தீராத விளையாட்டுப் பிள்ளை

அன்புள்ள ஜெயமோகன்,

வெண்முரசின் மிகச்சிறந்த விஷயம் என்று நான் நினைப்பது யானைகளையும் குதிரைகளையும் பற்றிய வர்ணனைதான். எப்போதுமே நீங்கள் யானைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர். விஷ்ணுபுரத்தில் வரக்கூடிய அங்காரகன் என்ற யானைகளை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல வீரன் என்ற யானைகொல்லப்படும் இடமும் அற்புதமானது.

வெண்முரசு மகாபாரதத்தின் tragic gait ஐ நோக்கி போய்க்கொண்டிருப்பதனால் யானைகள் பெரிய கதாபாத்திரங்கள் கிடையாது. ஆனாலும் காலகீர்த்தி என்ற யானைத்தாய் கம்பீரமாகச் சாகும் இடம் ஒரு அற்புதம். உபாலன் இறந்து அதை புதைக்கும் இடமும் அதேபோல ஒரு மறக்கமுடியாத காட்சி. இப்போது அஸ்வத்தாமா என்ற யானை. அதன் வன்மத்தை மனிதர்களின் கோபத்தைவிட துல்லியமாக புரிந்துகொள்ளமுடிகிறது. கர்ணனின் குதிரைகளான உஷ்ணியும் ரஸ்மியும் கண்ணிலேயே நிற்கிறார்கள். யானைகளின் ஒவ்வொரு அசைவையும் சொல்லியிருக்கும் விதம் வெண்முரசின் ஒரு சாதனை

நாதன்

2011-12-15

அன்புள்ள நாதன்,

சிலநாட்களுக்கு முன்னால் திருக்கணங்குடி சென்றிருந்தோம். அங்கே ஒரு யானையைக் கட்டியிருந்தனர். நான் அதன்முன்னால் நின்றுவிட்டேன். யானை ஒரு சிறிய குச்சியை எடுத்து காதுக்குள் சொறிந்ததைக் கண்டு வியந்துவிட்டேன். பலமுறை பார்த்திருக்கிறேன். யானைகளால் கருவிகளை கையாள முடியும். ஆனாலும் அது அப்படிச் செய்வதைக் கண்டபோது உருவாகும் பரவசம் மகத்தானது.

குமரி மாவட்டத்தில் தென்பகுதியில் எப்படியும் யானைகளின் வ்சித்திரமான செய்கைகள் அடிக்கடி கண்ணில் பட்டுவிடும். லாரிமேல் சென்றுகொண்டிருந்த ஒரு யானை பக்கத்தில் போன லாரியின் ஒலிப்பானை – சும்மா ஒரு ஆர்வம்தான் — பிடுங்கி எடுப்பதை ஒருமுறை கண்டேன். ஒரு கல்யாணவீட்டில் பெரிய உருளியின் ஓரத்தை மிதித்து அதை கவிழ்த்து அதன்மேல் ஏறி நின்று அதை சப்பிய யானையை கொஞ்சநாள்முன் கண்டேன்.

யானை எத்தனை வயதாக இருந்தாலும் விளையாடும். பாறசாலைகோயிலில் இருந்த பழுத்து விவேகம் வந்த முதிய யானையான கேசவன் கீழே கிடக்கும் அரசிலைகளை பொறுக்கி வைத்திருக்கும் அருகே போனால் நம் மீது ஊதி விடும். அதன் முகத்தில் சிரிப்பு இருப்பதுபோலவே தோன்றும்.

யானையின் செயல்கள் வழியாக அதன் மனம் செயல்படுவதைப் பார்ப்பது பெரிய அனுபவம். நாம் பார்த்துக்கொண்டிருக்கையில் நாம் பார்ப்பதை யானை உணர்ந்திருக்கும்.சிலசமயம் கல்லையோ மட்டையையோ தூக்கி வீசிவிடும். அதன் பின்பக்கம் யாராவது வரும்போது செவிகளை மடித்து அது வருபவரை கேட்கும். துதிக்கையை பின்னால் சற்று திருப்பி அவரது வாசனையை உணரும்

நான் மணிக்கணக்காக யானைகள் முன் அமர்ந்திருக்கிறேன். புத்தகம் படிப்பது போல யானையை கவனித்திருக்கிறேன். எங்கள் ஊரில் நான்கு யானைக்குடிமக்கள் இருந்தார்கள். அன்று இளமையாக இருந்த கோபாலன் இப்போது நோயுற்று ஆனையடி எஸ்டேட்டில் சிகிழ்ச்சையில் இருக்கிறார்.

இவ்வுலகில் எனக்குப் பிரியமான இடங்களில் ஒன்று குருவாயூரின் யானைக்கொட்டில். ஒவ்வொரு யானையும் ஒரு குணச்சித்திரம் என்பதை உணர அங்கே பதினைந்து நிமிடம் இருந்தால் போதும்.

ஜெ

முந்தைய கட்டுரைஉடலைக் கடந்த இருப்பு
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 3