இமயச்சாரல் – 4

நேற்று மாலை ஹிர்ப்போரா என்ற ஊரில் வந்து தங்கினோம். இந்த ஊருக்கு வரும் வழி முழுக்க ரம்ஜான் கொண்டாட்டத்தில் கூட்டம் கூட்டமாக மெய்மறந்திருந்த மக்களைப்பார்த்தோம். ஒரு வாரம் ரம்ஜானைக் கொண்டாடுவார்கள் என்று தோன்றியது. மொகல் ரோடு ஹிர்போராவை வந்து அடையும் வரை இருபக்கமும் விரிந்த பசும் புல்வெளியைக் காணமுடிந்தது. அந்தப் புல்வெளிகளில் கம்பளங்களை விரித்து அமர்ந்து குடும்பமாக உணவுண்டு பேசி மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.

இஸ்லாமியர்களுடைய பண்பாட்டினை தென்னிந்தியாவில் கண்டவர்கள், குறிப்பாக கடந்து பதினைந்து வருடங்களாக அவர்களுடைய பண்பாட்டு மாற்றங்களைக் கண்டவர்கள் நேற்றைய காட்சியை கொஞ்சம் வியப்புடன்தான் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு பெண்கூட முகத்திரை அணியவில்லை. பாதிக்கு மேற்பட்ட பெண்கள் ஜீன்ஸ், டீஷர்ட், சுரிதார், கவுன் போன்ற உடைகளையே அணிந்திருந்தார்கள். சற்றே வயது முதிர்ந்தவர்கள் தலை முடியை மட்டும் மறைக்கும்படி முக்காடு இட்டிருந்தார்கள். ஆண்களும் ஜீன்ஸ் டீஷர்ட்ல்தான். ஆண்களும் பெண்களும் சகஜமாக கலந்து பேசி, சிரித்து, கூச்சலிட்டு, துரத்திப்பிடித்து விளையாடுவதைக் காணமுடிந்தது.

நாங்கள் சற்று தள்ளி ஒரு பெரிய புல்வெளியை அடைந்து, குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்த ஒரு பசும்புல் சரிவில் ஏறிச்சென்றோம். கீழிருந்து பார்க்கும்போது மிக அருகே தெரிந்த அந்த மலை உச்சி, பாதி ஏறுவதற்குள் நாக்கை தள்ளவைத்தது. சூரியன் அணைந்து கொண்டிருந்த நேரம், அந்தக்குளிரில், அந்திச்சிவப்பில், அன்னிய மண்ணில், எங்கும் மனிதனை வந்து அனைத்துக்கொள்ளும் பசுமையின் மடியில் இருப்பது, ஒரே சமயம், தொலைவில் இருப்பதாகவும், அருகில் இருப்பதாகவும் எண்ணவைத்தது. எங்கு சென்றாலும் ஒரே புல்லின் மடியில்தான் அமர்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

தங்குமிடம் தேடி ஹிர்ப்போரா வந்தோம். அங்கிருந்து அதற்கடுத்த பெரிய ஊருக்கு போகலாமா என்ற எண்ணம் வந்தபோது, அங்கேயே தங்கி அயூபினை சந்தித்து ஏழு ஏரிகளுக்கு செல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதால், அங்கேயே விடுதி தேடினோம். இரு விடுதிகள் இருந்தன. இரண்டிலுமே ஆயிரம் ரூபாய்க்கு எட்டு பேர் தங்கும் அறையை அளிக்க தயாராக இருந்தனர். கட்டில் கிடையாது, கம்பளிமேல் தரையில் படுத்துக்கொள்ளவேண்டும். நல்ல வசதியான சுத்தமான அறைகள். அங்கிருந்த இஸ்லாமிய விடுதிக்காரர்கள், உணவக உரிமையாளர்கள், மிக அன்பாக நெருக்கமாக பழகினார்கள்.

இங்கே ஏதாவது பிரச்சனை உண்டா என்று கேட்டோம். நீங்கள் எங்கள் விருந்தினர்கள், நாங்கள் வணிகர்கள், உங்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். அப்படி எந்த பிரச்சனையும் வர நாங்கள் விடமாட்டோம் என்றார்கள். ஆனால் எங்கள் ஓட்டுனர் திரும்பிச்செல்வதற்கு சற்றும் ஒப்புக்கொள்ளவில்லை. திரும்பத்திரும்ப, அயூப் நம்புதற்குரியவரல்ல என்று சொல்லிக்கொண்டிருந்தார். இங்கே என் கணிப்பொறி செயல்படவில்லை. வேறொரு ஐ-பாடில் ஒவ்வொரு வரியாக சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்துவிட்டு தூங்கினேன்.

காலையில் எழுந்து கிளம்பி ஸ்ரீநகர் வரும்போது கூட ஆழமான ஒரு தயக்கம் இருந்தது. அயூப் எங்களுக்காக அங்கே எட்டு மணிக்கு காத்திருப்பார் என்ற எண்ணம். ஆனால் என்ன நடந்திருக்கும் என்று அவரால் ஊகிக்க முடியும். எப்படிப்பட்ட சூழலில் இருக்கிறோம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதை எண்ணி ஆறுதல் கொண்டோம். ஆயினும் ஒரு சிறிய குற்றவுணர்வு குடைந்துகொண்டே இருந்தது.

அயூபினுடைய நட்பார்ந்த முகம் இனிய புன்னகை, அணைத்துக்கொள்ளவே பிறந்த கைகள், நாகரீகத்தின் கசடுகள் படியாத உரத்த குரலிலான அவரது பேச்சு – அனைத்தும், ஐயங்களும் அவநம்பிக்கையும் சஞ்சலங்களும் நிறைந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து பார்க்கும் எங்களைப்போன்றவர்களுக்கு மிகத்தொலைவில், தொடுவானில் சிறு வெளிச்சம் போல தோன்றியது.

முந்தைய கட்டுரைதமிழக வரலாறு தொடங்குமிடம் எது?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62