ஒரு சமூகம் எப்போது தன்னுடைய வரலாற்றை பதிவுசெய்ய வேண்டும் என்று எண்ணுகிறதோ அப்போதே அந்தச்சமூகத்தின் பண்பாடு முதிர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தன்னைப்பற்றிய ஒரு தெளிவான சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டபின்னர்தான் அச்சமூகம் ‘தான்’ என்றே உணர்கிறது. அந்த உணர்வில் இருந்துதான் தன்னுடைய இறந்தகாலத்தை அடியாளம் கண்டு வகுத்துக்கொள்கிறது. அதை தன்னுடைய எதிர்காலநினைவுக்காக கையளிக்கவேண்டும் என்று திட்டமிடுகிறது. அதன்விளைவாகவே அது ஏதேனும் ஒருவடிவில் தன் வரலாற்றை பதிவுசெய்ய முயல்கிறது.
வரலாற்றுணர்வு உருவாவதற்கு நெடுங்காலம் முன்னரே அச்சமூகம் இருந்துகொண்டிருக்கும். அதன் வாழ்க்கையை பின்னகர்த்தி கொண்டுசென்று குகைமனிதர்கள் வரை, ஏன் குரங்கு மனிதர்கள் வரைகூட கொண்டுசென்றுவிடமுடியும். ஆனால் அது வரலாற்றுக்காலம் அல்ல. அக்காலம் வரலாற்றெழுத்தின் ஆய்வுப்பொருள் மட்டுமே. தன்னை ஒரு சமூகமென ஒரு சமூகம் உணர்ந்து அதை ஏதேனும் ஒருவகையில் தொகுத்துக்கொள்ள முயலும்போதே வரலாறு தொடங்குகிறது.
அப்படி தொடங்கும் வரலாறு எழுதப்பட்டதாக இருக்கவேண்டியதில்லை. வாய்மொழி வரலாறாக இருக்கலாம். வாய்மொழி வரலாறுகளே வரலாற்றின் முதல் வடிவங்கள். வரலாற்றை வாய்மொழி மரபாக நிலைநிறுத்தும் பாணர்கள் சூதர்கள் குலப்பாடகர்கள் [bards] போன்றவர்கள் தொன்மையான சமூகங்களில் உண்டு. எழுத்து வடிவ வரலாறும் எழுத்துவடிவ இலக்கியமும் வலுவாக உருவாகும்தோறும் அவர்கள் அழிந்தார்கள். பெரும்பாலான ஆப்ரிக்க சமூகங்களின் வரலாறுகள் இன்றும் வாய்மொழி வரலாறுகளே.
வரலாற்றை ஒருசமூகம் உருவாக்கிக் கொண்டபின் ஒருபோதும் அந்தத் தொடர்ச்சி அறுந்துபோகாது. ஏனென்றால் வரலாறென்பதே இறந்தகாலத்தை நிகழகாலம் வழியாக எதிர்காலத்துடன் இணைக்கும் ஒரு பெரிய சித்தரிப்புதான். தொடர்ச்சியை உருவாக்குவதே அதன் இலக்கு.
வரலாற்றின் நோக்கங்கள் மூன்று. ஒன்று, ஒருசமூகம் தன் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல். இரண்டு, அவ்வடையாளத்தின் அடிப்படையில் தன்னை மேலும் மேலும் தொகுத்து ஓர் அமைப்பாக நிலைநாட்டுதல். மூன்று, அந்த அடையாளமும் அமைப்பும் எதிர்காலத்திலும் நீடிக்க வகைசெய்தல்.
ஆகவே ‘நினைவில் நிறுத்துதலை’யே எந்த வரலாற்று உருவாக்கமும் முதல் பணியாகக் கொண்டுள்ளது. விளைவாக உருவாகிவிட்ட ஒரு வரலாறு அச்சமூகம் முற்றாக அழிந்துவிட்டாலும்கூட அழிந்துவிடாது, எங்கேனும் இருந்துகொண்டிருக்கும் என்று சொல்லலாம்.
அவ்வாறு ஒரு சுயஅடையாளத்தை ஒரு சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என எப்படி தெரிந்துகொள்வது? இரண்டு அடிப்படைகளை சுட்டிக்காட்ட முடியும்.
ஒன்று, அச்சமூகம் தன்னுடைய வாழ்விடத்துக்கு ஒரு நிலவியல் எல்லையை உருவாக்கிக் கொண்டிருக்கும். இந்த நிலப்பகுதியில் நாங்கள் வாழ்கிறோம் என்று அது தெளிவாக வரையறுத்திருக்கும். அந்த வரையறையை அந்த நிலத்தில் வாழும் அனைவரும் ஒப்புக்கொண்டிருப்பார்கள்.
இரண்டு, அச்சமூகம் தங்கள் அனைவருக்கும் பொதுவான சில பண்பாட்டுக்கூறுகளை வரையறைசெய்து வைத்திருக்கும். மொழி, மதம், இனம் போன்ற அடையாளங்களாக இருக்கலாம். சிலவகையான ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும்கூட இருக்கலாம்.
உதாரணமாக ஒரு பழங்குடிச்சமூகத்தை அணுகி அவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் இந்த இரண்டு பதில்களைத்தான் சொல்வார்கள். இன்னின்ன மலைகளில் வாழக்கூடியவர்கள் நாங்கள் என்பார்கள். இன்னின்ன பண்பாட்டு அடையாளம் கொண்டவர்கள் நாங்கள் என்பார்கள்.
இவ்விரு அடிப்படைகளைக்கொண்டு தன்னை ஒரு சமூகமாக ஒரு மக்கள்திரள் எண்ண ஆரம்பிக்கும்போது அந்தச் சமூகம் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். ஆகவே ஒரு சமூகத்தின் முதல் வரலாற்றுக்குறிப்பு எப்போது கிடைக்கிறதோ அதை அச்சமூகம் முழுமையாக உருவாகிவிட்டது என்பதற்கான பொதுஅறிவிப்பாக எடுத்துக்கொள்ளலாம்.
தமிழக வரலாற்றை எழுத ஆரம்பிக்கும்போது நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய முதல் கேள்வியே இதுதான். தமிழ்ச்சமூகம் எப்போது தன் சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டது? அதாவது தமிழ் வரலாறு எந்தப்புள்ளியில் ஆரம்பிக்கிறது?
சங்ககாலத்தின் தொடக்க காலத்திலேயே தமிழ்ச்சமூகம் தன்னுடைய நிலவியல் எல்லைகளை தெளிவாக வகுத்துக்கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரங்களை நாம் பல பாடல்களில் காண்கிறோம். இவ்வாறு தன்னுடைய நிலவியல் எல்லைகளை தமிழ்ச்சமூகம் எப்போது பதிவுசெய்ததோ அதையே தமிழக வரலாற்றின் தொடக்கமாக சொல்லலாம்
ஆனால் தமிழ்ச்சமூகத்தின் இந்த சுய அடையாளத்தில் மிகநுட்பமான ஒரு தனித்தன்மை உண்டு. அன்றைய தமிழ்ச்சமூகத்தின் மனதில் ஒரேசமயம் இரண்டுவகையான சுயஅடையாளங்கள் காணப்படுகின்றன. ஒன்று அந்த மக்கள் பாரதம் என்ற விரிந்த நிலப்பகுதியை தங்கள் பண்பாட்டின் உறைவிடமாக எண்ணியிருக்கிறார்கள். அந்நிலம் தங்களுக்குரியது, தாங்கள் அந்நிலத்தின் மக்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை ஏராளமான வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.
“தென்குமரி வடபெருங்கல்
குணக் குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய. (புறம் – 17)
என்ற புறநாநூற்றுப்பாடலில், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றிப் பாடும் குறுங்கோழியூர் கிழார் ஓர் நில எல்லையை அளிக்கிறார். தெற்கே குமரி, வடக்கே மாமலை. கிழக்கும் மேற்கும் கடல்கள் கொண்டது தங்கள் நாடு என. அந்த நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்கப்பட்டவன் என அம்மன்னனை சொல்கிறார்.
சிலர் இந்த வட எல்லையின் மலை எந்த மலை என்ற வினாவை எழுப்பக்கூடும். அதற்கு இன்னும் தெளிவான விடை புறநாநூற்றின் ஆறாவது பாடலில் உள்ளது. ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தைச் சேர்ந்த பாடல் இது.
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் (புறம் – 6)
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை காரிகிழார் பாடிய பாடல் இது. ஒருவேளை புறநாநூற்றின் மிகத்தொன்மையான பாடல் இதுவாக இருக்கலாம். இங்கே வடக்கே உள்ள மலை பனிபடர்ந்த பெரிய மலை என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப்பட்டதுமே தெற்கே குமரி சொல்லப்படுகிறது.
இப்பாடல்கள் தெளிவாகவே பாரதநாடு என்ற தேசத்தை நிலவியல்ரீதியாக வகுத்துவிடுகின்றன. அந்த நிலத்துமக்கள் தாங்கள் என்ற தன்னடையாளம் அக்காலத்தில் வலுவாகவே இருந்துள்ளது.
ஆனால் கூடவே தங்களை அந்த விரிந்த நிலப்பரப்பில் ஒரு தனியடையாளம் கொண்டவர்களாக சொல்லிக்கொள்வதையும் காணலாம். சங்கப்பாடல்களைக் கொண்டுபார்க்கும்போது பாரதநாடு என்ற நிலவியல் அடையாளமே பழையது என்று தெரிகிறது.
அதற்கும் சிலநூறுவருடங்களுக்குப்பின்னர்தான் அதற்குள் தங்களுடைய தனித்த நிலஅடையாளத்தை தமிழ்ச்சமூகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
சிலப்பதிகாரம் இவ்வகையில் முக்கியமானது. தமிழ்நில அடையாளத்தையும் தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்தையும் தெளிவாக வரையறுத்து முன்வைத்ததில் சிலப்பதிகாரத்தின் பங்கு முக்கியமானது. அக்காவியத்தின் அமைப்பே முடியுடை மூவேந்தர்களுக்கும் சம இடம் அளிப்பதாக அமைந்துள்ளது.
சிலப்பதிகாரம் தமிழ்நிலத்தை இவ்வாறு வரையறை செய்கிறது:
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு [வேனில்காதை]
வடக்கே நெடியோனாகிய திருமால் நிற்கும் வேங்கட மலை, கீழே தொடிவளை அணிந்த தென்குமரியின் கடல். நடுவே உள்ளது தமிழ்நன்னாடு என்கிறார் இளங்கோ.
இந்த நில அடையாளம் காலம்செல்லச்செல்ல மேலும் பரவலான அங்கீகாரம் பெற்றது என்பதை தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பனம்பாரனார்
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
என்று சொல்வதிலிருந்து காணலாம்.
தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்மொழியே இருந்துள்ளது என்பதை சிலப்பதிகார வரியும் பனம்பாரனாரின் வரியும் காட்டுகின்றன. ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற சொல்லாட்சி தமிழ்பேசப்படுவதனாலேயே இந்த நிலப்பகுதி தங்களுடையதாக ஆயிற்று என்று அன்றைய தமிழர் எண்ணியிருந்ததைக் காட்டுகிறது.
நிலம், மொழி என்னும் இவ்விரு சுயஅடையாளங்களும் உருவாகிவந்த காலகட்டத்தில் தமிழ் வரலாறு தொடங்குகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். பழந்தமிழ்நூல்கள் குறிப்பிடுவதுபோல திருப்பதிக்கு தெற்கே குமரிவரைக்கும் அரபிக்கடல்முதல் வங்காளவிரிகுடா வரைக்கும் விரிந்திருக்கும் நிலத்தை அந்த வரலாற்றின் களம் என்று வரையறை செய்யலாம். அதேசமயம் பழந்தமிழ்நூல்களின் வழியை பின்பற்றி அந்த தமிழ்நிலத்தின் வரலாறு விரிந்த இந்தியப்பெருநிலத்தின் வரலாற்றின் ஒரு பகுதியே என்ற தெளிவும் நமக்குத் தேவை.
தமிழக வரலாற்றை எழுதும் எந்த முயற்சியும் இவ்விரு கோணங்களிலும் முற்றிலும் சமநிலைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். இல்லையேல் அதற்கு எந்த அறிவார்ந்த மதிப்பும் இல்லை. தமிழக வரலாற்றை இந்தியாவின் பொதுவரலாற்றில் இருந்து பிரித்து அதன் விதிகளையும் இயங்குமுறைகளையும் தனியாக புரிந்துகொள்ளவும் வகுக்கவும் முயல்வது குறைபட்ட பார்வையையே உருவாக்கும்.
அதேபோன்று, தமிழ்நிலத்தின் தனித்தன்மையை முற்றிலும் பொருட்படுத்தாமல் இந்தியாவின் பொதுவரலாற்றின் ஒரு பகுதியாக மட்டுமே அதை ஆராய்வதும் போதாமையையே உருவாக்கும். இவ்விருவகைகளுக்கும் வரலாற்றாய்வுத்தளத்தில் முன்னுதாரணமாக அமையும் ஏராளமான நூல்கள் உள்ளன. சமநிலைப் பார்வைகொண்ட நூல்கள் மட்டுமே அனைத்து வரலாற்றுப் பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று அறிவுபூர்வமாக பொருந்திப்போகும் விரிந்த சித்திரத்தை அளிக்கமுடியும்.