காமமும் சாத்வீகமும்

ஜெ,

உங்கள் நண்பர் எம்.டி.முத்துக்குமார சாமி இப்படி எழுதியிருந்தார்

ஜெயமோகனின் இந்தக் கட்டுரை (‘முதலாற்றல்’ http://www.jeyamohan.in/?p=5239 ) சாத்வீகத்தை முதலாற்றலாக அடையாளம் காணத் தவறுகிறது. சாத்வீகத்தின் ஆற்றலை பரிசோதிப்பதையே கலையும் வாழ்வுமாய் கொண்டவனுக்கு அந்தரங்கங்கள் ஏது? சாத்வீக கவிதைகளும் யாருக்கும் பிடிப்பதாக தெரியவில்லை; சாத்வீக உறுதிப்பாடு எடுத்தபின்பு எனக்கு வரும் விகடதுன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

உங்கள் கட்டுரை மீதான இவ்விமர்சனத்துக்கு என்ன பதில் சொல்வீர்க்ள்?

கண்ணன்

pd3377642
அன்புள்ள கண்ணன்,

எம்.டி.எம் என் நண்பர் என் கோணத்தில்தான். அவர் அப்படி நினைக்கிறாரா என்று தெரியாதபட்சத்தில் உங்கள் சிறப்புக்குறிப்பு அவருக்கு சினம் அளிக்கக்கூடும். இந்துத்துவ- பிற்போக்கு- ஆணிய எழுத்தாளர் ஒருவரின் நட்பு அவரைப்போன்ற ஒருவருக்கு இழப்புகளை அளிக்கலாம் )))

எம்.டி.எம் என்ன பொருளில் சொல்கிறார் என்பதை அவர்தான் விளக்கவேண்டும் என்று தோன்றுகிறது. நான் சொல்வது இந்திய யோக – ஞான மரபின் முறைமைப்படியும் அதன்மீதான என் சொந்த அனுபவத்தின்படியும்தான்

நம் மரபில் முதல்விசை என்பது மூலாதாரம். அது காமமே. அங்கிருந்துதான் செயலாற்றலே தொடங்குகிறது. மூலாதாரம் ,சுவாதிட்டானம், மணிபூரகம்,அனாகதம்,விசுத்தி,ஆக்கினை, சகஸ்ரம் என்னும் ஏழு சக்கரங்களாக உடலில் இயங்கும் ஆற்றல்கள் உருவகிக்கப்பட்டிருக்கின்றன.

மூலாதாரத்தின் தெய்வம் படைப்புசக்தியாகிய பிரம்மன். அதன் மூலக்கூறு படைப்புப்பொருளாகிய அன்னம் [பூமி] அதிலிருந்தே ஆற்றல் தொடங்குகிறது. அந்த ஆற்றலே பிற ஆற்றல்களை எழுப்பி இறுதியில் சகஸ்ரம் நோக்கிச் செல்கிறது. அவ்வாறு இயல்பான படைப்பாற்றலை பிற ஆற்றல்களை எழுப்பும் விசையாக ஆக்குவதையே குண்டலினி என்கிறார்கள்.

ஆகவேதான் இந்து, பௌத்த யோக மரபுகளில் காமத்துக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது. அது ‘அடக்கப்பட’ வேண்டிய ஒன்றாக இம்மரபுகள் காணவில்லை. அது முதல் தீ. அங்கிருந்தே பிறவற்றுக்கு பற்றிக்கொள்ளவேண்டும்.

நான் அக்கட்டுரையில் குறிப்பிடுவது ஒன்றே. அக்கடிதம் எழுதியவர் அவரது அடிப்படை இச்சையை இழந்துவிட்டிருக்கிறார். வாழும் இச்சை. அதை பற்றவைப்பது மூலாதாரத்தின் விசையே.

இதை ஒவ்வொருவரும் அந்தரங்கமாக உணர்ந்திருப்பர். மனச்சோர்வில் பாலியல் அளவுக்கு ஊக்கமும் தேறுதலும் அளிக்கும் இன்னொன்று இல்லை. இங்குள்ள போர்ன் இணையதளங்கள் பெரும்பாலும் அதற்காகவே பார்க்கப்படுகின்றன.

சாத்வீகம் என்பது அங்கிருந்து நெடுந்தூரம் சென்று அடையப்படும் ஒன்று. அது இயல்பானது அல்ல, வென்றெடுக்கப்படவேண்டியது. முழுமையான சாத்வீகமே சகஸ்ரம் எனப்படுகிறது.

ஆம், அதன் ஆற்றல் எல்லையற்றது. ஆனால் அது முதலாற்றல் அல்ல, இறுதி ஆற்றல்.

ஜெ

முந்தைய கட்டுரைகர்ணனின் பெயர்
அடுத்த கட்டுரைஎம்.டி.எம் விளக்கம்