அன்புள்ள ஜெயமோகன், அபிராம்மண-முற்படுத்தப்பட்ட சாதிகள் மீதும் பிராம்மண சாதிகள் மீதும் இட ஒதுக்கீடு செயல்படுவதில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிராம்மணர்கள் போல மிக மோசமாக வெறுப்புப்பிரச்சாரம் ஏவி விடப்பட்ட மற்றொரு சமுதாயம் உண்டா என்பது கேள்விக்குறி. தலித்துகள் மீது உள்ள வெறுப்பு அழிந்து கொண்டிருக்கிறது. பிராம்மணர்கள் மீதுள்ள வெறுப்பு மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக இதில் நான் இணைத்துள்ள படங்களைப் பாருங்கள். காஞ்சா இலையாவின் நூல் அட்டைகள் இவை. இந்நூல் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கப்படுகிறது, இந்நூலின் அட்டையில் காணப்படும் சித்திரத்தில் இருப்பவன் உண்மையில் நாசி வெறுப்புப் பிரச்சாரங்களில் காட்டப்படும் ஒரு யூதன். அவனையே உருமாற்றி பிராம்மணனாக்கி காட்டுகின்றனர். பின்னட்டையில் மிகத்தெளிவாக சாதி வெறுப்பைத் தூண்டும் சித்திரங்கள். இவை ஒரு புகழ்பெற்ற சர்வதேச அளவில் தலித்தியல் சிந்தனையாளராக தூக்கிப்பிடிக்கப்படுபவரால் செய்யப்பட்டுளது. ஆனால் இலியா ஒரு தலித் அல்ல என்பது வேறு விஷயம்.
உண்மையை சொன்னால் முற்போக்காக சொந்த சாதியின் கொடுமைகளை எதிர்த்த குரல்கள் சொந்த சாதியை சுயபரிசோதனை செய்த குரல்கள் தமிழ்நாட்டில் வேறெந்த சாதியைக் காட்டிலும் பிராம்மணர்களிடையேதான் கூடுதலாக வந்தது என நினைக்கிறேன். ஆனால் தலித் குடிசைகளை எரிக்கும் ஆதிக்க சாதியினருக்கு பழி போட ஒரு நல்ல வாய்ப்பாக “பிராம்மணீயம்” “பார்ப்பனீயம்” ஆகியவை உள்ளன. இந்த வெறுப்பு பிரச்சாரத்தை பிற முற்படுத்தப்பட்ட சாதிகள் சுமக்க வேண்டியதில்லை. இதன் விளைவுகள் பல்வேறு விதமாக இருக்கின்றன. ஒன்று பிராம்மணர்களாக பிறந்தவர்கள் ஒன்று அதீத பிராம்மணிய எதிர்ப்பு என்கிற பெயரில் ஹிந்து ஞான மரபை ஈவெராவை விட தீவிரமாக எதிர்க்கிறார்கள். அல்லது ஒரு சிறுகுழுவாக தங்களுக்குள் மட்டுமே பேசுவோராக சுருங்கிவிடுகிறார்கள். இவற்றுக்கு அப்பால் தாங்கள் தன்னளவிலேயே பிறரை விட மரபணுரீதியாகவோ கர்மவினையாலோ உயர்ந்தவர்கள் என நினைக்கும் பிராம்மணர்கள் மிகக்குறைவானோரே.
தாங்கள் பிறப்பினாலேயே ஈகைக்குணமும் விருந்தோம்பலும் தமிழ் சைவ பண்பாடும் பிறரை விட அதிகமாகக் கொண்டவர்கள் என நம்பும் வெள்ளாளர்களையும் தாங்கள் பிறவியிலேயே வீரத்துடன் பிறந்தவர்கள் என நம்பும் தேவர்சாதியினரையும் விட அத்தகைய பிராம்மணர்கள் எண்ணிக்கையில் குறைவாகக் கூட இருக்கலாம் அல்லது சம அளவில் இருக்கலாம். என்ன சொல்ல வந்தேனென்றால் பிராம்மணர்கள் பிற முற்படுத்தப்பட்ட சாதியினரைப் போலல்லாமல் இந்த வெறுப்பு பிரச்சாரத்தை -எவராலும் தட்டிக்கேட்கப்படாத பெருமளவு நாசி யூத இனவெறுப்பை ஒத்த பிரச்சாரத்தை- சேர்ந்து சுமக்கின்றனர். மிகவும் சரியான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி தீர்வை அமுலாக்க விடாமல் தடுக்கும் கருத்தாக்கம் அந்த பிராம்மண இன வெறுப்புதானே?
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
அன்புள்ள அரவிந்தன்,
நீங்கள் குறிப்பிடுவது உண்மை. நானே பல சமயங்களில் எழுதிய விஷயங்கள்தான். பிராமணர் மீதான வெறுப்பு என்பது இயல்பான ஒரு சமூக உருவாக்கம் அல்ல. கிட்டத்தட்ட இருநூறு வருடங்களாக திட்டமிட்டு மெல்லமெல்ல உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு விஷயம். அதன் பின்னால் உள்ள நோக்கம் இந்து மதத்தின் மரபார்ந்த விஷயங்களை தாக்கி அழிப்பது மட்டுமே. இந்து மதத்தின் அனைத்து பழைமையான தீமைகளுக்கும் பிராமணர்களை பொறுப்பாக்குவது அதில் ஒரு முதல் படி. அதன்பின் தங்களை அதில் இருந்து விடுவித்துக்கொள்வது பிறருக்கு எளிதாகிறது. அந்த வெறுப்புப் பிரச்சரத்திற்கு எதிராக வரும்காலத்தில் வலுவான பதில் பிராமனர் அல்லாத சாதியினரிடமிருந்தே உருவாகி வரும் என நன் நினைக்கிறேன் நான் அதில் ஒருவன்.
ஆனால் இதற்கு தடையாக இருப்பது எந்தவிதமான முற்போக்கு அம்சத்தையும் உள்வாங்காமல் மனம் குறுகிப்போயிருக்கும் சில பிராமணர்களின் குரல்தான்
ஜெ
அன்புள்ள ஜெ,
உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி. நிறைய பேச வேண்டும் என்று ஆவல். ஆனால் அதிகம் பேச அந்த சூழ்நிலையில் நாவெழவில்லை. என்றாவது பேசுவோம் !
’முன்சுவடுகள்’ நூலில் பெரியசாமி தூரன் அவர்களின் முயற்சிக்கள் மற்றும் சாதனைகள் பற்றி எழுதியதை படித்தேன். நெகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கு மிக்க நன்றி. தூரன் அவர்களின் மூத்த புதல்வி எம் குடும்ப நண்பர். சென்னை அடையாரில் தான் இருக்கிறார். (ஒரு வகையில் எமக்கு உறவினர்). மருமகன் திரு.சின்னுசாமி அவர்கள், தூரனின் சாதனைகள் மற்றும் ஆக்கங்கள் பற்றி விரிவாக பேசுயிருக்கிறார். நான் சிறுவனாக இருந்த சமயத்தில், குழந்தைகள் கலைகளஞ்சியம் 10 நூல்களுன் கிடைத்தது. பருகி மகிழ்திருக்கிறேன். அவரை பற்றிய கட்டுரைக்கு மீண்டும் நன்றி.
சென்ற ஆண்டு அவரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கோவையில் நடந்தது. மலர்
வெளியிடப்பட்டது.
கோவை அ.அய்யாமுத்து : இவர் 1898இல் பிறந்த காந்தியவாதி. அவரை பற்றி இணையத்தில் நான் முன்பு எழுதியது : …கோவை அய்யாமுத்து தாம் எமது ஹீரோ. அவரது “எனது நினைவுகள்” நூலை பொக்கீசம் போல பாதுகாத்து வருகிறேன். வருடம் ஒரு முறை அதை படித்து பயன் பெறுகிறேன்.
அவரின் ‘நான் கண்ட பெரியார்” (1957) வீட்டு நூலகத்தில் இருந்தது. பிறகு தொலைந்து விட்டது. சென்னை தரமணி ரோஜா முத்தையா நூல்னிலைத்தில் அது உள்ளது. ஸ்கான் காபி ஒரு முறை கிடைத்தது. இது ஒரு முக்கிய ஆவணம்.
அவரின் “நாடு எங்கே செல்கிறது ? ” என்ற நூலும் முக்கியமானது. முன்னர் படித்திருக்கிறேன்.
1972இல் அவர் வெளியிட்ட “ராஜாஜி எனது தந்தை” என்ற நூலை பார்க்க பல வருடங்களாக துடிக்கிறேன். விலை மதிக்க முடியாத நூல் அது.
எங்கும் கிடைக்கவில்லை. (சமீபத்தில் MIDSஇல் கிடைத்தது)
ராஜாஜி ஒரு மகத்தான தலைவர். பெரும் ஞானி. அவரின் தீவிர ரசிகன் யான்.
பொள்ளாச்சியிலும் கோவையிலும் கல்வி பயின்ற காலங்களில் (80களில்) இவர்களின் அருமையை உணராமல் போனேன். அருட்கசொல்வர் நிறுவிய கல்வி நிறுவனத்தில் தான் படிப்பு.
“எனது நினைவுகளில்” உலாவும் சிலரை நேரில் கண்டு பழகும் பாக்கியம் கிடைத்தது. திருச்சி பேராசிரியர் (காலம் சென்ற) எம்.எஸ்.நாடார் எமது குடும்ப நண்பர். இன்றுதான் திருமதி.சவுந்திரா கைலாசம் அவர்களை சந்தித்து திரு.அய்யாமுத்து பற்றிய அவரின் நினைவுகளை கேட்டறிந்தேன்.
திருப்பூரில் யாம் வாழ்ந்த காலத்தில் அவர் நிர்மாணித்த காந்தி நகரை கண்டு மகிழ்ந்தேன். அவர் கட்டிய வீட்டையும் பார்த்தேன். (வீடு விற்ற படலம்). இன்று அந்த வீடு இல்லை.
மிக மிக போற்றப்பட வேண்டிய மாமனிதர் அவர். வாழ்க அவர் புகழ்.///
http://sanimoolai.blogspot.com/2007/07/blog-post.html
காந்திய நெறியில் ஒரு தடம் – கோவை அய்யாமுத்து
— Regards / அன்புடன் K.R.Athiyaman / K.R.அதியமான் Chennai – 96 http://nellikkani.blogspot.com http://athiyamaan.blogspot.com http://athiyaman.blogspot.com
அன்புள்ள அதியமான்
சந்தித்து விரிவாக பேசமுடியாததில் எனக்கும் வருத்தமே
கோவை அய்யாமுத்துவின் சுயசரிதை நான் வாசித்திருக்கிறேன். இருபதாண்டுகளாக அவ்வப்போது அதைப்பற்றி எழுதிவந்திருக்கிறேன். நேர்மையான, அதேசமயம் கொஞ்சம் அடவடியான, காந்தியவாதி என்பதே அவரைப்பற்றிய என் புரிதல். தமிழக சர்வோதய இயக்கத்தின் சிற்பி அவர்
ஜெ