ஜெமோ,
சமீபத்தில் நான் படித்த இந்த இரண்டு கட்டுரைகளும் அருமை. அதனைப் பற்றிய பாராட்டுகளைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல்.
முதலில் குஷ்பு குளித்த குளம் . நீங்கள் எவ்வளவு அனுபவித்து எழுதினீர்கள் என்று தெரியாது ஆனால் நான் மிகவும் ரசித்துப் படித்த கட்டுரை இது. எல்லா இடங்களிலும் நடப்பதைப் பற்றியும் தமிழனின் தீராத திரைப்பட மோகத்தையும் அருமையாக விவரித்துள்ளீர்கள். இந்த கட்டுரையின் தாக்கத்தில் நேற்று ஒரு நண்பருடன் சென்னையில் அலையும் பொழுது ஒவ்வொரு இடத்திற்கும் சினிமாவில் வந்ததைப் பற்றிச் சொல்லப் போக அவர் என்னை ஒரு மாதிரி பார்த்து பின் அவருக்கு இந்தக் கட்டுரையைக் காண்பித்த உடன் அவர் ரசித்ததும் நடந்தது. இழையோடும் நகைச்சுவையோடு இப்படி ஒரு கட்டுரையைப் படித்து வெகு நாட்களாகிவிட்டன. தயவு செய்து இது போன்று அடிக்கடி எழுதுங்களேன். :)
அடுத்தது உங்கள் தினப்படி செயல்பாடுகளைப் பற்றிய ஒவ்வொரு நாளும். படித்த பின் எப்படி வாழ்க்கையை அனுபவிக்கிறார் மனுஷன் என்று ஒரு பொறாமைப் பெருமூச்சு வெளிப்பட்டது உண்மை. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கு உதாரணமாகவே உங்கள் வாழ்க்கை இருப்பதாகப் பட்டது. அது போன்று அளவாக சம்பாதித்து அதனை அழகாக அனுபவிப்பது என்பது ஏன் எல்லாராலும் முடியவில்லை என்பது தெரியவில்லை. இந்த எலிப் பந்தயத்தில் (rat race) நாமும் ஏன் இருக்கிறோம். நமக்கு மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையா? இல்லை எப்படி அனுபவிக்க வேண்டும் எனத் தெரியாததினாலா? என்றெல்லாம் நெடு நேரம் யோசிக்க வைத்த ஒரு பதிவு. மீண்டும் படிப்பேன் என்பது மட்டும் நிச்சயம்.
இது போன்ற நல்ல எழுத்துக்களைப் படிக்கத் தருவதற்கு நன்றி.
அன்புடன்
ராஜேஷ்
அன்புள்ள ராஜேஷ்
நலமா? உங்கள் கடிதம். நானும் நலமே.
தமிழ்நாட்டில் விரிவான பொதுமக்கள் பங்கேற்புள்ள அறிவியக்கம் உருவாகவில்லை. திராவிட இயக்கம் ஒரு ‘பாப்புலிஸ்ட்’ இயக்கம். அதன் வழிமுறை தெருப்போராட்டங்களும் உணர்ச்சிகரமான மேடைப்பேச்சுமாகும். இப்போது அதன் வீச்சு இல்லாமலாகிவிட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஒரே பிரபல ஊடகமான மேடைப்பேச்சு அனேகமாக இல்லாமலாகிவிட்டிருக்கிறது. கருணாநிதிக்குக் கூட கொண்டுவந்து சேர்த்தால்தான் கூட்டம் வருமென்ற நிலை. இந்நிலையில் இன்று மக்களுடன் பேசும் ஊடகம் என்று எதுவுமே இல்லை. அவர்களுக்கு தொடர்புள்ள ஒரே ஊடகம் சினிமாதான். ஆகவே அவர்கள் அதை மட்டுமே சார்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்றைய தமிழ்நாட்டின் ஒரு மையப்பிரச்சினை என்று சொல்லலாம்.
என்னுடைய வாழ்க்கையை நான் புறவயமாக யோசிக்க ஒரு தருணம் வாழ்க்கையில் கிடைத்தது. எதைச்செய்ய வேண்டும் என்ற ஒரு திட்டம் உருவாக அதுவே காரணம். அதற்கு என் வாழ்க்கையில் அலைச்சல்கள் காரணம்.பெரும்பாலும் நாம் ‘நாலுபேர் மதிக்கும்படி’ இருப்பது ‘நாலுபேரைப்போல் இருப்பது’ என்ற மாயையிலேயே நாம் உண்மையிலேயே விரும்பும் செயல்களைச் செய்யாமலாகிறோம் என்பதே என் எண்ணமாகும். அதில் இருப்பது ஒன்று தன்னகங்காரம். அல்லது தனித்தன்மை இல்லாமை.
ஜெயமோகன்
888888888888888
அன்புள்ள ஜெயமோகன்,
குஷ்பு குளித்த குளம் கட்டுரை மிக நன்றாக இருந்தது. சாதாரணமாக தமிழ் நாட்டில் இதை எல்லாருமே கவனித்திருப்பார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தனிப்பட்ட ஆர்வங்கள் பல இருக்கும். பலவகையான தொழில்கள் இருக்கும். ஆனால் இரண்டு தமிழர்கள் கூடினால் ஏசுவதற்கு சினிமா பற்றி மட்டும்தான் இருக்கிறது. நான் ரயிலில் பயணம் செய்யும்போது இதை கவனித்திருக்கிறேன். சினிமாவை பற்றி மிக மிக விரிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் நம் சனங்கள். வேறு எதைப்பற்றியும் தெரியவில்லை. சமீபத்தில் ரயிலில் சந்தித்த ஒரு பிஸினஸ் மேனுக்கு அப்சல் குரு பிரச்சினை, அணு ஆயுத ஒப்பந்தம், மணல் அள்ளும் பிரச்சினை என எதுவுமே தெரியவில்லை. ஏன் விலைவாசி உயர்வைப்பற்றிக்கூட தெரியவில்லை. தெரிந்தது சினிமா பற்றி மட்டும்தான். ஏன் இப்படி இருக்கிறது. நான் கெமிகல் பிஸினஸுக்காக நிறையவே பயணம் செய்யக்கூடியவன். ஆந்திர மக்களுக்கு நம்மைவிட சினிமா ஆர்வம் அதிகம். அவர்கள் கூட இப்படி சினிமாவைப்பற்றி மட்டும் தெரிந்து வைத்திருப்பதில்லை. நமக்கு தெரிந்தது சினிமா டிவி மட்டும்தான். டிவி கூட சினிமாவின் இன்னொரு முகம்தான். இந்த நிலை வடக்கு மாநிலங்களில் இல்லை. வேறு எந்த பகுதியிலும் இல்லை. நம் அரசியல் கூட சினிமாதான். காவிரிபிரச்சினைகூட சினிமாப்பிரச்சினையாகவே நம் சனங்களுக்கு தெரிகிறது. மிக மிக வருத்தமான விஷயம் இது. அதை நகைச்சுவையாக அழகாகச் சொல்லியிருந்தீர்கள்.
சிவராம்
சென்னை
****************
அன்புள்ள ஜெ,
நீங்கள் குஷ்பு குளித்த குளம் பற்றி எழுதியிருந்த கட்டுரையை படித்தேன். தமிழ் மக்கள் சினிமாவைத்தவிர எதைப்பற்றியுமே ஆர்வம் காட்டுவதில்லை. இதைப்பற்றி நாசர் பாரதிராஜா முதலிய சினிமாக்காரர்களேகூட வருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். எதையுமே சினிமாக்காரர்கள் வழியாகச் சொன்னால் மட்டும்தான் நம் மக்களுக்கு ஆர்வம். இணையதளத்திலேயே இதைப் பார்க்கலாம். சினிமா பற்றி எழுதினால் மட்டுமே படிப்பார்கள். அதற்கு மட்டும்தான் அதிக ஹிட் விழும். சினிமாப்பேச்சுதான் இணையத்தில் 90 சதவீதம். பிலாக் எழுத்தில்கூட சினிமாதான் அதிகம். உங்கள் இணையதளம் கூட சினிமா சம்பந்தமான பிரச்சினை வழியாகத்தானே பிரபலம் அடைந்தது? ஆனால் நீங்கள் திட்டமிட்டு சினிமாவை குறைத்துக் கொண்டீர்கள். அதைப்புரிந்துகொள்கிறேன்.
இந்தக் காரணத்தால் நம்முடைய டிவி ,பத்திரிகை முதலிய மீடியாக்கள் தாங்களும் சினிமாவையே போட்டு நிரப்புகின்றன. எங்கும் சினிமா தவிர எதையுமே பார்க்க முடியவில்லை. நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். இப்போது காலச்சுவடு உயிர்மை போன்ற சிறு பத்திரிகைகளும் இதைத்தானே செய்கின்றன? உயிர்மை இத்ழைப் பார்த்தால் பாதிக்குமேல் சினிமா. சீரியஸான விஷயங்களைப் போடுகிறோம் என்று பாவலா காட்டுவதற்காக அவற்றை ‘ஊடக ஆய்வுகள்’ என்ற தோரணையில் போடுகிறார்கள். அதற்காகத்தான் அ.ராமசாமி வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்றவர்கள் எழுதுகிறார்கள். விகடனில் இரண்டு பக்கத்தில் எழுதப்படும் அதே விசயத்தை இவர்கள் 20 பக்கத்தில் எழுதுகிறார்கள். அப்படித்தானே?
அதிலும் சாரு நிவேதிதா எழுதும் சினிமா விமரிசனங்கள் பார்த்தால் குமுதமே மேல் என்று தோன்றுகிறது. சீப்பான கமெண்டுகள். மட்டமான ரசனை. இவருக்கு நல்ல சினிமா அறிமுகம் ஏதாவது உண்டா என்பதே சந்தேகம்தான். உதாரணமாக தசாவதாரம் படம் பற்றி சாரு நிவேதிதா எழுதிய கட்டுரை. வரிக்கு வரி அபத்தம். சீப் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையாகவே கேட்கிறேன். இதற்கு குமுதமே மேல் அல்லவா? ஊடக ஆய்வுகள் என்ற பேரில் சீரியஸான இதழ்களிலும் சினிமாவையே போட்டு நிரப்புகிறோம். இந்த நிலைமை வேறு எங்கேயும் உண்டா என்று தெரியவில்லை.
சுரேஷ்குமார்
*****
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் எழுதிய கட்டுரை படித்தேன். நான் சமீபத்தில் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தேன். எல்லாருமே அங்கே எடுத்த சினிமாக்களை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ராஜராஜசோழனைப் பற்றி யாருமே பேசவில்லை. சமீபத்தில் டிவியில் திருமலை நாயக்கர் மகாலைக் காட்டினார்கள். காம்பியரர் மணிரத்தினத்துக்கு பிடித்தமான இட்ம் என்று சொல்லி அங்கே டுத்த பாட்டுகளைப் பற்றி மட்டும் சொல்லி காட்டி முடித்தார். திருமலைநாயக்கரைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இப்படித்தான் இங்கெ எல்லாம் சொல்லப்படுகிறது. இன்னும் சில வருடங்களில் இந்த புதிய சரித்திரம் மட்டும்தான் இருக்கும். அந்த எண்ணங்களை உங்கள் கட்டுரை படித்தபோது எண்ணிக் கொன்டேன்
சரவணன்
****
அன்புள்ள ஜேமோ
வரலாறு என்றால் என்ன என்று உங்களுக்குத்தான் தெரியவில்லை. தினதந்தியில் வரலாற்றுச் சுவடுகள் என்று ஒரு கட்டுரைத்தொடர் வருகிறது படித்தீர்கள் அல்லவா? தினதந்தியின் கடந்தகாலத்தில் இருந்து எடுத்த வரலாறு. ப.தேனப்பன், கேயார், பஞ்சு அருணாச்சலம், கலைப்புலி தாணு போன்ற சரித்திர நாயகர்களின் வாழ்க்கைக்கதை. மாமனிதர்களின் வாழ்க்கையே வரலாறு என்று சொல்லப்படுவது உண்மைதான்.
நியூடெக்மேன்