நண்பரும் சிறந்த வாசகருமான ஆர்வி அவரது தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. இந்த கட்டுரையின் தரப்புக்கு நான் பலமுறை விளக்கம் சொல்லியிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இது திரும்பத்திரும்ப எழுதப்படுகிறது
திரும்பத்திரும்ப சொல்லப்படும் இரு வரிகள் , இலக்கியத்திலே தரம் பிரிக்கக்கூடாது, பிடித்ததை வாசித்துக்கொண்டு போகவேண்டியதுதான். இன்னொன்று கோட்பாட்டுப்புரிதலோ விமர்சனக்கொள்கைகளை அறிவதோ வாசிப்புக்குத்தேவை இல்லை
இலக்கியத்தில் தரம்பிரித்தலை நிகழ்த்தாத ஒரு நல்ல இலக்கியவாதிகூட உலக இலக்கியமரபில் கிடையாது. தரம் பிரிக்காமல் சிபாரிசு செய்யாமல் வாசிப்பே சாத்தியமில்லை. தரம்பிரிக்கக்கூடாது என்பது இலக்கியமே தேவை இல்லை என்பதற்கு சமம்
இலக்கியக்கோட்பாடுகள், அழகியல் கொள்கைகள் எதற்காக? எந்த இலக்கியக் கொள்கையிலும் பயிற்சி இல்லாத இலக்கியவாசகர் என எவரும் இல்லை. சமகாலத்தில் எது மேலோங்கியிருக்கிறதோ, எது வெகுஜனப்புகழ் பெற்றிருக்கிறதோ அதை தன்னை அறியாமலேயே அவர் அறிந்து வைத்திருப்பார்.
முயற்சி செய்து இலக்கியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கற்காவிட்டால் தனக்கு தன்னிச்சையாகத் தெரியவந்த வாசிப்புமுறையையே முழுமையான ஒரே முறை என நம்பி பிற அனைத்தையும் நிராகரிக்கும் இடத்துக்குச் செல்வார். ஆகவேதான் இலக்கியக் கொள்கைகள் தொடர்ந்து விமர்சகர்களால் அறிமுகம் செய்யபப்டுகின்றன
எந்த இலக்கிய விமர்சனமும் வாசிப்பதற்கான பயிற்சியே. பயிற்சி தேவையில்லை என்பவர் முன்னகர்வை மறுதலிக்கிறார். பயிற்சி எதுவானாலும் அதற்கு முடிவே இல்லை
ஒரு தமிழக ஓவிய ரசிகர் ரவிவர்மா பாணி ஓவியத்துக்குப் பழகியிருப்பார். அவர் வான்கா ஓவியத்தை பார்த்தால் அது பிழையாக வரையப்பட்டிருக்கிறது என்று நினைப்பார். தெளிவில்லாமல் இருக்கிறது என குற்றம் சாட்டுவார். அவருக்கு இம்பிரஷனிசம் பற்றி அறிமுகம் செய்து அதை புரிந்துகொள்ளும் மனநிலையும் அவருக்கிருந்தால் அதை அவர் ரசிக்க முடியும்
வழக்கமான பாலகுமாரன் ராஜேஷ்குமார் கதைகளை வாசிக்கும் ஒருவர் நீல பத்மநாபனை வாசித்தால் அவர் தேவையில்லாமல் சில்லறை விஷயங்களை பரப்பிச் சொல்லி கதையை விட்டுவிடுகிறார், கதை பரபரப்பாக இல்லை என்று நினைப்பார். அது இயல்புவாத எழுத்துமுறை, அதன் அழகியல் இப்படிப்பட்டது என அவர் அறிந்துகொண்டால் அந்த மனத்தடையை அவர் தாண்டமுடியும்
தமிழ் வாசிப்பில் உள்ள இன்றைய பெரும் பிரச்சினையே இலக்கிய விமர்சனத்துடன் அறிமுகம் இல்லாமை தான். அந்த அறிவுச்சவாலை சந்திப்பதை தவிர்க்க பலவிதமான நியாயங்கள் பேசப்படுகின்றன. இணையத்தில் அதை மீண்டும் மீண்டும் காணமுடிகிறது
இலக்கியம் பற்றி பேசாமல் விவாதிக்காமல் இலக்கியக்கொள்கைகளை அறியாமல் எவரும் இலக்கிய ரசனையை வளர்த்துக்கொள்ள முடியாது. அறியாமலிருக்கும் ஒருவர் தான் ஏற்கனவே வாசித்த தரத்திலானவற்றை மீளமீள வாசித்துக்கொண்டிருக்க நேரும். முன்னகர்வே சாத்தியமில்லை
அறிவியக்கத்தில் உள்ள பேரின்பம் என்பது முன்னகர்வதே