[ஆகஸ்ட் 8, 2008 அன்று வெளியான கட்டுரை. மறுபிரசுரம்]
இன்று எங்கள் பதினேழாவது திருமண நாள். 1991 ஆகஸ்ட் எட்டாம் தேதி நான் அருண்மொழியை மணந்தேன். எனக்கு அப்போது 29 வயது. அருண்மொழிக்கு 20 தாண்டியிருந்தது. நான் ‘ரப்பர்’ நாவல் எழுதி அகிலன் நினைவுப்பரிசு பெற்று இலக்கிய வட்டாரத்தில் கவனம் பெற்றிருந்தேன். ‘படுகை’, ‘போதி’, ‘ஜகன்மித்யை’, ‘மாடன்மோட்சம்’ போன்ற கதைகள் பேசப்பட்டன. ரப்பர் நாவலைப்படித்துவிட்டு என் வாசகியாக அறிமுகமானாள் அருண்மொழி. ஒரு கட்டத்தில் அது காதலாகியது. காதல் மணம். சில சிறுசிக்கல்களுக்குப் பின் அவள் வீட்டார் ஒத்துக்கொண்டார்கள். எனக்கு அப்போது அண்ணா மட்டும்தான் உறவு
அது ஒரு மறக்கமுடியாத நாள்தான். ஆனால் அதைக் கொண்டாடும் வழக்கமெல்லாம் எங்களுக்கு இல்லை. பரிசுகள் கொடுத்துக் கொள்வது, வெளியே செல்வது எதுவுமே வழக்கமில்லை. ஆரம்பத்தில் சிலவருடங்கள் நினைத்துக்கொள்வோம். இப்போதெல்லாம் பலசமயம் அந்தத் தேதி தாண்டிய பின்னர்தான் எங்கள் நினைவுக்கே வரும். என்னுடைய பிறந்தநாள், அருண்மொழியின் பிறந்தநாள் எல்லாமே அப்படி அவற்றின் பாட்டில் கடந்து சென்றுவிடும். சைதன்யாவின் பிறந்தநாள் மட்டும் தவறாமல் நினைவில் நிற்கும், காரணம் அதை அவள் மறப்பதில்லை. ஆறுமாதம் முன்னரே உஷாராகிவிடுவாள்.
அன்றெல்லாம் திருமணத்தைப்பற்றி நான் நினைத்ததே இல்லை. அது எனக்குச் சரிவராது என்ற எண்ணம் இருந்தது. 1985இல் அம்மா அப்பா இறந்தபின்பு எந்தவிதமான பிடிப்புகளும் இல்லாமல் இருந்தேன். ஊர் ஊராக ஒருவித திட்டமும் இல்லாமல் அலைந்துகொண்டிருந்த காலம். நிலையான வருமானம் இல்லை, காரணம் முறையாக வேலைக்குச் செல்வதில்லை. காஸர்கோடு நகரில் தொலைபேசித்துறையில் ஒரு மணிநேரத்துக்கு ரூ 2.75 ஊதியத்தில் RTP ஊழியனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். Reserved Trained Pool. அதை Reserved Trained Fool என்போம். காரணம் ஆறுமாதக் காத்திருப்புக்காக ஆள் எடுத்த மறுமாதமே இந்திராகாந்தியின் ஆளெடுப்புத் தடைச்சட்டம் அமலாகியது. 1988 நவம்பரில்தான் நீதிமன்றம் தலையிட்டதனால் வேலை உறுதிப்பட்டது. அதுவரை தினக்கூலி.
வேலைக்குப் போக ஆரம்பித்ததே என் முயற்சி இல்லாமல்தான். அதற்கு முன் 1981 ல் கல்லூரியை விட்டது முதல் 1984 வரை நான் முழுநாடோடி. பலவகை வாழ்க்கை. ’84 செப்டம்பரில் ஒரு பைசாகூட இல்லாமல் ஹஸன் ரயில் நிலையத்தில் நின்றபோது கேரளத்தில் கண்ணனூரில் இருந்த தூரத்துச் சொந்தமான அண்ணாவின் நினைவு எழுந்தது. டிக்கெட் இல்லாமல் ரயில்பயணம்செய்து — அப்போது சாமியார்க்கோலத்தில் இருப்பேன், சாமியார்களுக்கு டிக்கெட் தேவையில்லை– கண்ணனூர் வந்திறங்கி, ராணுவமுகாமுக்குச் சென்று, அங்கே டிஃபென்ஸ் அக்கவுண்ட் துறையில் வேலை பார்த்த அண்ணாவைத் தேடிக் கண்டடைந்தேன். அவர் என்னை உடனடியாகக் குளிக்கச்செய்து, உடைகளும் உணவும் தந்து, கூடவே வைத்துக் கொண்டார். அவர்தான் என்னைத் தொலைபேசித்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். அவரது உறவுப்பையன் ஒருவன் விண்ணப்பித்திருந்தான். அம்மாவுக்கு எழுதி என் சான்றிதழ்களைப் பெற்று என்னை விண்ணப்பிக்கச் செய்தார். அம்மா அவருக்கு எழுதிய கண்ணீர்க்கடிதங்கள் பலவற்றின் வரிகள் நினைவில் இருக்கின்றன
ஒருமாதத்தில் வேலைகிடைத்தது. 1984 டிசம்பர் முதல். ஊழியனானபிறகும் நாடோடிப்புத்திதான். காசே இல்லாமலாகும்போது மட்டுமே வேலைக்குப் போவேன். அதுவும் மாலைநேர வேலைக்கு. இரவு பன்னிரண்டு மணிக்கு அடர் இருளில் நடந்து கடலோரம் இருந்த என் பழைய தனித்த வீட்டுக்கு வருவேன்.அப்போது மாதம் 200 ரூபாய் போதும். ரொம்பவும் பசிபொறுக்க முடியாமல்போனால் மட்டும்தான் சாப்பிடுவது. என் முக்கிய உணவு அப்போதெல்லாம் பொறையும் டீயும்தான். ஒருநாள் இருபத்தைந்து டீ குடிக்கும் வழக்கம் இருந்தது. மிக ஒல்லியாக இருப்பேன். அம்மா அப்பா மரணத்தால் நிலைகுலைந்து அனேகமாக பைத்தியமாக இருந்தேன். ஆனால் வெறிபிடித்து மூன்றுமொழிகளில் படித்துத் தள்ளிக்கொண்டுமிருந்தேன்.
சுந்தர ராமசாமி , ஆற்றூர் ரவிவர்மா ஆகியோருடனான தொடர்பு என்னை மெதுவாக சமநிலைக்குக் கொண்டுவந்தது. சுந்தர ராமசாமி என்னை எழுதும்படி சொன்னார். எழுத்து என்னை மீட்டது. ஆனாலும் நரம்புச்சிக்கல்களும் கடுமையான தூக்கமின்மை நோயும் தொடர்ந்தன. முன்பு ஒருமுறை மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்று பிழைத்துக் கொண்டேன். ஆனால் அந்தப் பாதிப்பு தொடர்ந்தது. 1988 பெப்ருவரியில் ஒருமுறை இரவில் நினைவிழந்து விழுந்துவிட்டேன். காலைவரை தரையில் கிடந்தேன். என் வீட்டில் நான் தனியாகத்தான் இருந்தேன் அப்போது.
காலையில் எழுந்த போது எனக்குத் தலைசுற்றியது. உலகமே மங்கலாகவும் குழப்பமாகவும் இருந்தது. தென்னந்தோப்பு மிகவும் அடர்த்தியாக மாறி நீர்ப்பிம்பம் போல அலையடித்தது. பலமுறை முகம் கழுவினேன். டீ போட்டுக் குடித்தேன். கண்களில் ஏதோ பாதிப்பு என்று புரிந்தது. நடந்து சென்று அரசு கண்மருத்துவர் வீட்டுக்குப் போய் அவரைச் சந்தித்தேன். அவர் என்னை கவலையுடன் நெடுநேரம் பரிசோதனைசெய்தார். உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் ஊசியால் குத்துவது போன்ற நருநருவென்ற வலி வருவதுண்டா, காதுகளில் சிலவகை உரசல் ஒலிகள் கேட்பதுண்டா, அடிக்கடி காரணமில்லாமல் தூக்கிவாரிப்போடுவதுண்டா என்றெல்லாம் கேட்டார். அவை எல்லாமே எனக்கிருந்தன. உங்களுக்கு வந்திருப்பது மென்மையான ஒரு பக்கவாதம் என்றார்.
பக்கவாதம் மிகக் குறைந்த அளவில் வரும்போது அது சின்னஞ்சிறு தசைநார்களில் மட்டுமே அடையாளம் காணுமளவுக்கு வெளிப்படும். உன் நாவிலும் சிறிய சிரமம் இருக்கும் என்றார். என் இடதுகண்ணில் விழியாடியை இயக்கும் ஆறு தசைநார்களில் ஒன்று செயலிழந்திருந்தது. ஆகவே விழியாடி சரியாகத் திரும்பவில்லை. விளைவாக நான் காண்பனவற்றை இரண்டிரண்டாகக் கண்டுகொண்டிருந்தேன். தன் கைவிரலைக் காட்டிப்’’பார்”என்றார். இரண்டு விரல். ஓரக்கண்ணால் பார்த்தபோது இரு பிம்பங்களும் நல்ல இடைவெளியில் தெரிந்தன. நேருக்கு நேராகப்பார்த்தால் பழங்கால மூவண்ண பிளாக் அச்சுப் படிவுகள்சரிவரப் பொருந்தாமல் இருபிம்பங்களாக இருப்பது போலிருந்தது. ஏன் இப்படி வந்திருக்கிறது என்று தெரியவில்லை என்று சொல்லி ஒரு கண்ணுக்கு ஒரு கட்டு போட்டு அனுப்பினார். ஒற்றைக்கண்ணால் பார்த்தபோது ஒன்றும் சிக்கலில்லை. தூரத்தை மதிப்பிடுவது தவிர.உலகம் ஒரு தட்டையான ஓவியமாக மாறிவிட்டது.
நான் அஞ்சிவிட்டேன். பக்கவாதம் தீவிரமாகத் தாக்கவும்கூடும் என்று டாக்டர் சொல்லியிருந்தார். வாழ்க்கையில் முதல்முறையாக எனக்கு ஒரு துணை தேவை என்று உணர்ந்த நாள் அது. என் அண்ணா ஊரில் அவரே வேலையில்லாமல் வீட்டை உடைத்து விற்று சாப்பிட்டு அல்லாடிக்கொண்டிருந்த காலம். நான் அவ்வப்போது அவருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் கொஞ்சம்கூடப் பணம் இல்லை. நான் உடல்தளர்ந்து படுத்துவிட்டால் என்ன ஆகும்? ஆற்றூர் ரவிவர்மாவை அழைத்தேன். உடனே கிளம்பி வா என்றார். அவரது மனைவி போனை வாங்கி நாளைக் காலை இங்கே இருக்க வேண்டும் என்று ஆணையிட்டார். ரயிலில் கிளம்பி சென்று சேர்ந்தேன். அதிகாலை மழையில் குடையுடன் ஆற்றூர் ரவிவர்மா ரயில்நிலையத்துக்கு வந்து காத்திருந்தார்.
திரிச்சூர் மருத்துவக்கல்லூரிப் பேராசிரியரான நரம்பியலாளர் டாக்டர் கெ.ஜி.நாயரை உடனே சென்று பார்த்தேன். அவர் நோயாளிகளைப் பார்ப்பதில்லை. அவரது மாணவராக இருந்த ஆற்றூர் ரவிவர்மாவின் மகன் டாக்டர் பிரவீண் சொன்னதனால் என்னைப் பரிசோதனைசெய்தார்.மென்மையான குரலும் இளம் சூடான சிறிய விரல்களும் கொண்ட குள்ளமான வெண்ணிற மனிதர். வெண்ணிற முடி, வெண்ணிற பிரெஞ்சுதாடி. ஒரு பந்தை என் கைவிரல்களால் பிடிக்கச் செய்தார். பல சொற்களைத் திருப்பித் திருப்பிப் பேசவைத்தார். கண்களைத் திருப்பச் செய்து பரிசோதனை செய்தார். என்னிடம் தனியாக ஒருமணி நேரம் பேசினார். அவரது சொற்களைத் துல்லியமாக இப்போதும் நினைவுகூர்கிறேன்.
”நீ உன் உடம்போடு விளையாடிவிட்டாய்.”என்றார் அவர். ”உன்னுடைய மனம் மிகவும் கொந்தளிப்பானது. அந்தக் கொந்தளிப்பை நீ அடக்க முடியாது. ஏனென்றால் அது உன் இயல்பு. உன்னை எழுத்தாளனாக ஆக்குவதே அந்தக் கொந்தளிப்புதான். அது இறைவனின் கொடை. ஆகவே சாதாரண லௌகீக மனிதர்களை விட பலமடங்கு கவனத்துடன் நீ உன் உடலைப் பேணவேண்டும். உன் தூக்கம் உன் கட்டுப்பாட்டில் இருந்தாகவேண்டும். ஆனால் நீ உன் மனதை மேலும் மேலும் கொந்தளிக்கச் செய்திருக்கிறாய். உடம்பைக் கிட்டத்தட்ட அழியவே விட்டிருக்கிறாய். உடம்பு தன் முதல் அறிவிப்பை அளித்தாகிவிட்டது.”
”என்னசெய்வது?”என்றேன். ”மூளையைப்பற்றி நமக்கு தெரிவது கடலில் ஒரு டீஸ்பூன் அளவுக்குத்தான். மூளையின் சில செல்கள் வேலைசெய்யவில்லை, அவ்வளவுதான். அது ஏன் என்றே தெரியாது. எந்த மருத்துவமும் செய்ய முடியாது. நரம்பியலில்ஒட்டுமொத்தமாக சில வைத்தியங்கள்தான் உண்டு. அதெல்லாம் மூளையைத் தூங்க வைப்பதற்கும் உசுப்புவதற்கும்தான். நம் உடலில் மூளைசெல்கள் பதினைந்துநாட்களில் புதுப்பிக்கப்படும். ஆகவே பதினைந்து நாள் பார்ப்போம். இல்லாவிட்டால் முப்பதுநாள். நாற்பத்தைந்து நாளில் பெரும்பாலும் சரியாகிவிடும். இல்லாவிட்டால் ஏதாவது செய்வோம்… இப்போது போய் நன்றாகத் தூங்கு. ஓய்வில் இரு”
பதினைந்துநாளில் சரியாகிவிட்டேன். ஆற்றூர் ரவிவர்மாவின் மனைவி என்னை மிகமிகக்கவனமாக பார்த்துக் கொண்டார். எதையும் உரக்கச் சிரித்தபடி எதிர்கொள்பவர் ஆற்றூர் ரவிவர்மா. அவரது பேச்சு அளித்த உற்சாகம் என்னை மீட்டது. விடைபெறும்போது கெ.ஜி.நாயர் சொன்னார். ”உன் மூளையில் இந்த பக்கவாதச்சாத்தியக்கூறு உள்ளது. ஏதாவது ஒரு வயதில் இந்நோய் உனக்கு வரலாம். பொதுவாகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு உள்ள ஆபத்துதான் இது.. கவனமாக இரு…” அப்போது மலையாள நடிகர் ‘பரத்’கோபி பக்கவாதம் தாக்கிப் படுக்கையில் இருந்தார்.
ஆற்றூர் என்னிடம் திருமணம் பற்றிப் பேச ஆரம்பித்தார். மனிதனுக்குத் துணை தேவை, துணை தேவையில்லை என்றால் நீ முழுமையாகத் துறவியாக ஆகி வாழ்க்கையையே துறக்க வேண்டும் என்றார். எனக்கு அவர் சொல்வதன் நியாயம் பிடிகிடைத்தாலும் நான் அதைத் தவிர்த்தேன். வேலை நிரந்தரமாக ஆகிவிட்டதே என்றார் ஆற்றூரின் மனைவி. சில பெண்களை அவர் மனைவி பரிந்துரைத்தார். அவர்கள் சொன்ன ஒரு நம்பூதிரிப்பெண் மிகவும் அழகாகக் கூட இருந்தாள். என் மனம் அதில் செல்லவில்லை. ஆனால் எழுத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டுமென்ற வேகம் எழுந்தது. அதன் பின்புதான் எழுதிக்குவிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய வேகத்தை ஆற்றூர் உற்சாகப்படுத்தினார். நீ தமிழில் எழுதுவதாக இருந்தால் தமிழ் உன் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார். ஆகவே நான் தமிழ்நாட்டுக்கு மாற்றம் வாங்கி வர முயன்றேன். தருமபுரி மாவட்டத்தில் இருந்து பாலகிருஷ்ணன் என்ற மலையாளி கேரளம் வர விரும்பினார். பரஸ்பர மாற்றம் கோரிப் பெற்று நான் தருமபுரிக்குப் போய் பாலக்கோடு கிராமத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கிருக்கும்போது சில திருமண முயற்சிகளை ஆற்றூர் செய்தார். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அப்போதுதான் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவியாக இருந்த அருண்மொழியை சந்தித்தேன். தி.ஜானகிராமனின் கதாநாயகி போல் இருக்கிறாள் என்ற எண்ணம் வந்தது. ஆம், அதேதான். கண்டதும் காதல்! நான் உள்ளூர முடிவு செய்யும்போது அவள் பெயர் தவிர அவளைப்பற்றி எதுவுமே தெரியாது.
நான் அருண்மொழியைக் காதலித்தது வெறும் ஏழுமாதங்கள். 1991 ஜனவரியில்தான் அவளை நேரில் சந்தித்தேன். காதலைச் சொன்னபின்பு வெறும் ஐந்தேமுறைதான் சந்தித்திருக்கிறோம். சேர்ந்து ஒரு பேருந்துப்பயணம் பட்டுக்கோட்டைக்கு. புரிதல் பகிர்தல் எதற்குமே நேரமில்லாத, கற்பனாவாதம் மேலோங்கிய உணர்ச்சிகரமான காதல் அது. தினம் ஒரு கடிதம். அதுவும் பத்து பதினைந்து பக்கம். இப்போது அவற்றைப்படித்தால் அவற்றில் அறிவார்ந்த எதுவுமே இல்லை. ஆனால் என் மொழிநடை அதன் சிறந்த சாத்தியங்களை அடைந்திருக்கிறது. எங்கள் காதலில் தர்க்கபூர்வமான சிந்தனைக்குக் கொஞ்சம் கூட இடமே இருந்ததில்லை. எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. ஒருவரைப்பற்றி ஒருவர் எதுவுமே தெரிந்துகொள்ள முயலவில்லை! நான் ஒருபோதும் மேலும் சம்பாதித்து மேலும் லௌகீகமாக வெற்றிபெற முயலமாட்டேன், என் இலக்கு எழுத்து மட்டுமே என்று ஒரு கடிதத்தில் அவளுக்கு எழுதினேன். எழுத்தினால் பணமும் புகழும் ஏன் எளிய அங்கீகாரமும்கூட கிடைக்கப்போவதில்லை, ஆனால் அதைத்தான் செய்யப்போகிறேன் என்றேன்.அவள் அப்போது கிட்டத்தட்ட சிறுமி. அதெல்லாம் அவள் மனதில் புகவேயில்லை.
என் ஒரேவயது நண்பர்கள் பலர் அக்காலங்களில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நான் திருமணம், உறவுகள் பற்றியெல்லாம் விரிவாகப் பேசியிருக்கிறேன். அவர்களில் சிலர் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். பலர் மரபுத்திருமணம். பலவருடங்களுக்கு பின்பு ஒருமுறை ஒரு விடுதியறையில் சந்தித்தபோது குடும்ப வாழ்க்கையைப்பற்றிப் பொதுவாகப்பேசிக் கொண்டோம். காதல் திருமணங்கள் அனைத்துமே ஒருவகை சலிப்பை எட்டிவிட்டிருந்தன. பிரிவு என்று ஏதும் இல்லை. வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது, அவ்வளவுதான். அவ்வப்போது பிரியமும் பகிர்தலும்கூட இருந்தன. ஆனால் காதல் முற்றிலும் இல்லை. காதல்நாட்களைப்பற்றிய நினைவேகூட வெகுதூரத்தில் இருந்தது. காதலைப்பற்றி நினைக்கும்போது ஒரு கசப்பு, கசப்பு எப்போதுமே கூட இருந்தது. இளம்பிராயத்துக்குரிய பரபரப்பால் தேவையில்லாத ஒன்றை செய்துவிட்டோம் என்ற உணர்வு. சாதி மாறித் திருமணம் செய்துகொண்ட ஒருவரின் குடும்பத்தில் கடுமையான ஏமாற்றமும் மனமுறிவும் உருவாகி விட்டிருந்தது. பிரிவது சுலபம் அல்ல என்பதனால் உறவு தொடர்ந்தது.
மரபுத்திருமணங்களில் அந்த ஏமாற்றம் இல்லை. அவை ஒரேவகையான குடும்பச் சூழலில், பொருளியல் சூழலில் அமைக்கப்பட்ட உறவுகள். ஆகவே பெரிய முரண்பாடுகளும் இல்லை. அனைவருமே மனைவி தங்கள் வாழ்க்கையின் முக்கியமான ஓர் அங்கம், அவள் இல்லாமல் தங்கள் வாழ்க்கை இல்லை என்றார்கள். அவள் மீதும் குழந்தைகள் மீதும் பிரியம் இருப்பதைச் சொன்னார்கள். ஆனால் ஆழமான ஒரு சலிப்பும் இருந்தது. மனைவி தவிர்க்கமுடியாத ஒரு வசதி, தேவை, பொறுப்பு — அவ்வளவுதான். காதல்? பெரும்பாலும் முதல்குழந்தை வரை நீண்ட ஒரு சிறு ஈர்ப்பு. அவ்வளவுதான். அதைக் காதல் என்று சொல்லலாமென்றால் அவ்வளவு மட்டுமே.அதன் பின் இணைக்கும் கண்ணி என்பது குழந்தைகள். சேர்ந்துவாழ்வதன் பொறுப்புகள். சமூகத்தில் காட்சியளிப்பதன் தேவைகள். இன்றியமையாத காமம்
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த நீண்ட வருடங்களில் எனக்கும் அருண்மொழிக்கும் இடையே முழுமையான,உணர்ச்சிகரமான நல்லுறவு மட்டுமே இருந்தது. என் வாழ்க்கையில் நான் நன்றாகப்புரிந்துகொண்ட ஆளுமை அவள்தான் என்றும் என்னை நன்றாகப் புரிந்துகொண்ட ஆளுமை அவள் என்றும் ஆகியிருந்தது. என்னுடைய எண்ணங்கள் கனவுகள் கவலைகள் அனைத்திலுமே அவளுக்குப் பங்கிருந்தது. எந்த நிலையிலும் அவளுக்கு மனத்துயரமோ சங்கடமோ வரும் எதையுமே நான் செய்வதில்லை. எங்கள் நண்பர்கள் நடுவே ஒரு முன்னுதாரண லட்சிய தம்பதியினர் நாங்கள் என்று அறியப்பட்டிருந்தோம். அருண்மொழிக்குக் கிண்டலாக ‘ரிஷிபத்னி’ என்றே பெயருண்டு.
நான் தயங்கியதற்குக் காரணம் உண்டு. நான் திருமணத்துக்கு முன்புவரை அப்படி ஒரு முழுமையான மனித உறவு சாத்தியமென நம்பியதே இல்லை. அதை எப்போதும் சொல்லியும் வந்தேன். சக மனிதனைக் கண்காணிப்பதே மனித இயல்பு, தன் அகங்காரத்தைக் கழற்றி விட்டு ஆளுமையை இன்னொரு மனிதர் முன் சமர்ப்பணம் செய்ய மனிதனால் எந்நிலையிலும் இயலாது என்று வாதிடுவேன். அதற்கு அக்காலத்தில் மேலோங்கியிருந்த இருத்தலியம் ஒரு முக்கியமான காரணம். ‘இரு மனிதர்கள் நடுவே உள்ள உறவு ஒருமையினால் உருவாவதில்லை, முரண்பாட்டினால் மட்டுமே உருவாகிறது’ என்றுதானே இருத்தலியலின் சூத்திரம்? சார்த்ர் அவரது துணைவி சிமோங் த பூவா விடமிருந்து பெற்ற அனுபவ ஞானம்!
அந்த இரவில் சற்று தயக்கத்துக்குப் பின் நான் துணிந்து சொல்ல ஆரம்பித்தேன். பதினான்கு வருடங்களில் என்னுடைய காதல் மேலும் மேலும் வளர்ந்திருக்கிறது. இளம்காதலனாக இருந்தபோதிருந்த அதே மனக்கிளர்ச்சியும் பரவசமும் இன்றும் ஒவ்வொரு நாளும் நீடிக்கிறது. இப்போதும் அவளைப்பார்ப்பது என்னை கரையிலாத உவகையில் தள்ளுகிறது. அவளுடைய தோற்றம் அசைவுகள் உடை எல்லாமே பேரழகாகவே தோன்றுகின்றன. அவளுடைய கைப்பை, அவளுடைய பேனா, கசங்கிய காகிதக்குறிப்புகள் எல்லாமே பிரியத்துக்குரியனவாக இருக்கின்றன. கீழே கிடக்கும் ஒரு தாளில் அவளுடைய கையெழுத்து இருக்குமானால் ஒரு கணம் என் மனதில் தந்திகள் அதிர்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையில் அவளுடைய முகத்தைப் பார்க்கவே விரும்புகிறேன். ஒவ்வொநாளும் அவள் அலுவலகம் விட்டுவரும் நேரத்தை மனம் படபடக்கத்தான் எதிர் நோக்குகிறேன். அவளுடைய தோற்றமல்லாது பெண் தோற்றமே என் நெஞ்சில் பதிவதில்லை. காணும் பெண்களிலெல்லாம் அவளுடைய சாயலைத்தான் மனம் தேடுகிறது. பதினான்கு வருடங்களுக்கு முன்பிருந்த உணர்வெழுச்சிகள் இப்போது சிறுத்துத் தெரிகின்றன. ஏனென்றால் இப்போதுள்ள உணர்ச்சிவேகம் மிகப்பலமடங்கு ஆழமானதும் கூட…
அறையில் இருந்த நண்பர்கள் சற்றே பிரமித்துப்போய்விட்டார்கள். அவர்கள் கேலியாக சிரிப்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு வாக்குமூலம் போல அதைச் சொல்லவேண்டுமென அப்போது தோன்றியது. அது என் இறந்தகாலத்துக்கு நானே சொல்லிக் கொள்வதைப்போல. நான் உரத்த குரலில், கண்கள் விரிய, சொன்னேன். ஆம், இது கதைகளில் நாம் வாசிக்கும் நம்ப முடியாத காதல்போலத்தான் இருக்கிறது. இப்படி இன்னொருவர் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஏன், இப்போதுகூட இன்னொருவர் இதைச் சொன்னால் என்னால் நம்ப முடியாது. ஆனால் என் ஆழ்மனம் அறியக்கூடிய உண்மை இது. என்னைப்பொறுத்தவரை மண்ணில் எந்த மனித உயிரும் அவளுடன் எளிமையாகக்கூட ஒப்பிடக்கூடியது அல்ல. பிரியத்தின் ஒவ்வொரு அணுவும் அவளை நோக்கியே குவிகின்றது. பூரணமான சுயசமர்ப்பணம் இது. அன்றாட லௌகீக வாழ்க்கையின் ஆயிரம் செயல்களால் ஒரு கணம்கூட இதன் மாற்று குறைந்ததில்லை. காலத்தால் இது மேலும் மேலும் ஒளிதான் பெறுகிறது. இது கரையற்ற , கட்டுப்பாடுகளே இல்லாத, முழுமையான பெருங்காதல்தான். பல்லாயிரம் வருடங்களாக காவியங்கள் கவிதைகள் மூலம் மனித குலம் கனவு கன்டுவரும் மகத்தான காதல்தான் வேறு எதுவுமே இல்லை. அதை அறியாத எவரும் அதைப்புரிந்துகொள்ள முடியாது. இல்லையென்போருக்கு இல்லாதது- ஆகவே இறைவனுக்கு நிகரானது!
ஆச்சரியமாக என் நண்பர்கள் எவருமே சிரிக்கவில்லை. ஒருவன் மட்டும் நான் உன்னை சில கேள்விகள் கேட்க வேண்டும், நீ இத்தனை நேரடியாகச் சொல்வதனால் என்றான். கேட்கலாம் என்றேன். எதையுமே ரகசியமாக வைத்துக்கொள்ளாத ஒரு வாழ்க்கையை எப்போதுமே கனவு காண்பவன் நான். நண்பர் கேட்டார், நீ உன் மனைவி அன்றிப் பிற பெண்களுடன் உறவு கொண்டது இல்லையா? நான் இல்லை என்றேன். திருமணத்துக்குப் பின்னும் முன்னும். அதற்கான வாய்ப்புகள் உனக்கு வந்தனவா என்றான் நண்பன். ஆம், நான் எப்போதுமே பிறர்மேல் தீவிரமான பாதிப்பை செலுத்துபவனாகவே இருந்திருக்கிறேன். ஆகவே ஏராளமான முறை. எப்போதுமே அந்த வாய்ப்புகள் என் முன் உள்ளன. இப்போது திரைப்பட உலகிலும். அவை என்னைக் கவரவில்லை என்றேன்.
உன்னுடைய மனைவிக்கு உன்னுடைய எல்லா விஷயங்களும் தெரியுமா என்றான் நண்பன். என் வரையில் அந்தக் கேள்விக்கே இடமில்லை. பொதுவாக நான் ரகசியங்களே வைத்துக் கொள்வதில்லை. என் நண்பர்களுக்குத் தெரியாத எந்த விஷயமும் என் வாழ்க்கையில் இல்லை. அருண்மொழியைப் பொறுத்தவரை என் மனதில் அவளுக்குத் தடைகளே இல்லை. நண்பன் கேட்டான், உன்னுடைய குழந்தைகளை விடவும் உன் மனைவி உனக்கு மேலானவளா? நான், அந்த ஒப்புமைக்கே இடமில்லை என்றேன். குழந்தைகள் எனக்கு மிக முக்கியமானவர்கள், ஆனால் அருண்மொழி அதற்கும் பல படி மேல் என்றேன்.
நீ நித்ய சைதன்ய யதியின் மாணவன். குருவுக்கு சுய சமர்ப்பணம் செய்வது நம் மரபு என்றான் நண்பன். நான் ஒரு குருவின் முன் அகங்காரமில்லாமல் சுயசமர்ப்பணம் செய்ததே என் காதலில் இருந்து கற்றுக் கொண்டதுதான் என்றேன். ஆம், அவரும்கூட எனக்கு இரண்டாமிடமே. அதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். முகம் மலர்ந்து குலுங்கிக் குலுங்கி சிரித்தார். ‘காதலிலும் அத்வைதம் உண்டு. மதுரமான அத்வைதம். அது போதும் உனக்கு’ என்றார் என்றேன்.
”உனக்கு ஒன்று தெரியுமா, நீ இப்போது சொன்னது எதுவுமே எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவை எனக்கே தெரியும். சும்மாதான் கேட்டேன்’ என்றான் நண்பன். மற்ற நண்பர்களும் சிரித்தபடி அதையே சொன்னார்கள். ஏன் என்றேன். நீ இப்போது இதைத் தெளிவான சொற்றொடர்களில் நேரடியாகச் சொல்கிறாய். சாதாரணமாக நீ உன் நடத்தையால் இதைத்தான் சொல்லிக் கொண்டிருப்பாய். அருண்மொழியை மேற்கோள்காட்டாமல் நீ ஏதாவது முக்கியமான விஷயத்தைப் பேசி நான் கேட்டதே இல்லை என்றான் இன்னொரு நண்பன்.நாங்கள் உன்னை இதற்காக கேலி செய்யாத நாளே இல்லை என்றார்கள்.
அன்று பின்னிரவில் டீ குடிப்பதற்காகச் செல்லும்போது ஒரு நண்பன் சொன்னான். ”நீ ரொம்ப அதிருஷ்டசாலி… இது ஒரு பொக்கிஷம் போல… வாழ்க்கையில் நிகழும் ஏதோ ஒரு அபூர்வமான தற்செயல் இது. இல்லாவிட்டால் இதற்கு நாம் புரிந்து கொள்ள முடியாத ஒரு நோக்கம் இருக்க வேண்டும்”. மற்ற நண்பர்களும் சற்றே நெகிழ்ந்த நிலையில் இருந்தார்கள். மாடிப்படி இறங்கும்போது முதல்நண்பன் கேட்டான்.”…உன் மனதில் உள்ளது ஒரு மகத்தான காதல். அந்தக் காதல் உன் மனைவி மனதிலும் உள்ளது என்று நினைக்கிறாயா?”
நான் சொன்னேன். அருண்மொழி என்னுடைய மிகச்சிறந்த வாசகி. என்னை வழிபடுகிறவள் என்று கூட சொல்லலாம். என் மீது அசாதாரணமாக பேரன்பு வைத்திருக்கிறாள் என்பதில் ஐயமில்லை. மிக இளம் வயதிலேயே என்னுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதனால் அவளுடைய ஆளுமையே என்னைச் சார்ந்து உருவாகி இருக்கிறது. ஆகவே என் உலகமே அவள் உலகம். அவள் மனமும் எண்ணங்களும் என்னைச்சுற்றியே இயங்குகின்றன. பெண்களுக்கு அது இயல்பானதும்கூட.அதேசமயம் அவள் வலுவான தனி ஆளுமை. அவளுடைய உலகம் ஒன்று தனியாக உண்டு. அவளுடைய நண்பர்கள், அலுவலகம். அவள் லௌகீகமானவளும் கூட. நான் அதையே சார்ந்திருக்கிறேன். எனக்குப்பெரும்பாலான விஷயங்களில் சுயமான கருத்துகக்ள் இல்லை. அவளுடைய இலக்கிய ரசனையும் வேறு. அவள் என் நூல்களின் தொகுப்பாளர். என்னுடைய பாதுகாவலர், வழிகாட்டி.
ஆனால் எல்லையில்லாத பெருங்காதல் என்பது பெண்களுக்கு இயற்கையால் அளிக்கப்படவில்லை என்றுதான் எனக்குப்படுகிறது. அது முழுக்க முழுக்க ஆண்களுக்குரிய ஒரு ஆசி அல்லது சாபம். பெண்கள் எத்தனை காதல் கொண்டிருந்தாலும் தன்னை முற்றிலும் அதற்கு இழந்துவிடுவதில்லை. லௌகீகமான ஒரு கணிதம் அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கும். குழந்தைகள் என்ற உயிர்ப்பிணைப்பு அவர்களை தளையிட்டிருக்கிறது. அதுவே அவர்களுடைய இதயத்தை பெரிதும் நிறைத்திருக்கும். பல வருடங்களாக நான் இதைக் கவனித்திருக்கிறேன். என்னுடைய கேள்விக்கு பதிலாக அமைந்தது கம்பராமாயணம்தான். ராமனின் மகத்தான காதலின் சித்திரத்தை கம்பன் அளிக்கிறான். ராமன் மேல் காதல் கொண்டவளாயினும் சீதையின் மகத்துவம் அவளது கற்பிலேயே உள்ளது. அக்கற்பு அவள் காதலை சிறிதாக்கிவிடுகிறது. பின், உலகப்பேரிலக்கியங்கள் அனைத்துமே அதைத்தான் சொல்கின்றன என்று கண்டு கொண்டேன்.
பெண்களிடம் தன் பெருங்காதலுக்கு நிகரான ஒன்றை ஒருபோதும் காதல்கொண்ட ஓர் ஆண் எதிர்பார்க்கலாகாது. ஆண்கள் குழந்தைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோன்றது அது. ஆகவே பெருங்காதல் கொண்ட ஒரு ஆண்மகன் வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் தன் காதலுடன் முற்றிலும் தனியனாகிவிடக்கூடும். பிறர் காணமுடியாத ஒரு ரகசியமாக அவனுடன் அதுவும் சிதைக்குப்போகக்கூடும். அதுவும் இந்த ஆட்டத்தின் ஒரு பகுதியே
நண்பர்கள் அந்தப்பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அப்படியப்படி படிகளிலேயே நின்றுவிட்டார்கள். ”நீ எப்போது ரொமாண்டிக்காக இருப்பாய் எப்போது ரேஷனலாக இருப்பாய் என்றே தெரியவில்லை”என்றான் நண்பன். நான் சிரித்தபடி, ”நான் எப்போதுமே ரேஷனலானவன். என்னுடைய காதல் பற்றிக்கூட ரேஷனலாகத்தான் சொன்னேன்”என்றேன்
தெருவில் குளிரில் நடக்கும்போது நண்பன் சொன்னான். ‘அத்தனை பெரிய காதல் ஒருவன் மனதுக்குள் இருக்கும் என்றால் வேறு எதுவுமே தேவை இல்லை. அந்தக் காதலுக்குரியவளாக ஒரு பெண் கூட தேவை இல்லை’ .அவன் அப்படிச் சொன்னது எனக்கு மிக வியப்பாக இருந்தது. எங்கள் குழுவிலேயே இலக்கியம் கவிதை என எந்த நாட்டமும் இல்லாதவன் அவன் மட்டும்தான்.