இன்று பூஞ்ச் நகரில் காலை கண்விழித்து ஒரு சிங்கிள் டீக்காக நானும் க்ருஷ்ணனும் நகரில் சுற்றினோம். டீக்கடைகள் கண்விழிக்கத் தொடங்கவில்லை. பூஞ்ச் ஒரு அழுக்கான சோகையான நகரம். நம் உளுந்தூர்பேட்டை அளவிருக்கும். இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்நகரம் பழைமையானது. டோக்ரி மன்னர்களின் அரண்மனை நகரின் நடுவே ஓங்கி நிற்கிறது. பயணிகள் பார்க்க அனுமதி இலை. தெருக்கள் அகலமானவை. நம்மூர் ஒன்றில் நடந்துகொண்டிருக்கும் உணர்வையே பெரும்பாலும் அடைந்தோம். ராணுவமுகாம்தான் இன்று ஊரின் மையம். அதைச் சுற்றியே நகர் உருவாகி இருந்தது. முகாம் கம்பிவேலிக்கு அப்பால் தனி உலகமாகப் பதிந்திருந்தது.
ஓருவழியாக டீக்கடையைக் கண்டு டீ குடித்தோம். கூடவே அந்த ஊர் பழக்கப்படி ஒரு ஜாங்கிரியும் சாப்பிடோம். மீண்டும் அறைக்கு வந்தோம். பாதி சீக்கியர்களும் மீதி முஸ்லீம்களும் நிறைந்த இந்தப் பகுதி அடிக்கடி பாகிஸ்தானிய குண்டுகள் வந்து விழுவது. ஊடுருவல் அடிக்கடி நடக்குமாம். ஆனால் மதக்கலவரம் இல்லை. காரணம் சீக்கியர்கள் மிகபெரிய சமூகமாக இருக்கிறார்கள் என்பதுதான்.
பூஞ்ச் வரும் வழி மிகமிக அழகான அனுபவமாக அமைந்தது. ஒரு பக்கம் நதியும் மறுபக்கம் உயர்ந்த மலையும் தொடர்ந்து வரும் இமய நிலப்பகுதி. மலை இன்றும் மலையாக ஆவதாக முழு முடிவை எடுக்கவில்லை. உருண்டு சரிந்து சாலையை நிறைத்துக்கிடந்தன மாபெரும் பாறைகள். ஊருளைக்கல்லாலும் ஜல்லிக்குவியலாலும் ஆன மலைச்சரிவில் செல்லும்போது உருளும் பாறைகள் கவனம் என எழுதிவைத்தே நம்மை அச்சுறுத்துகிறார்கள்.
பூஞ்சில் இருந்து நாங்கள் செல்லவேண்டிய இடம் ஏழு ஏரிகள். அப்படி ஒரு இடம் பூஞ்ச் அருகே இருப்பதாக கூகிள் சொன்னதை நம்பி வந்தோம். அப்படி ஒரு இடமே எவருக்கும் தெரியவில்லை. ஆறுபது கிமீ தொலைவுதான் என்று கூகிள் சொன்னது. ஆனால் இப்பகுதியில் சுற்றுலா எம்பஸி கிடையாது. எவருக்கும் எந்தத் தகவலும் இல்லை. ஓரு வயதான முஸ்லீம் சொன்னார் என்று புகழ்பெற்ற மொகல் சாலையில் ஸ்ரீநகர் நோக்கிக் கிளம்பினோம்.
உலகிலேயே அபாயமான பாதையான லடாக் கார்கில் சாலைக்கு சற்றே குறைந்தது மொகல் சாலை. பல இடங்களில் அதலபாதாளத்தின் விளிம்புவழியாக உடைந்து சரிந்த பாறைகள் வழியாகச் சென்றோம். முதல் இலக்கு நந்திஷூல் என்னும் மலையருவி. குளிக்க முடியாது. ஆனல் நுரைநீர்ப் பெருக்கை சென்று பார்க்க அழகான பாதை இருந்தது. செல்லும்போது முன்பு இமயப்பயணத்தில் நாங்கள் தொட்ட அந்தச் செடியை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அது கும்பமேளா முடிந்து நாங்கள் சென்ற பயணம். யுவனும் நானும் கிருஷ்ணனும் அந்தச் செடியை தொட்டதுமே மின்னதிர்ச்சியை அறிந்தோம். நம்மூர் செந்தட்டிபோலத்தான், ஆனால் செந்தட்டி அந்த ரசாயனம் உடலில் ஊற இடம் அளிக்கும். இது மின்னதிர்ச்சியை அளிக்கும், உண்மையில் ஒரு அற்புதமான அனுபவம். சுதாகர் மட்டும் தொட்டுப்பார்த்து இரண்டு மணி நேரம் சொறிந்துகொண்டே இருந்தார்.
மொகல் சாலையில் பீர் கி கலி என்ற இடத்தை அடைந்தபோதுதான் குளிர் வரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக குளிர் அதிகரித்தது. அங்கே ஒரு பெரிய பனிப்பாளத்தைக் கண்டோம். சாலை ஓரமாகவே. நிறுத்தி இறங்கி அதைப் பார்த்தோம், எஸ்கிமோக்களின் பனிவீடு போல் தோன்றியது. அங்கே ஒரு பெரியவரை அறிமுகம் செய்துகொண்டோம். முகமது அயூப் என்பது அவரது பெயர். அவர் அந்த ஏழு ஏரிகளைப்பற்றி அறிந்திருந்தார். அந்த ஏரி இருபது கிமீ நடந்து செல்லவேண்டிய இடம் என்றார். அற்புதமான இடம், பார்த்தாக வேண்டிய இடம் என்றார். அவரது இல்லத்திலேயே தங்கி மறுநாள் அங்கே சென்றால் என்ன என்று நினைத்தோம்.
அயூப்பிடம் கேட்டபோது அவரது முகம் மலர்ந்தது. அதை அவருக்கு அளிக்கப்பட்ட பெரிய கௌரவமாகவே எடுத்துக்கொண்டார். எங்களுக்கு ஓர் அறையும் கம்பிளிகளும் அளிப்பதாக சொன்னார். ஆனால் எங்கள் ஓட்டுநர் அதை உறுதியாக மறுத்துவிட்டார். வீட்டுக்கு வந்து டீ சாப்பிடுங்கள் என்று அயூப் சொன்னார். அவரது அண்னன் மகன் யூனுஸ் மற்றும் குழந்தைகள் இருந்தனர். குட்டிப்பெண் ஒன்றுக்கு பெயர் போடப்படவில்லை, பெயர் குடியா. பொம்மை என்று பொருள். அவரது பீபி எங்களுக்கு காஷ்மீரி கஹுவா செய்து தந்தார்கள். குழந்தைகள் உற்சாகமாக விளையாடின.
நாங்கள் அங்கே தங்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டதும் அயூப்பின் முகம் மாறியது. மிகவும் பண்பட்டவர் என்பதனால் உடனே மறைத்துக் கொண்டார். நான் அக்குழந்தைகளை ஆசீர்வதித்து எங்கள் வழக்கப்படி பணம் கொடுக்க விரும்புவதாக அவரிடம் சொல்லப்பட்டதும் அவர் மகிழ்ச்சியுடன் சிரித்தார். குழந்தைகளை முத்தமிட்டு ஐநூறு ரூபாய் வீதம் கொடுத்தேன். அவர்களிடம் விடைபெற்றோம். அருகே ஷோப்பியான் என்ற ஊரில் நண்பர் வந்திருப்பதாகவும் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு மறுநாள் காலை எட்டு மணிக்கு வருவதாகவும் சொல்லிவிட்டு வந்தோம்.
அயூப்பின் வீடு அவரே கட்டியது. சாலையில் இருந்து கீழிறங்கிச் செல்லும் காஷ்மீரி பாணி வீடு அது. கூரைக்குமேல் மண் பூசப்பட்டது. தங்கியிருக்கலாம். ஆனால் ஓட்டுநர் ஒத்துகொள்ளவேயில்லை. அவர் அயூப் வீட்டுக்கு வரவோ அயூப்பிடம் முகம் கொடுத்து பேசவோ இல்லை. அயூப் அவரே வந்து பேசியபோதும் கண்களை சந்திக்காமலேயே பேசினார்.
அருகே இருந்த கீர்போரா என்ற ஊரில் அறைபோட்டோம். முழுக்க முழுக்க சுன்னி முஸ்லீம்களின் நகரம். மறுநாள் காலை கிளம்பிச் செல்லலாம் என்று சொன்னால் ஓட்டுநரும் சரவணனும் மன்றாடினார்கள். அயூப் ஓர் நிறைந்த மனிதராக எனக்குப்பட்டார். விடுதியிலும் உணவகத்திலும் சந்திக்க நேர்ந்த அனைத்து இஸ்லாமியரும் மிக மிக நட்புடன் மட்டுமே இருந்தனர். கன்யாகுமரியில் இருந்து வருகிறேன் என்ற பேச்சே அவர்களை மகிழ்வடையச்செய்தது.
ஆனால் காகா பொதுவாகவே இவர்கள் நல்ல மனிதர்கள்தான் என்றார். விருந்தினரை வரவேற்பவர்கள். சுற்றுலா பயணிகள் வருவதால் தங்கள் வாழ்க்கைக்கு நல்லது என நினைப்பவர்கள். ஆனால் ஒரு மத ரீதியான ஆணை வந்தாலே மாறிவிடுவார்கள். எந்த உதவியும் செய்யமாட்டார்கள் என்றார். அயூப் புஜார் [புகாரால்] என்ற சுன்னி பிரிவைச் சேர்ந்தவர். அவர்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்றார். அயூப் எங்களிடம் பேசும்போது நீங்களும் நானும் ஒரே நாட்டினர் என்றார். நீங்கள் எங்களவர் என்றார் விடுதியாளர். இதில் எந்தத் தரப்பு உண்மை எனத் தெரியவில்லை. எதுவானாலும் ஓட்டுநரை மீறி செல்ல முடியாது. ஆகவே ஏரிகளை பார்க்கச் செல்லவேண்டாம் என முடிவு செய்தோம்.
காஷ்மீர் முழுக்க ஆழமான அவநம்பிக்கை இருப்பதைக் காணமுடிந்தது. ஊடுருவி வரும் தீவிரவாதிகளும் பிரிவினை அரசியல்வாதிகளும் உருவாக்கிய கசப்பு அது. அச்சம் உருவாக்கிய கசப்பு. அந்தக் கசப்பு இஸ்லாமியருக்கு இந்துக்களிடம் இல்லை. இந்தியாவிடமும் இல்லை. அவர்கள் வணிகத்தை விரும்புபவர்கள், ஆனால் அஞ்சியிருக்கிறார்கள். ஒரு பெட்ரோல் நிலையம் சென்று டீசல் கேட்டோம், ஓட்டுநர் இந்து என்பதனால் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பயணிகள் என்று சொல்லி கெஞ்சியபோது ஐநூறு ரூபாய்க்கு மட்டும் டீசல் அளித்தார். அது இந்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம். அத்தனை அச்சம் ஆள்கிறது காஷ்மீர் சமவெளியை.