பகுதி பத்து : மண்நகரம்
[ 3 ]
காஞ்சனம் எழுவதற்கு முன்னரே நீராடி ஈரம் சொட்டிய குழலுடன் தருமன் அரண்மனை இடைநாழியின் கருங்கல்தளம் வழியாக நடந்து உப சாலைக்குள் சென்றான். அங்கே இலக்குப்பலகையில் அம்பு தைக்கும் ஒலி கேட்டது. அவன் உள்ளே நுழைந்தபோதுதான் துரோணர் வில்லை தாழ்த்தியிருந்தார். அவன் வருகையை அவர் அறிந்திருந்தாலும் பொருட்டாக எண்ணவில்லை. “நம் கையிலிருந்து எழும் அம்பு தன் தன்மையை ஒருபோதும் உணரலாகாது. நம் ஆன்மா அதனுடன் பறந்துகொண்டிருக்கவேண்டும்” என்றார். “காற்றில் பறக்கும் அம்பில் அந்த வில்லாளி வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பார்கள்” என்றபடி மான் தோலால் முகத்து வியர்வையை ஒற்றிக்கொண்டார்.
அர்ஜுனன் உடலெங்கும் வியர்வை வழிய வந்து அவர் பாதங்களைப் பணிந்தபின் வில்லை கொண்டுசென்று கொக்கியில் மாட்டினான். “முன்பு ஒரு கதை சொல்வார்கள். வில்லில் இருந்து அம்பைத் தொடுத்த வில்லாளி ஒருவனின் தலையை அக்கணமே ஒருவாள் கொய்தெறிந்தது. அந்தத் தலை கொய்யப்பட்ட கணம் தீயது. விண்ணகம் கொண்டுசெல்லாதது. அம்பு மேலும் பல கணங்கள் கழித்துத்தான் இலக்கை எட்டியது. அந்தக்கணம் மிக உயர்ந்தது. அவ்வீரனின் இறப்பை அம்பு தைத்த கணத்தைக்கொண்டே மதிப்பிடவேண்டும், அவன் விண்ணகம் செல்வான் என்றனர் நிமித்திகர். அதை அவர்கள் மூதாதையரை அழைத்து சொல்தேர்ந்து வினவியபோது, ஆம் ஆம் ஆம் என்றது இறப்புக்கு அப்பால் இருந்த மூதாதையரின் பெருவெளி…”
தருமன் துரோணரை வணங்கினான். அவர் மெல்லிய தலையசைப்பால் அவ்வணக்கத்தை ஏற்றுக்கொண்டு மேலும் பேசினார். “வில்லாளியின் ஆன்மா விண்ணுலகுக்குச் செல்வது ஓர் அம்பின் வடிவில் என்கின்றன நூல்கள். நிறைவடைந்த போர்வீரனின் ஆன்மா வெண்ணிறமாக எழுகிறது. சினம் எஞ்சியிருக்க இறந்தவன் செந்நிறத்தில் எழுகிறான். வஞ்சம் எஞ்சியிருப்பவன் கரிய சிறகுள்ள அம்புகளாக எழுகிறான். வில்லாளி வில்லில் இருந்து தொடுக்கப்பட்டுவிட்ட அம்பு. அவனுடைய இயல்பான முடிவை நோக்கி அவன் சென்றுகொண்டிருக்கும் காற்றுவெளியே ஊழ் எனப்படும்.”
அவர் அர்ஜுனனிடம் பேசும்போது தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதாகவே தருமன் எண்ணிக்கொள்வான். சொற்களாக மட்டுமே அவர் அங்கிருப்பதாகத் தோன்றும். இத்தனை வருடங்களில் விழித்திருக்கும் கணமெல்லாம் அவர் அவனுக்கு கற்பித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் முதன்மையான எதையோ விட்டுவிட்டதுபோல இறுதிக்கணத்தில் விரைந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். தருமன் புன்னகை செய்தான். களத்தில் அவன் தோற்றுவிடுவான் என்றா அவர் எண்ணுகிறார்?
ஆனால் துரோணர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டபோது அவர்கள் இருவர் நெஞ்சிலும் அன்றைய களம் பற்றிய எண்ணமே இல்லை என்று தருமன் உணர்ந்தான். “எந்த வில் தொடுத்தாலும் அம்புக்கு வானில் ஓர் எல்லை உள்ளது. அந்த எல்லை மானுடனுக்கு பிரம்மம் அளித்தது. வில்வேதம் சொல்கிறது, மும்மூர்த்திகளின் அம்புகளுக்கும் எல்லை உண்டு என. எல்லையற்ற அம்பு என்பது பிரம்மமே. ஏனெனில் அது தன்னைத் தானே அம்பாக்கி தொடுத்துவிட்டிருக்கிறது.”
அஸ்வத்தாமன் அணிக்கோலத்தில் வந்து நின்றான். துரோணர் அவனை நோக்கியபடி “ஆம், இன்று களம்புகுதல் அல்லவா? நீ அணிக்கோலம் பூணவேண்டும்” என்று சொல்லி குனிந்து நிலம்தொட்டு வணங்கி அர்ஜுனன் தலையைத் தொட்டு “புகழுடன் இரு” என்று வாழ்த்தியபின் நடந்து சென்றார். அஸ்வத்தாமன் தருமனை நோக்கி மிகுந்த முறைமையுடன் தலைவணங்கி தந்தையுடன் சென்றான்.
தருமன் அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்துகொண்டான். கச்சையை அவிழ்த்தபடி அர்ஜுனன் “மூத்தவரே, தங்கள் அகம் நிலையழிந்திருக்கிறதென எண்ணுகிறேன்” என்றான். “நான் நேற்று முழுக்க துயில்கொள்ளவில்லை” என்றான் தருமன். “ஏன்?” என்று அர்ஜுனன் இயல்பாக கேட்டான். “என் உள்ளுணர்வு சொல்கிறது, இந்தப் பயிற்சிக்களம் என்றோ எங்கோ ஒரு பெரும் போர்க்களமாக ஆகப்போகிறது என்று. தம்பி, ஆயுதங்களுக்கு தங்களுக்கென ஒரு திட்டம் உண்டு என்று எனக்கு படுகிறது. அவை தங்களுக்குள் குரலின்றி உரையாடிக்கொள்கின்றன. அவை நமக்குள் குரோதங்களையும் பேராசைகளையும் ஐயங்களையும் நிரப்புகின்றன. நம்மை ஒரு பெரிய சமர்களம் நோக்கி மௌனமாக இட்டுச்செல்கின்றன.”
“தத்துவத்தில் இருந்து நீங்கள் கவிதை நோக்கி வந்து விட்டீர்கள் மூத்தவரே” என்றபடி அர்ஜுனன் உச்சியில் குடுமியாகக் கட்டியிருந்த குழலைக் கலைத்து தோளில் பரப்பிக்கொண்டான். சால்வையை எடுத்துப் போட்டுக்கொண்டு “நான் நீராடச் செல்கிறேன்” என்றான். “தம்பி, உண்மையிலேயே உனக்குத் தெரியவில்லையா? இங்கே நிகழவிருப்பது வெறும் பயிற்சிதானா? அதற்கு ஏன் இத்தனை வன்மம்? என்னைப்பார்த்துச் சொல், சுயோதனனின் கண்களைச் சந்தித்து பேசமுடிகிறதா உன்னால்?”
அர்ஜுனன் சினத்துடன் திரும்பி “ஆம், எந்தப் பயிற்சியும் போர்தான். அதை அறியாத ஷத்ரியன் இல்லை. ஆனால் இந்தப்பயிற்சியில் அவர்களுக்கு ஒன்று தெரிந்துவிடும். நம் வல்லமைக்கு முன்னால் அவர்கள் எதிர்நிற்க முடியாது. அப்படி ஒரு கனவு அவர்களிடமிருக்கும் என்றால் அது இன்று மாலையோடு கலைந்து விடும்” என்றான். “தங்களுக்கு படைக்கலம் என்றாலே என்ன என்று தெரியவில்லை மூத்தவரே. ஆகவேதான் அஞ்சுகிறீர்கள். தங்கள் நெஞ்சில் இருப்பது எந்த அறக்குழப்பமும் அல்ல. வெறும் அச்சம் மட்டுமே.”
பெருமூச்சுடன் தருமன் தலைகுனிந்து மண்ணைப் பார்த்தான். “என் வில்லிலும் பீமசேனரின் தோளிலும் ஐயம் கொள்கிறீர்களா அண்ணா?” என்றான் அர்ஜுனன். தருமன் நிமிர்ந்து “இல்லை தம்பி. உங்களுக்கிணையாக அவர்கள் தரப்பில் எவருமே இல்லை என்று நான் அறிவேன். ஆனால்…” அர்ஜுனனின் கண்களைப் பார்த்து சஞ்சலம் கொண்டு தவித்த கண்களுடன் தருமன் சொன்னான் “நான் அஞ்சுவது தோல்வியை அல்ல. இறப்பையும் அல்ல. ஆயுதங்களைத்தான் நான் அஞ்சுகிறேன் தம்பி. அவை மனிதன் மீது படர்ந்திருக்கும் பாதாளத்தின் ஆற்றல் என்று தோன்றுகிறது.”
நடுக்கமோடிய குரலில் தருமன் சொன்னான் “இரும்பு எத்தனை குரூரமான உலோகம்! மண்ணின் ஆழத்தில் இருந்து அது கிளம்பி வருகிறது. எதற்காக? அதன் நோக்கம்தான் என்ன? இத்தனை வருடங்களில் அந்த உலோகம் குடித்த குருதி எத்தனை ஏரிகளை நிறைக்கப்போதுமானது!” அவன் குனிந்து தன் தலையைப் பிடித்துக்கொண்டான். “என் அகம் நடுங்கிவிட்டிருக்கிறது இளையவனே. மனிதனை ஆள்வது விண்ணின் ஆற்றல்கள் அல்ல. மண்ணின் ஆழத்தின் வன்மமான இரும்புதான். வேறெதுவும் அல்ல. அதுதான் வரலாற்றை தீர்மானிக்கிறது. தர்ம அதர்மங்களை வரையறை செய்கிறது.”
“நீங்கள் சற்று பழரசம் பருகி ஓய்வெடுக்கலாம்” என்றான் அர்ஜுனன் சிறிய ஏளனத்துடன். “இந்த அச்சத்துக்குள் இருப்பது உங்கள் விழைவுகள் மட்டுமே. உள்ளூர நீங்கள் துரியோதனனை அஞ்சுகிறீர்கள். உங்கள் அரியணையை அவனிடமிருந்து பெறமுடியாமலாகுமோ என்ற ஐயம்…” தருமன் புண்பட்டு “இளையவனே!” என்றான். அர்ஜுனன் அதை கவனிக்காமல் “நீங்கள் அதை மறைக்க வேண்டாம் மூத்தவரே. ஆழத்தின் இச்சைகள் மீதுதான் நாம் அதிகமான சொற்களைப் போடுகிறோம். இன்று பயிற்சிக்களத்திற்கு வாருங்கள். என் அம்புகளின் ஆடலை கவனியுங்கள். உங்கள் அச்சம் இன்றோடு விலகும்” என்றான்.
அர்ஜுனன் செல்வதை பொருளற்று பார்த்துக்கொண்டிருந்த தருமன் பெருமூச்சு விட்டான். அரண்மனைமுகப்பில் காஞ்சனம் ஒலித்தது. பெருமுரசொலி வழியாக உருண்டு உருண்டு நெருங்கி வந்த காலத்தை அவன் அச்சத்துடன் கண்டான். இடைநாழி வழியாக தவிப்புடன் நடந்துசென்று தன் அறைக்குள் நுழைந்தான். பட்டுநூலில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஏடுகளை பொருளின்றி புரட்டிக்கொண்டிருந்தபின் எழுந்து சென்று சதுரங்கப்பலகையை விரித்துக்கொண்டு காய்களைப் பரப்பி தனக்குத்தானே ஆட ஆரம்பித்தான். ஆட்டவிதிகள் வரையறை செய்யப்பட்ட இந்த ஆட்டம் வெளியே உள்ள மகத்தான சதுரங்கத்தில் இருந்து என்னை மீட்கிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். தன்னைத்தானே இருமுறை வென்றபோது அவன் முகத்தில் மெல்லிய புன்னகை விரிந்தது.
புலரிக்கான முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. தொலைவில் களமுற்றத்தின் பெருமுரசம் முழங்க ஆரம்பித்தது. அரண்மனையின் பெருமுற்றத்தில் காத்து நின்றிருந்த ரதங்களில் ஏறி ஒவ்வொருவராக களம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். முதலில் சேவகர்கள். பின்னர் அதிகாரிகள். பின்னர் அமைச்சர்கள். பின்பு அரசகுலப்பெண்டிர். இறுதியாக குருகுலத்து இளவரசர்கள் சென்றனர். தருமன் செம்பட்டாடையும் இளமஞ்சள் மேலாடையும் மகர கங்கணமும் தோரணமாலையும் அணிந்து முற்றத்துக்கு வந்தான். உள்ளிருந்து விதுரர் இரு அமைச்சர்களும் பார்கவரும் உடன் வர மெல்லிய குரலில் உரையாடியபடியே வந்தார். தருமன் அவரை தலை வணங்கியபோது “எங்கே பீமனும் அர்ஜுனனும்?” என்றார். தருமன் “பீமன் நீராடிவிட்டு சற்று முன்னர்தான் வந்தான். அர்ஜுனன் இதோ வந்துவிடுவான்” என்றான்.
“பீமன் இரவு ஓய்வெடுத்தானா?” என்றார் விதுரர். தருமன் பேசாமல் நின்றான். “படைக்கலப்பயிற்சியும் எடுத்திருக்கமாட்டான். அடுமனையில் இருந்திருப்பான்” என்றார் விதுரர் சுருங்கிய கண்களுடன். “ஆம், அமைச்சரே. அவனை எவரும் வழிநடத்தமுடியவில்லை” என்றான் தருமன். “அவர் மாருதர். காற்றை எவர் வழிநடத்தமுடியும்?” என்று பார்கவர் சொல்ல விதுரர் சினத்தில் சுருங்கிய முகத்துடன் அவரை நோக்கிவிட்டு “இன்று நிகழவிருப்பது பயிற்சி அல்ல, போர்” என்றார்.
பீமன் இடைநாழி வழியாக நீர்த்துளிகள் பரவிய பேருடலுடன் எந்த அணிகளும் இல்லாமல் புலித்தோலாலான அந்தரீயம் மட்டும் அணிந்து வந்தான். அவனை எதிர்பாராத வீரர்களும் சூதர்களும் பதறி வாழ்த்தொலி எழுப்ப முயல அவன் கைகாட்டி நிறுத்தி “கிளம்புவோமே” என்றான். “மந்தா, நீ அணிகலன்கள் அணியவேண்டாமா?” என்றான் தருமன். “மூத்தவரே, நடக்கவிருப்பது மற்போர்… அதற்குரிய ஆடைகளை அணிந்திருக்கிறேன்…” என்றபின் சிரித்து “எனக்கும் சேர்த்து பெரியதந்தையார் அணிகலன்கள் சூடியிருக்கிறார்” என்றான்.
வாழ்த்துக்களும் மங்கல இசையும் எழ அர்ஜுனன் விரைந்து வந்தான். இளநீலப் பட்டாடையும் அணிகளில் ஒளிவிட்ட நீலவைரங்களுமாக அவன் விண்மீன்கள் செறிந்த வானம் என தோன்றினான். விதுரர் “களமுரசு ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நகரத்தெருக்களெங்கும் மக்கள் நெரிகிறார்கள். உடனே கிளம்பினால் மட்டுமே சென்றுசேரமுடியும்” என்றார். முற்றத்தில் குந்தியின் மூடுரதம் நிற்பதைக் கண்டதும் விதுரர் சற்று தயங்கி நின்றார். இடைநாழியில் வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் கேட்டன. நகுலனும் சகதேவனும் மஞ்சள்பட்டாடையும் மணிநகைகளுமாக ஓடிவந்து பீமன் மேல் பாய்ந்து கட்டிக்கொண்டனர். “மூத்தவரே, நான் இன்று வாட்போரிடப்போகிறேன்…” என்று நகுலன் கூவினான். “ஆம், நான் வாட்போர்! நானும் வாட்போர்” என்றான் சகதேவன். அப்பால் குந்தி வருவதைக் கண்டு விதுரர் தலைவணங்கி நின்றார்.
வெண்ணிற ஆடையால் முகம் மறைத்த குந்தி வந்து நின்றபோது தருமன் அருகே சென்று தலைவணங்கி “களம்புகவிருக்கிறோம் அன்னையே, வாழ்த்துங்கள்” என்றான். குந்தி தன் கையை அவன் தலைமேல் வைத்து “பீடு பெறுக!” என்று வாழ்த்தினாள். பீமனும் அர்ஜுனனும் அவளை வணங்கினர். அவள் மூடுரதத்தில் ஏறிக்கொண்டதும்தான் விதுரர் தலையைத் தூக்கினார். ரதம் கிளம்பிச்சென்றதும் விதுரர் ஊழ்கத்தில் இருந்து விழித்தவரின் முகத்துடன் மெல்லிய குரலில் “நாமும் செல்வோம்” என்றார்.
ஐவரும் ஒரே ரதத்தில் நகரத்தெருக்கள் வழியாகச் சென்றனர். தெருக்களெங்கும் ததும்பிய கூட்டம் அவர்களைக் கண்டு கைகளை விரித்து எம்பிக்குதித்து ஆர்ப்பரித்து வாழ்த்தொலி எழுப்பியது. வாழ்த்தொலிகளும் முழவொலியும் முரசொலியும் சேர்ந்து அலையடிக்க அதன் மேலேயே ரதம் ஊசலாடிச்செல்வது போலிருந்தது. அப்பால் செம்மண் விரிந்த களமுற்றம் கண்ணில் பட்டதுமே தருமன் உடல் சிலிர்த்தது. புதுநிலம் கண்ட புரவி போல அவன் தயங்கி பின்னால் நகர அர்ஜுனன் அவன் தோளை மெல்லத் தொட்டு “தலைநிமிர்ந்து செல்லுங்கள் மூத்தவரே, அஸ்தினபுரத்தின் அதிபர் யாரென இன்று தெரிந்துவிடும்” என்றான். களம் மாபெரும் குருதிக்குளமென தருமனுக்குத் தோன்றியது. அதற்கு மக்கள்திரளால் கரை அமைந்திருந்தது.
நீள்வட்டமாக விரிந்திருந்த களத்தின் மேற்கு எல்லையில் கிழக்கு நோக்கி பொன்மூங்கில்களாலும் மரப்பட்டைகளாலும் அமைக்கப்பட்டு பட்டுத்திரைகளாலும் பாவட்டாக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அரசமண்டபத்தின் நடுவே இருந்த அரியணையில் வேதகோஷங்கள் முழங்க வாழ்த்தொலிகள் அதிர, திருதராஷ்டிரர் வந்து அமர்ந்ததும் அரங்கவெளியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் மேடைகளிலிருந்து வாழ்த்தொலிகள் பொங்கி எழுந்தன. மலர்களும் மஞ்சளரிசியும் அலைகளாக எழுந்து அரியணைமேல் பொழிந்தன. திருதராஷ்டிரருக்கு இடப்பக்கம் சகுனி அமர்ந்துகொள்ள பின்புறமாக சஞ்சயன் நின்றான். வலப்பக்கம் பீஷ்மர் வெண்தாடியுடனும் பொற்சரிகை வேலைப்பாடுகள் செய்த தூய வெள்ளாடையுடனும் வந்து அமர்ந்தார். அவருக்கு அப்பால் விதுரருக்கும், பிற அமைச்சர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
சற்று அப்பால் பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த தனி மண்டபத்தில் அரசியாகிய காந்தாரியும் அவளைச்சூழ்ந்து காந்தாரத்து அரசியரும் அமர்ந்தனர். வெண்திரையால் முகத்தை மூடிக்கொண்ட குந்தி அரசியர் மண்டபத்தின் வலது ஓரத்தில் அமர்ந்தாள். அவளருகே மாலினி நின்றிருந்தாள். இரு மண்டபங்களுக்கும் நடுவே இருந்த பெரிய பந்தலில் களம் காணும் இளவரசர்களும் அவர்களின் சேவகர்களும் நின்றிருந்தனர். துரோணர் இறுதி ஆணைகளை அளித்துவிட்டு கிருபருடன் மேலேறிச்சென்று அரங்கபூசனைமேடைமேல் நின்றார். ஒவ்வொருவரையும் மக்கள் திரள் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றது. மக்களின் ஒலிகளைக்கேட்டு மகிழ்ந்த திருதராஷ்டிரர் இரு கைகளையும் கூப்பியபடி மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்.
சங்குகளும் முரசுகளும் அதிர்ந்து அமைதிகொள்ள நிமித்திகன் ஒளிரும் செம்பட்டுத் தலைப்பாகையும் மஞ்சள் ஆடையும் அணிந்தவனாக எழுந்து கோல்பீடத்தில் ஏறி உரத்த குரலில் “ஜய விஜயீபவ! மங்கலம் நிறைக!” என்றான். “சந்திரனின் மைந்தரும், மாமன்னர் ஹஸ்தியின் கொடிவழி வந்தவரும் குருகுலத்துத் தோன்றலும் மாமன்னர் விசித்திரவீரியரின் மைந்தரும் அஸ்தினபுரத்தின் மாமன்னருமாகிய திருதராஷ்டிரரை இந்த பாரதவர்ஷமும் என்னைப்போல் சிரம் பணிவதாக!” என்றான். வாழ்த்தொலிகள் எழுந்து அமைந்தன. பீஷ்ம பிதாமகரையும், சகுனியையும் வாழ்த்தியபின் அரங்குக்கு வந்திருந்த குடிமக்களுக்கு வாழ்த்து சொன்னான். “இங்கே எங்கள் இளவரசர்களைப் பயிற்றுவித்து போர்வீரர்களாக ஆக்கியிருக்கும் முதற்குருநாதர்களான கிருபரையும் துரோணரையும் எங்கள் சிரங்கள் பாதம் தொட்டுப் பணிவதாக!” என்று அவன் சொன்னபோது கூட்டம் ஆமோதித்து குரலெழுப்பியது. படைக்கலக்கல்வியில் முழுமையடைந்த குருவம்ச இளவரசர்களின் திறனை குடிகள் அனைவரும் காண அவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தான். “தேவர்களும் மூதாதையரும் வந்து சூழ்க! மண்மறைந்த வீரர்கள் அனைவரும் வந்து விழியாகி நிற்கட்டும். நம் இளையோர் வீரத்தால் இம்மண்ணை, இக்கணத்தை, இனிவரும் காலங்களை அணிசெய்யட்டும்!”
“அவையோரே. மூன்றுவயதுமுதல் பிரம்மசரியக் கங்கணம் கட்டி, குலத்தையும் குடியையும் உற்றாரையும் உறவுகளையும் துறந்து ஆசிரியர் அடிகளில் அமர்ந்து அவர்கள் கற்ற கல்வி இன்று நிறைவுறுகிறது. நாளை கொற்றவை ஆலயத்தின் முகப்பில் நிகழும் பூசனையில் அவர்களுக்கு வீரகுண்டலங்களும் படைக்கச்சைகளும் முதற்பேராசிரியராகிய துரோணரால் வழங்கப்படுகையில், அஸ்தினபுரியை ஆளும் மாவீரர்களின் அடுத்த தலைமுறை எழும். அவர்களின் படைக்கலங்கள் இங்கு அறம் துலங்கச்செய்யும். செல்வம் பெருகச்செய்யும். இன்பம் நிலைக்கச்செய்யும். ஆம், அவ்வாறே ஆகுக!” கூடியிருந்த பெருங்கூட்டம் ‘ஆம்! ஆம்! ஆம்!’ என்று ஒலியெழுப்பியது.
திருதராஷ்டிரர் கையசைத்ததும் பெருமுரசம் மீண்டும் முழங்கி அமைந்தது. கிருபரின் களத்தின் ஆசிரியரான சுசரிதர் களத்துக்கு வந்து “அவையினரே, இங்கு மூப்புமுறைப்படி குருபூசனையுடன் படைக்கலப்பயிற்சியை தொடங்குகிறோம். வாழ்க!” என்று சொல்லி கையசைத்தார். தருமன் குடிமக்களின் வாழ்த்தொலிகள் அதிர களத்துக்கு வந்து, அரங்கின் தென்மேற்கு மூலையில் கொற்றவையைக் குடியமர்த்தியிருந்த அரங்க பூசனை மேடை மீது வெள்ளையாடையும் வெண்ணிறமான தாடியுமாக நின்ற துரோணரை அணுகி அவரது பாதங்களில் செம்மலர்களை அள்ளிப் போட்டு மும்முறை வணங்கினான். அவர் அவனை வாழ்த்தி நெற்றியில் கொற்றவையின் குருதிக்குறியை தொட்டணிவித்தார். கிருபரையும் வணங்கி வாழ்த்துபெற்று அவன் இறங்கிவந்து நின்றான்.
துரியோதனன் வணங்கியபடி களத்தில் நுழைந்தபோது கடலோசைபோல இடையறாது கேட்ட வாழ்த்தொலிகள் தொடர்ந்து துச்சாதனனும் விகர்ணனும் அரங்குக்கு வந்தபோதும் வேகம் தாழாமல் முழங்கின. ஆனால் தோலாடை மட்டும் அணிந்தவனாக பீமன் அரங்குக்கு வந்தபோது பிற எவருக்குமே எழாத அளவுக்கு வாழ்த்தொலி முழக்கங்கள் கேட்டன. களிவெறி கொண்ட நகரத்து இளைஞர்கள் மலர்களை வானில் வீசியபடி எழுந்து நின்று கைவீசி ஆர்ப்பரித்தனர். அர்ஜுனன் நுழைந்தபோது பெண்கள் கூட்டத்திலும் மகிழ்ச்சிக் குரல்களும் ஆரவாரச் சிரிப்புகளும் ஒலித்தன.
துரியோதனன் கண்கள் பீமனின் உடல்மேலேயே நிலைத்திருந்ததை தருமன் ஓரக்கண்ணால் கவனித்து திரும்பியபோது அர்ஜுனனின் பொருள்பொதிந்த புன்னகைத்த கண்கள் அவனை வந்து தொட்டன. நிமித்திகன் ஒவ்வொரு இளவரசனாக அறிமுகம் செய்து முடித்ததும் திருதராஷ்டிரர் கையை அசைக்க போர் முரசங்கள் முழங்கின. அரங்கில் மெல்ல ஒலிகள் அடங்கி அமைதி பரவியது. கொடிகளும் தோரணத்துணிகளும் காற்றிலாடும் ஒலி மட்டும் குதிரைகள் நாக்கைச்சுழற்றுவதுபோலக் கேட்டது.
முதலில் விகர்ணனும் மகாதரனும் புரிந்த கதைப்போர் அஸ்தினபுர வீரர்களுக்கு வெறும் குழந்தை விளையாட்டாகவே இருந்தது. சிரித்தபடி அவர்களை குரல்கொடுத்து ஊக்கினார்கள். பிறகு சகதேவனும் துர்முகனும் வேல்களால் போர் புரிந்தார்கள். நகுலனும் தனுர்த்தரனும் வாள்களுடன் அரங்குக்கு வந்தபோது பார்வையாளர் மத்தியில் விளையாட்டுமனநிலை அடங்கி ஆர்வம் பரவியது. தனுர்த்தரன் உயரமான மெல்லிய உடலும் நீண்ட கரங்களும் கொண்டவன். வாட்போரில் அது எப்போதுமே உகந்தது. நகுலன் அழகிய சிறுவன் போலிருந்தான். அந்தக் காரணத்தினாலேயே போரில் யார் வெல்லவேண்டுமென பார்வையாளர் உடனடியாக முடிவெடுத்துவிட்டதாகப் பட்டது. இருவரும் கூர்ந்த பார்வைகள் எதிரியை அளவிட சுற்றிச் சுற்றி வந்தனர். கொத்த யத்தனிக்கும் நாகங்கள் போல வாள்நுனிகள் நீண்டும் பின்வாங்கியும் அசைந்து ஒரு கணத்தில் கணீரென்ற ஒலியுடன் மோதிக் கொண்டன.
இரு பாம்புகளின் சண்டை போலிருந்தது அது. பாம்புகளின் நாக்குகள் போல வாள்கள். அவர்களின் மெல்லிய உடல்கள் மென்மையான கூரிய அசைவுகளுடன் நடனம் போல ஒருவர் அசைவுக்கு மற்றவர் அசைவு பதிலாக அமைய சுழன்று வந்தன. மெதுவாக தனுர்த்தரனின் விரைவு ஏறி ஏறி வர, நகுலன் மூச்சு சீற பின்வாங்கியபோது தனுர்த்தரனின் வாள்நுனி அவன் தோள்களில் கீறிச்சென்றது. நகுலனின் கரியநிறத்தோளில் ஒரு சிவந்த கோடு விழுந்து உதிரம் ஊறி மார்பில் வழிந்ததைக் கண்ட கூட்டம் வருத்தஒலி எழுப்பியது.
தன் குருதியைக் கண்ட நகுலன் சீறி முன்சென்று வெறியுடன் தாக்க ஆரம்பித்தபோது தனுர்த்தரனின் கரம் தளர்ந்து அவன் வாள் பலமுறை நகுலனின் வாளில் பட்டு தெறித்து விலகியது. நகுலன் வெகுவாக முன்னேறிச் செல்வதைக் கண்ட கூட்டம் ஆரவாரித்தது. நகுலனின் வாள் தனுர்த்தரனின் வாள்கரத்தை எட்ட முயன்ற ஒரு கணத்தில் என்ன நடந்தது என எவருமறியாதபடி நகுலனின் வாள் தெறித்து ஒளியுடன் சுழன்று சென்று மண்ணில் விழுந்தது. தனுர்த்தரனின் வாள் அவன் கழுத்தை தொட்டு நின்றது.
மேலாடையால் முகத்தைத் துடைத்தபடி அரங்கை விட்டு இறங்கும்போது தனுர்த்தரன் ”உன் உதிரத்தை உன் அகம் நோக்கிய அக்கணமே நீ தோற்றுவிட்டாய்” என்றான். நகுலன் ”ஆம் அண்ணா, என்னை மறந்துவிட்டேன்” என்றான். சுசரிதர் அருகே வந்து “வாளுடன் அரங்கில் நின்ற முதற் கணமே உன் தோல்வி தீர்மானிக்கப்பட்டுவிட்டது நகுலா” என்றார். “அவன் உன் கண்களை மட்டுமே பார்த்தான். உன் பார்வையோ அவன் வாளில் இருந்தது.”
தொடர்ந்து இளம் கௌரவர்களின் கதைப்போர்கள் நடந்தன. அவர்கள் அனைவரும் ஒருவரைப்போல ஒருவர் இருந்தமையால் ஆடிப்பாவைகளே போர்புரிவதாகத் தோன்றியது. அக்காரணத்தாலேயே எவருடைய வெற்றியையும் முன்னரே சொல்லமுடியவில்லை. வெற்றிபெற்றவனும் தோற்றவனும் இணைந்து சென்று துரோணரையும் கிருபரையும் வணங்கி வாழ்த்துபெற்று பந்தலுக்கு மீண்டனர். பந்தலிலேயே உணவருந்தியபடி அவர்கள் அமர்ந்திருக்க இடைவெளியே இல்லாமல் போர்ப்பயிற்சி நடந்தது. கூடியிருந்த கூட்டம் அக்காரப்பானகத்தையும் இன்கள்ளையுமே உணவாகக் கொண்டு புயல் காற்றில் பறக்கும் கொடிகளைப்போல ஒருகணமும் துவளாமல் துடித்துக்கொண்டிருந்தது.
பீமன் களத்துக்கு வந்தபோது அவைக்களமெங்கும் முழுமையான அமைதி ஏற்பட்டது. அத்தனை விழிகளும் துரியோதனனை நோக்கின. துரியோதனன் மெல்ல தன் நகைகளைக் கழற்றி தம்பியர் கையில் தந்துவிட்டு தனக்கென கலிங்கநாட்டு சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய கதையை கையில் எடுத்துக்கொண்டான். கிருபரின் பார்வையைச் சந்தித்த துரோணர் தலையசைக்க கிருபர் கைகளைத் தூக்கி “இளையபாண்டவருக்கும் இளைய கௌரவராகிய துச்சாதனருக்கும் இப்போது கதைப்போர் நிகழும்” என்றார். துரியோதனன் திகைத்து கைகளைத் தூக்க கிருபர் அவன் விழிகளை நோக்கி “இது களத்துக்கு ஆசானாகிய என் ஆணை” என்றார். துரியோதனன் தன் கதையை தாழ்த்தினான். துச்சாதனன் அவனை நோக்கி அசைவில்லாமல் நிற்க பெருமூச்சுடன் துரியோதனன் கதையை துச்சாதனன் கையில் கொடுத்தான்.
பீமன் தன் அருகே நின்ற மகாபாகுவின் கதையை வாங்கி ஒருமுறை சுழற்றிப்பார்த்துவிட்டு அரங்கிலேறினான். பெரிய கரங்களில் கலிங்க கதாயுதத்துடன் துச்சாதனன் அரங்கிலேறி அவன் முன் நின்றான். முதலில் ஆர்வமழிந்து குரல் கலைந்த அவையினர் துச்சாதனன் உடலையும் அவன் கையில் சிறு பாவைபோலிருந்த கனத்த கதையையும் கண்டதும் மீண்டும் எழுச்சி கொண்டனர். பேச்சொலிகளும் பேசுபவர்களை அதட்டும் ஒலிகளும் எழுந்தன.
இருவரும் நிலம் தொட்டு வணங்கி கதைகளை நீட்டியபடி களம் நடுவே நின்றனர். காட்டில் உடலெல்லாம் மண்ணை அள்ளிப்பூசி ஒளிரும் சிறு கண்களுடன் கனத்த பாதங்கள் தூக்கிவைத்து கரிய பெருந்தசைகள் திமிறி அதிர மோதிக் கொள்ளும் கொம்பன் யானைகள் போல அவர்கள் சுற்றி வந்தார்கள். யானை முகத்து மதம் போல அவர்கள் உடலிலிருந்து வியர்வை வழிந்தது. தருமன் இருவரின் தோள்களின் தசைநெளிவை மட்டும் நோக்கியபடி கைகளை மார்பில் கட்டி நின்றான். சுழற்சியின் ஒரு கணத்தில் துச்சாதனனின் விழிகளைச் சந்தித்தபோது அவன் நெஞ்சு நடுங்கியது.
முதலில் யானைபோலப் பிளிறியபடி துச்சாதனன் கதாயுதத்தை வீசிப் பாய்ந்தான். பீமனின் கதை அதில் பேரொலியுடன் மோதியபோது அந்த அதிர்வை அங்கிருந்த அனைவரின் வயிறுகளும் உணர்ந்தன. புயல்காற்றில் சுழன்றுபறக்கும் ஆலமரக்கிளைகள் போல அவர்கள் கரங்கள் காற்றில் வீசின. அரக்கர்களால் தூக்கி வீசப்பட்ட மலைப்பாறைகள் போல கதாயுதங்களின் தலைகள் காற்றில் சுழன்று தீப்பொறி பறக்க முட்டித் தெறித்து சுழன்று வந்து மீண்டும் முட்டின. துச்சாதனனின் முதல் அடி பீமனின் கதையில் பட்டதுமே அவன் பயிற்சிக்காக கதைசுழற்றவில்லை என்பதை தருமன் உணர்ந்துகொண்டான். அதை பீமனும் உணர்ந்துகொண்டதை அவன் உடலசைவுகளில் வந்த மாறுதல் காட்டியது.
பீமனின் அடிகளின் வலிமை துச்சாதனனின் கதையில் இல்லை என்பதை தருமன் அறிந்தான். ஆனால் துச்சாதனனின் ஓர் அசைவு கூட வீணாகவில்லை. அடிக்கும் கணம் தவிர மற்ற தருணங்களில் அவன் கைகளின் ஆற்றல் கதைமீது செலுத்தப்படவேயில்லை. மலரைச்சுற்றிப்பறக்கும் கருவண்டு போல கதை இயல்பாகச் சுழன்றது. கதையின் சுழற்சிக்கு ஏற்ப அவன் கால்கள் மிக அளவாக இடம் மாறின. சென்றவருடங்களில் ஒவ்வொருநாளும் அவன் இந்த கணத்துக்காக பயின்றிருக்கிறான் என்று தருமன் எண்ணிக்கொண்டான். மீண்டும் மீண்டும் அந்த கதைக்கோளம் பீமனின் தலையையே நாடிவந்தது. பேராவலுடன், வெறியுடன், உறுதியுடன், அதற்கெனவே பிறந்ததுபோல.
நேரம்செல்லச்செல்ல பீமனின் சக்தி மழைக்கால மலையருவி போல பெருகியபடியே இருந்தது. மறுபக்கம் துச்சாதனனின் உள்ளிருந்து அவன் ஆத்மாவின் இறுதி எழுச்சியும் விசையாக மாறி வெளிவந்தது தெரிந்தது. போர் முடிவேயில்லாமல் நீண்டு நீண்டு சென்றது. ஆரம்பகணங்களில் இருந்த பதற்றமெல்லாம் விலகிய பார்வையாளர்கள் இருவரில் எவர் வெல்வார்கள் என வாதுகூட்ட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் தருமன் மேகங்கள் நடுவே மின்னல் என அவர்களுக்கிடையேயான வெளியில் தெறிக்கும் அனல்பொறிகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். கதைகள் மோதும் இடியோசை அவனைச்சூழ்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.
அரச மண்டபத்தில் திருதராஷ்டிரருக்கு போரை விளக்கிக் கொண்டிருந்த சஞ்சயன் பேச்சை நிறுத்தி விட, கனத்த தலையை கரங்களில் தாங்கியபடி விழியற்ற மன்னர் பெருமூச்சுவிட்டு இடைவிடாத உலோக ஒலிகளை கேட்டுக் கொண்டிருந்தார். ஒலிகள் வழியாக அவருக்குள் மேலும் உக்கிரமாக ஒரு போர் நிகழ்வதை அவர் உடல் காட்டியது. யானைகள் மூழ்கித்திளைக்கும் கரிய ஏரிப்பரப்பு போலிருந்தது திருதராஷ்டிரரின் உடல். பெண்கள் அவையிலும் நூறு நாகங்கள் படமெடுத்து நிற்பதைப்போல பெருமூச்சுகள் ஒலித்துக் கொண்டிருந்தன.
இருவர் கால்களும் தழைந்தன. இருவர் உடலிலும் புழுதியைக் கரைத்து வியர்வை வழிந்தது. துச்சாதனனின் கதை பின்னால் சுழன்று முன்னால் வந்த கணத்தில் பீமன் அதை ஓங்கி அறைந்தான். கதை இரண்டாக உடைந்து அவன் கையிலிருந்து விழுந்தது. கைகளை விரித்து துச்சாதனன் திகைத்து நிற்க பீமன் கதாயுதத்தைத் தூக்கி அவன் நெற்றியை மெல்லத் தொட்டு புன்னகைசெய்து “போ” என்றான். துச்சாதனன் சிவந்த விழிகளும் மூச்சிரைப்புமாக நின்றான். “செல்க, இளையவனே” என்றான் பீமன் மேலும் விரிந்த புன்னகையுடன். “இத்தனை நேரம் என் முன் நின்றமைக்காக உன்னை பாராட்டுகிறேன். நீ மாவீரன்!” துச்சாதனனின் இறுகிய தோள்கள் மெல்ல நெகிழ்ந்தன. “நீ செய்த பிழைகள் என்னென்ன என்றறிய விரும்பினால் நாளை என் அவைக்களத்துக்கு வா!” என்றான் பீமன். மறுசொல் சொல்லாமல் தலைகுனிந்து துச்சாதனன் களத்தைவிட்டு விலகினான். ஆர்ப்பரித்த கூட்டத்தை நோக்கி கதைதாழ்த்தி வணங்கினான் பீமன்.