ஜெ
இது மனுஷ்யபுத்திரன் அவரது ஃபேஸ்புக்கில் இன்று எழுதியது.
……………………………………………………………………..
’’இந்த இரண்டு வருஷங்களில் இருபது நாடுகளுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். இதில் ஒன்றுகூட இலக்கிய நிகழ்ச்சியில்லை. எல்லாமே ஃபிலிம் ஃபெஸ்டிவல் சம்பந்தப்பட்டது.
எனது வளர்ச்சி குறித்து மனுஷ்ய புத்திரன் ‘ஒரேயொரு நாவல்தான் இவர் எழுதியிருக்கிறார். யார் இந்த வாய்ப்புக்களை உருவாக்கித்தருகிறார்கள்’ என சந்தேகம் எழுப்பியிருந்தார். ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நியாயமான அங்கீகாரத்தைக்கூட அந்தரங்க சலுகையாகப் பார்க்கும் ஆண் எழுத்தாளர்களின் பொதுப்புத்தியால் இப்படியே யோசிக்க முடியும். அவர்களுக்குள் நாங்கள் ஆண் என்ற திமிர் மேலோங்கி நிற்கிறது. ஆகவே அப்படிப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
– கவிஞர் சல்மா .(இந்த வார குமுத்த்தில்).
ஆண் எழுத்தாளர்கள் என்ற கொடியவர்களிடமிருந்து பெண் எழுத்தாளர்களின் கண்ணியத்தை காக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் குமுதத்திற்கு வாழ்த்துக்கள்.
சல்மா ஏன் இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்படாமல் உலகம் முழுக்க ஃபிலிம் பெஸ்டிவலுக்கு அழைக்கப்படுகிறார்? அந்த எழுத்தாளருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? வாழ்க்கையில் எந்த ஒரு சினிமாவைப் பற்றியாவது அவர் ஒரு குறிப்பையேனும் எழுதியதுண்டா? அல்லது அவர் சினிமாவிற்கு ஒரு எழுத்தாளராக ஏதும் பங்களித்திருக்கிறாரா? தமிழில் உலக சினிமாவைப் பற்றி தங்கள் வாழ்நாளெல்லாம் ஒரு இயக்கமாக எழுதி வந்திருக்கும் சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் ஏன் இது போல ஒரு உலகப் படவிழாவிற்கும் அழைக்கப்படவில்லை? லீனா மணிமேகலை அழைக்கப்படுவதையாவது புரிந்துகொள்ளமுடிகிறது. அவர் படம் என்ற பெயரில் ஒரு ஏதாவது ஒரு துண்டு ஃபிலிமையாவது கண்ணில் காட்டுகிறார். ஆனால் இவர் எதற்கு அழைக்கப்படுகிறார்? சேனல் ஃபோர் சேனல் இவர் தன் வாழ்க்கையைப் பற்றி சொன்ன பொய்களை நம்பி ஒரு டாக்குமெண்டரி எடுத்ததே அதை வைத்துக்கொண்டா? அப்படியெனில் சேனல் ஃபோர் எடுக்கும் எல்லா ஆவணப்படங்களின் பாத்திரங்களும் இதுபோல் அழைத்துச் செல்லப்படுகிறார்களா? இந்தக் கேள்வியை யாராவது கேட்டால் அது உடனே ’செக்ஸிஸ்ட் கமெண்ட்’, பெண்கள் மீதான வன்முறை என்று அழ ஆரம்பித்து விடுவார்கள்.
சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கபடும்போதெல்லாம் பலவிதமான சர்ச்சைகள் வெடிக்கின்றன. சில எழுத்தாளர்கள் இந்த விருதை சில எப்படி வாங்கினார்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அவர்கள் எல்லாம் பெண் எழுத்தாளர்கள் அல்ல. அதேபோல திரைப்பட விருதுகள். அதிலும் சர்ச்சைகள் உணடு. Manipulation என்பதற்கு ஆண் பெண் பேதம் இல்லை. சில ஆண் எழுத்தாளர்களைப் போல சில பெண் எழுத்தாளர்களும் அதைச் செய்கிறார்கள். அதை பாலியல் சார்ந்த ஒன்றாக யாராவது விமர்சித்தால் அது கீழ்மையானது. அதேபோல தங்கள் மேல் வைக்கப்படுகிற எல்லா விமர்சனங்களும் பாலியல் நோக்கிலானது என்று எந்தப் பெண் எழுத்தாளராவது சொன்னால் அதைவிட பரிதாபம் வேறு எதுவும் இல்லை. சல்மாவுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் எதுவும் அம்பைக்கோ சூடாமணிக்கோ கிடைத்ததில்லை. அப்படியே கிடைத்திருந்தாலும் அதற்காக அவர்கள் செய்திருக்கும் பணி அளப்பரியது.
பயணங்கள், விருதுகள் அங்கீகாரங்கள் . ஊடக வெளிச்சம் இதெல்லாம் ஆண் –பெண் இருபாலாரிலும் சில எழுத்தாளர்களால் வெகு தந்திரமாக பயன்படுத்தப்படுகிறது. இவர்களை சிபாரிசு செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான நட்புணர்வுதான் இங்கே இந்த வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. மாறாக அவர்கள் எழுதிய புத்தகங்கள் அல்ல. இதற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆண்-பெண் படைப்பாளிகள் தமிழ் நிலத்தில் இலக்கியம் என்ற பாழ்வெளியில் எந்த அங்கீகாரத்தைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
சல்மா இந்த சர்ச்சையில் என்னை எப்படியாவது இழுத்துவிட நினைக்கிறார். அது அவ்வளவு சுலபமல்ல. பெண்களுடைய உரிமைகளுக்காக்வும் நியாயங்களுக்காகவும் சமூக வெளியில் நான் எழுப்பி வந்திருக்கும் குரல் எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியும். எனது நூற்றுக் கணக்கன கவிதைகள் காட்டும் பெண்களின் உலகத்தையும் மனதையும் சல்மா இன்னும் நூறு வருடங்கள் எழுதினாலும் தீண்ட முடியது.
அவர் மேலே குறிப்ப்பிடும் கமெண்டை நான் எந்த பின்புலத்தில் எங்கே கூறினேன் என்று எனக்கு நினைவு இல்லை. ஆனால் சல்மா போன்ற எந்த தகுதியும் இல்லாத நபர்கள் இலக்கியத்தில் முக்கியத்துவம் பெறும்போது அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதே கேள்வியை எழுப்பி வந்திருக்கிறேன்.
இலக்கிய ரீதியாக எந்த விமர்சனம் சொன்னாலும் அதை பாலியல் ரீதியான தாக்குதல் என்கிற ரீதியில் கூச்சல் போடுவது ஓடுகிற வண்டி முன்னால் வந்து விழுவதுபோல பாவனை செய்துவிட்டு ‘ என் மேல மோதிட்டே… பணம் கொடு’ என்று மிரட்டுகிறவர்களின் செயலுக்கு இணையானது.
அது சரி எழுத்தாளர்கள் தொடர்பான இந்த சர்ச்சையில் பெண் எழுத்தாளர்கள் பங்கேற்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கும் சல்மாவிற்கும் என்ன சம்பந்தம்?
================================================================================
நீங்கள் சொன்னதும் இதையே. நாற்பது நாடுகளுக்கு ‘இலக்கியத்துக்காக’ அழைக்கப்பட்ட வேறு எந்த தமிழ் எழுத்தாளர் இருக்கிறார்? அசோகமித்திரனா? ஜெயகாந்தனா? இந்திரா பார்த்தசாரதியா? அவர்கள் எவரைப்பற்றியாவது எந்த சானலாவது ஆவணப்படம் எடுத்திருக்கிறதா? அவர்களை விடவெல்லாம் இவர்கள் சாதனையாளர்களா? இந்த அங்கீகாரம் அவர்களுக்கு தகுதி இல்லாததனால் கிடைக்கவில்லை, தங்களுக்கு தகுதியால் கிடைக்கிறது என்று பொதுமேடையில் சொல்கிறார்கள் என்றால் இவர்களின் திமிர்தான் என்ன? இவர்கள் அறிந்த இலக்கியம் என்ன? இத்தனைக்குப்பிறகும் ‘உரிய அங்கீகாரம்’ கிட்டாமல் ஆணாதிக்கவெறியால் பாதிக்கப்படுவதாக மீடியாவில் ஒபபரி வைக்கிறார்கள் என்றால் என்னத்தை சொல்ல?
எப்படி இது நிகழ்கிறது? இதன் அரசியல் என்ன? இதைத்தான் நீங்களும் சொன்னீர்கள். பெண் எழுத்தாளர்களிலேயே முக்கியமாக எழுதியவர்கள் எந்தக் கவனிப்பையும் பெறவில்லை என்றீர்கள்.
நீங்கள் சுட்டிக்காட்டிய பிற பெண் எழுத்தாளார்களும் இதைப்போலவே கிரீடங்களுடன் உலா வருபவர்கள். எதுவுமே உருப்படியாக எழுதாதவர்கள்.
‘இதற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆண்-பெண் படைப்பாளிகள் தமிழ் நிலத்தில் இலக்கியம் என்ற பாழ்வெளியில் எந்த அங்கீகாரத்தைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிறார்கள். நீங்கள் சொன்னதும் இதையே
அதை பெண் எழுத்தாளர்கள் அதை பாலியல் தாக்குதலாக தந்திரமாக மாற்றிக்கொண்டு அதையே ஆங்கிலத்தில் பரப்பி அனுதாபம் தேடினார்கள். அவர்கள் இவ்வாறு கேவலமான வசை ,அவதூறு அறிக்கைகள் மூலம் எதிர்கொண்டபோது மனுஷ்யபுத்திரன் அவரும் சேர்ந்துகொண்டு பெண்ணியக்குரல் எழுப்பினார். இந்தமாத உயிர்மையைப் பாருங்கள்.
இன்று அவர் சொன்னது சுட்டிக்காட்டப்படும்போது அவரும் அதைத்தான் சொல்லவருகிறார்
சரவணன்
அன்புள்ள சரவணன்,
உண்மை மிக அப்பட்டமானது. தமிழில் எழுதும், வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்தது.
இதில் என்ன நிலைபாடு எடுப்பது எந்த பிம்பத்தை சுமப்பது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கவலை.
பிம்பங்களின்றி நிற்க ஒரு துணிவு வேண்டும். எனக்குப்பின் என் படைப்புகள் உள்ளன என்னும் அகங்காரம். அது ஹமீதிடமிருப்பது இக்குறிப்பில் தெரிகிறது. அப்படியே நீடிக்கட்டும்.
தமிழில் இன்று முக்கியமாக எழுதிக்கொண்டிருக்கும் பல இளம் எழுத்தாளர்களை நான் அறிவேன். ஒருநாளில் பத்துமணி நேரம் கடுமையான உடலுழைப்பை செலுத்தி வாய்க்கும் வயிற்றுக்கும் சம்பாதிப்பவர்கள். அந்த ஓய்வுநேரத்தில் காத்திரமான படைப்புகளை உருவாக்குபவர்கள். ஒருவகையான அங்கீகாரமும் பெறாதவர்கள். நான் அவர்களையே முக்கியமான ஆண் எழுத்தாளர்கள் என்று சுட்டிக்காட்டினேன்.
அவர்கள் வாழும் சூழலில் வாழக்கூடிய, அத்தகைய சவால்களைச் சந்தித்து எழுதக்கூடிய ஒரு பெண் எழுத்தாளரும் இன்று இங்கே இல்லை. ஆனால் ‘அய்யோ பாவம் பெண்கள். கஷ்டப்பட்டு எழுதுறாங்க’ என்கிறது அந்த ஆண் எழுத்தாளர்களின் பெயர்களையே அறியாத போலிக்கூட்டம்.
வாசகன் என்பவன் தன்னை போலித்தனமில்லாமல் உண்மையின்பால் நிறுத்திக்கொள்ளக்கூடியவன். சும்மா பெயர்களைத் தெரிந்துவைத்திருக்கும், போலிக்கருத்துசொல்லும் ஆயிரம் பேர் நடுவே உண்மையை நாடும் இலக்கிய வாசகன் பத்துபேர்தான். நான் அவன் முன் இதை முன்வைக்கிறேன்.
அவன் நினைத்துப்பார்க்கட்டும்.
ஜெ