தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார். தற்செயலாக சில கவிதைகளுடன் தமிழினி வசந்தகுமாரை அவர் காணவந்தார். கவிதைகள் நவீனக் கவிதையின் மாற்றங்களை உணராதவையாக இருந்தன. வசந்தகுமார் அவரிடம் அவற்றை அச்சிடுவது உகந்தது அல்ல என்று சொல்லிவிட்டு பொதுவாகப்பேசிக் கொண்டிருந்தபோதுதான் அவரது மகத்தான அனுபவச்சொத்தும் கூர்மதிமூலம் தன் சூழலை அவர் அவதானித்திருந்த முறையும் கவனத்துக்கு வந்தது. ‘ ‘நீங்கள் நாவல் எழுதலாமே குரூஸ் ‘ ‘ என்று கேட்டுக் கொண்டார் வசந்தகுமார். குரூஸ் நாவல்களே படித்தது இல்லை. சில சமீபகால நாவல்களைக் கொடுத்து அதைப்போல எழுதிப்பார்க்கும்படி வசந்தகுமார் கேட்டுக் கொண்டார். எழுதியபோது குரூஸ் கிட்டத்தட்ட கடலலைகள் போல எழுதியபடியே இருந்தார். வசந்தகுமார் அவருக்கு சில வடிவச்சிக்கல்களை சொல்லித்தந்தபோது குரூஸ் ஒரு மகத்தான நாவலை எழுதி முடித்தார். எழுதப்படுகையில் இந்நாவலைப்பற்றி அவரிடம் நிறைய பேச முடிந்தது. மெய்ப்புப் பிரதியில் நாவலைப் படித்த நான் தமிழில் நிகழ்த்தப்பட்ட இலக்கிய சாதனைகளில் ஒன்றாக ஐயமில்லாமல் இந்நாவலைச் சொல்ல முற்படுவேன்.
குரூஸின் நாவலுக்கு இந்றைய சூழலில் உள்ள முக்கியத்துவம் என்ன ? பரதவர் குலம் தமிழ்மக்களுள் மிகமிகத் தொன்மையான குலங்களுள் ஒன்று. அவர்களுக்கு பழையோர் என்றும் பேர் உண்டு. அவர்களைப்பற்றி சங்க இலக்கியத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவர்களில் பல மன்னர்கள் இருந்தமைக்கான தொல்லியல் தடையங்கள் கிடைத்தபடியே உள்ளன. அவர்களின் தொல்மதம் குறித்த தகவல்கள் மதமாற்றம் மூலம் இல்லாமலான பிறகு மறைமுகச்சுட்டுகள் மூலமே அவர்களின் தொன்மையான வாழ்க்கைமுறை அறியப்பட்டு வந்தது. ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகளுக்குமுன் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு பண்பாட்டின் விளிம்புக்குத் துரத்தப்பட்ட இம்மக்கள் பலவகையான சூறையாடல்களுக்கு உள்ளானார்கள். அவற்றிலிருந்து அவர்களைக் காப்பதாக கிறித்தவம் வந்தது. இஸ்லாமியரிடமிருந்தும் வடுகர்களிடமிருந்தும் தங்களைக் காப்பதாக உறுதியளித்தால் மதம்மாறுவதாக அவர்கள் போர்ச்சுக்கல்காரர்களுக்கு நிபந்தனை விதித்து அதனடிப்படையில் மதம் மாறினார்கள். புனித சவேரியார் மூலம் அவர்களுக்கு கிறிஸ்துவின் மெய்ஞானமும் கருணையும் அறிமுகமாயிற்று.
இன்று பரதவர் கடற்கரையில் சிதறி, தங்களுக்குள் பூசலிட்டு வாழும் அரசியல் அதிகாரமே இல்லாத ஒரு குலம். தேர்தல் தொகுதிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டமை மூலம் அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகள் துண்டாடப்பட்டு பலவாறாக சிதறின. எனவே அவர்கள் எங்குமே தங்கள் ஓட்டுவங்கியை உருவாக்க இயலவில்லை. அவர்களுக்கு ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆயிற்று. அவர்களில் பெரிய அரசியல் தலைவர்கள் உருவாகவில்லை. அவர்கள் பாரம்பரியமாகச் செய்துவந்த தொழில்களான படகுவழி ஏற்றுமதி மீன்பதனிடுதல் போன்றவைகூட வேறு சாதியினர் கைக்குச் சென்றன. கடல் போல நிலையற்ற அலைகளாக உள்ளது அவர்கள் வாழ்க்கை
தமிழ் மரபில் நெய்தல் என்று ஒரு திணை இருந்தாலும் அதில் வரும்பாடல்களை எழுதியவர்களில் பரதவகுலத்தவர் அனேகமாக எவரும் இல்லை. பெயர்களை வைத்துப் பார்த்தால் வேளாளார்[ கிழார்] தான் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். ஆகவே பெருமணல் நிலம் என்ற அளவிலேயே நெய்தல் நின்றுவிட்டது— கடல் மிக அபூர்வமாகவே பேசப்பட்டது. இன்றுவரை கடல் குறித்து எழுதியவர்கள் எவருமே பரதவர் அல்ல. தோப்பில் முகமது மீரான் கடற்கரை வாழ்க்கையை உயிருடன் சித்தரித்துள்ளார், அவருக்குக் கடல் தெரியாது.
ஆனால் ஓர் இளம் எழுத்தாளர் கடலை எழுதியிருக்கக் கூடும். ‘ குரூஸ் சாக்ரடாஸ் ‘ . துரதிருஷ்ட வசமாக அவர் அ. மார்க்ஸ் என்ற இலக்கியத்துக்கு எதிரான சக்தியின் கைகளில் சென்று சேர்ந்தார். அ.மார்க்ஸ் அன்று அத்தகைய ஒரு பரபரப்பபைப் பெற்றிருந்தமை துரதிருஷ்டவசமானதே . எண்பதுகளில் பிரபலமாக இருந்த கட்டுடைப்பு வசைபாடல்தான் இலக்கியம் என்ற செய்தியை அ.மார்க்ஸ் அவரது தலைக்குள் செலுத்த குரூஸ் சாக்ரடாஸ் அவரால் மட்டுமே எழுதச் சாத்தியமான– இரண்டாயிரம் வருடமாக எழுதப்படாத— மக்களின் வரலாற்றை எழுதுவதை விடுத்து அ மார்க்ஸ் அப்போது கூவிக்கொண்டிருந்த கடன்பெற்ற கோஷங்களை மென்று துப்ப ஆரம்பித்தார். சித்தியைப் புணர்தல் போன்ற அதிர்ச்சிக் கருக்கள் , உடைத்து சிதிலமாக்கிய செயற்கையான கதைநடை, கட்டுடைத்தல் பிரதி என்றெல்லாம் அபத்தமாக அன்றைய பரபரப்புப் போக்கை தானும் பரிசோதனை செய்து கவனம் பெறாமல் மறைந்தார். அவரது சாத்தியங்களைச்சொல்லும் ஒரே ஒருகதை– கடல் உடைந்து திசை தவறி பதினைந்துநாள் கழித்து மீளும் அனுபவத்தை சித்தரிக்கும் கதை – இன்று அவரது நினைவாக நிற்கிறது. குரூஸ் சாக்ரடாஸ் மீள்வாரென்றால் அது தமிழுக்கு ஒரு கொடையாக அமையலாம்.
சரியான கைகளுக்குச் சென்றமையால் செம்மையான ஒரு இலக்கிய ஆக்கமாக மலர்ந்த ஆழிசூழ் உலகை உருவாக்க முடிந்தது ஜொ டி குரூஸினால். இந்நாவலின் முக்கியத்துவம் இரண்டாயிரம் வருடத் தமிழிலக்கிய மரபில் இது ஒரு முதற்குரல் என்பதனால்தான். குரலிழந்து வாழ்ந்த ஒரு சமூகம் தன் அளப்பரிய ஆழத்துடனும் அலைகளுடனும் வந்து நம் பண்பாட்டின் மீது ஓங்கியடிக்கும் அனுபவத்தை அளிக்கும் ப்ரும் படைப்பு இது.
888
ஜோவின் நாவல் ஏறத்தாழ முக்கால்நூற்றாண்டின் கதை. புலிச்சுறா பிடிக்கச்சென்று கட்டுமரம் கவிழ்ந்து நீரில் மிதக்கும் மூவர் சிலுவை, சூசை, கோத்ரா ஆகியோரின் கதையின் இடைச்செருகலாக விரிந்துபரவுகிறது நாவல். ஆமந்துறை என்ற சிற்றூர். அங்கிருக்கும் பரதவர்களில் புகழ்பெற்ற மீன்வல்லுநரான தொம்மந்திரை, அவரது நண்பரும் சீடருமான கோத்ரா அவர்களின் தலைமுறைகள் என்று விரிந்து பரவும் இக்கதையில் பரதவரின் வணிகம் மெல்லமெல்ல நாடார் கைக்கு மாறுவதும் தூத்துக்குடி ஒரு முக்கியமான துறைமுகமாக எழுந்துவருவதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நாவலின் முக்கியமான சிறப்பம்சம் இது ஒரு சமூகத்தின் , மக்கள்திரளின் கதை என்பதே. முகங்கள் முகங்களாக கதாபாத்திரங்கள் விரிந்தபடியே வருகின்றன. ஒரு கட்டத்தில் பல முகங்களை நம்மால் நினைவில் நிறுத்தமுடியாதபடி. ஒட்டுமொத்த விளைவாக ஒரு கடலோரக் கிராமத்த்தின் முகத்தையே நாம் பார்த்தபடி இருக்கிறோம். இவ்வனுபவத்தை அளிக்கும் தமிழ்நாவல்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே.
இந்நாவலை ஆய்வுசெய்து விரிவாகவே நான் எழுதவிருக்கிறேன். இந்த அறிமுகக் கட்டுரையில் ஜோவை ஒரு பெரும் நாவலாசிரியராக ஆக்கும் சிலவற்றை மட்டும் அடையாளம் காட்ட விழைகிறேன்.
ஒன்று மனிதவாழ்க்கையில் சொல்லப்படவேண்டியது என்ன ஊகத்துக்கு விடப்படவேண்டியவை என்ன என்பதைப்பற்றிய ஆழமான புரிதல் ஒன்று அவருக்கு இயல்பாகவே உள்ளது. இந்நாவலில் மனதைக் கவரும் முக்கியக் கதாபாத்திரமான காகு சாமியார் என்ற பாதிரியார் உதாரணம். அவரைப்பற்றிய சில சொற்களாலான விவரணையே ஜோவால் முன்வைக்கப்படுகிறது. அவர் மக்களுக்குச் செய்தது என்ன என்று அதிகமாகச் சொல்லப்படவில்லை. ஆனால் அவர் பிரிந்துசெல்லும்போதும் அவரது மரணத்தின்போதும் மக்கள் செய்யும் எதிர்வினைமூலம் அவரது ஆளுமை அன்பினால் அவர் மக்களை வெற்றெடுந்த விதம் ஆகியவை அழுத்தமாக வாசக மனதில் நிலைநாட்டப்படுகின்றன. அவரது வெள்ளைஅங்கி கதரால் ஆனது, அவர் சர்ச்சில் நாகசாகி ஹிரோஷிமா குண்டுவீச்சில் இறந்தவர்களுக்கான ஜெபித்தார் காந்தியிப்பார்க்கச்சென்றவர்களிடம் அவர் அவரைப்பற்றி விசாரித்து இனிமையாகப் புன்னகை செய்தார் போன்ற குறிப்புகள் வழியாக அவர் காந்திய யுகத்தைச்சேர்ந்த மனிதர் என்பதைக் காட்டுகிறார் குரூஸ். அத்துடன் புனித சவேரியாரின் கதை மிக நுட்பமாக காகுசாமியாரின் கதையுடன் இணைக்கப்படுகிறது.
இரண்டு மனிதர்களின் காமகுரோதமோகம் நுரைக்கும் வாழ்க்கையில் உள்ள சொல்லப்படவே முடியாத விளக்கி விளக்கித் தீராத மர்மங்கள் மீது குரூஸ் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறார். ஜஸ்டின் ,சூசை போன்ற கதாபாத்திரங்களுக்குள் காமமும் வன்முறையும் கொதிக்கும் தருணங்களை அவர் நுட்பமான முறையில் அவதானித்து எழுதியிருப்பது இந்நாவலுக்கு அசாதாரணமான கனத்தை அளிக்கிறது. மிகையற்ற சித்தரிப்புவழியாக மனிதகதையை இத்தனை விரிவாகச்சொன்ன நாவல்கள் தமிழில் குறைவே. சூசையின் குணச்சித்திரம் மிக முக்கியமானது. தீமை உருவாக்கிய குற்றவுணர்வில் இருந்தெ நன்மையின் உச்சங்களை நோக்கிச்செல்ல ஆற்றலைத் திரட்டிக் கொள்கிறான் அவன். பாசாங்குகள் இல்லாத வாழ்க்கையில் காமமும் அதன் பகுதியான வன்முறையும் எப்போதுமே நிகழ்ந்தபடி உள்ளன. அப்பகைப்புலனிலேயே கோத்ரா- தோக்களத்தா தம்பதியின் இயல்பான பெருந்தன்மையின் மகத்துவம் உக்கிரம் பெற முடிகிறது .
மூன்றாவதாக நாவல் என்ற கலைவடிவின் முக்கியமான ஒரு சாத்தியத்தை குரூஸ் பயன்படுத்தியிருக்கும் விதத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மனிதர்களும், வாழ்க்கைச்சூழலும் கண்ணுக்குத்தெரியாமலே வளர்சிதை மாற்றம் அடைந்து முற்றிலும் இன்னொன்றாக மாறிவிடும் சித்திரத்தை அளிக்க நாவல் அளவுக்கு வசதியான ஊடகம் வேறு இல்லை. ஜஸ்டின் ,சூசை போன்ற கதைமாந்தர்களை அறிமுகம் செய்து படிப்படியாக அவர்களை வளரச்செய்து பரிணாமம் கொள்ளவைக்கும் குரூஸ் மனிதவாழ்க்கையின் நகர்வையே அதில் காட்டுகிறார். ஆமந்துறை பின்னகர தூத்துக்குடி வளரும் சித்திரமும் அவ்வாறே நுட்பமாக சொல்லப்பட்டுள்ளது.
நுண்ணிய சித்தரிப்புமூலம் இந்நாவலை நம் மனதில் ஆழமாக நிறுவுகிறார் ஜோ.புலிச்சுறாவை அதன் மனைவி தொடர்ந்துவரும் காட்சி, தனுஷ்கோடியை புயல்கொண்ட காட்சி போன்றவை நாவல் நம்மில் உருவாக்கும் அழியா சித்திரங்கள். என் வாசிப்பில் இதில் வரும் சுறாவேட்டை கண்டிப்பாக ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் நாவலைவிட பலமடங்கு துடிப்பான ஒன்று.
**
சிலநாவல்களே ‘ இது தான் வாழ்க்கை ‘ என்று நம் மனம் திடமாக நம்பி உள்நுழையச் செய்கின்றன. அப்பண்பு கைதைத்திறன் சார்ந்தது அல்ல. கதைசொல்லிக்கு அவன் வாழ்வுடன் உள்ள உறவென்ன , எந்த அளவுக்கு அது உண்மையும் தீவிரமும் கொண்டது என்பதைப் பொறுத்தது. ஆழிசூழ் உலகு தமிழில் எழுதப்பட்ட மிகச்சில பெரும்நாவல்களில் ஒன்றாவது ஆசிரியரின் உண்மையும் தீவிரமும் ஒன்றாகும் கணங்களில் இது உருவாகியுள்ளது என்பதனாலேயே.
[தமிழினி . 130/2 அவ்வை சண்முகம் சாலை ராயப்பேட்டை சென்னை 86 . போன் 28110759 ]
அறிவிப்பு
[ டிசம்பர் 14 [ செவ்வாய் ] அன்று மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப்பாவானர் நூலக அரங்கில் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. எம் யுவன் எழுதிய பகடையாட்டம் நாவலும் வெளியிடப்படுகிறது. ராஜமார்த்தாண்டன், வி அமலன் ஸ்டேன்லி , ஸ்ரீரங்கம் மோகனரங்கன் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பேசுகிறார்கள்]