அன்புள்ள ஜெயமோகன்,
நலமா?
புதுமைப்பித்தன் மீ.ப.சோமுவிற்கு எழுதிய கடிதங்கள் நூல்வடிவில் வந்துள்ளனவா என்பது எனக்குத் தெரியாது. சில கடிதங்களின் பகுதிகள் இருக்கும் இரு கட்டுரைகளை இங்குக் காணலாம்:
இவற்றைப் படிக்கும்போது எனக்குத் தோன்றிய சில கேள்விகள்: கடிதங்களை எழுதியவர்கள் அவை ஒருநாள் நூலாகும்/ அல்லது கட்டுரைகளில் வரும் என்று தெரிந்தால் அவற்றை எழுதியிருப்பார்களா? அல்லது அதே முறையில் எழுதியிருப்பார்களா? ஐயம்தான். ( அப்படி எழுதினவர்கள் யாரேனும் உண்டா?) எழுதியவர் உயிருடன் இருக்கும்போது, அவருடைய அனுமதி பெற்று வெளிவரும் நூல்களைப் பற்றி எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால், எழுதியவர் காலமானபின் “கடித இலக்கியம்” என்று வெளிவரும் நூல்கள் எந்த வகையில் நியாயமாகும் ? ( இதில் சட்டம் என்ன சொல்கிறது என்பதும் ஒரு கேள்வியே. ஒவ்வொரு கடிதத்தின் அடியிலும் எழுதியவர் “காப்புரிமை”க் குறியீட்டைப் போடவேண்டுமோ? )
”கடித இலக்கியம்” பற்றி நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா?
அன்புடன்,
பசுபதி
பெருமதிப்புக்குரிய பசுபதி அவர்களுக்கு,
பிரபலங்களின் கடிதங்கள் சம்பந்தமான சர்ச்சை எப்போதுமே உண்டு. ஐம்பதுகளில் அமெரிக்க இலக்கியச்சூழலில் முக்கியமான விவாதமாகவே இருந்திருக்கிறது. இதைப்பற்றிய பலகோணங்கள் பேசப்பட்டுள்ளன. எனக்கு ஒரு தரப்பு உண்டு.
பொதுவாக பிரபலங்களின் அந்தரங்கம், தனிப்பட்ட ஆளுமை பற்றி சாமானியருக்கு எப்போதுமே பெரிய ஆர்வம் உண்டு. என்னிடம் பேசும் ரயில் சகபயணிகள் பத்தாவது நிமிடத்திலேயே ‘கமல் எப்டீங்க ஆளு?’ என ஆரம்பிப்பார்கள். இதைப்பயன்படுத்திக்கொள்ளவே கிசுகிசுக்கள் முதல் தனிப்பட்ட செய்திகள் வரை இதழ்களை நிறைக்கின்றன. இது அந்தப்பிரபலங்களுக்கு பிரபலமாக இருக்க உதவுவதும் உண்டு, எல்லை மீறுவதும் உண்டு. அதை ஊடகவியல் சார்ந்த ஒரு விஷயமகாவே அணுகவேண்டும்.
சாதாரணமாக நாம் இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களைப் பற்றிய ஆர்வத்தையும் மேலே சொன்ன மனநிலையுடன் பொருத்திக்கொள்கிறோம். ஆனால் இதை வேறுபடுத்திப்பார்க்கவேண்டும் என்பதே என் எண்ணம்.
சமூகத்தின் சிந்தனையை, பண்பாட்டை, பொருளியலைத் தீர்மானிப்பவர்கள் இவர்கள். இவர்களுடைய சொற்கள் மட்டும் அல்ல சொற்களுக்குப்பின்னால் உள்ள ஆளுமையும் சமகால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஆகவே அவர்களின் சொற்களையும் செயல்களையும் மட்டுமல்லாமல் அவர்களின் ஆளுமையை முழுக்கவும் தெரிந்துகொள்ள சமூகத்துக்கு முழு உரிமை உள்ளது. அவர்களுக்கு அந்தரங்கம் பேணும் உரிமை இல்லை.
அவர்கள்தான் தங்களை சமூகத்திற்கு முன்னால் வைக்கிறார்கள். ஆகவே அவர்கள் சமூகத்துக்கு உரியவர்கள். அதில் ஒருபகுதியைத்தான் சமூகம் பார்க்கவேண்டுமென சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. என்னைப்பொறுத்தவரை ஒரு கருத்து அதைச்சொல்பவரையும் கணக்கிலெடுத்துக்கொள்கையிலேயே முக்கியத்துவம் கொள்கிறது. சொல்பவர் முதலில் அக்கருத்துக்கு உண்மையானவரா என்பது முதன்மையான கேள்வி.
ஆகவே எழுத்தாளனின் அந்தரங்கம் வாசகனால் பேசப்படலாம். நாமறியும் அனைத்து மேலைநாட்டு இலக்கியமேதைகளின் அனைத்து அந்தரங்கங்களும் பேசப்பட்டுள்ளன, உளவியல்-சமூகவியல் ஆய்வுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. டி.எஸ்.எலியட் ஒரு தனிப்பட்ட கடிதத்தில் யூத வெறுப்பை பதிவுசெய்துள்ளார் என்பது கண்டிப்பாக அவரது சிந்தனையை முழுமையாக அறிய முக்கியமானது. எலியட்டின் மனைவியுடன் அவரது குருவான ரஸ்ஸல் உறவுகொண்டிருந்தார் என்பது ரஸ்ஸலையும் எலியட்டையும் புரிந்துகொள்ள அவசியமானதே.
நாம் இங்கே பொதுஆளுமையையும் தனியாளுமையையும் குழப்பிக்கொள்கிறோம். பக்கத்துவீட்டுக்காரரின் அந்தரங்கத்தைப்பற்றி பேசும் அதே மனநிலையுடன் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களைப்பற்றியும் பேசுகிறோம் – அதாவது கிசுகிசுப்போம். அனால் வெளிப்படையாகப் பேசினால் உடனே ‘அய்யய்யோ தனிமனித அந்தரங்கம் பற்றி பேசுவதா! அநாகரீகம்!’ என்கிறோம்.
முன்னர் நேரு பற்றி எம்.ஓ.மத்தாய் எழுதிய அந்தரங்கச்செய்திகளால் ஆன நூலைப்பற்றிய விவாதத்தில் இதைச் சொல்லியிருந்தேன். மீண்டும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ்.ஜார்ஜ் எழுதிய நூலைப்பற்றி பேசியபோதும் சொல்லியிருக்கிறேன். இந்தியாவின் தலையெழுத்தை எழுதிய நேரு எவரிடம் படுத்தார் என்பதும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியே. அதை அறிய இந்தியனுக்கு உரிமை உண்டு.
ஆகவே எழுத்தாளர் கடிதங்கள் பொதுப்பார்வைக்குத்தான். அவை ரகசிய ஆவணங்கள் அல்ல. அவ்வெழுத்தாளர் உயிருடன் இருக்கையில் சங்கடமாக உணர்வார் என்றால் தவிர்க்கலாம், ஆனால் அவர் வரலாறாக ஆனபின்னர் அந்தத் தடையும் இல்லை.அவற்றை எந்த மனத்தடையும் இல்லாமல் – செத்துப்போனவங்கள்லாம் சாமிகள் தெரியுமா என்ற மனநிலையை மீறி – விவாதிக்கலாம்.
ஆகவே பசுபதி சார், நீங்களும் முப்பதாண்டுகளாக எழுதுகிறீர்கள். நீங்களும் பொதுச்சொத்துதான் என்று பயமுறுத்தி முடிக்கிறேன்.
ஜெ