வண்ணக்கடல் எழுதத் தொடங்கும்போது அதில் கிருஷ்ணனின் கதையும் வந்துவிடும் என்றே நினைத்தேன். வண்ணக்கடல் என்னும் தலைப்புக்கே அந்த நோக்கம் இருந்தது. ஆனால் அந்தக் கட்டமைப்புக்குள் கண்ணன் வரமுடியாது என்பது போகப்போகத் தெரிந்தது.
மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணனுக்கும் பாகவதத்தில் உள்ள கிருஷ்ணனுக்கும் ஏராளமான வேறுபாடுண்டு. மூலமகாபாரதம் கிருஷ்ணனின் இளமைலீலைகளை எல்லாம் விரிவாகச் சொல்வதில்லை. அதில் வரும் கிருஷ்ணன் கவிஞனும் ஞானியும் ராஜதந்திரியுமான யாதவஅரசன் மட்டுமே.
மகாபாரத காலம் முடிந்தபின்னர் இந்தியநிலத்தின் பெரும்பகுதி வெவ்வேறு யாதவ அரசுகளால் ஆளப்பட்டது. மகதம் எழும் வரை அந்த ஆதிக்கம் நீடித்தது. அக்காலத்தில்தான் கிருஷ்ணன் இறைவடிவமாக ஆக்கப்பட்டான். இந்திரனின் குணநலன்கள் பல கிருஷ்ணன் மேல் ஏற்றப்பட்டன. இந்திரன் வழிபாட்டில் இருந்து மறைந்தான். ராசலீலை முதலியவை இந்திரனுக்குரியவை. கிருஷ்ணனின் இளமைக்காலம் அவ்வாறு மெல்லமெல்ல பல்வேறு கதைகளில் இருந்து திரண்டு உருவாகி வந்தது.
பாகவதம், தேவிபாகவதம் மற்றும் புராணங்கள் மகாபாரதத்தின் தருணங்களையும், கதைமாந்தர்களையும் பலவகைகளில் விரிவாக்கம் செய்து எழுதப்பட்டவை. பாகவதம் அப்படித்தான் கிருஷ்ணனின் கதையை மிகவும் விரிவாக்குகிறது. மகாபாரதம் எழுதப்பட்ட காலத்துக்கும் பாகவதம் எழுதப்பட்ட காலகட்டத்துக்கும் நடுவே ஆயிரம் வருட இடைவெளி இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது கம்பனுக்கும் நமக்கும் இடையேயான தொலைவு. அந்த வேறுபாடு இருநூல்களின் கூறுமுறை, தரிசனம் ஆகியவற்றுக்கு நடுவே உண்டு.
ஆகவே மகாபாரத அழகியலைக் கொண்டு நோக்கினால் பாகவதத்தின் சித்தரிப்புகளை அதில் சேர்க்கமுடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு கிருஷ்ணனின் லீலைகள் மேல் ஒரு பெரும் பித்து உண்டு. அது ஜயதேவ அஷ்டபதியை இளமைமுதல் கேட்டதனால் உருவானது. அதைத் தவிர்க்க விரும்பவில்லை.
ஆகவே நீலம் என்ற சிறிய தனி நாவலை கிருஷ்ணனின் இளமைக்கால வாழ்க்கையை மட்டுமே சொல்வதாக எழுத எண்ணுகிறேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் நுழைவது துவாரகை அமைந்தபிறகு. அந்த கிருஷ்ணன் மகாபாரத அழகியலுக்கு ஏற்பவே இந்நாவல் வரிசையிலும் வருவான். இந்நாவல் தனித்த ஒரு இணைப்பாக கிருஷ்ணனின் இளமைக்காலத்தைச் சொல்லும். அழகியல் ரீதியாகவும் வெளியேதான் நின்றுகொண்டிருக்கும்.
இப்போது பயணத்தில் இருக்கிறேன். 15-ஆம்தேதி திரும்புவேன். 17-ஆம் தேதி தமிழினி வசந்தகுமாரின் மகன் திருமணம், மதுரையில். பதினெட்டுக்குப்பின்னரே எழுதமுடியும். ஆகவே 20-ஆம் தேதிமுதல் நீலம் தொடங்கும். வண்ணக்கடலை முடிக்காதாவர்கள் முடித்துவிடுங்கள். சந்திப்போம்!