சாகித்ய அகாடமி விருதுகள்

யூ.ஏ.காதர்

மலையாளத்தில் இவ்வருடத்துக்கான சாகித்ய அக்காதமி விருது யூ.ஏ.காதருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கேரள இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஒரு தனிவழிக்குச் சொந்தமான பெரும்படைப்பாளி இவர். திருக்கோட்டூர் என்ற சிறிய கிராமப்பகுதியை அந்த பிராந்தியத்திற்கே உரிய மொழிநடையுடன் சித்தரித்தவர். ஆனால் யதார்த்தவாதப் படைப்பாளி அல்ல. இவருடைய திருக்கோட்டூர் அபாரமான கற்பனை வளத்தால் கட்டற்று சித்தரிக்கப்பட்ட தனி உலகம்.

‘சங்ஙல’ [சங்கிலி] என்ற யதார்த்தவாத நாவல் மூலம் கவனத்துக்கு வந்தவர் காதர். அது ஒரு பெரிய முஸ்லீம் குடும்பத்தில் வீழ்ச்சியின் கதை. அங்கிருந்து ‘திருக்கோட்டூர்த்தன்மை’ என்று விமரிசகர் சொன்ன தன் தனி புனைவியல்புக்கு வந்து சேர்ந்தார். எழுபதுகளிலேயே, உலகம் மாய யதார்த்தத்தை அறிவதற்குள்ளேயே, காதர் மாய யதார்த்தத்துக்குச் சென்றுவிட்டிருந்தார். உதாரணமாக, அவரது கதை ஒன்றில் ஒருவர் மூக்குப்பொடி போட்டு தும்மி அந்த விசையிலேயே பறந்து பக்கத்து ஊருக்குச் செல்கிறார்!

விளையாட்டுத்தனம் மிக்க சொல்லாட்டம் கொண்ட நடை காதருடையது. பன்னிப்பன்னி நாட்டுப்புறப்பாட்டு போலவே சொல்லிச் செல்வார். அவரது ‘பந்தளாயனிலேக்கு’ என்ற சிறுகதை ஒரு திருக்கோட்டூர் நாயர் அம்மச்சி கிளம்பி பந்தலாயனி கோயிலுக்கு போவதன் சித்திரம் மட்டும்தான். கிழவி திருக்கோட்டூர் எல்லையை தாண்டுவதற்குள் கதை முடிந்துவிடுகிறது. ஆனால் வரிக்கு வரி வேடிக்கை ததும்பும் கதை அது. வடக்குக் கேரளத்துக்குரிய தனி மொழிநடையில் எழுதப்பட்ட அபூர்வமான ஆக்கங்கள் காதரால் உருவாக்கப்பட்டவை.

விசித்திரமான கதாபாத்திரங்கள்தான் காதரின் பலம். அவ்வகையில் அவரது இலக்கிய உலகம் வைக்கம் முகமது பஷீரின் புனைவுலகுக்குச் சமானமானது. வயிறு நிறைய சாப்பிட்டாலே முழுப்போதை ஏறி கட்டுப்பாட்டை இழக்கும் தாமிச் செறுமன்,  என்ன ஏது என்று தெரியாமல் பெரும் கோடீஸ்வரனாக ஆகிவிடும் ‘மாணிக்கம் விழுங்கிய’ கணாரன் என்று அவரது கதாபாத்திரங்கள் வசீகரமானவை.

1935ல் பர்மாவில் முகைதீன்குட்டி ஹாஜிக்கும் பர்மாக்காரியான மாமெதிக்கும் பிறந்தவர் காதர். கொயிலாண்டியில் உயர்நிலைபப்ள்ளியி முடித்தபின் சென்னை நுண்கலைக்கல்லூரியில் ஓவியக்கலையில் பட்டம்பெற்றார். 1955 முதலே எழுதிவரும் காதர் கேரள அரசு சுகாதாரத்துறை அதிகாரியாக இருந்து 1990ல் ஓய்வுபெற்றார்.

கிட்டத்தட்ட ஐம்பது நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதியான ‘திருக்கோட்டூர் பெருமை’ 1983ல் கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்றிருக்கிறது. அபுதாபி சக்தி விருது, எஸ்.கெ.பொற்றெகாட் விருது, மலையாற்றூர் விருது, சி.எச்.முகமது கோயா விருது போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். மனைவி ·பாத்திமா பீபி.

யூ.ஏ.காதரின் சில கதைகள் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் நுட்பங்கள் கொண்டவை. யூ.காதருக்கு வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைகாமமும் ஒழுக்கமும்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடவுளற்றவனின் பக்திக்கவிதைகள் 4