தலைகொடுத்தல்

அன்புள்ள ஜெ

இப்போது காசியில் இருக்கும் என் நண்பர் கங்காதரன் எடுத்து அனுப்பிய படம் இது. ஒரு அகோரி -நாகா மடத்தில் இது உள்ளது.இதிலுள்ள தெய்வம் எது. இது ’சின்னமஸ்தா’ என்று நான் சொன்னேன். ஆனால் இச்சிலையை நோக்கினால் இது ஆண் என்று ஆன் சொன்னான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அனீஷ் கிருஷ்ணன் நாயர்

unnamed

அன்புள்ள அனீஷ்

உறுதியாக சின்னமஸ்தா இல்லை. அகோரிகளின் காளியான சின்னமஸ்தா [சின்ன- வெட்டப்பட்ட] தன்னுடைய வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தி நின்றிருக்கும் பெண் தெய்வம். உபேக்‌ஷை [துறவு[ க்கு தியானிக்கப்படவேண்டியது. மாயாசண்டி, பிரசண்டி என்றெல்லாம் சொல்வார்கள்.

இதேபோன்று தன் தலையை தானே கொய்யும் சிலைகள் பொதுவாக நவகண்டச்சிலைகள் எனப்படும். தன் தலையை தானே வெட்டிப் பலிகொடுத்துக்கொண்ட களப்பலியாளனுக்காக அவை அமைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றன. பழையகாலத்தில் போர் தொடங்குவதற்கு முன் அவ்வாறு ஒருவன் தலையை வெட்டிக்கொள்வதுண்டு. போருக்குச் செல்வதற்கு முன் போர்வெறியேற்றிக்கொள்ள கொற்றவைக்கு தலைகொடுப்பதுண்டு.

தன் குடுமியை தானே பற்றிக்கொண்டு மறுகையால் தலையை வெட்டிக்கொள்ளும் சிலைகள் இந்தியாவெங்கும் நடுகற்களாகக் கிடைக்கின்றன ‘இட்டெண்ணித் தலைகொடுக்கும் மறவர்களை’ பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. பிற்காலத்தில் இத்தகைய சிலைகள் அரவான் என வழிபடப்பட்டன. அரவான் சிலைகளும் இப்படித்தான் இருக்கும்

ஆனால் நீங்கள் அனுப்பியது நவகண்டச்சிலை அல்ல.காரணம் இதில் நான்கு கைகள் உள்ளன. ஒருகையில் கட்கமும் [வாளும்] இன்னொன்றில் தனுஸும் [வில்] உள்ளது. ஒருகையில் பாசாயுதம். இன்னொருகையில் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஜபமாலையா இல்லை ஏதேனும் ஆயுதமா என்று சொல்லமுடியவில்லை. இடையில் சல்லடம், மார்பில் மகரகண்டி தோள்வளைகள் என இறைவனுக்குரிய இலக்கணங்கள். பத்மாசனத்தில் யோகநிலையில் அமர்ந்திருக்கிறது

Chhinnamasta

6c156f4f0d5864d513f7569e8b2868a5
சின்னமஸ்தாவை வில் மற்றும் பாசாயுதத்துடன் பார்த்ததில்லை. வாள் இருக்கும். அபூர்வமாக திரிசூலம். அத்துடன் எப்போதுமே அந்த வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தியிருக்கும். சின்னமஸ்தா சிலைகளில் சிலவற்றில் சிவனை வீழ்த்தி மேலே அமர்ந்து உறவுகொள்வதுபோல பயங்கரமான தோற்றம் இருக்கும். இச்சிலையின் வேறுவடிவங்களை திபெத்திய வஜ்ராயன பௌத்த தியானமுறைகளில் காணலாம்.

பாசமும் வில்லும் காலபைரவனுக்கு உரியவை. நான் இதேபோன்ற சில மண்சிலைகளை காசியில் பார்த்திருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது. நாகா- அகோரிகளின் மகாவித்யைக்கான தெய்வம் , காலபைரவனுடைய ஒரு தோற்றம் என்று சொன்னார்கள். சில சிலைகளில் அந்த தலை காலடியில் கிடப்பதையும் கண்டிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49
அடுத்த கட்டுரைசர்மிளா ஸெய்யித்