அன்புள்ள நண்பர்களுக்கு,
சென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது, செல்லும் வழியில், சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே விற்கும் ஒரு கடை அது. நான் அந்தமாதிரி கடைகளுக்குச் செல்வதில்லை. என்னுடைய துணிக்கடை என்பது ரூ 99 க்கு கீழே விற்கக்கூடிய கடையாகவே இருக்கும்.
அந்தக்கடையில் என்ன எடுப்பது என்றே எனக்குத்தெரியவில்லை. ”சார் ஒரு நல்ல ஜீன்ஸ் -டி ஷர்ட் எடுங்க” என்றார் வசந்தபாலன். நான் ஜீன்ஸ் போட்டது பத்துவருடம் முன்பு. அப்போது சின்னப் பையனாக இருந்தேன் என்று நினைப்பு. இலக்கிய உலகை திருத்திவிடலாம் என்ற திட்டமெல்லாம்கூட இருந்தது என்றால் கண்டிப்பாக சின்னப்பையன்தான் இல்லையா?
”சீச்சீ நானா ஜீண்ஸா?” என்றேன். ”இல்லை ஒண்ணு இருக்கட்டும்” என்று சொல்லி கட்டாயப்படுத்தி வாங்கி போட்டுக்கொண்டு வரச்சொன்னார்.நான் உள்ளே போய் ஒரு குட்டிஅறைக்குள் நின்றுகொண்டு உடைமாற்றினேன். சட்டென்று தூக்கிவாரிப் போட்டது. கண்ணாடிப்பிம்பம் என்னை வேடிக்கை பார்த்தது. வேறு அன்னியனுடன் இருப்பது போல.
வெளியே வந்து ”வசந்தபாலன், இது வேண்டாம். இது வேறென்னவோ போல இருக்கிறது” என்றேன்.
”ஏன் சார்?”
”இதைபோட்டா நான் ஜெயமோகன் மாதிரி இல்லை” என்றேன்.
”சார் இதை போட்டுக்கிட்டா நீங்க வேற ஜெயமோகன். அந்த வழக்கமான சட்டையில் நீங்க பேங்க் ஆபீசர் மாதிரி இருக்கீங்க… எங்க, லோன் வேணுமான்னு கேட்டிருவிங்களோன்னு பயமா இருக்கு”
வேறுவழியில்லாமல் ஜீன்ஸையும் சட்டைகளையும் அமெரிக்கா கொண்டுபோனேன். ஆனால் வழக்கமான பாண்ட்- முழுக்கை சட்டையில்தான் நான் போனேன். அமெரிக்காவில் முதல்முறையாக பாஸ்டனில் பாஸ்டன் பாலாவுடன் உலவச் சென்றபோது ஒன்றைக் கவனித்தேன். அந்த நகரத்திலேயே நான் மட்டும்தான் அப்படி சம்பிரதாய உடை அணிந்திருந்தேன். மற்றபடி ஆண் பெண் எல்லாருமே டி ஷர்ட் தான். பாஸ்டன் பாலா சாயம்போன ஒரு டி ஷர்ட்டை அணிந்திருந்தார்.
”இங்கெல்லாம் ஹாலிடேன்னா எவருமே வழக்கமான டிரெஸ் போட்டுக்க மாட்டாங்க சார்…டி ஷர்ட் ஷார்ட்ஸ் தான்” என்றார் பாஸ்டன் பாலா.
ஆனால் அங்கே யாரும் நம்மை கவனிப்பதில்லை. இருந்தாலும் எனக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் என்னிடம் இருந்தது இரண்டே டி ஷர்ட்டுகளும் ஒரு ஜீன்ஸ¤ம்தான். ஆகவே அடிக்கடி மாற்ற முடியாது.
ஆகவே ஒன்று செய்தேன், முழுமையான சுற்றுலா இடங்களுக்குப் போகும்போது அந்த டி ஷர்ட்டுகளை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டேன். கண்ணாடிச் சன்னல்களில் பார்ப்பதை தவிர்த்தேன். வேறு ஒரு ஜெயமோகன் அமெரிக்காவைப் பார்ப்பதற்கா நான் கஷ்டப்பட்டு வந்தேன்?
நலைந்து நாளில் பழகிவிட்டது. அப்போதுதான் நான் ஒன்றைக் கவனித்தேன், டி ஷர்ட் போட்ட அந்த ஜெயமோகன் கொஞ்சம் வேறு மாதிரியான ஆள். கொஞ்சம் சல்லிசாக இருக்கிறார். அதிகமாக யோசிப்பதில்லை. சின்ன விஷயங்களில் அவருக்கு அடிக்கடி மனம் ஈடுபடுகிறது.
ஒன்று கண்ணில் பட்டது, விடுமுறையின் போது ஒரு பூங்காவில் அமெரிக்கக் கறுப்பர் ஒருவர் இளநீல நிறத்தில் முழுசூட் உடை அணிந்து சென்றுகொண்டிருந்தார். அப்பழுக்கில்லாத கனவான் உடைகள். தொப்பி பூட்ஸ். நான் பாஸ்டன் பாலாவிடம் கேட்டேன்.
”அவர்களின் உடை வழக்கம் இது. வெச்சால் குடுமி சிரைச்சால் மொட்டை. ஒன்று கலர்கலராக சட்டை பளபளக்கும் பாண்ட் இரும்புச்சங்கிலிகள் என்று இருப்பார்கள். இல்லாவிட்டால் இப்படி இருப்பார்கள்” என்றார் ”அந்த உடைக்கு எதிர்வினை இந்த உடை. இந்த உடைக்கு எதிர்வினை அந்த உடை. அவர்கள் எதையுமே எதிர்வினையாகத்தான் செய்வார்கள். இந்த நாட்டில் அவர்களின் உளவியல் அப்படிப்பட்ட்து”
உடைகள் வழியாக எதை தேடுகிறோம்? எதைச் சொல்கிறோம்? எதை முன்வைத்துக்கொண்டே இருக்கிறோம்? நான் நெடுநாள் கையில்லாத சட்டையே போட்டதில்லை. பதினொராம் வகுப்பு படிக்கும்போது போட்டிருக்கிறேன். அதன்பின் முழுக்கைச் சட்டைதான். ஆனால் ஒருமுறை நண்பன் தண்டபாணி என் வீட்டுக்கு வந்திருந்தான். உங்களுக்கு தெரிந்த ஆசாமிதான். யுவன் சந்திரசேகர் கதைகளில் கிருஷ்ணனுக்கு மாயமந்திர ‘மாற்று மெய்மை’ கிலிகளை மூட்டும் சுகவனம் கிட்டத்தட்ட அவன்தான். அவன் ஒரு கோடுபோட்ட அரைக்கை சட்டை வைத்திருந்தான். ”டேய் இதை போடுடா” என்றான்
போட்டுப் பார்த்தால் எனக்கு பாதி உடல் நிர்வாணமாக இருப்பது போல் இருந்தது. இரு கைகளும் இரு அன்னியர்கள் இருபக்கமும் நெருக்கிக்கொண்டு நிற்பது போல இருந்தன. ”அய்யய்யே” என்றேன்.
”நல்லா இருக்குடா’ என்று இழுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.
அந்த சட்டையை எனக்கே கொடுத்துவிட்டான். அதன்பின் நான் அடிக்கடி கையில்லாத சட்டை போட ஆரம்பித்தேன். அது என்னைகொஞ்சம் இலகுவாக்குகிறது என்று பட்டது.
‘ஆடைகள் ஒருவனின் சருமங்கள்’ என்று மனுஷ்யபுத்திரன் ஒரு கவிதையில் சொல்கிறார். இறந்தவனின் சட்டைகள் என்ற கவிதை. இறந்து போனவனின் சட்டைகளை என்ன செய்வது? அவற்றை எப்படி எரிக்க முடியும்? இறந்தவனை மீண்டும் கொல்வதா? இன்னொருவருக்குக் கொடுத்து விடலாமா? இறந்தவன் நம் எதிரே திடீரென்று வந்து திடுக்கிட வைப்பானே…என்ன செய்வது? எதுவுமே செய்யமுடியாது, இறந்தவனை என்ன செய்கிறோம்?
ஆடைகள் உடலுக்காகவே அளவிவிடப்படுகின்றன என்று தோன்றும். ஆனால் உண்மையில் அப்படியா? அடிப்படை அளவுகள் மட்டும்தானே உடலுக்குரியவை. பிற எல்லா அளவுகளும் மனதின் அளவுகள் தானே? நிறங்கள் வடிவங்கள் அடையாளங்கள் எல்லாமே மனத்தின் அளவுகளுக்குப் பொருந்துபவை அல்லவா?
அப்படியானால் ஆடைகள் யாருடைய சருமம்? அவை நம் அகத்தின் புறச்சருமம் அல்லவா? நாம் நம்மை ஆடைகள் வழியாக முன்வைக்கிறோம். நான் சம்பிரதாயமானவன் நான் நேர்த்தியானவன் நான் எளிதானவன். நாம் ஆடைகள் வழியாக நம் சமூகசுயத்தை உருவாக்கிக்கொள்கிறோம்.
ஆனால் நாம் அதுவா? இல்லை நம் விருப்பங்கள்தாமா அவை? அந்த ஆடைகள் வழியாக நாம் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம். ஆடைகளுக்குள் நாம் ஒளிந்துகொண்டிருக்கிறோம். என் ஆடைகளுடன் பேசு என எதிரில் இருப்பவர்களிடம் சொல்கிறோம்.
நான் தனிப்பட்ட முறையில் ஆடைகளை எப்படித் தேர்வுசெய்கிறேன்? என்னுடைய முதல் எண்ணமே வித்தியாசமாக தெரியக்கூடாது என்பதே. என்னை எவரும் தனியாகக் கவனிக்கக் கூடாது. சாலையில் ஒருவர் தூக்கிய புருவத்துடன் என்னைப்பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சி ஏற்படுகிறது. எதுவோ தப்பாக ஆகிவிட்டது என்ற எண்ணம் எழுகிறது
நான் சாதாரணமாக இருக்கவேண்டும். அதற்காகவே உடை. அந்த உடை எனக்கு இச்சமூகத்தில் ஓர் இடத்தை உருவாக்கி அளிக்கிறது. நான் என் அலுவலகத்தில் பெரும்பாலும் பழைய, மிகச்சாதாரண உடைகளையே அணிவேன். ஏனென்றால் நான் ஒரு இடைநிலை ஊழியன், குமாஸ்தா. என்னைப் போன்றவர்கள் எந்த உடை அணிகிறார்களோ அதுவே எனக்கும். அதிகாரிகள் அணிவதுபோல நான் அணிவதில்லை. என் இருபத்தைந்தாண்டுக்கால அலுவலக வாழ்க்கையில் சட்டையை உள்ளே விட்டு பான்ட் போட்டுக்கொண்டு நான் அலுவலகம் சென்றதே இல்லை.
ஓரளவுக்கு நேர்த்தியான ஆடைகளை வெளியே செல்லும்போது அணிகிறேன். ஒரு நடுத்தர வர்க்கத்து அரசூழியன் என என்னை அவர்கள் எண்ணட்டும். நல்ல கணவன்,நல்ல அப்பா,நல்ல குடிமகன். வம்புதும்பு கிடையாது. தப்பாக எதுவுமே செய்துவிட மாட்டேன். டீஏ அரியர்ஸ், சம்பளக் கமிழ்ஷன், ரியல் எஸ்டேட் விலை, சூர்யா விஜய் அஜித் ஜெயலிதா ஸ்டாலின் தவிர எதையுமே பேசாதவன். அதாவது ரொம்ப ரொம்ப நார்மலானவன். அதற்குள் எனக்கு வசதியாக ஒளிந்துகொள்ள இடமிருக்கிறது. நல்லது.
ஆனால் அதற்குள் நான் இருக்கிறேன். அந்தச் சட்டைகள் அச்சையும் உயிர் என்னுடையது. என்னுடைய உற்சாகங்களையும் தயக்கங்களையும்தானே அந்த சட்டைகள் நடிக்கின்றன? நீங்கள் அவற்றை பார்த்தால் என்னை பார்க்கிறீர்கள்.
நண்பர்களே இந்தபத்து நூல்களும் பத்து சட்டைகள். மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு பத்து என்னை நான் காட்டியிருக்கிறேன். அரசியல் தத்துவம் ஆன்மீகம் இலக்கியம்…இவற்றுக்குள் நான் இருக்கிறேன். ஆனால் ஒளிந்திருக்கிறேன்.
கேரளத்துக் கோயில்களில் உள்ளே நுழைய சட்டைகளைக் கழற்ற வேண்டும். யாழ்ப்பாணத்திலும் அந்த வழக்கம் உண்டு என்பார்கள். ஒரு கதை உண்டு. இதயம்பேசுகிறது மணியன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்றபோது சட்டையைக் கழற்ற தயங்கினாராம். அப்போது அங்கே இருந்த சாது அப்பாத்துரை [இவரைப்பற்றி பிரமிள் ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறார். சாது அப்பாத்துரையின் தியானதாரா ] ”ஏம்பா இந்தச் சட்டையைக் கழட்டவே இந்த மாதிரி கஷ்டப்படுறியே. அங்க போறப்ப அந்தச் சட்டைய எப்டி கழட்டுவே?” என்று கேட்டாராம்.
அனைத்துச் சட்டைகளையும் கழட்டிவிட்டு செல்லவேண்டிய சில சன்னிதிகள் உண்டு. சட்டைக்கு மெய்ப்பை என்று ஒரு சொல் உண்டு. மெய்யே ஒரு பைதான். பையை தூக்கிப்போட்டுவிட்டு மெய்யை மட்டுமே அது எடுத்துக்கொள்கிறது.
நான் சட்டைகளைக் கழற்றும் இடம் ஒன்று உண்டு. மெய்யாகவே நானிருக்கும் இடம். அங்கே எல்லா ஆடைகளையும் கழற்றிவிடுவேன். சருமத்தையும் சதைகளையும் எலும்புகளையும். ஆம், என் புனைகதைகளில் நான் என்னை நிர்வாணமாக்கிக் கொள்கிறேன். நான் அவற்றை எழுதுவதே அதற்காகத்தான்.
ஒருவன் நிர்வாணமாக கையில் வேட்டியுடன் சாலையில் சென்றானாம். பிடித்து விசாரித்த போலீஸ்காரரிடம் ”அய்யா நான் உடைமாற்றிக்கொள்ள ஒரு மறைவிடம் தேடி அலைகிறேன்” என்றானாம். புனைவிலக்கியம் எழுத அமரும்போது நான் பலசமயம் அப்படி உணர்வதுண்டு. நிர்வாணமாக வந்தமர்ந்து கொண்டு நான் ஆடைகளை அணிய ஆரம்பிக்கிறேன்.
ஏனென்றால் அந்த நிர்வாணத்தை அத்தனை பேரும் பார்க்க நான் விரும்பவில்லை. நான் உடை களையும் நடனம் ஆடுபவன் அல்ல. அது யோகியின் நிர்வாணம். அங்கே என்னை வந்து பார்க்கவேண்டுமானால் நீங்களும் சட்டைகளை கழற்ற வேண்டும். எனது நிர்வாணத்தை உங்கள் நிர்வாணத்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
அதற்காகவே இத்தனை மொழியாக பெரிய ஒரு சுழல்பாதையை அமைக்கிறேன். வாழ்க்கையின் அத்தனை அம்சங்களாலும் ஆக்கபப்ட்ட ஒரு வட்டப்பாதை அது. அன்பு பாசம் காதல் துரோகம் வெறுப்பு என எல்லா உணர்ச்சிகளாலும் ஆனது. எல்லா தத்துவங்களும் வரலாறுகளும் அரசியலும் பேசப்படுவது.
ஒவ்வொரு விஷயமும் ஒரு முள். ஒவ்வொன்றிலும் சிக்கி நீங்கள் உங்கள் உடைகளை இழந்தால் ஒழிய அந்த இடத்திற்கு வர முடியாது. அவ்வாறன்றி நான் அறிவுஜீவி நான் அரசியல்ஜீவி நான் இலக்கியஜீவி என்று அவரவர் சட்டைகளுடன் அந்தப்பாதையின் ஏதோ ஒரு வழியில் நின்று சுழன்றுகொண்டிருப்பவர்களை தினமும் பார்க்கிறேன்.
அந்த எல்லைகளைக் கடந்து என் அந்தரங்கமான கருவறைக்குள் வந்தீர்கள் என்றால் என் நிர்வாணம் ஏன் என்று உங்களுக்குத்தெரியும். நான் கருவறைக்குள் இருக்கிறேன். இன்னமும் நான் உருவாகவே இல்லை.
அவ்வாறு வரும் வாசகன் கண்டடையும் அந்த ஜெயமோகன் யார்? அது அந்த வாசகனின் ஓர் அந்தரங்கமான ஆடிப்பிம்பமாக இருக்கும் என்று நான் ஊகிக்கிறேன்.
ஆகவே இந்த பத்து வாசல்களை உங்களுக்காக திறந்து வைக்கிறேன். வருக
[19 -12- 2009 அன்று சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் உயிர்மை வெளியீடாக வந்த 10 நூல்களை வெளியிட்டு ஆற்றிய உரையின் முன்வரைவு]
மறுபிரசுரம்