்தை பிரச்சாரம் செய்வது, காந்தி வரும்போது கிராமநிர்வாக அலுவலர்களை கூட்டம் கூட்டமாக ராஜினாமா செய்யவைப்பது, காந்தியும் குழுவும் தங்கும் ஏற்பாடுகளைச் செய்வது என்பவை அவர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டன.

பா.முருகானந்தத்தின் இந்நூலில் உள்ள புள்ளிவிவரங்களே ஆர்வமூட்டுபவை. காந்தியுடன் சென்ற 80 பேரில் அதிகமும் குஜராத்திகள். கொஞ்சபேர் மராட்டியர். நாலைந்து மலையாளிகள். ஆனால் தமிழர் எவருமே இல்லை. ஏன்?

தண்டியாத்திரைக்கு வரவேற்பு சீராக இல்லை. சில இடங்களில் மக்கள் குழுமினார்கள். சில இடங்களில் மக்கள் ஆர்வமே காட்டவில்லை. சில இடங்களில் மக்கள் புறக்கணித்தார்கள். வங்காள மாகாணத்தில் அளிக்கப்பட்டிருந்த இஸ்லாமியர்களுக்கான தனித்தொகுதி முறைச் சலுகையை காந்தி நிராகரித்திருந்தமையால் முஸ்லீம்கள் அவரது பயணத்தை பெரும்பாலும் நிராகரித்தார்கள். பிரிட்டிஷ் ஊடகங்கள் தொடர்ச்சியாக காந்தியப்போராட்டம் பிசுபிசுத்தது என்று செய்தி வெளியிட்டன.

பல இடங்களில் தன்னைக்காண வந்த கூட்டத்தினரில் தலித்துக்கள் தனித்து நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு காந்தி கடுமையாக எதிர்வினையாற்றுகிறார். அவர்கள் ஊராருடன் சேர்ந்து நிற்காவிட்டால் தான் அவர்களுடன் போய் நிற்கப்போவதாகச் சொல்கிறார். பல ஊர்களில் அவர் சேரிகளிலேயே தங்கிக்கொள்கிறார். அரைமனதாக மக்கள் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் காந்தி தீண்டாமை மற்றும் சாதிக்கொடுமைகளை கண்டிக்கிறார். மக்கள் மௌனமான சங்கடத்துடன் அவர் சொல்வதை கேட்கிறார்கள்.

ஆனால் காந்தியை பொறுமை இழக்கச்செய்வது அவருடன் சென்ற சத்யாக்கிரகிகள்தான். பின்வரிசையில் செல்பவர்கள் ஒழுங்கு தவறுகிறார்கள் என்பதனால் அவர்களை முன்வரிசைக்குச் செல்ல சொல்கிறார் காந்தி. பட்டினியால் வாடும் கிராம மக்கள் நடுவே செல்லும்போது அவர்கள் உண்ணும் உணவையே தாங்களும் உண்டால்போதும் என்று சொல்லி அவர் அதை உண்கிறார். ஆனால் சத்யாக்கிரகிகளுக்கு பால் கொண்டுவருவதற்காக கார் அனுப்பப்படுகிறது. வெளிச்சத்துக்குச் செலவேறிய காஸ்விளக்குகள் ஏற்பாடுசெய்யப்படுகின்றன

காந்தி பலமுறை கடும் சினம் கொள்கிறார். சத்யாக்கிரகிகளை கண்டித்து மனம் கொந்தளிக்கிறார். சிலமுறை கண்ணீர்விட்டு அழுகிறார். மக்களிடம் உங்கள் நன்கொடைகளை நாங்கள் முறையாகச் செலவழிக்கவில்லை என்று சொல்லி கை கூப்பி மன்னிப்பு கோருகிறார். அவர் இருந்த அந்த தார்மீக உச்சம் நோக்கி அவர் பிறரை இழுத்துச்செல்கிறார். அவர்கள் தள்ளாடி தயங்கி அவரை பின் தொடர்கிறார்கள்.

இந்நூல் உருவாக்கும் காந்தியின் சித்திரத்தை ஓர் அமெரிக்க நிருபர் எழுதியதாக இந்நூல் சொல்லும் வரியைக்கொண்டே சொல்லலாம். தண்டி யாத்திரை ஏசுவின் கல்வாரிப்பயணம் போன்றது. தன் சிலுவையுடன் தனித்து நடந்து சென்றார் தீர்க்கதரிசி. அவருடன் இருந்து அவர் சொற்களைக் கேட்டு அவருக்காக வாழ்க்கையை துறந்த அவரது மாணவர்களால்கூட அவரை பின்தாடர்ந்து செல்ல முடியவில்லை.

காந்தியவாதிகளில் பலர் காந்திக்காக ரத்தம் சிந்தினார்கள். பலர் அவருக்காக வாழ்வையே துறந்தார்கள். ஆனாலும் அவர் சென்ற வேகத்தை அவர்களால் எட்ட முடியவில்லை. சொல்லப்போனால் காந்தியே காந்தியத்தை எட்டமுடியாமல் வாழ்நாளெல்லாம் ஓடிக்கொண்டிருந்தவர்தான். காரணம் காந்தியம் ஓர் உயர்லட்சியம். ஒரு கனவு. அதற்கு எதிராக இருப்பது மண்ணில் பற்பல நூற்றாண்டுகளாக மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பேராசையும் வன்முறையும் சுயநலமும்தான். நம்மை வந்துசூழும் நாமே காந்தியத்தின் எதிரிகள். நாம் போராடவேண்டியது அதனுடன்தான்

ஆகவே ஒருகோணத்தில் காந்தியைப் பின் தொடர்ந்தவர்களைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அவர்கள் நம்மைப்போன்றவர்கள். நீண்ட நடைபயணத்துக்குப் பின்பு ஒருவர் ஐஸ்கிரீம் அன்பளிப்பாக அளித்தால் அந்த கிராமத்தில் அது ஒரு ஆடம்பரம் என்பதை அக்கணம் எண்ணாமல் அதை ஆவலுடன் உண்ணும் இளைஞர் மிக எளிமையானவர். காந்தி அவர் மீது கடும் சினத்தைக்கொட்டும்போது அவரையல்ல சக மனிதர் பசித்திருக்கையில் வரலாறு முழுக்க உண்டு கொண்டே இருந்த கோடானுகோடிபேரையே இலக்காக்குகிறார். அவர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்களுக்கு மனசஞ்சலம் கொடுத்தபடி கிறிஸ்துவும் காந்தியும் கூடவே இருப்பார்கள்.

தண்டி யாத்திரை – பா.முருகானந்தம்- விகடன் பிரசுரம்

முந்தைய கட்டுரைகோவை சந்திப்பு
அடுத்த கட்டுரைநாஞ்சில் நாடன்,பாதசாரி