சென்னையில் மூன்றுநாட்கள்

சென்னைக்கு கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் டிசம்பர் பதினெட்டாம் தேதி காலையில் வந்துசேர்ந்தேன். இடதுகாலை எடுத்து வைத்து கிளம்பியிருக்கவேண்டும். துயரமான பயணம். வழக்கமாக என் வீட்டில் என் மீது அருண்மொழிக்கு உள்ள புகார் நான் புட்டிகளை சரியாக மூடுவதில்லை என்பது. எனக்கு கண்பார்வைச்சிக்கலால் அல்லது ஏதோ தத்துவச்சிக்கலால் மூடிகளைச் சரியாக பொருத்த முடிவதில்லை. சாய்வாக வைத்து சுழற்றி இறுகியதும் அப்படியே விட்டுவிடுவேன். அவள் புட்டியின் மூடியைப்பிடித்து தூக்கினால் புட்டிகழன்று கீழே விழுந்து எண்ணை சீனி வகையறாக்கள் சமையலறையில் பரவும்.

 

இரு தண்ணீர்புட்டிகள் இரவுக்கான வாழைப்பழம் புத்தகங்கள் பெட்டிகளுடன் ரயிலில் ஏறினேன். இருக்கையில் அமர்ந்து ரகோத்தமன் எழுதிய ராஜீவ்காந்தி கொலை பற்றிய புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன். சில்லிட வைக்கும் புத்தகம். கொஞ்சம் கூடுதலாகவே சில்லிடுகிறதோ என்ற ஐயம் எழுந்தது என்றாலும் பொருட்படுத்தவில்லை. பக்கத்து இருக்கைக்காரர் எழுந்து ”என்ன சார்? தண்ணிக்குப்பிய சரியாக மூட மாட்டீங்களா? வெளீயாடுறீங்களா?” என்று கத்தினார். அவரது வேட்டி ஈரம். என்னுடைய பாண்ட் மட்டுமல்ல உள்ளாடையே ஈரமாக இருந்தது.

 

கழிப்பறைக்குச் சென்று லுங்கி மாற்றிக்கொண்டேன். பாண்டை காயப்போட்டேன். அவர் தந்த ஜூவியை கிழித்து எல்லா இடத்தையும் துடைத்தேன். உள்ளே ஜட்டி சில்லென்றிருந்தது. ஏஸி குளிரில் நடுங்கியபடி மிச்சநூலையும் வாசித்துவிட்டு மேலே சென்று இன்னொரு புட்டியை திறந்து கொஞ்சம் தண்ணீர்குடித்துவிட்டு கம்பிளியை விரித்து படுத்துக்கொண்டேன். கொஞ்சநேரத்தில் கீழே அதே ஆள் எழுந்து ”சார் நீங்க லூஸா? தெரியாம கேக்கிறேன், லூசா சார் நீங்க?” என்றார்.

 

கனிமொழி பேட்டியை படித்திருப்பாரா என்று பதறிப்போனேன். இல்லை, மீண்டும் இன்னொரு புட்டி திறந்து மொத்த தண்ணீரும் கொட்டி கீழே அவரது கம்பிளி நனைந்துவிட்டிருந்தது. அதைவிட மோசம், என்னுடைய கம்பிளியும் போர்வைகளும் நனைந்திருந்தன. ”பாத்தா பாவமா இருக்கீங்க, வேணும்ணே பண்ணுத மாதிரில்லா இருக்கு? தெரியாம கேக்கேன், உங்களுக்கு என்ன பிரச்சினை?”

 

வாய்பேசாமல் அந்த போர்வைகளால் பர்த் மடிப்பில் குளம்போல நின்ற நீரை துடைத்தேன். என்ன செய்வதென தெரியவில்லை. அவர் போய் ஸ்டுவர்ட்டை கூட்டி வந்தார். மேலதிக கம்பிளி இல்லை என்று அவன் சொல்லிவிட்டான். ஒருவர் கீழ் இருக்கைக்காரருக்கு ஒரு சால்வை இரவல் கொடுத்தார். என்னை எவரும் கண்டுகொள்ளவில்லை. வெளியே நல்ல மழை. உள்ளே கடுமையான ஏஸி குளிர்.

சுருதி

எதைப்போர்த்துவது? ஈரப்பாண்டையே போட்டுக்கொள்ள வேண்டியதுதான். அதைபோட்டுக்கொண்டு லுங்கியை போர்த்திக்கொண்டேன். எஸ்கிமோ போல என்னை உணர்ந்தேன். ஆன்மாவின் கனலால் ஈரத்தை உலரவைத்து தூங்குவதற்கு இரவு ஒருமணி. காலை ஆறுமணிக்கு எழும்பூருக்கு அரைத்தூக்கத்துடன் வந்தேன்.

 

கெ.பி.வினோத் காருடன் வந்திருந்தார். அதே பிரதாப் பிளாஸா. காலையிலேயே நண்பர்கள் வந்தார்கள். இம்முறை புதிய நண்பர் தனசேகர். வழக்கம்போல அன்பு, ஷாஜி. நான் சென்னைவந்தால் தான் இவர்கள்  ஒருவரை ஒருவர் சந்திப்பதே. மாலையில் தனசேகரும் நானும் சிங்கப்பூர் சித்ராவின் மகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்க்கச் சென்றோம். மாமிகள் குழுமிய அரங்கில் ஒளிவெள்ளத்தில் நடனம். நல்ல பயிற்சி தெரிந்தது. ஒரு கட்டத்தில் பரத நாட்டியம் என்ன ஆட்டம் என்ன கீர்த்தனை என்பதை மறக்கச்செய்து ஆணா பெண்ணா என்பதைக்கூட அழித்து வெறும் அசைவுகளின் அழகாக ஆகிவிட வேண்டும். அது நடந்தது.

 

பழைய பரதநாட்டிய மங்கை சித்ரா விஸ்வேஸ்வரன் இப்போது பேரிளம்பெண்ணாக ஆகி தலைமைதாங்கி ஆங்கிலம் தமிழ் கலந்த மொழியில் வழக்கமாக சொல்லப்படுவனவற்றைச் சொன்னார்.அங்கே நியூசிலாந்து துளசிகோபாலைப் பார்த்தேன். அவரும் கணவரும் கன்யாகுமரி வந்தபோது என்னைப் பார்க்க முயன்றார்கள், பார்க்க முடியவில்லை.சந்தித்து அறிமுகம்செய்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

சுப்ரமணியம் ரமேஷ், துளசி கோபால்

இரவு  நண்பர் செங்கதிர் அறைக்கு வந்தார். நெடுநேரம் இலக்கியம் அரசியல் என்று பேசிக்கோண்டிருந்தோம். ஒன்றரை மணிக்கு அவர் கிளம்பிச்சென்றபின்னர் நானும் அன்புவும் தூங்கினோம்.

 

காலையில் நான் தூங்கி எழும்போது ஒன்பது மணி. கெ பி வினோத் கல்பற்றா நாராயணனை அழைத்து வந்திருந்தார். பதினொருமணிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸில் வந்த விவேக் ஷன்பேக்கை நானும் தனசேகரும் சென்று கூட்டிவந்தோம். அதன்பின் மாலை ஐந்து மணிவரை  அறைக்கு நண்பர்கள் வந்தபடியே இருந்தார்கள். தொடர்ச்சியாக இலக்கிய உரையாடல். நான் விவேக்கை சந்தித்து மூன்றுவருடங்கள் ஆகிவிட்டன. நடுவே கன்னடத்தில் என்ன நடந்தது என்று கேட்டுக்கொண்டேன்.விவேக் அருமையான உரையாடல்காரர். அன்று மாலை கூட்டம்.

 

கூட்டம் முடிந்ததுமே கல்பற்றா கோவைக்கு கிளம்பிச்சென்றார். அங்கிருந்து கோழிக்கோட்டுக்கு பேருந்து பிடிப்பதாக திட்டம். விவேக் பதினொருமணிக்குக் கிளம்பவேண்டும். செந்தில் அவரை பொன்னுச்சாமிக்குக் கூட்டிச்சென்று சிக்கன் வாங்கிக்கொடுத்து வழியனுப்பிவைத்தார். நானும் அன்புவும் உண்டு. நான் மாதுளைச்சாறு குடித்தேன். சென்னையில் எங்கே அசைவம் நன்றாக இருக்கும் என்று செந்திலை விட அறிந்த எவரும் சென்னையில் இல்லை.

ராஜகோபால் குடும்பம்

மறுநாள் டிசம்பர் இருபதாம் தேதி காலை ராஜகோபாலன் என்ற நண்பர் வீட்டுக்கு சாப்பிடச்சென்றேன். நல்ல வாசகர், இனிமேல் சென்னைநண்பர் குழுவில் இவரும் இருப்பார் என நினைக்கிறேன். வழக்கமாகச் சாப்பிடுவதைவிட இரு மடங்கு சாப்பிட்டுவிட்டு மூச்சுத்திணறியபடி ராஜகோபாலின் தங்கை தீபா மரபணுமாற்ற கத்தரிக்காய் பற்றி எடுத்துக்கொண்டிருக்கும் ஆவணப்படத்துக்கு பேட்டி கொடுத்தேன். நல்ல சாப்பாட்டுக்குப் பின் கோபபப்டுவது கஷ்டமாக இருந்தது.

 

அங்கிருந்து அழகம்பெருமாள் வீட்டுக்குப் போனேன். அவரது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் பாண்ட் எனக்கு நல்ல பழக்கம். ‘ஐயம் பாண்ட்’ என்று சொன்னது. அங்கே ரசவடை சாப்பிட்டேன். அங்கிருந்து என் அறை. அங்கே அன்பு கெ.பி.வினோத் இருந்தார்கள். பின்னர் வசந்தகுமார் வந்தார். ஷாஜியும் சிங்கப்பூர் நண்பர் திவாகரும் வந்தார்கள். பேச்சுக்கலைக்கும் ·பாசிசத்திற்குமான உறவு குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.

 

மாலை அன்பு, வினோத், ராஜகோபால் மூவரும் வந்து என்னை ரயிலேற்றி விட்டார்கள். ஏறியதுமே தண்ணீர்புட்டிகளை ஒருபோதும் தரைத்தளம் விட்டு மேலெடுப்பதில்லை என்று உறுதியாக முடிவெடுத்தேன்

முந்தைய கட்டுரைகடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் – 2
அடுத்த கட்டுரைசெம்மொழி பயிலரங்கம்