‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46

பகுதி ஏழு : கலிங்கபுரி

[ 10 ]

யானை ஒன்று பிறையம்பால் மத்தகம் பிளக்கப்பட்டு இறந்து கிடப்பதை அர்ஜுனன் கண்டான். அது ஒரு படுகளம். குருதி தெறித்த கவசக்கால்கள் சூழ்ந்து நின்றிருக்க அப்பால் அப்போதும் நடந்துகொண்டிருந்த பெரும்போரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. யானை உடலின் கருமையில் மறைந்து வழிந்த குருதி சிவந்து சொட்டி மண்ணை நனைத்து ஊறிமறைந்து கொண்டிருந்தது. இறுதியாக எஞ்சிய துதிக்கைத் துடிப்பு அடங்கியபின்னர் அந்த சிவந்த சிறிய அம்புத்துளைகளில் ஈக்கள் சென்றமர்ந்தன.

“அஸ்வத்தாமா, என் மகனே!” என்ற பெருங்குரல் எழுந்தது. அனைவரும் திகைத்து திரும்பிப்பார்க்க துரோணர் கைகளை விரித்துக் கதறியபடி ஓடிவந்து வந்த விரைவிலேயே முழங்கால் மடித்து விழுந்து அந்த யானையின் கனத்த துதிக்கையைத் தூக்கி தன் மார்போடணைத்துக்கொண்டார். “மகனே! அஸ்வத்தாமா!” என்று கூவியபடி அதைக்கொண்டே தன் மார்பை ஓங்கி அறைந்துகொண்டு கதறியழுதார். அவ்வலறலைக் கேட்டு கால்கள் தளர்ந்து கையில் இருந்த வில்லை கீழே போட்டு மெல்ல பின்னடைந்தான் அர்ஜுனன். அவர் சிவந்த கண்களில் கண்ணீர் வழிய நிமிர்ந்து நோக்கி விழிகளால் அவனைத்தேடினார். அவன் பீமனின் பேருடலுக்குப்பின் மறைய முயன்றும் அவரது கண்களை அவன் கண்கள் சந்தித்துவிட்டன.

உடல் நடுநடுங்க அர்ஜுனன் விழித்துக்கொண்டான். சுற்றிலும் இருட்டு பரவியிருக்க அவன் உடலில் கொசுக்கள் மொய்த்திருந்தன. அவன் சற்று அசைந்ததும் அவை ஆவியெழுவதுபோல மேலெழுந்தன. வாயில் புகுந்த கொசுக்களை துப்பிக்கொண்டு கைகால்களைத் தட்டியபடி அவன் எழுந்தான். எங்கிருக்கிறான் என்று உணர்ந்ததுமே அக்கனவும் நினைவுக்கு வந்தது. பெருமூச்சுடன் சற்று நேரம் நின்றபின் திரும்பி நடந்தான்.

காட்டைமுழுக்க மூடித் தழுவியிருந்த இருட்டுக்குள் கங்கையின் நீர்ப்பரப்பு இருளுக்குள் தெரியும் வாள்பட்டை போல ஒளிவிட்டது. குடில்களின் வெளிச்சத்தை மட்டும் அடையாளமாகக் கொண்டு இருளுக்குள் நடந்து குருகுலத்தை அடைந்தான். குருகுலத்தின் இடப்பக்கமிருந்த அகன்ற புல்வெளியில் பந்த ஒளியும் நிழலாட்டமும் தெரிந்தது. அவன் தயங்கிய காலடிகளுடன் அருகே சென்றான். கூட்டத்தின் நடுவே இருந்த பந்தவெளிச்சம் மனித நிழல்களை பூதங்களாக்கி மரங்களின் மேல் எழச்செய்திருந்தது. மறுபக்கமிருந்த பந்தங்களின் ஒளியில் மிகப்பெரிய நிழலாக யானை தெரிந்தது. நிழலிலேயே அது எந்த யானை என்று தெரிந்து அவன் அகம் அதிர்ந்தது.

இரு மாதங்கர்கள் யானையின் அருகே நின்று அதன் துதிக்கையைத் தட்டி ஆறுதல் சொல்ல முதியமாதங்கர் அதன் முன்னங்காலுக்குமேல் புண்ணில் இருந்த கட்டை அவிழ்த்துக்கொண்டிருந்தார். யானை அர்ஜுனனைக் கண்டதும் வெருண்டு துதிக்கை தூக்கி பிளிறியபடி விலகி ஓட முயன்றது. ஒரு மாதங்கன் அவன் அருகே ஓடி வந்து “இளவரசே, தாங்கள் அருகே வரவேண்டாம். அவன் மிகவும் அஞ்சியிருக்கிறான். எட்டுவயதே ஆன விளையாட்டுச் சிறுவன். படைக்கலங்களையோ புண்ணையோ இதுவரை அறியாதவன்” என்றான். அர்ஜுனன் நின்று விட்டான். “புண் பெரிதா?” என்று மெல்லிய குரலில் கேட்டான். “இல்லை இளவரசே, ஆறுவாரங்களில் புண் முழுதும் ஆறிவிடும். தினம் இருவேளை புண்ணை அவிழ்த்து மருந்திட்டால்போதும்” என்றான் மாதங்கன்.

இன்னொரு மாதங்கர் அருகே வந்து “மதலையாக இருந்த நாள்முதல் மானுடரில் இருந்து அன்பை மட்டுமே அறிந்திருக்கிறான். அவனைக் காண்பவர்கள் அனைவருமே இனிய உணவு அளித்து கொஞ்சவே செய்திருக்கிறார்கள். ஒரு மனிதன் தன்னை வருத்தியதை அவனால் நம்பமுடியவில்லை. மானுடர் அனைவரையுமே அஞ்சி விலகி ஓடுகிறான். புண்ணுடன் ஓடிச்சென்று காட்டுக்குள் புதர்களுக்குள் ஒளிந்து நடுங்கிக்கொண்டிருந்தான். நாங்கள் குருதித்தடம் தேடிச்சென்று அவனைக் கண்டடைந்தோம். புதர்களுக்குள் இருந்து வெளிவர மறுத்துவிட்டான். மாதங்கர்கள் பகல் முழுக்க அவனிடம் பேசி அழைத்துக்கொண்டு வந்தோம்” என்றார்.

அர்ஜுனன் “அந்த யானையின் பெயரென்ன?” என்றான். “பிறந்ததும் குதிரைக்குட்டிபோல ஒலியெழுப்பியமையால் முதுமாதங்கர் இவனுக்கு அஸ்வத்தாமா என்று பெயரிட்டிருக்கிறார்” என்றான் மாதங்கன். அர்ஜுனன் தன் படபடப்பை மறைக்க ஒளியை விட்டு முகத்தை விலக்கிக்கொண்டான். இருட்டுக்குள் பதுங்கி நின்று அச்சொற்களைக் கேட்டான். “இனியவன். அழகியவன். சொல்வதற்குள்ளேயே புரிந்துகொள்ளும் நுண்ணியன். நல்லூழால்தான் உயிர்பிழைத்தான். ஒரு விரல்கடை மேலே அம்பு தைத்திருந்தால் காலை இழந்திருப்பான். இந்த விபத்து அவனுக்கொரு இறப்பு. இன்று மீண்டும் பிறந்திருக்கிறான்.”

“நான் என்ன பிழையீடு செய்யவேண்டும் மாதங்கரே?” என்றான் அர்ஜுனன். “யானைக்கு இழைத்த தீங்குக்கு சிவகுமாரனாகிய கணபதிக்கு முன் காப்புகட்டி மூன்றுநாள் உண்ணாநோன்பிருக்கவேண்டும் என்பது வழக்கம்” என்றான் மாதங்கன். “யானைக்குள் குடிகொள்ளும் கஜபதி உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். எப்படி இச்செய்தியை யானைகள் பகிர்கின்றன என்றறிய முடியாது. ஆனால் அவையனைத்துமே இப்போது தங்களை அறிந்திருக்கும். ஓர் அன்னையானை தங்களை ஏற்றுக்கொண்டதென்றால் தாங்கள் மன்னிக்கப்பட்டீர்கள் என்று பொருள்.”

அர்ஜுனன் நெடுமூச்சுடன் “ஆம், அவ்வாறே செய்கிறேன்” என்று திரும்பி நடந்தான். அவனுக்குப்பின்னால் அஸ்வத்தாமா அச்சத்துடன் உறுமியது. மிகத்தொலைவில் இன்னொரு களிறு பதிலுரைத்தது. மேலும் அப்பால் இன்னொன்றின் மெல்லிய குரல் காற்றில் எழுந்தது. ‘அஸ்வத்தாமன்’ அச்சொல் இப்போது தன் வாழ்க்கையில் எத்தனை முதன்மையானதாக ஆகிவிட்டது என்று எண்ணிக்கொண்டான். அப்போதுகூட அஸ்வத்தாமன் மீதான சினம் நெஞ்சுக்குள் எரிந்துகொண்டே இருப்பதை உணர்ந்தான்.

அர்ஜுனன் தன் குடிலுக்கு வந்து உணவேதும் அருந்தாமல் இருளிலேயே சென்று ஈச்சம்பாயை விரித்து படுத்துக்கொண்டான். இரவிலேயே கிளம்பி அஸ்தினபுரிக்குச் சென்றுவிடவேண்டும் என்றும் இல்லை கங்கையை நீந்திக்கடந்து மறுகரைசென்று அப்படியே மறைந்துவிடவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டான். அவ்வாறு செல்வதைப்பற்றி விரிவாக திட்டமிட்டான். நூறுமுறை அவ்வழிகளில் சென்று சென்று சலித்தான். பின் ஒரு அம்புடன் சென்று துரோணரின் குடில்கதவைத் தட்டித் திறந்து கழுத்தைவெட்டிக்கொண்டு குருதிவழிய அவர் காலடியில் விழுந்து துடித்தான். அவர் அவனை அள்ளி மார்போடணைக்க அவரது கைகளை உணர்ந்தபடி உயிர்விட்டான்.

கண்களிலிருந்து கன்னம் வழியாக வழிந்த வெப்பமான கண்ணீரை உணர்ந்தபடி இரவெல்லாம் படுத்திருந்தபின் விடியற்காலையில் அர்ஜுனன் துயிலில் விழுந்தான். துயிலில் இருளில் இருந்து பேருடலுடன் பிளிறியபடி எழுந்து வந்த அஸ்வத்தாமா துதிக்கையைத் தூக்கியது. அதில் ஒளிவிடும் நீண்ட அம்பு இருந்தது. அம்பு எங்கோ பட்டு கணீரென்று ஒலித்தது. அவன் அலறியபடி எழுந்துகொண்டபோது துரோணரின் குடிலில் கலங்கள் முட்டிய ஒலிகள் கேட்டன. அவ்வொலியிலேயே அது துரோணரின் கை என்று உணர்ந்த அவன் அகம் அதிர்ந்து அவனை முற்றிலும் எழுப்பிவிட்டுவிட்டது.

ஒரு கணம் எங்கிருக்கிறோம் என்று அறியாதவனாக திகைத்தபின் எழுந்து வெளியேசென்று தொட்டிநீரில் முகம் கழுவிவிட்டு வெளியே ஓடினான். துரோணர் அஸ்வத்தாமனுடன் கங்கைப்பாதையில் நடந்துகொண்டிருந்தார். அவன் தன்னையறியாமலேயே ஓடியபின்னர் முந்தையநாள் நிகழ்வுகள் நினைவிலெழ நின்றுவிட்டான். காலடியோசை கேட்டுத் திரும்பிய துரோணர் புன்னகையுடன் அவனைநோக்கி தலையசைத்தார். அவன் அருகே சென்றதும் அவர் இயல்பாக பேசத்தொடங்கினார். நேற்று பேசியவற்றின் தொடர்ச்சிபோல.

“கைக்கோள் படைகள் அம்பு, கதை, பட்டீசம், வாள், பிராசம், குந்தம், சக்கரம், காசம், கவசம் என்று ஒன்பதுண்டு என்கிறது சுக்ரநீதி. அம்பை பறவை என்றே நூல்கள் சொல்கின்றன. பிரம்மனின் மைந்தனாகிய காசியபபிரஜாபதி தட்சனின் மகள்களான பெருநாகங்களை மணந்தார். அவர்களில் தாம்ரை என்னும் செந்நிறமான சிறகுகள் கொண்ட நாகத்தில் கிரௌஞ்சி, ஃபாசி, ஸ்யோனி, திருதராஷ்ட்ரி, சுகி என்னும் நாகப்புதல்வியரை அவர் பெற்றெடுத்தார். அவர்களில் ஸ்யோனி வன்வடிவம் கொண்ட பருந்துகளையும் கழுகுகளையும் ஈன்றாள். திருதராஷ்ட்ரி மென்மையான அன்னப்பறவைகளையும் சக்ரவாகங்களையும் ஈன்றாள். இவ்விரு பறவைக்குலமும் ஒன்றை ஒன்று கலந்து தங்களை மண்ணிலுள்ள பறவைக்குலங்களாக பெருக்கிக்கொண்டன. பிற ஒவ்வொரு பறவையிலும் இவ்விரு பறவைக்குணங்களும் கலந்திருக்கும் என்கிறது புராணம்.”

“பறவையில் வாழும் நாகம் அதன் கழுத்துகளில் தன்னைக் காட்டுகிறது” என்றார் துரோணர். “பறக்கும் நாகங்களே பறவைகள் என்கிறார்கள் முன்னோர். பறப்பதனால் அம்புகளும் பறவையினமே. ஆகவேதான் அம்பின் கூர்முனை கோணம் எனப்பட்டது. அம்பின் அலகு பறவையின் அலகுகளைப்போலவே எண்ணற்ற வடிவங்கள் கொண்டது. அவற்றை ஆறுவகையாகப் பிரித்திருக்கின்றனர். சிட்டுக்குருவி போல சிற்றலகுகொண்டவை நரம்புகளை தாக்கக்கூடியவை. காகம்போல அலகுகொண்டவை எளிய நேர்த்தாக்குதல்களுக்குரியவை. கொக்குபோல நீள் அலகுகொண்டவை எலும்புவரை குத்திச்செல்லக்கூடியவை. தசைகளை வாளென வெட்டுபவை நாரையின் அலகுகள். குத்தியபின் வெளியே எடுக்கமுடியாதவை பருந்தின் அலகுகள். வாத்துகளைப்போன்ற அலகுகொண்டவை கவ்விக்கொள்பவை.”

கங்கைக்கரையின் பாதையில் அவர்களின் காலடிகள் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தன. “பறவையின் உடல்போன்றது அம்பின் உடல். அதை தேஹ என்கின்றன நூல்கள். அதன் அளவும் எடையும் அம்பின் அலகைச் சார்ந்தது. உயர்ந்த புல்லால் ஆனதும் இரண்டுமுழம் நீளமுள்ளதும் எடையற்றதுமான அம்பே சிறந்தது என்கிறது சுக்ரநீதி. சிட்டுக்குருவியின் அலகு கொண்ட அம்புகளுக்கு ஐந்துவிரல் நீளமே போதுமானது. வாத்துக்களின் அலகுகொண்ட அம்பு நான்குமுழம் நீளமில்லாவிடில் வெட்டாது” என்று சொன்னபடி துரோணர் நடந்தார்.

கங்கையில் இறங்கி குடுமியை அவிழ்த்து தோளில் பரப்பி நீராவி பரவிய மென்வெம்மைகொண்ட நீரில் அலையிளக இறங்கி மூழ்கி எழுந்து தாடியில் நீர்சொட்ட துரோணர் தொடர்ந்து சொன்னார் “அம்பின் சிறகுகளை பக்‌ஷம் என்கின்றன நூல்கள். அவற்றிலும் பறவைகளின் இலக்கணங்களையே வைத்துள்ளனர். சிட்டுக்குருவியின் சிறிய இறகுகள் முதல் கழுகின் முறச்சிறகு வரை அனைத்துவகை அம்புப்பீலிகளும் உண்டு. ஈ, கொசு, வண்டு, தட்டாரப்பூச்சி என அனைத்துவகை சிறகுகளில் இருந்தும் அம்புகளின் சிறகுகளை அடைந்திருக்கிறது வில்லியல். ஐந்தடுக்குகள் கொண்ட பீலிகள் உண்டு. எண்கோண வடிவு கொண்டவையும் புரிவடிவம் கொண்டவையும் உண்டு. அம்பின் சிறகுகளின் இணைவுகளும் வடிவுகளின் எல்லையற்றவை.”

“சிறகுகள் அம்பின் அலகின் எடையை சமன்செய்கின்றன. காற்றில் மிதக்கவைக்கின்றன. ஏறவும் இறங்கவும் செய்கின்றன. அசைவின் அடிப்படையில் அவை பன்னிரு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன…” துரோணர் தொடர்ந்தார். “அம்புகளை சுகோண:சுதேஹ:சுபக்‌ஷ: என்று குறிப்பிடுகின்றன நூல்கள். இம்மூன்று இயல்புகளும் பொருந்திய அம்புகள் பொருத்தப்பட்டதும் வில் மகிழ்கிறது. நன் மகவை இடையில் ஏற்றிக்கொண்ட அன்னைபோல. இனிய ஓசையை அடைந்த சொல்போல. வேதத்தை ஏற்றுக்கொண்ட அக்னி போல.”

அவர் சொல்லிக்கொண்டே இருக்க நீரில் நின்றபடி அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் கேட்டுக்கொண்டிருந்தனர். அஸ்வத்தாமன் ஒவ்வொரு வரிக்கும் அவனையறியாமலேயே தலையை அசைத்துக் கொண்டிருந்தான். துரோணர் இருவரையும் பார்க்கவில்லை. தன் சொற்களில் மூழ்கியவராக சொல்லிக்கொண்டே சென்றார். “ஆகவே பறவைகளை பார்த்துக்கொண்டிருங்கள். தனுர்வேதமே புல்லில் இருந்தும் பறவைகளில் இருந்தும் முன்னோர்களால் கற்கப்பட்டது. புல்லும் பறவைகளும் அந்த ஞானத்தை லட்சம் கோடி வருடங்களாக காற்றில் இருந்து கற்றுக்கொண்டன. புல்நுனிகளும் பறவைச்சிறகுகளும் காற்றைக் கையாளும் விதங்களில் உள்ளன வில்வேதத்தின் அனைத்துப்பாடங்களும்.”

மூதாதையருக்கு நீர் படைத்து வணங்கிவிட்டு ஈரமரவுரியுடன் துரோணர் மேடேறிச்செல்ல இருவரும் பின்னால் சென்றனர். துரோணர் “வில்வேதமென்பது உண்மையில் எதை அறிகிறது? எவ்வழியில் அது மீட்பளிக்கிறது? எல்லா ஞானமும் பிரம்மத்தையே அறிய முயல்கின்றன. பிரம்மசாக்ஷாத்காரமே ஞானமெனும் அம்பின் இலக்கு. வில்வேதமோ காற்றாகி வந்த பிரம்மத்தை அறிய முயல்கிறது. காற்றை ‘நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி’ என்கின்றது வேதம். வாயு நேரிலெழுந்த பிரம்மம். ‘வாயுர்மே ப்ராணே ஸ்ரிதஹ. ப்ராணோ ஹ்ருதயே’. அந்த காற்றே உயிராக நம்முள் நிறைந்துள்ளது. நம் அகமாக நம்மை ஆள்கிறது. அதை வணங்குக!”

அன்றும் தொடர்ந்த நாட்களிலும் அர்ஜுனனின் அகம் அவரது கண்களின் ஆழத்தை நோக்க முயன்றபடியே இருந்தது. அவர் ஒருசொல்கூட கேட்கப்போவதில்லை என்று தெரிந்தது. ஆனால் எங்கோ ஒரு பார்வையில் ஒரு சொல்லின் ஓர் உடற்குறிப்பில் அவர் வெளிப்படுவார் என்று அவன் எதிர்நோக்கிக்கொண்டே இருந்தான். அம்புப்பயிற்சியில், கானுலாவில், ஸ்வாத்யாயத்தில், சேவைகளில் எங்கும் அவன் அகப்புலன் ஒன்று விழித்துக் காத்திருந்தது. ஆனால் அவர் முற்றிலும் தன்னை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டிருந்தார். கற்பிக்கையில் முற்றிலும் கல்வியாக மட்டுமே மாறிவிடும் யோகத்தை அவர் அறிந்திருந்தார். விறகு தழலாக மாறி நிற்பதுபோல அவரது ஞானம் மட்டுமே அவன் முன் நின்றது. அதில் விறகின் வடிவோ வாசனையோ இருக்கவில்லை.

குறுங்காட்டில் மாலையில் பறவைகளைப் பார்ப்பதற்காக துரோணர் அனைவரையும் அழைத்துச்சென்றிருந்தார். புதர்களுக்குள் அமர்ந்து ஓசையும் அசைவும் இன்றி பறவைகளை கூர்ந்து நோக்கும்படி சொன்னார். “வந்தமர்தல், எழுந்துசெல்லல், சமன்செய்து அமர்ந்திருத்தல், நேர்படப்பறத்தல், விழுதல், எழுதல், வளைதல், மிதந்துநிற்றல், காற்றில் பாய்தல், வட்டமிடுதல், சிறகு குலைத்து காற்றை எதிர்கொள்ளல், உறவாடல் என்னும் பன்னிரு அசைவுகளால் ஆனது பறவை. ஒவ்வொரு பறவையும் அதன் எடைக்கும் வடிவுக்கும் ஏற்ப ஒவ்வொரு அசைவையும் அடைந்துள்ளது” ஒரு பறவை எழுந்து மறைந்தபின் மெல்லிய குரலில் துரோணர் சொன்னார். “ஒவ்வொரு அசைவையும் தனித்தனியாக உற்றுநோக்குங்கள். பறவையை ஓர் அம்பு என்று பார்ப்பதும் அம்பை ஒரு பறவை என்று பார்ப்பதும் தனுர்வேதத்தின் கற்றல்முறையாகும்.”

தன்னைத்தான் தொடுத்துக்கொள்ளும் அந்த அம்புகளை நோக்கி அவர்கள் புதர்களுக்குள் தவமிருந்தனர். பறவைகள் சேக்கேறத்தொடங்கி அந்தி மயங்கியதும் துரோணர் எழுந்து “இன்றைய ஸ்வாத்யாயம் இங்கேயே ஆகட்டும். உணவை இங்கே கொண்டுவரச்சொல்” என்றார். அவர்கள் கங்கை தெரியும்படி புல்வெளியில் வட்டமாக அமர்ந்துகொண்டனர். “கிளைவிட்டெழும் பறவைகள் குரலெழுப்புகின்றன. வில்விட்டு எழும் பறவைகள் குரலற்றவை. ஆனால் அவற்றை கேட்க முடியும். ஒவ்வொரு அம்புக்கும் ஒலியுண்டு. அதை பக்‌ஷாரவம் என்கின்றது வில்லியல். வில்லில் இருந்து கிளம்பிய அம்பை கண்கள் அறியாது. காதுகள் அறியமுடியும். சிறகுகளின் ஒலியைக் கேட்பதே விற்கலையின் உச்சஅறிவு.”

“ஏழுவகை நுட்பங்களால் ஆனது அம்பின் சிறகோசை. அம்பு வில்விட்டெழும்ஒலி, காற்றைக்கீறும் ஒலி, சிறகுப்பீலிகள் மிதக்கும் ஒலி, காற்றில் எழும்-விழும் ஒலி, அணுகும் ஒலி, புரிசிறகு சுழலும் ஒலி, கடந்துசெல்லும் ஒலி. ஒவ்வொரு ஒலியையும் தனித்தனியாகக் கேட்கப்பழகவேண்டும். ஒலியைவைத்தே அம்பு எத்திசையிலிருந்து எத்தனை விரைவில் எந்தக்கோணத்தில் வந்துகொண்டிருக்கிறது என அறிந்து அறிந்தகணமே நம் கையில் நம் எதிரம்பு நிகழுமென்றால் நம்மை எந்த அம்பும் தீண்டாதென்று அறிக!”

“ஒலியை அகம் கேட்காமலாக்குவது எது? நம்முள் உறையும் வேட்டைமிருகத்துக்கு ஒலி மிகமிக இன்றியமையாதது. நாம் ஒலியைக்கேட்டே கூடுதல் அஞ்சுகிறோம். ஒலி சார்ந்தே எச்சரிக்கை கொள்கிறோம். எனவே ஒலியில் நம் கற்பனையை ஏற்றிவைத்திருக்கிறோம். அந்த எடையை ஒலியில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். கற்பனை கலவாத தூய ஒலியை நம் கணிதபுத்தி எதிர்கொள்ளட்டும். ஒலியை அறிதலென்பது வில்வேதத்தின் ஒரு கலை. அதை சப்தயோகம் என்கின்றன நூல்கள்.”

இருட்டி வந்தது. உக்ராயுதனும் பீமவேகனும் சுளுந்துகளைக் கொளுத்தி நட்டு ஒளியேற்றினர். “விலங்குகள் பூச்சிகளைப் பிடிக்கும் கலையைக் கண்டு இதை கற்றறிந்தனர் ஞானிகள். தவளை நாநீட்டி ஈயைப்பற்றுகிறது. நா கிளம்பும்போதே ஈ எத்தனை தொலைவு பறந்திருக்கும் என தவளை கணக்கிட்டுவிட்டிருக்கிறது. வில்லவன் காதால் காண்பவன். காதுகளைத் திறக்கையில் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒலிகளாலான பெருவெளியை நாம் அறியமுடியும். உயிர் என்றும் பொருள் என்றும் அண்மையென்றும் சேய்மை என்றும் அருவென்றும் பருவென்றும் நம்மைச்சூழ்ந்திருப்பவை அனைத்துமே ஒலிகளாகவும் இருந்துகொண்டிருக்கின்றன.”

“காதுகளைத் திறந்து கண்மூடி அமர்ந்திருங்கள்” என்றார் துரோணர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டார்கள். “ஒலிகளை மட்டும் கேளுங்கள். ஒலிகளுடன் உங்கள் சித்தவிருத்தி இணைந்துகொள்ளலாகாது. ஒலிகளை காட்சிகளாக ஆக்கிக்கொள்ளலாகாது. ஒலிகள் ஒலிகளாக மட்டுமே ஒன்றுடன் ஒன்று இணையட்டும்.” அவர்கள் ஒலிகளை கேட்டுக்கொண்டிருந்தனர். மிக அப்பால் இளங்களிறான அஸ்வத்தாமா உரக்க ஓலமிட்டது. அதைக்கேட்டு காட்டுக்குள் ஏதோ யானை மறுமொழி எழுப்பியது. வௌவால்கள் கூட்டமாகச் சிறகடிக்க தேங்கிய நீர் என காற்று ஒலித்தது. மரக்கிளைகள் முனகிக்கொள்ள இலைகளை அலைத்துக்கொண்டு காற்று சுழன்றுசென்றது. கலைந்த பறவைகள் உதிரிச்சொற்களுடன் காற்றிலேறி மீண்டும் அமைந்தன.

ஒவ்வொரு ஒலியும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அழுத்தங்களில் தனித்து ஒலித்தன. பின்னர் அவை ஒன்றோடொன்று கலந்து ஒரு படலமாக ஆயின. அப்படலம் பூமியை போர்த்திமூடியிருந்தது. அருகே குறுகிய ஒரு குருவிக்குஞ்சும் நெடுந்தொலைவில் பிளிறிய ஒரு யானையும் புதர்களில் சலசலத்தோடிய கீரியும் யாரோ ஒருவரின் தும்மலும் இணைந்து உருவான ஒற்றைப்பெரும் படலம் பூமியிலிருந்து எழுந்து அதன் ஆவிபோல பரந்துகிடந்தது.

துரோணர் ‘ஓம் ஓம் ஓம்’ என்றபோது அவர்கள் கண்களைத் திறந்தனர். “ஒலியை தவம்செய்யுங்கள். ஒலியை உள்ளூர உணர்வதை சப்தபுடம் என்கின்றன நூல்கள். ஒலிகளால் உலகை அறிவது சப்தஞானம். ஒலியைக் கேட்பதை விடுத்து ஒலிப்பரப்பின் ஒருதுளியாக நம் அகம் மாறுவதே சப்தயோகம். வில்வேதமென்பது மூன்றுவகை யோகங்களால் நிகழ்வதாகும். கைகளால் வில்லையும் அம்பையும் தொட்டறியும் ஸ்பர்சயோகம். இலக்குகளை கூர்ந்தறியும் அக்‌ஷயோகம். அம்புகளின் ஒலியை அறியும் சப்தயோகம். திரியோக சமன்வயி என்று வில்வேதத்தின் நூல் ஒன்று தன்னை அழைத்துக்கொள்கிறது.”

புல்நிரப்பப்பட்ட கூடைகளில் வைக்கப்பட்ட கலங்களில் சூடான உணவைச்சுமந்தபடி ஏவலர்கள் மேடேறிவந்தனர். கீழே அவர்களின் குடில்கள் பந்த ஒளியில் செந்நிற திரைச்சித்திரங்கள் போல அலையடித்தன. அனைவரும் வட்டமாக அமர்ந்துகொள்ள பாளைத் தொன்னைகளில் சூடான அப்பங்களையும் கீரைக்கூட்டையும் சுட்ட கிழங்கையும் ஏவலர் பரிமாறினர். துரோணர் உணவுத்துதியைச் சொன்னதும் அனைவரும் உண்ணத்தொடங்கினர். உண்ணும் ஒலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. உணவின் வெம்மை பந்தங்களைச் சுற்றிப்பறந்த பூச்சிகளை அழைக்க அவை கனல்ஒளிரும் சிறகுகளுடன் பறந்து அருகே வந்து தட்டைச்சுற்றிப்பறந்தன. அவர்கள் இடக்கையால் வீசியபடி வலக்கையால் உண்டனர்.

கீழிருந்து சருகுகளை அள்ளி எழுந்து வந்த காற்றில் ஐந்து பந்தங்களும் ஒரேசமயம் அணைந்தன. “பொறுங்கள்” என்று துரோணர் இருளுக்குள் சொன்னார். வினைவலர் சிக்கிமுக்கிகளை உரசத்தொடங்க அனல் மின்னி மின்னி தெறித்தது. துரோணர் உரக்க “அர்ஜுனா, என்ன செய்கிறாய்?” என்றார். அர்ஜுனன் “மன்னிக்கவேண்டும் குருநாதரே. உணவுண்டேன்” என்றான். “அல்ல, நீ இடக்கையால் என்ன செய்தாய்?” அர்ஜுனன் தயங்கி “பூச்சிகளை பிடித்துப் போட்டேன்” என்றான். “பூச்சிகளை எப்படிக் கண்டாய்?” சற்றுநேர அமைதிக்குப்பின் “அவற்றின் ஒலியைக் கண்டேன்” என்றான் அர்ஜுனன்.

முதல் பந்தம் எரிந்த ஒளியில் தாடிமயிர்கள் தழலென பறக்க ஒளிப்பொட்டுகள் அசைந்த விழிகளுடன் துரோணர் கேட்டார் “இவை மிக விரைவாகச் சுழலும் பூச்சிகள். இவற்றின் ஒலியைக்கொண்டு எப்படி அண்மையை அறிந்தாய்?” அர்ஜுனன் “குருவே, தாங்கள் சற்றுமுன் சொன்னவற்றை நான் என் நெஞ்சுக்குள் பல்லாயிரம் முறை சொல்லிக்கொண்டேன். கண்மூடி ஒலிகளைக் கேட்டிருக்கையில் என்னைச்சூழ்ந்து பறந்த பூச்சிகளின் ஒலிகள் வழியாக அவற்றைக் காணமுயன்றேன்” என்றான். துரோணர் மூச்சு ஒலிக்கும் ஒலியில் மெல்ல “கண்டாயா?” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். துரோணர் தலையை மட்டும் அசைத்தார்.

உணவுண்டபின் துரோணர் எழுந்து மேலும் காட்டுக்குள் இருளில் கூட்டிச்சென்று வௌவால்களைக் காட்டினார். இருளில் அவை மரங்களை முட்டாமல் வளைந்து பறப்பதை சுட்டிக்காட்டி சொன்னார் “விழி என்பது பிரக்ஞையின் ஓர் ஊர்தி மட்டுமே. ஊர்தியின்றி தூய பிரக்ஞை பறக்க முடியும். அந்நிலையில் இருப்பவை இவை. விழிகளால் அவை ஒளியைப் பார்க்கின்றன. அகவிழியால் இருளைப் பார்க்கின்றன. அவற்றுக்கு அவ்வாற்றலை அளிப்பது அவை பகல்முழுக்கச் செய்யும் தலைகீழ்ப்பெருந்தவம். ஒலியைத் தவம்செய்வதென்பது ஒளியாலான நம் உலகிலிருந்து நாம் கொள்ளும் முழுவிலகல். ஆகவே வில்லவன் இருளில் இருக்கவேண்டும். இரவை பயிலவேண்டும்.”

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

நள்ளிரவில் அவர்கள் திரும்பிவந்தனர். திரும்பும்போதும் கற்பித்தபடியே வந்த துரோணர் விடைகொடுக்கும் கணத்தில் “பார்த்தா, நீ என் குடிலுக்குள் வா” என்றபின் உள்ளே சென்றார். அஸ்வத்தாமனை நோக்கியபின் அர்ஜுனன் உள்ளே சென்றான். துரோணர் குடிலின் படலை மூடியபின் திரும்பி கனத்த குரலில் “உன் குருவாக என் ஆணை இது. நீ என்றென்றும் இதற்குக் கட்டுப்பட்டவன்” என்றார். “ஆணையிடுங்கள் குருநாதரே” என்றான் அர்ஜுனன். “ஒருதருணத்திலும் நீ என் மைந்தனை கொல்லலாகாது. எக்காரணத்தாலும்” என்றார் துரோணர். மறுகணமே “ஆணை” என்றான் அர்ஜுனன். துரோணர் நடுங்கும் குரலில் “அவன் ஒருவேளை மானுடர் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் அறப்பிழையை செய்தாலும்” என்றார். “ஆம், அவ்வாறே” என்றான் அர்ஜுனன்.

அவனருகே வந்து சற்று குனிந்து உதடுகள் நடுங்க துரோணர் சொன்னார் “நாளை உன் குலத்துக்கும் உனக்கும் பெரும்பழியை அவன் அளித்தாலும்… உன் பிதாமகர்களையும் அன்னையரையும் உடன்பிறந்தாரையும் மைந்தர்களையும் உன் கண்ணெதிரே அவன் கொன்றாலும் உன் கை அவனை கொல்லக்கூடாது.” அர்ஜுனன் “ஆம் குருநாதரே. மூதாதையரும் மும்மூர்த்திகளும் ஆணையிட்டாலும் அவ்வண்ணமே” என்றான். பெருமூச்சுடன் உடல்தளர்ந்த துரோணர் அவன் தலையில் கை வைத்து “மானுடரில் உன்னை எவரும் வெற்றிகொள்ளமாட்டார்கள்” என்றார். பின்பு கதவைத்திறந்தார்.

அர்ஜுனன் வெளியே வந்தபோது கௌரவர்களும் சற்று முன்னால் அஸ்வத்தாமனும் குடிலின் வாயிலை நோக்கியபடி நிற்பதைக் கண்டான். ஒருகணம் திகைத்தபின் அவன் தலைகுனிந்து முன்னால் நடந்தான். குடில்வாயிலில் தோன்றிய துரோணர் உரத்த குரலில் “கேளுங்கள் இளைஞர்களே! என் முதல்மாணவன் இவன். பாரத்வாஜ-அக்னிவேச குருகுலங்களில் முதல்வன் இளையபாண்டவனாகிய பார்த்தன். ஒருபோதும் இவனுக்கு நிகராக இன்னொருவனை நான் வைக்கப்போவதில்லை. இவனை இனி என் வடிவமாகவே கண்டு வணங்குங்கள். இவனுக்கு எதிராகச் சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் என்னை நோக்கியே. இவன் மேலெழும் ஒவ்வொரு வில்லும் எனக்கு எதிராகவே” என்று சொல்லி “ஆம், அவ்வாறே ஆகுக” என்றார். பின்னர் திரும்பி உள்ளே சென்றார்.

அர்ஜுனன் அஸ்வத்தாமனின் விழிகளை நோக்காமல் தளர்ந்த கால்களுடன் தன் குடிலை நோக்கிச் சென்றான். உவகையில் சிறகுகள் முளைக்கவேண்டிய தருணம். ஆனால் உள்ளம் குளிர்ந்து கனத்து உடலை அழுத்தியது. அனைத்தையும் இழந்துவிட்டதுபோன்ற வெறுமையுணர்வு கண்ணீராக வந்து இமைகளை நிரப்பியது.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
அடுத்த கட்டுரைசெவ்வியலும் வெண்முரசும்