‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38

பகுதி ஏழு : கலிங்கபுரி

[ 2 ]

பிரம்மமுகூர்த்தத்தில் காஞ்சனம் முழங்கியபோது அதைக்கேட்டுத் துயிலெழ எவருமே இருக்கவில்லை. முதிர்ந்தவர் அனைவரும் இரவெல்லாம் விழித்திருந்து ஆடையணிகளுடன் அகக்கிளர்ச்சியுடன் ஒருங்கியிருந்தனர். காஞ்சனத்தின் ஒலி நாள்தொடங்கிவிட்டது என்பதற்கான அடையாளமாகவே இருந்தது. பேரொலியுடன் ஆயிரக்கணக்கான மடைகள் திறந்து நதிக்குள் நீர்பொழிந்தது போல மக்கள் வீதிகளில் பெருகிநிறைந்தனர். சிரிப்பும் கூச்சலுமாக பந்தங்களின் வெளிச்சத்தில் மின்னியபடி திரண்டு கிழக்குவாயில்நோக்கிச் சென்றனர்.

அரண்மனையில் இருந்து கிளம்பிய ரதத்தில் திருதராஷ்டிரரும் காந்தாரியும் முதலில் இந்திரனின் ஆலயமுகப்புக்கு சென்றுசேர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து காந்தாரிகளின் ரதங்கள் வந்தன. சகுனியின் அரண்மனையில் துயின்ற துரியோதனனும் துச்சாதனனும் அவரது ரதத்தில் ஏறி பின்பக்கச் சோலைவழியாக இந்திரனின் நந்தவனத்தை நோக்கிச் சென்றனர். முப்பது ரதங்களிலாக கௌரவர் நூற்றுவரும் தொடர்ந்துசென்றனர். விதுரனுடன் தர்மன் ரதத்தில் சென்று இறங்கினான். சௌனகர் முன்னரே இந்திரசன்னிதியில்தான் இருந்தார். அவரது தலைமையில்தான் அங்கே அனைத்துப்பணிகளும் நடந்துகொண்டிருந்தன. நூறு ஏவலர்கள் இரவெல்லாம் அணிசெய்தும் முறைசெய்தும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். விடிவதற்குள் கூட்டத்தை முறைப்படுத்தும் குதிரைப்படையின் மூவாயிரம்பேர் கவச உடைகளும் இடைகளில் கொடிகளும் சங்குகளுமாக வந்து இந்திரவிலாசத்தையும் நந்தவனத்தையும் சூழ்ந்துகொண்டனர்.

இந்திரவிலாசத்தருகே கோட்டைமேல் இருந்த காவல்மாடத்தில் கோட்டையின் தலைமைக் காவலரும் மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தருமான கைடபர் அமர்ந்து கீழே நோக்கி ஆணைகளை கொடியசைவுகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தார். இரவில் கோட்டையின் கிழக்குவாயில் மூடப்படவில்லை. தேவையென்றால் மூடுவதற்காக யானைகள் சக்கரப்பொறியருகே காத்து நின்று இருளில் அசைந்துகொண்டிருந்தன. வெள்ளம் உள்நுழைவதுபோல பல்லாயிரம் வணிகர்வண்டிகள் வந்து கைவழிகளாகப் பிரிந்து இந்திரவிலாசத்தை நிறைத்துக்கொண்டிருந்தன. உணவுப்பொருட்களை விற்பவர்கள், அணிவணிகர்கள், துணிவணிகர்கள், நறுமணவணிகர்கள், படைக்கலவணிகர்கள். அவர்களின் கூச்சலால் இந்திரவிலாசம் ஏற்கனவே விழாக்கோலம் கொண்டிருந்தது.

குந்தியும் அவள் சேடிகளும் சற்று தாமதமாக நான்கு குதிரைகள் இழுத்த மூடுவண்டியில் கிளம்பி மக்கள் நெரிசலிட்ட நகரினூடாக தேங்கியும் தத்தளித்தும் சென்றனர். குந்தி தன்னுடன் நகுலனையும் சகதேவனையும் அழைத்துக்கொண்டாள். இருவரும் காலையிலேயே எழுப்பப்பட்டு நீராட்டப்பட்டு ஆடையணிகள் அணிவிக்கப்பட்டிருந்தனர். அரண்மனையில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்றே தெரியாமல் பெரிய கண்களால் விழித்து நோக்கியபடி திகைத்து அமர்ந்திருந்தனர். வண்டியில் ஏறி குதிரைகள் கிளம்பியதும் வீசிய குளிர்ந்த காற்றில் குந்தியை பாய்ந்து அணைத்துக்கொண்டு மீண்டும் தூங்கிவிழத்தொடங்கினர்.

குந்தி “இளையவனை எழுப்பிவிட்டீர்களா?” என்றாள். “ஆம் அரசி. மாலினியே இளவரசரை கொண்டுவருவதாகச் சொன்னாள். நீராட்டிக்கொண்டிருக்கிறாள்” என்றாள் குந்தியின் அணுக்கச்சேடியான பத்மை. “மந்தன் எங்கே?” என்றாள் குந்தி. “அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. யானைக்கொட்டிலில் இருக்கக்கூடுமென நினைத்து இரவிலேயே அனகைநாச்சியார் கிளம்பிச்சென்றிருக்கிறார்” என்றாள் பத்மை. குந்தி புன்னகையுடன் “குரங்கு நாகத்தை விடமுடியாது” என்றபின் “பெரும்பாலும் குரங்குகள் என்ன என்றறியாமலேயே ஆர்வத்தால் நாகத்தைப் பற்றிக்கொள்கின்றன” என்றாள். பத்மை நகைத்து “நாகத்தை விட்டுவிட்டால் அவற்றின் வாழ்க்கைக்குப் பொருளே இல்லை அரசி… உறவு என்றும் பாசம் என்றும் வேறெதைச் சொல்கிறோம்?” என்றாள்.

இந்திரவிலாசத்தை அடைந்ததும் குந்தி இறங்கிக்கொண்டு “இளையவனைக் கொண்டுசென்று மூத்தவன் அருகே அமரச்செய்யுங்கள். இன்று அவனுடைய நாள்” என்றாள். வண்டி நின்றதும் இருசேடிகள் நகுலனையும் சகதேவனையும் தூக்கிக் கொண்டனர். குந்தி வெள்ளாடையால் தன் தலையையும் பாதிமுகத்தையும் மறைத்துக்கொண்டு சேடிகள் நடுவே நடந்தாள். அவளைச்சூழ்ந்து சேடிகள் ஓலைக்குடையுடன் சென்றனர். மங்கலவாத்தியங்களோ அணித்தாலங்களோ அவளைச் சூழவில்லை. அவள் செல்வதை அங்கிருந்த எவரும் அறியவுமில்லை. அவள் இந்திரனின் ஆலயத்துக்கு இடப்பக்கமாக போடப்பட்டிருந்த ஈச்சையோலைப்பந்தலுக்குள் நுழைந்து தனக்கான பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.

அவள் வந்ததை அறிந்து அரண்மனை செயலமைச்சரும் மறைந்த களஞ்சியக்காப்பு அமைச்சர் லிகிதரின் மைந்தருமான மனோதரர் வந்து வணங்கி “தங்கள் வரவால் இவ்விடம் நிறைவுற்றது அரசி” என்றார். “மந்தன் எங்கிருக்கிறான் என்று தெரியுமா?” என்றாள் குந்தி. “இல்லை அரசி. புராணகங்கைக்குள் ஒரு யானையுடன் சென்றதாகச் சொன்னார்கள். தேடுவதற்கு ஆட்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார் மனோதரர். குந்தி “விழாமுடிவதற்குள் தேடிக்கண்டடைவீர்கள் அல்லவா?” என்றாள். மனோதரர் தலைவணங்கி “ஆம்” என்றார். அவளுடைய சொல்லின் முள் அவரைத் தைத்தது முகத்தில் தெரிந்தது. அவர் செல்லலாம் என்று குந்தி கையசைத்தாள். அவர் பணிந்து பின்பக்கம் காட்டாமல் விலகினார்.

இந்திரவேளை தொடங்குவதற்காக இந்திரனின் ஆலயமுகப்பில் இருந்த பிரபாகரம் என்னும் கண்டாமணி முழங்கியது. நகரெங்குமிருந்து கூடியிருந்த மக்கள்திரளில் எழுந்துகொண்டிருந்த ஓசை அலையடங்கி இறுதியில் பிரபாகரத்தின் இன்னொலி மட்டும் முழங்கிக் கொண்டிருந்தது. இந்திரனின் ஆலயமுகப்பில் திருதராஷ்டிரரும் காந்தாரியும் கைகூப்பி நடுவே நின்றனர். திருதராஷ்டிரர் பொன்னூல் பின்னிய வெண்பட்டுச் சால்வை சுற்றி கரிய உடலில் இரவிலெழுந்த விண்மீன்கள் போல மின்னும் மணிகள் கொண்ட நகைகள் அணிந்து கருங்குழலை தோளில் பரவவிட்டு நின்றார். அவர் வணங்கியதும் நகர்மக்களின் வாழ்த்தொலிகள் பொங்கி எழுந்தன.

நீலப்பட்டால் கண்களைச் சுற்றியிருந்த காந்தாரி செம்பட்டாடையும் மணியாரங்களும் தலையில் வைரங்கள் சுடர்ந்த சிறிய மணிமுடியும் அணிந்திருந்தாள். அவளைச்சுற்றி அவளைப்போலவே உடையணிந்த காந்தார அரசியர் ஒன்பதுபேரும் நின்றிருந்தனர். இளைய அரசி சம்படையை அணங்கு கொண்டிருப்பதாகவும் எங்கிருக்கிறோமென்பதையே அவளறிவதில்லை என்றும் அனைவரும் அறிந்திருந்தனர்.

சௌனகர் சென்று வணங்கி சகுனியிடம் சில சொற்கள் சொல்ல சகுனி வந்து திருதராஷ்டிரர் அருகே வலப்பக்கம் நின்றார். அவர் அருகே துரியோதனனும் துச்சாதனனும் நிற்க பின்னால் கௌரவர் அணிவகுத்தனர். துரியோதனனைக் கண்டதும் மீண்டும் நகர்மக்கள் பேரொலி எழுப்பி வாழ்த்தினர். சௌனகர் சென்று வணங்கி தருமனை அழைத்துவந்து திருதராஷ்டிரனின் இடப்பக்கம் நிற்கச் செய்தார். மீண்டும் வாழ்த்தொலிகள் பெருகி அலையடித்தன.

குந்தி பத்மையிடம் “இளையவன் எங்கே?” என்றாள். “வந்துகொண்டிருக்கிறார் அரசி” என்றாள் பத்மை பதற்றத்துடன் ரதங்கள் வரும் வழியை நோக்கியபடி. வெளியே போர் ஒன்று வெடித்ததுபோல ஒலியெழுந்தது. மக்கள்பரப்பில் நெரிசலெழுவது அலையலையாகத் தெரிந்தது. கிழக்குவாயில் ரதசாலையில் சிறிய ஒற்றைக்குதிரை ரதம் ஒன்று நுழைந்தது. சிலகணங்களில் அப்பகுதியே புயலில் கொந்தளிக்கும் கடல் என வெறிகொண்டு துள்ளி எழுந்து ஆர்ப்பரித்தது. சால்வைகளையும் தலைப்பாகைகளையும் கழற்றி வானில் எறிந்து கைகளை வீசி தொண்டைபுடைக்கக் கூவி துள்ளிக் குதிக்கும் வீரர்களையும் நிலையழிந்து கைகளைத் தூக்கி வளையல்கள் உடைய ஓங்கி தட்டியபடி கூவும் பெண்களையும் குந்தி திகைத்த விழிகளுடன் நோக்கியிருந்தாள்.

அர்ஜுனன் ரதத்திலிருந்து இறங்கியதும் அவன் அன்றி அங்கே மானுடர் எவருமில்லை என்ற உணர்வு ஏற்பட்டது. மாலினியின் கைகளிலிருந்து அவனை வீரர்கள் தூக்கிக்கொண்டனர். பல்லாயிரம் கைகள் வழியாக அவன் மேகங்களில் ஊர்ந்துவரும் தேவனைப்போல வந்தான். செம்பட்டு ஆடையும் வைரக்குண்டலங்களும் செம்மணியாரமும் அணிந்து நெற்றியில் புரிகுழலைக் கட்டி நீலமணியாரத்தைச் சுற்றியிருந்தான். சொற்களற்ற முழக்கமாக எழுந்த அவ்வொலியின் அலைகளே அவனை அள்ளியெடுத்து வந்தன. அவன் தேவர்களுக்குரிய புன்னகையுடன் அச்சமேயற்ற விழிகளுடன் அமர்ந்திருந்தான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“இந்திரனின் மைந்தர்!” என்றாள் பத்மை. “ஐயமே இல்லை அரசி. கருமைக்கு இத்தனை ஒளியுண்டு என்பதை இம்மக்கள் இன்றுதான் அறிந்திருப்பார்கள். இன்று இந்நகரில் பல்லாயிரம் பெண்கள் கருவறை கனிந்து சூல்கொள்வார்கள்.” குந்தி உதடுகளை அழுத்திக்கொண்டு தன்னை கட்டுப்படுத்த முயன்றாலும் அவளையறியாமலேயே கண்ணீர் உதிரத்தொடங்கிவிட்டது. முகத்திரையை இழுத்துவிட்டு அவள் தன்னை மறைத்துக்கொண்டாள்.

பார்த்தன் அருகே வந்ததும் திருதராஷ்டிரர் கைநீட்டி அந்தரத்திலேயே அவனை வாங்கிக்கொண்டார். தன் முகத்துடன் அவனைச்சேர்த்து முத்தமிட்டு ஒற்றைக்கையால் சுழற்றித்தூக்கி தன் தோள்மேல் வைத்துக்கொண்டார். அவன் குனிந்து காந்தாரியின் தலையைத் தொட அவள் கைநீட்டி அவன் சிறிய கையைப்பற்றி தன் உதடுகளில் வைத்து முத்தமிட்டாள். இளையகாந்தாரிகள் அவனை நோக்கி கைநீட்டி அழைக்க அவன் சிரித்துக்கொண்டே பெரியதந்தையின் தோள்மேல் அமர்ந்திருந்தான்.

இந்திரவிலாசத்தின் நடுவே பொன்மூங்கிலில் இந்திரத்துவஜம் பசுந்தளிராக எழுந்திருந்தது. அதன் வலப்பக்கம் ஏழு கபிலநிறக் குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. சூழ்ந்து எழுந்த குரல்களைக் கண்டு அவை செவிகூர்ந்து மூக்கை விடைத்து விழியுருட்டி நோக்கி குளம்புகளை உதைத்தபடி சுற்றிவந்தன. இடப்பக்கம் ஏழு வெள்ளைக்காளைகள் திமில் புடைத்துச்சரிய கழுத்துத்தசைமடிப்புகள் உலைய கனத்த கொம்புகளும் மதம்பரவிய விழிகளுமாக கால்மாற்றி குளம்புகளால் உதைத்தும் செருக்கடித்தும் நின்றிருந்தன.

நூற்றெட்டு வைதிகர்கள் கங்கையில் இருந்து பொற்குடங்களில் கொண்டுவந்த நீரைக்கொண்டு இந்திரனை நீராட்டினர். நூற்றெட்டு பொற்குடங்களில் மஞ்சள்நீர் இந்திரனின் முன்னால் வைக்கப்பட்டது. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் வான்புரவிக்கும் மலரும் மணியும் தூபமும் தீபமும் காட்டினர். மங்கல வாத்தியங்கள் இசைக்க சங்குகளும் முழவுகளும் கொம்புகளும் முரசங்களும் சூழ்ந்து முழங்க பல்லாயிரம் குரல்கள் இந்திரனை வாழ்த்தின. பூசெய்கை முடிந்ததும் பூசகர் அந்த நூற்றெட்டு குடங்களிலும் பூசைமலர்களையும் குங்கிலியத்தையும் பசுங்கற்பூரத்தையும் போட்டு வணங்கி அவற்றை இந்திரவீரியமாக ஆக்கினார்.

மங்கல வாத்தியங்கள் சூழ நூற்றெட்டு வைதிகர் அந்தப் பொற்குடங்களைக் கொண்டுசென்று இந்திரத்துவஜத்தருகே வைத்து சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். கைகளில் பவித்ரம் கட்டப்பட்டது. அவர்கள் இணைந்து ஒற்றைப்பெருங்குரலில் வேதநாதமெழுப்பினர்.

வலதுகையில் மின்னல்படை கொண்டவனை
கபிலநிறப்புரவிகளை விரையச்செய்து
வினைகளை முடிப்பவனை
இந்திரனை போற்றுகிறோம்!
பொன்னிறத் தாடி அலைபாய
அவன் மேலெழுகிறான்
தன் படைக்கலங்களால் வெல்கிறான்
வழிபடுவோருக்கு செல்வங்களை அருள்கிறான்

வேள்விகளில் செல்வங்களாகின்றன
இக்கபிலநிறக் குதிரைகள்!
செல்வங்களுக்கு அதிபன்
விருத்திரனைக் கொன்றவன்
ஒளிவிடுபவன் வலுமிக்கவன்
ஆற்றல்களனைத்துக்கும் அதிபன்
மகத்தானவன்
அவன் பெயர்சொல்லி வீழ்த்துகிறேன்
என் எதிரியை!

வேதம் ஓதிமுடித்ததும் இந்திரவீரியத்தைச் சுமந்தபடி அவர்கள் ஏழுமுறை இந்திரத்துவஜத்தை சுற்றிவந்தனர். பின்னர் அக்குடங்களை எட்டுதிசைகளிலாக விலக்கி வைத்தனர். அவற்றை பெண்கள் குரவையிட்டபடி சூழ்ந்துவர இளைஞர்கள் எடுத்துக்கொண்டு ஓடிச்சென்று இந்திரவிலாசத்தின் எல்லைகளில் கங்கையில் இருந்து கரையேற்றி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பெரிய படகுகளில் கலந்துவைக்கப்பட்டிருந்த மஞ்சள்நீரில் ஊற்றினர்.

வைதிகர்கள் குதிரைகளின் கழுத்தில் பெண்குதிரைகளின் மதநீரில் நனைத்து கோரோசனை கலக்கப்பட்ட மஞ்சள்துணிகளைச் சுற்றினர். எருதுகளின் கொம்புகளில் பசுக்களின் மதநீரில் நனைக்கப்பட்ட கோரோசனைத்துணிகள் கட்டப்பட்டன. குதிரைகளும் எருதுகளும் காமம் கொண்டு உடல்சிலிர்த்தும் சீறியும் செருக்கடித்தும் நிலையழிந்து சுற்றிவந்தன. எருதுகள் முன்கால்களால் நிலத்தை உதைத்து புழுதிகிளப்பி கொம்பு தாழ்த்தி பின்தொடை விதிர்க்க விழியுருட்டி நின்றன. குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கி வானிலெழுபவை போல எம்பிக்குதிக்க அவற்றைக் கண்டு பெண்கள் வாய்பொத்தி கூவிச்சிரித்தனர்.

வைதிகமுதல்வர் ஒருவர் வந்து திருதராஷ்டிரரிடம் குனிந்து “அரசே தாங்கள் எருதுகளை அவிழ்த்துவிடவேண்டும்” என்றார். திருதராஷ்டிரர் நகைத்தபடி “இந்த நாள் என் கருமுத்துக்குரியது. இந்திரனின் மைந்தன் இருக்கையில் வேறுயார் வேண்டும்?” என்றபின் “இளைய பாண்டவா, குதிரைகளை கட்டறுத்துவிடு” என்று சொல்லிச் சிரித்தபடி அவனை இறக்கிவிட்டார். நிலத்தில் நின்று கால்களை சரிசெய்துகொண்டிருந்தபோது சகுனி சிரித்தபடி கைகாட்டி ஒரு வீரனிடம் அம்பும் வில்லும் கொண்டுவரச்சொன்னான்.

வில்லை வாங்கி அர்ஜுனன் நாணேற்றியபோது அந்தப் பெருமுற்றமெங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. வில்லை அவன் எடுப்பது தெரிந்தது. என்ன நடந்தது என முதல் குதிரை தன் கட்டு அறுபட்டு துள்ளி எழுந்து கால்தூக்கி கனைத்தபோதுதான் அனைவரும் அறிந்தனர். அதனருகே நின்றவர்கள் சிதறிப்பரந்து ஓடினர். அர்ஜுனன் அம்புகளைத் தொடுத்து ஏழு குதிரைகளையும் ஏழு காளைகளையும் கட்டறுத்துவிட்டபின் வில்லைத் தாழ்த்தினான். சகுனி சிரித்தபடி அவனை அள்ளி தன் கையில் எடுத்து தோளிலேற்றிக்கொண்டான்.

குதிரைகளும் எருதுகளும் விடைத்த காமத்துடன் கூட்டத்துக்குள் நுழைய அவைசென்ற வழி வகிடுபோல விரிந்துசென்றது. பெண்கள் சிரித்துக்கொண்டும் கூவிக்கொண்டும் ஓடிச்சென்று படகுகளில் அலையடித்த மஞ்சள்நீரை அள்ளி ஆண்கள் மேல் துரத்தித் துரத்தி வீசினார்கள். நீரில் நனைந்த உடல்களுடன் ஆண்கள் பெண்களை துரத்திச்சென்று தூக்கி உடலுடன் தழுவிக்கொண்டனர். சிலகணங்களில் அங்கே அனைத்து கட்டுப்பாடுகளும் மறைந்து பல்லாயிரம் மானுட உடல்கள் மட்டுமே இருந்தன.

உத்தர கங்காபதத்திலிருந்து வந்திருந்த மலைவணிகர்கள் அங்கே வாங்கிக்கொண்டுவந்து ஈரநிழலில் பாதுகாக்கப்பட்ட ஃபாங்கத்தின் தளிரிலைகளை பெரிய செக்கிலிட்டு மாடுகட்டி அரைத்து அதனுடன் சப்த சிந்துவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாதாம் பருப்பைக் கலந்து ஆட்டி விழுதாக்கி உருட்டி எடுத்து வாழையிலைகளில் வைத்தனர். அருகே பெரிய கலங்களில் நெய்முறுகிய பசும்பால் அடியிலிட்ட அனலால் இளஞ்சூடாக குமிழிவெடித்துக்கொண்டிருந்தது. ஃபாங்கம் இந்திரனுக்குரிய இனிய மது. இந்திரபானம் என்று அதை சூதர்கள் பாடினர்.

நிரைநிரையாக இளைஞர்கள் வந்து அதைக்கேட்டு வாங்கி அருந்தினர். மூங்கில் குவளைகளில் பாலை அள்ளி அதில் ஃபாங்கத்தின் உருளைகளைப்போட்டு கலக்கி தேனோ கரும்புவெல்லமோ சேர்த்து ஆற்றி இளஞ்சூடாக அளித்தனர் வணிகர். இளைஞர்கள் மீண்டும் மீண்டும் வந்து குடித்துக்கொண்டிருந்தனர். மூங்கில்குழாய்களில் வாங்கிக்கொண்டு தங்கள் தோழிகளுக்குக் கொடுத்தனர். சூதர்கள் இடைவெளியின்றி குடித்தனர். யாழையும் முழவுகளையும் அடகுவைத்து மீண்டும் கேட்டனர். ஃபாங்கமும் வெயிலும் அனைவர் விழிகளையும் குருதிக்கொப்புளங்களாக ஆக்கியது. வெள்ளியுருகி வழிந்துபரவிய வெயிலில் பொன்னிறமும் வெண்ணிறமும் இளநீலநிறமுமாக ஒளிவிட்ட சிறகுகளுடன் பறந்தலைவதாக உணர்ந்தனர் நகர்மக்கள்.

நகரமெங்கும் ஆணும்பெண்ணும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருந்தனர். மஞ்சள் நீர்க்குடங்களை ஏந்திய பெண்கள் கூட்டம் கூட்டமாக ஆண்களைத் துரத்தி நீராட்டினர். சிலர் இல்லங்களில் இருந்து மலைமிளகின் தூளையும் சுக்குச்சாறையும் கொண்டுவந்து அந்நீரில் கலக்கி வீச கண்கள் எரிந்து இளைஞர்கள் அலறியபடி ஓடி ஒளிந்தனர். அவர்களின் பாதச்சுவடுகளைக் கொண்டு தேடிப்பிடித்து இழுத்துவந்தனர் பெண்கள். அவர்களின் ஆடைகளைக் களைந்து வெற்றுடலாக்கி தெருநடுவே நிறுத்தி சுற்றிவந்து கூவிச்சிரித்தனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் கூவிச்சிரித்தபடி ஈர உடைகளில் துள்ளும் முலைகளும் தொடைகளும் நிதம்பங்களுமாக திரண்டுவந்து கூச்சலிட்டபடி ஒரு ஃபாங்கவணிகனின் கடையைக் கைப்பற்றினர். “விலகுங்கள்! விலகுங்கள்!” என்று பெண்கள் கூச்சலிட ஆண்கள் பதறி ஓடினர். அவர்கள் ஃபாங்கம் கலக்கப்பட்ட பால்குடங்களை தலைமேல் தூக்கிக்கொண்டு ஓடினர். தனித்துச்சென்ற இரு ஆண்களை துரத்திச்சென்று தூக்கியது ஒரு பெண்படை. ஃபாங்க வணிகன் “இந்திரனின் வல்லமை அளப்பரியது!” என்றான்.

நேரம் செல்லச்செல்ல ஃபாங்கத்தின் களிவெறியில் அவர்கள் ஒவ்வொருவரும் தனியராயினர். காட்டில் அலையும் விடாய்கொண்ட வேங்கையென அவர்களின் உடல்கள் துணைதேடி எழுந்தன. குலங்களும் முறைகளும் மறைந்தன. நெறிகளும் விதிகளும் அழிந்தன. உடல்கள் மட்டுமே இருந்தன. உடல்களில் எரிந்த எரி இன்னும் இன்னும் என தவித்தது. காலத்திரைக்கு அப்பாலிருந்து ஆயிரம் பல்லாயிரம் மூதாதையர் மறுபிறப்பின் கணத்துக்காக எம்பி எம்பித்தவித்தனர்.

நகரம் முழுக்க இளையவர்கள் கைகளுக்குச் சென்றது. முதியவர்கள் தங்கள் இல்லங்களுக்குச் சென்று சாளரங்களை சாத்திக்கொண்டு அரையிருளில் அமர்ந்தனர். “இந்திரனெழுந்துவிட்டான். இன்று இந்நகரில் கற்பாறைகள் கூட கருவுறும்” என்றார் ஒரு கிழவர். “சும்மா இருங்கள். வயதுக்கேற்றபடி பேசுங்கள்” என அவரது கிழவி அவரை கையில் அடித்தாள். “இந்திரனால்தான் நீயும் கருவுற்றாய்” என்றார் கிழவர். கிழவி சினந்து பழுத்த முகத்துடன் எழுந்து செல்ல கிழவர் உடல்குலுங்க நகைத்தார்.

மதியவெயில் எரியத்தொடங்கும்போது நகரமே முற்றமைதியில் இருந்தது. ஒலித்தடங்கி அமைந்திருக்கும் பெருமுரசுபோல. வெயிலையும் நிழல்களையும் அலைபாயச்செய்தபடி காற்றுமட்டும் கடந்துசென்றது. நகரத்தெருக்களில் எங்கும் ஒருவர் கூட தென்படவில்லை. ஃபாங்கம் சித்தத்தை மீறிச்சென்ற சூதர்கள் சிலர் தங்கள் யாழையும் முழவையும் அணைத்தபடி தெருவோரங்களில் விழுந்துகிடந்தனர். நகரத்தின் மேல் பறந்த செம்பருந்துகள் வெயிலின் அலைகளில் எழுந்தமைந்துகொண்டிருந்தன.

இந்திரவிலாசத்திலிருந்து அரசரதங்கள் ஒவ்வொன்றாக கிளம்பிச்சென்றன. அர்ஜுனன் வண்டியின் திரையை விலக்கி குந்தியிடம் “அன்னையே, நான் தங்கள் வண்டியில் வருகிறேன்” என்றான். “நீ இன்று இளைஞனாகிவிட்டாய் பார்த்தா. பெண்களின் வண்டியில் வரலாகாது” என்றாள் குந்தி. “சற்றுநேரம் நகுலனுடன் விளையாடிக்கொண்டு வருகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். பத்மை “இளவரசர் மூடிய வண்டியிலேயே வரட்டும் அரசி” என்றாள். குந்தி “ஏறிக்கொள்” என்றாள்.

வண்டியில் ஏறி குந்தியின் அருகே அமர்ந்திருந்த நகுலனுக்கு அப்பால் அமர்ந்துகொண்டான் அர்ஜுனன். நகுலனை நோக்கி புன்னகை செய்தான். நகுலன் “நானும் வில்லை வளைப்பேன்” என்று சொல்லி கையை விரித்துக்காட்டினான். குந்தி புன்னகையுடன் குனிந்து அவனை முத்தமிட்டாள். அவள் அணிகலன்கள் எதையும் அணியாமலேயே பேரழகியாக இருப்பதாக அர்ஜுனன் எண்ணினான். அணிகலன்கள் வழியாக அவளைப்போல அழகியாவதற்குத்தான் மற்ற அனைத்துப்பெண்களும் முயல்கிறார்கள். விளையாட்டில் மெல்ல கையை நீட்டுவதுபோல நீட்டி அவன் குந்தியின் ஆடைநுனியைத் தொட்டு தன் கைகளால் பற்றிக்கொண்டான்.

மூடுவண்டி நின்றது. வண்டியின் திரைக்கு அப்பால் “வணங்குகிறேன் அரசி” என்று விதுரரின் குரல் கேட்டது. அர்ஜுனன் அரைக்கணம் திரும்பி குந்தியின் விழிகளைப் பார்த்தான். “அமைச்சரின் செய்தி என்ன?” என்றாள் குந்தி. “இளையபாண்டவர் பீமன் சமையலறையில்தான் இருந்திருக்கிறார். அனகை அவரைக் கண்டுபிடித்துவிட்டாள். இந்திரவிழாவுக்காக பெருமளவு உணவு சமைக்கிறார்கள். அவரும் சமையலில் ஈடுபட்டிருக்கிறார்” என்றார் விதுரர்.

குந்தி “ஆம், அதை நானும் எண்ணினேன். இந்தக்கூட்டத்தில் அவனுக்கென்ன வேலை?” என்றாள். “மூத்தவன் தங்களுடன் இருக்கிறான் அல்லவா?” என்றாள். “ஆம் அரசி. நான் அவருக்கு அறநூல்களைப் பயிற்றுவிக்கிறேன்.” குந்தி “நன்று” என்றபின் பத்மையிடம் வண்டி செல்லலாம் என கைகாட்டினாள். சாரதி குதிரையைத் தட்ட அது காலெடுத்ததும் வண்டி சற்றே அசைந்தது. அக்கணம் குந்தியின் கைபட்டு திரைச்சீலை விலக வெளியே நின்றிருந்த விதுரரின் முகம் தெரிந்தது. அவர் விழிகள் அர்ஜுனன் விழிகளை ஒருகணம் சந்தித்து திடுக்கிட்டு விலகின.

வண்டி சென்றபோது அர்ஜுனன் தனிமைகொண்டவனாக திரைச்சீலையை நோக்கியபடி வந்தான். பத்மை “விளையாட வந்ததாகச் சொன்னீர்கள் இளவரசே” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்கிவிட்டு பார்வையை விலக்கிக்கொண்டான். பின் அவன் கைகளால் திரையை விலக்கி வெளியே நோக்கினான். “வெளியே பார்க்கலாகாது இளவரசே” என்று பத்மை அவன் கைகளை பிடிக்கவந்தாள். குந்தி “அவன் பார்க்கட்டும். விரைவிலேயே அவன் ஆண்மகனாகட்டும்” என்றாள். அர்ஜுனன் திரையை விலக்கி வெளியே தெரிந்த மானுட உடல்களை பார்த்தபடியே சென்றான்.

பின்மதியம் நகரம் எங்கும் நீராவி நிறைந்து வீட்டுக்குள் இருந்தவர்களை மூச்சடைக்க வைத்தது. சாளரங்களைத் திறந்த முதியவர்கள் தங்கள் இளையவர்களைப்பற்றி எண்ணி பெருமூச்சுவிட்டனர். வானின் ஒளி மங்கலடைந்தும் ஒளிகொண்டும் மாறிக்கொண்டிருக்க பறவைக்கூட்டங்கள் கலைந்து காற்றில் சுழன்று கூவிக்கொண்டிருந்தன. வெயிலின் நிறம் மாறியிருப்பதை ஒரு முதியவள் கண்டு தன் துணைவனிடம் சொன்னாள். அந்தக் காட்சி நகரத்தில் மெல்ல ஒலியை எழுப்பியது. உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் வந்து நின்று அந்த வண்ணவெயிலை அனைவரும் நோக்கினர்.

வெயில் முறுகி காய்ச்சப்பட்ட நெய்யின் நிறம் கொண்டது. பின் தேன் நிறமாக ஆயிற்று. பின்னர் அரக்குப்பாளத்தினூடாக பார்ப்பதுபோல நகரம் காட்சிகொண்டது. இல்லங்களின் உள்ளறைகள் இருள தீபங்கள் ஏற்றப்பட்டன. காற்று முற்றிலும் நின்று இலைநுனிகளும் கொடிகளும் திரைச்சீலைகளும் தீபச்சுடர்களும் முற்றிலும் அசைவிழந்தன.

கீழ்த்திசையில் இந்திரனின் முதற்பெருங்குரல் எழுந்தது. ‘ஓம் ஓம் ஓம்’ என்றன மேகங்கள். இந்திரனின் மின்னல்படைக்கலம் சுடர்க்கொடியாக எழுந்து, வேர்வேராக விரிந்து, விழுதுகளாக மண்ணிலூன்றியது. ‘ஓம் லம் இந்திராய நமஹ!’ என்று இல்லத்து முகப்புகளில் நின்று கைகூப்பி வாழ்த்தினர் மக்கள். இந்திரன் அவர்களின் கண்களை ஒளியால் நிறைத்து காதுகளை ஒலியால் மூடினான். கருத்தில் சிலகணங்கள் ஓங்காரம் மட்டுமே இருக்கச்செய்தான்.

அறைக்குள் தேங்கியிருந்த இருள் மறைவதை அவர்கள் கண்டனர். தூண்களுக்கு வெவ்வேறு வண்ணங்களில் பலநிழல்கள் விழுந்து அவை ஒன்றுடனொன்று கலந்தவை போலத் தோன்றின. சாளரத்துக்கு வெளியே மென்சிவப்பு வண்ணம் கொண்ட பட்டுத்திரை தொங்குவதுபோலிருந்தது. அவர்கள் எட்டி வெளியே பார்த்தபோது செந்நிற ஒளி நிறைந்திருந்த தெருக்களில் செம்பளிங்குத் துருவல்கள் போல மழைவிழுந்துகொண்டிருந்தது. நகரமே ‘‘ஓம் லம் இந்திராய நமஹ!’ என்று குரல்கொடுக்க அனைவரும் கிழக்கே நோக்கினர். மிகப்பெரிய இந்திரவில் வானை வளைத்து நின்றிருந்தது.

வானின் ஒளி முழுக்க மழைத்துருவல்களாக விழுந்து மறைந்ததுபோல மழைபெய்யப்பெய்ய இருள் வந்து மூடியது. சற்றுநேரத்திலேயே இருட்டி மூடி மின்னல்களும் இடியுமாக பெருமழையின் வருகை துலங்கியது. பேரோசையுடன் வானம் அதிர்ந்து காட்சிகள் துடிதுடித்தடங்கின. அனைத்தையும் அள்ளிக்கொண்டுசெல்ல விழைவதுபோல காற்று நகரை மோதியது. கலங்கள் கூட கவிழ வெண்கலப்பொருட்கள் நிலத்தில் உருள கதவுகள் அடித்துக்கொள்ள மழை வந்து சுவர்களை அறைந்தது. மரங்கள் சுழன்று வெறிநடனமிட்டு நீராடின.

நனைந்து வழிந்த உடல்களும், ஒட்டிய குழல்களும், சேறுபரவிய ஆடைகளுமாக பெண்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பினர். பித்திகள் போல அணங்கு அமைந்தவர்கள் போல விழி வெறித்து கனவில் நடந்து வந்த அவர்களை அன்னையரும் செவிலியரும் அழைத்துச்சென்று உள்ளங்கணத்தில் அமரச்செய்து மஞ்சள்நீரில் நீராட்டி தலைதுவட்டி புத்தாடை அணியவைத்து கொண்டுசென்று படுக்கச்செய்தனர். அவர்கள் அணிந்துவந்த ஆடைகளைச் சுருட்டி மஞ்சள்துணியில் சுற்றி கங்கையில் ஒழுக்குவதற்காக கொல்லைப்பக்கம் வைத்தனர்.

அன்றிரவு முழுக்க மழை நின்றுபெய்தது. அதிகாலையில் மழை நின்றுவிட நகரம் பெருமூச்சுடன் துளிகளை உதிர்க்கத் தொடங்கியது. நீரோடைகள் வழியாக செந்நிறநீர் வழிந்தோடி தெளிந்து தூயநீராக மாறி புராணகங்கையை அடைந்தது. காலையில் வாயில் திறந்து முற்றத்துக்கு வந்த முதுபெண்கள் முற்றமெங்கும் நீர்வரிகள் மேல் மலர்கள் பரவியிருப்பதைக் கண்டார்கள். நீர்சொட்டி வடிந்து வழிந்த நகரில் குளிர்ந்த காற்று மலர்மணத்துடன் சுழன்றுகொண்டிருந்தது.

இந்திரன் ஆலயத்துக்கு கங்கை நீருடன் வந்த வைதிகர் ஏழு பிங்கலக் குதிரைகளும் ஏழு வெண்ணெருதுகளும் மழை கழுவிய உடல் காற்றில் உலர்ந்து சிலிர்க்க தலைகுனிந்து தங்கள் கட்டுத்தறிகளின் அருகே நின்றிருப்பதைக் கண்டு புன்னகை செய்தார்.


வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைசூரியநெல்லிக்காயின் துவர்ப்பு
அடுத்த கட்டுரைவெண்முரசு – நிறம்