அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். தங்களின் வலைப்பக்கங்களைத் தொடர்ந்து படித்து வருபவன் நான். பொது, மற்றும் இலக்கியம் சார்ந்த விஷயங்களைவிடத் தத்துவம் சார்ந்த விஷயங்கள்தான் தங்களிடம் அதிகம் பரிமளிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை இந்தத் தேடலில் கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த அளவுக்கான ஒப்புநோக்குப் பார்வை தங்களிடம் சாத்தியமாகிறது என்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால்.
கீதையைப்பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே வருகிறீர்கள். குறிப்பாக அது ஒரு தத்துவநூல் என்பதை நிறுவுவதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதுதான் உண்மையும்கூட. ஆனால் அதை ஒரு மத நூலாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள்தான் இங்கே அதிகம். அதை அப்படிப் புரிய வைத்திருப்பதில் ஆன்மீகவாதிகளுக்கு நிறையப் பங்கு உண்டு.
ஆன்மீகவாதிகள் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ ஒருவகையான அரசியலுக்கு ஆட்பட்டுப்போகிறார்கள். ஆன்மீகம் மக்களின் ஒற்றுமைக்காகவும், ஒருமித்த சிந்தனையை வளப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்பட வேண்டும். அதுதான் சரியான ஆன்மீகம் என்று கருதுகிறேன் நான். எது மக்களின் ஒருமித்த சிந்தனையை, ஒற்றுமையை, மனிதநேய சிந்தனையை, மேம்படுத்துகிறதோ அதுவே சிறந்த ஆன்மீகம் என்று எனக்குத் தோன்றுகிறது.
எவன் ஒருவன் தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறானோ அவனே சிறந்த கம்யூனிஸ்ட் என்பதைப் போல. மனித வாழ்க்கை பல்வேறுபட்ட சிக்கல்கள் உடையதாய் இருக்கிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து மீளுவதற்கு ஒருமித்த, சீரிய சிந்தனை இந்த மனிதசமுதாயத்திற்குத் தேவைப்படுகிறது. மனித மனம் இந்த ஆட்படுதல்களினின்று விடுபடுதல் அவசியமாகிறது. ஆங்கே ஆன்மீகம் ஒரு சார்பு நிலையோடு முன் வைக்கப்படும்போது, மக்கள் மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். இங்கே ஆன்மீகம் இன்னும் தெளிவுபடுத்தப் படவில்லை என்பதே என் நோக்கு…! போதும்!
உங்களின் அவ்வப்போதைய கீதைக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வாருங்களேன். மிகவும் பயனுள்ளதாக அமையும் எல்லோருக்கும்!!
நன்றி!
அன்புடன்,
உஷாதீபன்.
”கடவுளைத் தேடி” என்ற தலைப்பிலான என் சகோதரர் எழுதிய விகடன் பிரசுரம் ஒன்றைத் தங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.
உஷாதீபன் 8-10-6, ஸ்ருதி இல்லம்“ ” ,
மதுரை-625014.
***
அன்புள்ள உஷா தீபன்
தங்கள் கடிதம் கண்டேன். கீதை பற்றிய என் நோக்கு அதை ஒரு முழுமையான தத்துவ நூலாக வாசிக்க வேண்டும் என்பதே. இன்னும் சொல்லப்போனால் அதை யோகமீமாம்சை என்ற– டைலடிகல் – முறைப்படி வாசிக்க வேண்டும். அதன் ஒவ்வொரு அத்தியாயத்துக்குள்ளும் உள்ள முரணியக்கத்தை கருத்தில் கொள்ளவேண்டும். அதன் பின் கீதைக்கும் பிறநூல்களுக்கும் நடுவே உள்ள முரணியக்கத்தை கருத்தில் கொண்டு வாசிக்க வேண்டும். அவ்வாசிப்பே இந்து மெய்ஞான மரபைப்பற்றிய புரிதலை அளிக்கும் என்பது ஒருபக்கம். ஒரு முக்கியமான தத்துவ நூல் நமக்களிக்கும் பயனையும் அளிக்கும். அதை நான் கற்றவகையில் இங்கே அளிக்கவில்லை, மாறாக நான் என் வாழ்க்கை சார்ந்து அதை பயன்படுத்திய முறையிலேயே அளிக்கிறேன். ஒரு நூலாக இதை ஆக்கும் எண்ணம் உண்டு. தொடர்ந்து நிறையவே எழுதவேண்டியிருக்கிறது.
அன்புடன்
ஜெயமோகன்
***
கீதை தொடர்பான தங்களது கட்டுரைகளை படித்து வருகிறேன். அவ்வப்போது தொடர்ந்து வேறு வேறு நோக்கில் கீதை பற்றி நீங்கள் எழுதுவதிலிருந்து எந்த அளவுக்கு உங்களது ஈடுபாடு அல்லது கீதையினால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் புரிகிறது. மேலும் எழுதுங்கள்.
நான் தமிழில் கீதை உரை நூலை தேடிக்கொண்டிருக்கிறேன். சித்பவானந்தரின் உரை நூல் கிடைக்குமிடம் பற்றிய தகவல் தெரிவிக்க முடியுமா?
நீங்கள் வாசித்த புத்தகங்கள் பற்றி உங்கள் கட்டுரையில் ஆங்காங்கே குறிப்பிருந்தாலும், ஓரிடத்திலாவது ஒரு தெளிவான பட்டியலை (Reference list) கொடுத்தால் என்னைப் போன்ற வாசகர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். நன்றி.
அன்புடன்,
சுரேஷ்
எடின்பரோ, யூக்கே.
***
அன்புள்ள சுரேஷ்,
தங்கள் கடிதம். நான் கீதை பற்றி எழுதவிருக்கும் ஒரு நூலுக்கான முன்னுரைதான் இதுவரை வெளிவந்த 10 கட்டுரைகளும். கீதைக்கு விரிவாகவே ஒரு விளக்க உரை எழுத எண்ணியிருக்கிறேன். வழக்கமான உரைகளில் இருந்து மேலதிகமாக என்ன இருக்கும் என்றால் நவீன சிந்தனைகளுடன் அறிமுகம் உள்ள ஒரு இலக்கியவாதி தன் சொந்த அனுபவத்தை வைத்தும் தன் கல்வியை வைத்தும் எழுதும் விஷயங்கள்தான்.
கீதையை நான் பல காலமாகவே நுணுகி கற்று வருகிறேன். வீடெங்கும் கீதை நூல்கள் நிரம்பியிருக்கின்றன. எவற்றையெல்லாம் பயன்படுத்துவேன் என்று சொல்லத்தெரியவில்லை. புத்தகமாக ஆக்கும்போது விரிவான நூலடைவு ஒன்று அளிக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
கீழ்க்கண்ட நூல்களை நான் உடனடியாக பயன்படுத்துகிறேன்.
- புராணிக் என்சைக்ளோபீடியா. வெட்டம் மாணி [மலையாளம். ஆங்கிலத்திலும் உள்ளது]
- The Bhagavad Gita Nataraja Guru. DK Print world New Delhi
- The Bhagavad Gita Nitya Chaidanya Yati DK Print world New delhi
- பகவத் கீதை, சித்பவானந்தர், ராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்துறை
- Indian Thought .K.Damodharan
- பகவத்கீதை. மூவர் உரையுடன். அகோபிலதாசன் ஸ்ரீதரன் . நர்மதா பதிப்பக வெளியீடு
- Sankara’s Teachings in his own words. Swamy Atmananda. Bharathiya Vidya Bhavan
- The wonder that was India. A.L.Basham Orient Longman
- Indian Philosophy. Debi Prasan Chattobatyay [தமிழில் கிடைப்பதாக தகவல்]
- History of philosoiphy. D.Bhattachariya
- Essays on Gita Arabindo Ghose. Arabinod ashram Pondicheri
- பண்டைய இந்தியா. டி.டி.கோசாம்பி. எஸ்.என்.ஆர்.சத்யா மொழியாக்கம். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- The mythu and reality D.D.Kosambi
- பகவத்கீதா ஸ்வாத்யாயம்: நித்ய சைதன்ய யதி . மலையாளம்
- பகவத் கீதை உரை . பாரதி.
- கீதாபாஷ்யம், சங்கரர். [மலையாளம்]
- பிரம்மசூத்ர பாஷ்யம் ,சங்கரர் [மலையாளம்]
***
அன்புள்ள ஜெயமோகன்
நலம்தானே
கீதை பற்றிய உங்கள் சமீபத்திய கட்டுரை படித்தேன். பழங்கால நூல்களில் எல்லாம் ·பலசுருதி என்று ஒன்று உள்ளது. ஒரு நூலைப் படித்தால் என்ன கிடைக்கும் என்று அந்த நூலிலேயே சொல்லப்பட்டிருக்கும். பெரும்பாலும் அது முக்தி என்றுதான் இருக்கும். முக்தி என்றால் விடுதலை. அதை சாதாரணமாக நாம் மோட்சம் என்று புரிந்துகொள்கிறோம். உண்மையில் அது விடுதலை என்று மட்டுமே பொருள்கொடுக்கும்.
ஏனென்றால் அறியாமையை ஒரு சிறை என்றே நம்முடைய ஞான நூல்கள் சொல்கின்றன. அதிலிருந்து விடுதலை கிடைப்பதையே முக்தி என்கிறன. வேதாந்த நூல்களில் பேதபுத்திதான் அறியாமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. நான் என்ற பேத உணர்வு என்னுடையது என்ற பேத உணர்வாக மாறுகிறது. அது அப்படியே வளர்ந்து ‘நான் எனது என்று அவரவரை கூத்தாட்டும்’ சக்தியாக மாறுகிறது. அதிலிருந்து பெறும் விடுதலையே நல்ல நூல்கள் முன்வைக்கின்றன
சிவராம்
சென்னை
****
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் கீதை விளக்கக் கட்டுரை படித்தேன். ஒருபக்கம் தத்துவ விவாதங்களை கிண்டல் செய்து சிரிக்கிறீர்கள். மறுபக்கம் தத்துவ விவாதங்களில் முழுமூச்சான தீவிரத்துடன் ஈடுபடுகிறீர்கள். இரண்டும் ஒரே நுட்பத்துடன் உள்ளன என்பது உங்கள் மன விசாலத்தைக் காட்டுவதாக உள்ளது. ஒன்றில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இன்னொன்று உதவும். தன்னைப் பற்றிய சிரிப்பு இல்லாமல் நல்ல ஆன்மீக சிந்தனை இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். எந்த ஆன்மீக நூலைப் படித்தாலும் நான் ஜெயகாந்தனின் ஓங்கூர் சாமியின் சிரிப்பையும் என் மனக்காதில் கேட்டுக் கொள்வேன். சிரிக்காத ஆன்மீகம் பொய்யான உணர்ச்சிகளை நோக்கி சென்றுவிடும் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
அருணாச்சலம் அ.வே
***